குமரி உலா – 6

காலையில் கார் வந்து சேர்ந்தது. குளித்துவிட்டுக் கிளம்ப சற்றுதாமதமாகிவிட்டது. அரட்டை இடைவிடாது நடந்துகொண்டிருக்கும்போது செயல்கள் ஓடுவது இல்லை.

முதல் பயணம் இரணியல் அரண்மனைக்கு. அதைப்பற்றி நெய்யூர் டவுனில் விசாரித்தாலும் யாருக்கும் தெரியாது. பயணிகள் பொதுவாக அங்கே போவது இல்லை. அங்கே பார்க்கவும் ரசிக்கவும் ஒன்றும் இல்லைதான். பெருமாள் பலமுறை சென்றிருக்கிறார். ஆகவே குழப்பம் இல்லாமல் செல்ல முடிந்தது.

இரணியல் அரண்மனையைப்பற்றி பொதுவாக தெளிவான சித்திரங்கள் இல்லை. இது நூறு வருடம் முன்பே கைவிடப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்திரம் கிடைப்பதுவரை திருவிதாங்கூர் அரசு இதை பராமரித்து வந்தது. இரணியல் பழங்காலத்தில் சற்று முக்கியமான இடமாக இருந்தது. உபதலைநகராக இருந்திருக்கலாம்.

பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை என்று சொல்லப்படுகிறது. கடைசி காலத்தில் குலசேகர ஆழ்வார் தங்கியிருந்த அரண்மனை என்றும் சிலர் சொல்கிறார்கள். குலசேகர ஆழ்வாரைப்பற்றி நிறைய ஐதீகக் கதைகள் உள்ளன.

பெரிய தோட்டம் காடுபிடித்துக் கிடக்க அதன் நடுவே இடிந்துசரிந்து பாழடைந்து விசித்திரமான பேய் பங்களா போல இருந்தது அரண்மனை. இதுவும் பத்மநாபபுரம் அரண்மனை போல மரத்தாலானதுதான். பிற்பாடு ஓடு வேயப்பட்டது. பலவகையான குற்றச்செயல்கள் நடக்கும் இடம். நாங்கள் சென்றபோதுகூட ஒரு தற்காலிக தம்பதியைப் பார்த்தோம்.

‘இருபதுவருடம் முன்பு கூட இது நன்றாக இருந்தது’என்றார் பெருமாள். ‘நான் வந்திருக்கிறேன். இதையும் எடுத்துக்கொள்ள கேரள அரசு விரும்பியது.  தமிழக அரசு தரவில்லை. அப்போதே ஊர்மக்கள் இங்குள்ள மரம், கதவுகள், அலங்காரக் கற்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். நான் ஒருமுறை குமரி அனந்தனை இங்கே கூட்டிவந்தேன். அவர் மிக மனம் வருந்தி சில கட்டுரைகள் எல்லாம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை… ‘

‘இனிமேல் இங்கே விறகு தவிர ஏதும் இல்லை ‘ என்றேன்.

‘ஆமாம். இன்றைய நிலையில் இதை இடித்துவிடுவதுதான் நல்லது. இல்லாவிட்டால் யார் தலைமீதாவது விழும் ‘

அரண்மனையின் பூமுகத்தில் கருங்கல்லால் ஆன அஸ்திவாரம் மட்டுமே மீதி. உள்ளே கட்டிடத்தில் கூரையே இல்லை. மிகப்பெரிய தேக்கு உத்தரங்கள் வெறித்து துருத்தி நின்றன.

அங்கணத்தில் கூரை சரிந்து இறங்கும் இடத்தில் அது ஏதோ பிரம்மாண்டமான சிலந்தியின் வலைபோல இருந்தது. சுவர்கள் முழுக்க அமர இலக்கியங்கள், குகை ஓவியங்கள்.

உள்ளேயே தாவரங்கள் முளைத்திருந்தன. மாடிக்கு ஏறினோம். படிகள் முனகி அதிர்ந்தன. தூசி அடர்ந்து கிடந்தது. ஆழமான மெளனம்.

‘ஜெயன், உங்கள் ‘கண்ணாடிக்கு அப்பால்’ கதையில் வரும் மாளிகை போல இருக்கிறது ‘ என்றார் வசந்தகுமார்.

‘இம்மாதிரி இடங்களில் உள்ள மெளனம் மிகவும் கனமானது. அதிகாரத்துக்கு உள்ளே பாவம் உள்ளது. அதிகாரம் போனபின்னாலும் பாவம் அப்படியே நிற்கும்’ என்றேன். ‘இந்த அரண்மனையில் எத்தனைபேரை கொன்றிருப்பார்கள். எத்தனை கொடுமைகள் நடந்திருக்கும்’

‘இந்த தடியெல்லாம் எதற்கும் உதவாதா?’ என்றார் வசந்தகுமார்.

‘முன்பெல்லாம் வீடுகட்ட எடுத்துச் செல்வது உண்டு. நல்ல தேக்குத்தடி. ஆனால் நூற்றாண்டுகள் ஆனதனால் பசை இருக்காது. ஆணி நிற்காது. சிலருக்கு பயம். தடிவழியாக பேய்கள் வந்து விடுமோ என்று…’ பெருமாள் சொன்னார்.

அஜிதனுக்கு உற்சாகம். அவன் கண்ணில் அந்த வீழ்ச்சிகூட அழகாகவே பட்டது. எங்கள் மனதில் இருந்த கனமான சோர்வு அவனிடம் இல்லை. இடிபாடுகள் வழியாக ஓடினான். சிரித்தான். அந்த சரிவுகள் மீது படர்ந்து தளிர்களில் ஒளிசுடர நிற்கும் செடிகள் போலத்தான் அவனும். எல்லா வீழ்ச்சிகளையும் அடுத்த காலகட்டம் உண்டு செரித்து உரமாக ஆக்கிக் கொள்கிறது.

வெளியே ஒரு இடிந்த குளம். அதற்குள் நூற்றாண்டுகளாக மாறாத கரிய நாற்ற நீர். அதில் இலையாட்டம். ஏதோ புராதன மிருகத்தின் கண் போல.

அஜிதன் ஒரு பெரிய புளியமரத்தின் பொந்தில் ஏறி அமர்ந்து ‘அப்பா! ‘ என்று கூவினான்.

நாங்கள் திரும்பும்போது வழியில் ஒரு சிற்பத்தூண் கிடந்தது. யாரோ எடுத்துப்போகும்போது விடுபட்டது.

‘இதுதான் நாம் கடைசியாக இந்த அரண்மனையைப்பார்ப்பதாக இருக்கும்’ என்றார் பெருமாள். ‘நான் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இங்கே வருவது உண்டு. ஒவ்வொரு முறையும் இது தேய்ந்து அழிந்து விட்டிருப்பதைக் காண்கிறேன் ‘

‘யானையின் சடலத்தை நரிகள் உண்பதுபோல’ என்றேன்.


காரில் ஏறிக் கொண்டோம். ‘இடியாமல் ஒரு அரண்மனை இருக்கிறது. வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை. அங்கே போகலாம் ‘ என்றார் பெருமாள்.

[தொடரும்]

2003-இல் செய்த பயணம்

நன்றி திண்ணை

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇருமண்வெட்டிகள்