அன்புள்ள ஜெ.,
உறவு கதை படித்தேன்..மிக இயல்பாக ஆரம்பித்து ,உச்சம் அடைந்து பின் வடிவது என..உக்கிரமான காமம் போலே..
மிக நுண்ணிய சடாரென மனதின் ஓர் நரம்பை சுண்டிவிடும் “ஆஸ்பத்திரில குடுத்த மாத்திரைய அங்கனக்குள்ளயே முழுங்கிட்டு சரியாப்போயிரும்லன்னு கேட்டு சிரிக்கிறா.. ’ ஒரு சேர செவிட்டில் அறையும் நிலையாமையும், களங்கமற்ற அன்பின் சாந்தத்தையும் கண்முன்னே காட்சி விரித்தது. வேறன்ன சொல்ல ..
இணைய வெளி எங்கும் அனானியாக சுற்றி திரிந்து காறி உமிழ்ந்து கலாய்க்கும் என் தலைமுறையில் இருந்தே மற்றும் ஒரு ஒளிக்கீற்று..அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஜெ..தனசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
பிரதீப் பாரதி
அன்புள்ள பிரதீப்,
இலக்கியம் உருவாவதற்கு அடிப்படையான தேவை என்ன என்ற வினாவுடன் நான் சென்றதலைமுறை மேதைகள் சிலரை சந்தித்திருக்கிறேன். நீதியுணர்ச்சி என்று வைக்கம் முகமது பஷீர் பதில் சொன்னார். வயதாக ஆக அந்தப்புள்ளியை நானும் சென்றடைகிறேன்
எழுதும் விருப்பமும் புகழாசையும் இருந்தும் பலர் மொக்கையாக எழுதுவதற்குப்பின் உள்ள உண்மையான காரணம் நீதியுணர்ச்சி இல்லை என்பதே. நவீன நுகர்வோர் பண்பாடு அந்த அடிப்படை வேகத்தை அழித்துவிடுகிறது.
அந்த இயலாமையையே பலரும் அற்பமான ‘கலாய்த்தல்’ ஆக வெளியிடுகிறார்கள்.சிலர் காமத்தை எழுதிப்பார்க்கிறார்கள். விளைவாக சுயஏமாற்றம். அதன் விளைவான வன்மம் நிரந்தரமாக தங்கிவிடுகிறது. தமிழில் மட்டுமல்ல உலகமெங்கும் பல மொழிகளில் இந்தப்போக்கு காணக்கிடைக்கிறது
சிலரே அதைத்தாண்டி வருகிறார்கள். சென்ற இலட்சியவாத யுகம் போல ஒட்டுமொத்த சமூகப்போக்கு எவரையும் வழிநடத்துவதில்லை. அவர்களே தங்கள் வழிகளை கண்டுகொண்டால்தான் உண்டு
ஜெ
அன்புள்ள ஜெ
தனசேகரின் உறவு நான் சமீபத்தில் வாசித்த நல்ல கதை.
நான் ஒருமுறை ஒருபிச்சைக்காரத் தம்பதியைப்பார்த்தேன். கணவனும் மனைவியும் ஊனமுற்றவர்கள். மடியில் ஒரு குழந்தை. அவர்கள் இருவரும் இருந்த அன்னியோன்னியம் என்னை அதிர்ச்சி அடையச்செய்தது. மனிதர்களுக்கிடையே நல்ல உறவு உருவாவதற்கு புறச்சூழல்கள் தேவை என்ற நம்பிக்கையோ மாயையோ எனக்கிருந்தது. நாமெல்லாருமே உறவில் பிரச்சினை என்றால் புறச்சூழலைத்தானே குற்றம் சொல்கிறோம். அந்த காட்சி எனக்கு நீண்டநாள் ஒரு பெரிய துன்பத்தையும் ஆனந்தத்தையும் அளித்துக்கொண்டிருந்தது. இந்தக்கதை அதை அளித்தது
நன்றி
செல்வக்குமார்
அன்புள்ள செல்வக்குமார்
நீங்கள் சொல்லும் கருவில் இந்தி எழுத்தாளர் ஸ்ரீகாந்த் வர்மா ஒரு முக்கியமான சிறுகதை எழுதியிருக்கிறார்
ஜெ