கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2

தற்செயல்
========

வீடு முழுக்க ஆட்கள் உள்ள
அந்தப் பண்டிகைநாளில்
ஒர் அறையிலிருந்து
மற்றொரு அறைக்கும் ஓடும்வழியில்
நொடிநேரம் அவள்முன் வந்தீர்கள்.
எங்கிருந்தோ வந்த ஒரு முத்தத்தை
அவளுக்கு அளித்தீர்கள்.
பிறகு
எல்லா பரபரப்பும் முடிந்தபின்னர்
படுக்கையில் குப்புறவிழுந்து கண்ணீர்வடிக்கிறாள்.
திடுமென வந்துசேரும் இனிமையை எண்ணி.
எதன்மீதும் தனக்கு ஒரு அதிகாரமும் இல்லையே என்று எண்ணி.

*********

முரண்டு
======

இறந்தவர்கள்
பிடிவாதக்காரர்கள்.
கங்கைநீர் வாயில் விட்டாலும்
விழுங்க மாட்டார்கள்.
நாம்
சுவரில் தலைமுட்டி உடைத்துக் கொண்டாலும்
அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
அவர்களின் மடக்கிய விரல்களை
உடைக்காமல் பிரிக்க முடியாது நம்மால்.
மண்ணால் விழுங்கப்படுகையில்
தீ எரிந்து ஏறுகையில்
சற்று முகம் சுளிப்பதுகூட இல்லை.
அவர்கள் செய்யமாட்டோம் என்று முடிவெடுத்தால்
முடிவெடுத்ததுதான்.

*********

உண்மை
======

‘உண்ம’ என்ற சொல்லை
கேட்டெழுத்துக்குப் போட்ட டீச்சருக்கு
எத்தனை ‘உம்ம’க்கள் கிடைத்தன?
கண் மூடிய உம்மாக்கள்.
உதடு குவித்த உம்மாக்கள்
தயங்கித்தயங்கி
சுற்றும் நோக்கும் உம்மாக்கள்.
வேறு யாருக்கோ உள்ள
உம்மாக்கள்.
பிறரைப் பார்த்து எழுதிய
புதியவகை குளிர்ந்த உம்மாக்கள்
டீச்சர் அனைவருக்கும் மார்க் போட்டாள்,
‘உண்ம’ என்றே எழுதிய
மரத்த முகமுள்ள புத்திசாலிப் பையனுக்கும்தான்.
பாவம்

**********

எப்போதும்
========

எவரும்
எப்போதும்
அவர்களேயல்ல.
குறிவைக்கும்
ஒற்றைக்கண்ணன்
ஊனமுற்றவனல்ல.
உறங்கும்போதும்
எண்ணும்போதும்
விழியிழந்தவன்
விழியிழந்தவனல்ல.
திருடன்
தன்வீட்டில் திருடனல்ல.
யாரறிவார்
உண்மையில் இப்போது இருப்பதை விட
பெரிய உலகில் இருந்துகொண்டிருக்கலாம் நாம்.
யாரறிவார்
உண்மையில் இப்போது இருப்பதை விட
சிறிய உலகில் இருந்துகொண்டிருக்கலாம் நாம்.

********

வந்து ரொம்ப நேரமாகவில்லை
========================

கைக்குழந்தைகள் கொட்டாவி விடுவது
எனக்குப் பிடிக்கும்.
‘ஒரு ருசியுமில்லை இவ்வுலகுக்கு’.
அதன்பின் அவர்கள்
பெரிய சலிப்புடன்
உலகுக்கு முதுகைக் காட்டி
திரும்பிப் படுக்கிறார்கள்.

****

ஏணி
=====

என்னுடைய அழகற்ற உறுப்பு என் மூக்குதான்.
அதை மறைத்துவைப்பதற்கான பதற்றம்
எனது எல்லா புகைப்படத்திலும் உண்டு.
புதிய ஒருவர் என் முகத்தைப் பார்க்கும்போது
மூக்கிலிருந்து விலகிநிற்க நான் முனைகிறேன்.
கோபப்படும்போது நான்
மூக்கால் உற்றுப் பார்க்கிறேன் என்கிறான் இளைய மகன்.
அதன் நுனியில் பிடித்து தொங்கி
கீழே குதித்துச் செத்தாலென்ன என்று மூத்தமகன் சிரிக்கிறான்.
சண்டைகளில் அது எல்லாவற்றையும் சிக்கலாக்கிவிடுகிறது
என்கிறாள் மனைவி.
தீராத வெறுப்புள்ள,
எதையுமே கேட்கத்தயாரில்லாத,
உண்மையான இடைவெளியில் வாழ்கிற,
ஒருவர் இருப்பாரல்லவா சண்டைகளில்?
சற்றே காலிடறினால்
அடியற்ற பள்ளத்தில் விழும்படியாக
செங்குத்தான பாறைமீது
தனித்து நிற்கும் ஒருவர்?
அவருக்குரியது என் மூக்கு!

என்னை சும்மா சற்றுநேரம் பார்த்தாலே
கோபம் வரும் என்றும்,
சண்டையை நோக்கி சாய்த்து வைக்கபப்ட்ட
ஒரு ஏணி போல அது சீண்டுகிறது என்றும்,
அதன் தீயசாத்தியங்களை நான் புறக்கணிக்க முடியாது என்றும்,
என்னோடு பேசுபவர்களிடம்
அதிகரித்துக் கொண்டே செல்லும் கடுமையால் உனர்கிறேன்.

சாத்தான் அவனது பீடத்தை
ஏன் எனது மூக்கில் வைத்தான்?

******************

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

சில மலையாளக் கவிதைகள்

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

மலையாளக்கவிதை பற்றி

மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து

நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

பத்து மலையாளக் கவிதைகள்

பத்து மலையாளக் கவிதைகள்

பி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்

மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

பி.ராமன் கவிதைகள்

பி. ராமன் கவிதைகள்

முந்தைய கட்டுரைகல்பற்றா நாராயணன் கவிதைகள்
அடுத்த கட்டுரைதுவைதம்