புதியவாசகர்களின் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட காலமாக வாசித்து வருகிறேன். பல புதிய புரிதல்கள், நூல்களின் அறிமுகங்கள்,இந்தியா பற்றிய தெளிவு என்று பல வழிகளில் உங்களை வாசிப்பது ஒரு நிறைவைத் தருகிறது நன்றிகள் பல.தங்களின் ரப்பர், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதலியவை படித்திருக்கிறேன்.நான்கு வேடங்கள் என்ற தங்களின் கட்டுரை எனக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல.

தற்போது விவேக் ஷன்பேக் – வேங்கைச் சவாரி படித்தேன். வேங்கைச் சவாரி, சுதீரின் அம்மா இந்த கதைகள் என்னுள் மிகுந்த மன எழுச்சியை ஏற்படுத்தின. நாம் அறியாத ஒரு மனிதனின் திட்டத்தின் ஒரு பகுதியாக நம்மையும் அறியாமல் நாம் இருக்கிறோம் என்பது ஒரு வினோதம். தற்போதுள்ள நுகர்வு வெறி அந்த திட்டத்தின் ஆயுளையும் பலத்தையும் பல மடங்கு பெருக்குகிறது. இவற்றை மீறி ஒருவன் தன் தேவைகளை தெளிவாக உணர்ந்து செயல்படுதல் முற்றிலும் சாத்தியமா ? இல்லை முடியவே முடியாதா ?

நன்றி. அன்புடன்,
மணிகண்டன்

அன்புள்ள மணிகண்டன்

வேங்கைச் சவாரி முக்கியமான சிறுகதை. நாம் நம்மைச்சூழ்ந்துள்ள உலகியல் சதுரங்கத்தின் காய்களாக மட்டுமே செயல்படுகிறோம் என்பதை துணுக்குறும்படி சித்தரிக்கிறது

அதிலிருந்து தப்ப ஒரே வழிதான். அதை உணர்ந்துகொள்வது. அதை அறிந்ததுமே ஒருவன் அதிலிருந்து விடுபட ஆரம்பிக்கிறான். அறியாமலிருக்கும்தோறும் அதனுள் வாழ்கிறான்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

நான் உங்களது “சங்க சித்திரங்கள்” படைப்பை வாசித்தேன். நான் வாசித்த உங்கள் முதல் புத்தகம் இது தான். நன்றாக இருந்தது . எனக்கு சற்று கனமாகவே இருந்தது. சில சமயம் வாசிப்பதை நிறுத்தி மறுநாள் தொடர்ந்தேன்

நீங்கள் கவிதை விளக்கத்தை கட்டுரையின் முதலிலேயே கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஏனெனில் நான் முதலில் கவிதையை புரிய முயற்சித்தேன் . பின்பு விளக்கத்தை படித்தேன் . பின் என்னால் அந்த கவிதையை வாழ்வோடு இணைத்து பார்க்க முடிகிறதா என்று பார்த்தேன் . உங்கள் அனுபவத்தை முதலில் படிக்கும் வாசகனுக்கு , பின் அதை செய்ய முடிவது கடினம் என நினைக்கிறேன் .

பல கவிதை அனுபவங்கள் அவ்வளவு சிறப்பாக பொருந்தியது (ஒரு வேளை  சும்மா கற்பனையில் சொல்கிறாரோ என தோன்றியது :-) ). சில சமயம் உங்கள் பார்வை , கவிதை உணர்த்துவதையும் தாண்டிப் போகிற மாதிரி தோன்றியது. …

அடுத்து விஷ்ணுபுரம் வாசிப்பேன் நிறைய எதிர்பார்போடு. …

அருண் .

அன்புள்ள அருண்

சங்கசித்திரங்கள் ஒரு நல்ல தொடக்கம்தான். அந்த அனுபவங்கள் ஒரு கவிதையில் எதைக் கவனிக்கவேண்டும் என்பதைச் சுட்டுகின்றன. ஒரு கவிதையை எப்படி வாழ்க்கையின் அனுபவமாக அறியவேண்டும் என்பதை காட்டுகின்றன. ‘நயம் பாராட்டல்’ வாசிப்பை விட்டுவெளியே வருவதற்கான வழி அது

