ஏழாம் உலகின் பண்டாரம்

அன்புள்ள ஜெ,

தங்களின் ஏழாம் உலகம் படித்தேன். இப்படியும் மனிதர்களை பிய்த்துத் தின்று வாழும் சக மனிதர்களைப் படித்து வெறுத்துப் போனேன். “நான் கடவுள்” படம் ஏற்படுத்தாத அந்த பாதிப்பை இவ்வாசிப்பு ஏற்படுத்தியது. சிறிது நாட்களுக்கு முன்பு வலைத்தளத்தில் “நான் கடவுள்” படத்தைப் பற்றிய ஒரு பதிவைப் படித்தேன். உண்மையில் எனக்குமே அந்தப் படத்தில் பிச்சைக்காரர்களை காட்டியிருந்த விதம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அத்தகைய திரைக்கதையை கொண்டதொரு படத்தில் ஒருவித sadist தன்மையைதான் மனது எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக எடுக்கப்பட்ட காட்சிகள் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பிச்சைக்காரர்கள் என்றாலே வாழ்க்கையில் எவ்வித சந்தோஷமும் இன்றி, வாழ்விழந்து சபிக்கப்பட்ட ஒரு ஜனம் என்ற எனது பார்வைக்கு அந்தப் படம் எந்தவித மாற்றத்தையும் கொடுக்கவில்லை. மாறாக எதிர்பார்த்த, இதுவரை “இப்படித்தான்” என்று வைத்துகொண்டிருந்த கருத்துகளுக்கு முரண்பாடாக உள்ளனவே என்று ஒருவித ஏமாற்றமும், எரிச்சலும்தான் வந்தது.

ஆனால் இப்புத்தக வாசிப்பு முற்றிலுமாக ஒரு மாறுபட்ட பார்வையை எனக்கு அளித்தது. கதையின் பிரதான பாத்திரங்களான “உருப்படிகளுடன்” (மனிதர்களுடன்) நான் செலவிட்ட அதிக நேரமோ என்னவோ, இக்கதை அவர்களுக்குள் இருக்கும் சந்தோஷத்தையும், ஆசையையும்,உணர்ச்சியையும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் “வாழ்க்கை” என்ற ஒன்றையும் எனக்குக் காட்டியது.

இதுவரை கோவில் வாசல்களிலும் தெருவோரங்களிலும் இவர்களைக் காணும்போது ஏற்படாத ஒருவித வித்தியாசமான பார்வை இப்போது ஏற்படுகிறது. அவர்களின் வாழ்க்கை என்ன? எங்கு தங்குவார்கள்? மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லாது இருக்கும் இவர்களுக்கும் ஒரு சராசரி மனிதனுக்குரிய அனைத்து வித உணர்ச்சிகளும், ஆசைகளும் இருக்கும் தானே? என்பன போன்ற பல வகை எண்ணங்கள் மனதில் எழுகின்றன.

இவர்களுக்கெல்லாம் ஒரு நல்வழி என்பது கிடையாதா? இத்தகைய நிலையை மேலே கொண்டு வர இயலாதா? இப்போது நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் எனக்குள் ஒருவிதத் தடுமாற்றம் நிகழ்கிறது. அந்த சமயத்திற்கு காசு கொடுத்து நான் அனுப்பினாலும் எனக்குள் ஒருவித நெருடல் இருந்து கொண்டே இருக்கிறது. காசு மட்டும் தருவதால் ஒரு சதவீத மாற்றம் கூட ஏற்படப்போவதில்லை என்று ஒரு எண்ணம் என்னுள் சுழன்று சுழன்று வருகிறது.

மேலும் பண்டாரம் போன்ற ஆட்களுக்கு கதிதான் என்ன? நாவலில் ஒரு அழுத்தமான முடிவில்லை. பண்டாரமாகட்டும், அவர் தம் மனைவியாகட்டும்; தாங்கள் ஒரு பாவமும் செய்யாதவர்கள் என்ற ஆணித்தரமான கருத்தில் மூழ்கிப் போயுள்ளார்கள். அந்த அளவுக்கு அவர்கள் அந்தப் பிச்சைக்காரர்களை ஒரு ஜந்துக்களாகத்தான் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிச்சைக்காரர்கள் சேற்றிலும் சாணியிலும்தான் வாழ வேண்டும். மூன்று நாட்கள் கிடந்து கெட்டுப்போய் நுரைத்துப்போனதைத்தான் தின்ன வேண்டும். வெயிலிலும், மழையிலும் நாறி கொசு மொய்க்கத்தான் இருக்க வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்துகளைக் கொண்டுள்ளார்கள். எனவே உருப்படிகளை (மனிதர்களை) அவ்வளவு கீழ்த்தரமான நிலையில் வைத்து தொழில் பண்ணுவது அவர்களுக்கு பாவமாகவே தெரியவில்லை. அவர்கள் அப்படிதான் இருக்க வேண்டியவர்கள் எனவே அப்படி இருக்கிறார்கள், இதிலென்ன தப்பு? என்பது போல் இருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் முடிவோ தீர்வோ கிடையாதா? நான் கடவுள் படத்தில் வரும் அகோரி போல் யாருமில்லாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் இவர்கள் தண்டிக்கப்படமாட்டார்களா?

இக்கதை கண்டிப்பாக நீங்கள் நேரில் சந்தித்தவற்றை, கேள்விப்பட்டவற்றை வைத்து உண்டான கரு என்பது என் கருத்து. அப்படி இருந்தால் நேரில் நீங்கள் சந்தித்த, கேள்விப்பட்ட பண்டாரம் இன்னமும் சுகபோகமாக இருக்கிறாரா?

அன்புடன்

கிருஷ்ணகுமார் எம்

அன்புள்ள கிருஷ்ணகுமார்,

புனைகதை என்பது சமூகநிகழ்வுகளை ‘அப்படியே’ எழுதுவதல்ல. அதற்கு இலக்கிய மதிப்பில்லை. நிகழ்வுகள் கொள்ளும் ஒருங்கிணைவும் உருமாறுதலும்தான் இலக்கிய ஆசிரியனின் வெற்றி.

ஏழாம் உலகம் போன்ற நாவலில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் மூலவடிவங்கள் எங்கோ உண்டு என்று மட்டும் சொல்லலாம். பண்டாரம் இறந்துவிட்டார். அவரது மைந்தர்களில் ஒருவன் கொல்லப்பட்டான். இன்னொருவன் அதே தொழில் செய்கிறான் என ஒருமுறை அ.கா.பெருமாள் சொன்ன நினைவு.

ஜெ

முந்தைய கட்டுரைஇமயமலைப்பயணம்
அடுத்த கட்டுரைகோயில்களில் கைநீட்டுவது…