தனசேகரின் ’உறவு’-கடிதங்கள் இன்னமும்

அன்புள்ள ஜெ,

தனசேகரின் கதையை உங்கள் தளத்தில் படித்தேன்.

மிகவும் சிறிய முடிச்சை, அழகாக சொல்லியுள்ளார். ஓர் தேர்ந்த திரைக்கதை எழுத்தாளராக வருவதற்கான
அனைத்து கூறுகளும் இந்த சிறுகதையில் தெரிகின்றன.

சொல்ல வேண்டிய விஷயங்களை மாத்திரம் சொல்வதில் தான் சிறுகதை தன் உயிர்ப்பைப்பேணுகிறது. ஒரு பாத்திரத்தின் கோணம், இன்னொரு பாத்திரத்தின் உரசலினால் நிலைகுலையும் போது வாசகனும் தாக்குதலுக்குள்ளாகிறான். இந்தக்கதையின் க்ளைமாக்ஸ் அப்படிப்பட்ட ஒரு கணம் – ஆனால் அதில் சலிக்க வைக்கும் வார்த்தை ஜாலம் இல்லை – திருமணமான எந்த ஒரு ஆணும் உணர வேண்டிய நிஜம்.

அதை ஒரு இளம் எழுத்தாளர் வெளிப்படுத்தியுள்ள விதம் அவரது பக்குவத்தைக்காட்டுகிறது. எழுதியவருக்கும் அதை வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
ஜெய்கணேஷ்.

அன்புள்ள ஜெய்கணேஷ்

நல்ல சிறுகதை இயல்பாகவே நல்ல திரைக்கதையின் இறுக்கம் கொண்டிருக்கும், காட்சித்தன்மை கொண்டிருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு

ஜெ

பதிலுக்கு நன்றி ஜெ அண்ணா..

அந்த கலாய்க்கும் மனநிலையே முன் உதாரணமாக நிலைநிறுத்தப்படுகிறது என்பதுதான் நெருடலாக உள்ளது.. சந்தானத்தின் ஒரு வரியை கூறாமல் முடிவதில்லை நண்பர்களின் பேச்சுக்கள்..தமிழ் ,தெலுகு நண்பர்களின் மனநிலைதான் இது…சீக்கிய நபரோ, மலையாள நண்பர்க்கோ சினிமா பற்றி பேச எதுவும் இருப்பதில்லை..தீவிர அரசியல் இல்லை மதம் ..எல்லாவற்றையும் கலாய்த்தலைவிட இது மேல் என்றே உணர்கிறேன். ஒரு கருத்துப்பரிமாற்றத்துக்கோ ,ரசமான விவாதத்துக்கோ இட்டு செல்கிறது.

ஆனால் மீண்டும் மீண்டும் ஒரு கேள்வி முன் எழுந்து அலைகழிக்கிறது..இது ஒருவேளை இயல்பான போக்குதானோ? நாம்தான் இலக்கியத்தை, கலையை, ஞானத்தை , பொதுபுத்தியில் இருந்து சற்று தள்ளி இருத்தலை fantazy ஆக எண்ணிக்கொள்கிறோமோ என்று.

பின்வரும் இவர்களை உருவாகத்தான் நம் தந்தையும் தாயும் உயிரை கொடுத்து படிக்க வைத்தேன் என்று பீற்றி கொள்ளகிறார்களோ என்ற கேள்வியும் எஞ்சுகிறது.

1. மிக தீவிர நிலைப்பாடு உள்ளதாக காட்டி கொள்பவர்கள் .. இணைய வெளி எங்கும் வசைகளை வாரி வழங்குபவர்கள் .

2. அன்றாடம் பேசிக்கொள்ள பொது இடம் அற்று போனவர்கள் .இணைய வெளியே குட்டிச்சுவர் என ஆக்கி கொண்டவர்கள் குஷ்பூ பற்றி செய்தி என்றால் கீழே கற்பு ஒழுக்கம் கலாச்சாரம் என முழுங்குபவர்கள்..
3.அதிகம் படித்த , மிக பண்புள்ளவராக காட்டிகொள்ளும், அதே சமயம் அனானியாக கீழ்த்தரமான காமத்தை அள்ளி இரைபவர்கள் ( முன்னாள் நண்பர் ஒருவர் , exbii தளத்தில் சுமார் 3000 திரிகள் இன்செஸ்ட் காமக்கதைகள் எழுதியவர், எழுதும்போது எதேச்சையாக பார்க்க நேர்ந்த மனஅதிர்வு இன்னும் நினைவில் இருக்கிறது. அவர் அமெரிக்காவில் 28 வயது மென்பொறியாளர் )

4. எல்லாவற்றையும் நக்கலாக கலாய்க்கும் சந்தானம் வகையறா..லைக்குகளுக்காக தவம் இருப்பவர்கள்.
5. இவர்களேயே முன் உதாரணமாக கொண்டு வளரும் வளர் இளம் பருவத்தினர்.

இது என் தனிப்பட்ட மனப்பதிவு தான்.

இவர்களுக்கு மத்தியில்தான் ஆயிரம் பக்கம் கொண்ட ஜெயமோகன் புத்தகம் வாசித்து பழகும் சிறுபான்மையினரும் உள்ளோம்..தனசேகர் போன்றவர்களின் இடம் அதன் வழியே முன்னகரும் என்பதே நினைவில் இனியதாக உள்ளது.

அன்புடன்,
பிரதீப் பாரதி.

அன்புள்ள பிரதீப்

இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஒரு சாதாரணமான சமூகமனநிலைதான் இது. ஆழமின்மை என்பது இப்படி வெளிப்படுகிறது. ஆனால் எல்லா சந்தர்ப்பத்திலும் ஆழம் என்பது அபூர்வமான ஒரு விஷயம்தான் இல்லையா?

பதின்பருவத்தில் எல்லாவற்றையும் வேடிக்கையாக்குகிற, கிண்டல்செய்கிற ஒரு மனநிலை இளைஞர்களிடையே வரும். கோழிக்குஞ்சு குரல் மாறுவதுபோல அது ஒரு உயிரியல்நிகழ்வு. இவர்கள் மேற்கொண்டு முதிராமல் அந்த மனநிலையை நீட்டிக்கொள்கிறார்கள். பலர் பலவகை மன அழுத்தங்களை வெல்ல அந்த மனநிலையை நடிக்கிறார்கள்

ஜெ

அன்புள்ள ஜெ

தனசேகரின் உறவு கதை வாசித்தேன். ஜி.நாகராஜனின் கதையின் களம். ஆனால் ஜி.நாகராஜன் எழுதும் கோணத்துக்கு முழுமையாகவே மாறுபட்ட கதை. மனநெகிழ்ச்சியை ஊட்டியது.

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்

உறவு கதையின் கோணமே பல ஜி.நாகராஜனின் கதைகளில் உள்ளது. ஆனால் நெகிழ்ச்சி இல்லை, அவ்வளவுதான். அது நவீனத்துவ எழுத்தின் ஒரு மனநிலை, ஒரு சுய விதி

ஜெ

முந்தைய கட்டுரைஹரன் பிரசன்னா
அடுத்த கட்டுரைமகாபாரதம் கும்பகோணம் பதிப்பு முன்பதிவு