ஜெ

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் S .K .பாலமுரளி. பிறந்தது சுசீந்திரம். தற்சமயம் வசிப்பது திருச்சியில். ஒரு ஏழு வருடங்களுக்கு முன்னால், குமுதத்தில் உங்கள் தொடர் ஓன்று படித்த போது, உங்களை மேலும் வாசிக்க தொடங்கினேன். அந்த தொடரில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ” மழை தருமோ என் மேகம் என்ற அற்புதமான பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள்? அதில் நடித்த சசிகுமாரை எத்தனை பேருக்கு தெரியும்? வலை வீசும் போது சிலமீன்கள் மட்டும் எப்படி சிக்குகின்றன? சில மீன்கள் எப்படி தப்பிக்கின்றன? யார் சிக்கவைத்தது ? யார் தப்பவைத்தது? ” இது எனக்கு மானுடவியலின் அடிப்படைக் கேள்வியாகவே தெரிந்தது.

இன்றுவரை ஒரு இலக்கிய ஏகலைவனாகவே இருந்து உங்கள் ரப்பரில் தொடங்கி தற்போது பண்படுதல் வரை படித்திருக்கிறேன். எனக்கு பல விஷயங்களின் சந்தேகங்கள் உங்கள் கட்டுரை மூலமாக விடுபட்டிருக்கின்றது. ஆனால் அறம் நாவல் படிக்கும்போது ஏற்பட்ட ஒரு விஷயம் தான் என்னை இந்த மின்னூட்டல் எழுதத்தூண்டியது. என் மனைவியார் ஒரு வாசகிதான். இலக்கிய வாசகி அல்ல. ஆனால் அவர் அறம் நாவலை படித்தபோது திடீரென கண்கலங்கி அழலானார். நான் என்னவென்று கேட்ட போது அவர் சொன்னார், ” ஒரு நூலாசிரியனை ஏமாற்றிய செட்டியாரின் மனைவி, அவனுக்கு பணம் கொடுக்க சொல்லி , நாடு தார் ரோட்டில் அமர்ந்து, சத்தியாகிரஹம் பண்ணி பின் எழும் போது, தாரோடு சதையும் ஒட்டி எழுந்து நிற்கும் போது ஒரு சக்தியாக, நின்றாள்”.. என்று படித்தவுடன் உடைந்ததாக சொன்னார். நான் ஒரு இலக்கிய வாசகன் என்று பீற்றிக்கொண்டிருந்தது உறுத்தியது. இலக்கியத்தின் நடை எப்படி இருந்தாலும் சொல்லப்படுகின்ற உண்மை மாந்தர்களின் நரம்பை வெடிக்கச்செய்யும் என்பது உண்மை தானா?

நான் பல விஷயங்களில் உங்களோடு என் மனதில் விவாதம் செய்துகொண்டிருப்பதால், மிகவும் பழகிய, நெருக்கமான ஒருவராக உங்களை எனக்குள் உணர்வதால், உரிமையாக எழுதுகிறேன். உங்களை சந்திக்க மிக்க ஆவல் உள்ளது. சந்திக்கும் வாய்ப்பு இயல்பாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன்..

S .K . பாலமுரளி.

அன்புள்ள பாலமுரளி

நீங்கள் என் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

இலக்கியத்தை இப்படிச் சொல்லலாம். நைட்ரஜன் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் நம்மைச்சூழ்ந்துள்ள காற்றுமண்டலத்தில் இயற்கையாகவே உள்ளன. அவற்றை பிரித்து எடுத்து அழுத்தி திரவமாக்கி குடுவையில் கொடுக்கிறார்கள் ரசாயனவாதிகள். நைட்ரஜனை சுவாசித்தால் நாம் சிரிப்போம். ஆக்ஸிஜனை சுவாசித்தால் புத்துணர்வடைவோம்

அதுபோலவே இலக்கியமும். வாழ்க்கை நம்மைச்சூழ்ந்து நிகழ்கிறது. அதிலிருந்து எடுத்த பகுதிகளை எழுத்தாளர்கள் செறிவாக்கி நமக்களிக்கிறார்கள். அவை நம்மை உணர்ச்சிகரமான நிலைக்குக் கொண்டுசெல்கின்றன

வாழ்க்கையின் செறிவாக்கப்பட்ட பகுதிதான் இலக்கியம். அப்படி செறிவாக்கினால் மட்டுமே வாழ்க்கையின் நுட்பமான விஷயங்களை நம்மால் உணரமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைபுறப்பாடு 5 – கருத்தீண்டல்
அடுத்த கட்டுரைதுதிபாடிவட்டம்- கடிதங்கள்