எழுத்துப்பிழை கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெ.,
நீண்ட நாட்களாக பல்வேறு விடயங்கள் (சரி..விஷயங்கள்!) குறித்து எழுத நினைத்து இப்போது சின்ன விஷயத்துக்காக எழுதுகிறேன். இந்த “சிற்றடி”யோடு என் கடித போக்குவரத்தை துவங்குகிறேன்.

பின்வரும் பதிலில் தாங்கள் இணைய “நிலையம்” என்று குறிக்கின்றீர்கள். நிலையம் என்பது “நிற்கும் இடம்” என்று பொருள்படுகிறதே. “மையம்” என்பது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.தங்களின் “நிலை”ப்பாட்டை அறிய ஆவல்! (அது நிலைபாடா ..அல்லது நிலைப்பாடா? என்ன வேற்றுமை உருபு)

////அன்புள்ள சங்கரன்

நீங்கள் சொல்வது உண்மை. பலசமயம் எழுத்துப்பிழைகள் மிக அதிகமாக இருக்கின்றன. அதற்கான காரணங்களில் முதலாவது அத்தகைய எழுத்துக்களை நான் ஏதாவது இணைய “”””நிலையத்தில்”””” இருந்ந்து எழுதியிருப்பேன் என்பதுதான்.////

மற்றொரு பதிவில் “விரைவுணவகம்” என்று குறித்திருந்தீர்கள். அது “சட்டூண் விடுதி” என்றால் மேலும் துலக்கமாகுமா? “Fast food”-ஐ “சட்டூண்”, “சட்டுண்டி” (ஐயே..நல்லால்ல!) என்பது பொருந்தி வருமா?

தமிழில் அறிவியல் எழுத மட்டுமாவது எழுத்துச் சீராக்கம் தேவை என்று நினைக்கிறேன். (உதாரணம்: ga,ja,da,da,ba ஒலிகளை க,ச,ட,த,ப -வின் மீது இரு புள்ளிகளை இடுவதன் மூலம் குறிக்கலாம்) தங்கள் கருத்து என்ன? தமிழின் ஒலிமரபு கெடாமல் செய்வது முக்கியம். (kam”PA”n- க ம் ப ன் என்று எழுதி அதை kam”Ba”n என்று படிக்கிறோம். மலையாளிகளும் இதுபோல உச்சரிப்பதை கவனித்திருக்கிறேன். Interview- inDErview)

வந்தன்னிக்கே கண்ணுகள்ள கத்திய விட்டு ஆட்டிடேனோ…(ச்சும்மா ஜாலிக்கி!) டேஞ்சரஸ் பெல்லோ!

குற்றம் குறை இருப்பின் பொருத்தருள்க!

வெங்கடேஷ்

அன்புள்ள வெங்கடேஷ்

பொழுது போகாமல் இருந்தால் மொழி ஆராய்ச்சி செய்வதுதான் தமிழ்ப் பண்பாடு. எந்த அளவுக்கு சிக்கலாக சொர்களை அமைக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு தமிழறிவு மிகுந்திருக்கிறது என்று ஆகும். நீங்கள் ஒரு முளைவிடும் தமிழறிஞர். வாழ்க நீவிர் ஆற்றும் தொண்டு.

நிற்க, சீரியஸாக சில விஷயங்கள். முதல் விஷயம் ஒரு மொழியில் வரிவடிவத்துக்கும் உச்சரிப்புக்கும் இடையே இடைவெளி இருப்பது ஒரு மாபெரும் பிழை அல்ல. வரி வடிவம் ஒருபோதும் உச்சரிப்பைச் சொல்லிவிடமுடியாது. சந்தி சிரிக்கிறது, சந்திப்போமா இரு சொற்களுக்கும் இடையே உள்ல ச வேறு வேறு. நாம் சாதாரணமாக சொல்லித்தான் வாழ்கிறோம். இருக்கும் எழுத்துக்களை சிக்கலாக்காமலேயே சொர்களை எழுதமுடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். எழுதுவதை எப்பாடிச் சொல்வதென்பதை சொல்லிக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஆங்கிலத்தில் பல்லாயிரம் சொற்களுக்கு சொல்வடிவமும் வரிவாடிவமும் வேறானவை.

விரைவுணவகம் என்பதை ஒரு சுவார்சியத்துக்காக எழுதியிருப்பேன். சட்டுணவகம் என நீங்கள் சொன்னால் நான் அதில் சாப்ப்ட மாட்டேன் என்று சொல்லமாட்டேன். தந்தூரி கடையை சுட்டுணவகம் என்று சொல்ல மு.இளங்கோவன் முயன்றால் அதை தடுக்கும் சக்தியும் என்னிடம் இல்லை

இணைய மையம் என்றுதான் நான் சொல்வது. இணைய நிலையம் என்று சொல்லும்போது இணைப்பு நிலைத்திருக்கும் என்றும் அக்காடுப்பில் சொல்லியிருப்பேன் என்றும் படுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைஇணைப்புகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைநகைச்சுவை கடிதங்கள்