சிவா கிருஷ்ணமூர்த்தி- யாவரும் கேளிர்- கடிதங்கள்

ஆசிரியருக்கு,

வணக்கம். யாவரும் கேளிர் அருமையாக இருந்தது. கோலத்தின் புள்ளிகள் போன்ற தனி தனியான ஒரு மனிதரின் எண்ண ஓட்டங்கள் இணைக்கப்பட்டு அழகாக வந்துள்ளது. பிரித்து கொண்டே செல்லுதலும், மேல் இருந்து கீழே நகர்த்தி வைத்தலுமான மனம் எல்லா வண்ணங்களிலும், நிலங்களிலும் உண்டு. ஒதுக்கப்பட்டவன் தன் வலியை தன் அகம்பாவத்தை வெல்ல பயன்படுத்துவானா என்பது இரு ரயில் நிலைய நிறுத்தத்துக்குள் முடிவு செய்யப்படும். சிவாவின் கதை என்றென்றும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

உறவு என்பது என்ன என்ற கேள்வியை தனா அருமையாக கட்டமைத்துள்ளார். கடைக்காரருக்கும், கதை சொல்பருக்கும் என்ன உறவு, கடைக்காரருக்கும்,அவரது அண்ணன்மாருக்கும் என்ன உறவு, அந்த குளிர்ந்த ஊருக்கும், அங்கே ஒட்டாமல் இருக்கும் கதைசொல்லிக்கும் என்ன உறவு, மீனாட்சியை அவன் எந்த உறவாக கொண்டான், காதலுக்கும், கடைக்கார தம்பதிக்கும் உள்ள உறவு , ஒரிரவில் உறங்கி செல்ல துடிக்கும் இளைஞருக்கும், அவர்களுக்கு நகர்ந்து இடம் கொடுக்கும் பெண்ணுக்கும் என்ன உறவு என்று வேறு வேறு பரிணாமங்களை காட்டி சுழல்கின்றது. நடுத்தர மனக்கணக்கான வட்டி கணக்கை கதையில் கொண்டு வந்திருந்ததும் நன்றாக வந்திருந்தது.

அன்புடன்
நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

மனிதர்கள் தங்கள் அடையாளத்தை ‘பிறரை’ உருவாக்குவதன் மூலம்தான் கட்டமைத்துக்கொள்ள முடிகிறது என்பது எங்கும் உள்ள ஓர் உண்மை. சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதையின் சாரமாக எனக்குத்தெரிந்தது அதுதான்

ஜெ

அன்புள்ள ஜெ,

இப்போது தான் யாவரும் கேளிர் படித்து முடித்தேன்.
அற்புதம் – வெளி நாடு போனாலும், என்ன மிதிபட்டாலும்
போகாத கறை ஒன்று நம் மனதில் உண்டு. அதைப்பற்றிய
மிகவும் நுட்பமான பதிவு. இதில் ஆரம்பத்தில் இருந்த அதிகப்படியான
மனிதர்களின் தோற்றம் குறித்த வருணனை முடிவில் எதற்கு என்று
விளங்குகிறது. மேற்கு அடைந்த சமாதானம் கிழக்கு இந்த விஷயத்தில்
என்று அடையும் என்று ஏங்க வைத்த படைப்பு.

மீண்டும் வாழ்த்துக்கள்,
நன்றியுடன்,
ஜெய்கணேஷ்.

அன்புள்ள ஜெய்கணேஷ்

கிழக்கு இன்னும் கூட அடிப்படையில் பழைய நிலப்பிரபுத்துவப் பண்பாட்டைப் பேணிக்கொண்டிருக்கிறது. அதன் மாற்றம் என்பது பெரும்பாலும் நுகர்வியத்துடன் செய்துகொண்ட சமரசம் மட்டுமே

ஜெ

ஜெ,

யாவரும் கேளிர் நல்ல கதை. நான் அமெரிக்காவில் இருக்கிறேன். அமெரிக்காவிற்கு வந்த சில மாதங்கள் புதியதோர் சூழலுக்கு வந்த உணர்ச்சி உருவாகும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற இந்தியர்களிடம் பேசும்போது ஒரு விஷயம் தெளிவாகும். அத்தனைபேரும் இந்தியாவில் இருப்பதை விட சாதியநோக்குடன் இருப்பார்கள். இருபது முப்பதாண்டுகளுக்கும் மேலே இங்கே இருப்பவர்கள் கூட கடுமையான சாதிய மனநிலையுடன் இருப்பதைக் காணலாம்.

இங்கே உள்ள பிராமணர்கள் அவர்களுக்குள் ஒரு தனி குழுவாக செயல்படுவார்கள். இந்தியாவில் ஒரு கிராமத்து அக்ரஹாரத்தில் கூட இவர்களைப்போன்ற குறுகிய சாதியவாதிகளைப்பார்க்கமுடியாது. அதேபோல பிற சாதியினர் எல்லாரும் ஒன்றாகச்சேர்ந்து பார்ப்பன எதிர்ப்பு, தமிழ்த்தேசியம், விடுதலைப்புலி ஆதரவு என்றெல்லாம் பேசுவார்கள். அதுவும் சாதிமனநிலைதான். கொஞ்சம் பேசினால் தெரியும். பிராமணவெறுப்பை அப்படி வேறு சில வார்த்தைகள் வழியாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த பிராமணா வெறுப்புக்கு அடியில் இருப்பது சுயசாதிப் பித்துதான்

எனக்கு இது இன்றும் புரிந்துகொள்ளமுடியாததாகவே இருக்கிறது. ஒரு வெளிநாட்டு லிபரல் சூழலுக்கு வந்தபோதும் ஏன் அதிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்? சொல்லப்போனால் ஏற்கனவே இருந்ததைவிட இன்னும் கூட பழைமைவாதிகளாக இருக்கிறார்கள்.

சிவாவின் கதை அதை நன்றாகவே காட்டியது

சிவராஜ் செல்லப்பா

அன்புள்ள சிவராஜ்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழும் இஸ்லாமியர்தான் அரேபிய இஸ்லாமியரைவிட அடிப்படைவாதிகள்.

சூழல் ஒருவர் மீது கருத்தியல் மாற்றத்தை உருவாக்கலாம். சூழலுக்கு எதிராக எதிர்வினையாற்ற ஆரம்பித்து ஒருவர் தன்னை மேலும் இறுக்கிக்கொள்ளவும் செய்யலாம்

ஜெ

அன்புள்ள ஜெ

யாவரும் கேளிர் ஈழக்கதை ஒன்றை நினைவுபடுத்தியது. நீர் எவடம்? என்ற கதை. அந்தக்கதையிலும் நாடுவிட்டும் உதிர்ந்து போகாத சாதியை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டியிருப்பார். சிவாவின் கதை அழகானது

குமரவேல்

அன்புள்ள குமரவேல்

அந்தச் சிறுகதை Where are you from?

ஜெ

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் 2, யாவரும் கேளிர்- சிவா கிருஷ்ணமூர்த்தி
அடுத்த கட்டுரைஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்