குமரி உலா – 2

பல வடிவங்களில் நான் மேலாங்கோட்டு அம்மனைப்பற்றி எழுதியிருக்கிறேன். என் குலதெய்வமான இட்டகவேலி முடிப்புரை நீலி மீண்டும் மீண்டும் என் கனவுகளை நிறைப்பவள். அவள்மீது எனக்கு பக்தியா பயமா பிரியமா இல்லை அதற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஓர் ஆழ்மனத்தொடர்பா என்று சொல்லத்தெரியவில்லை. பற்பலவடிவங்களில் பலவகையான பெண்தெய்வங்கள் குமரிமாவட்டத்தில் சிதறிக்கிடக்கிறார்கள். அனைவர் வழியாகவும் ஒரு பொதுச்சரடு ஓடுகிறது. அவர்கள் எல்லாமே ஏதோ வகையில் மலைதெய்வங்கள். நீலிக்கு நீலகேசி என்றும் பெயர் உண்டு. காடு அம்மனின் நீலமுடி. பின்பு நாகரீகத்தால் பழிவாங்கப்பட்ட எல்லா பெண்தெய்வங்களும் அந்த மலைதெய்வங்களுடன் இணைகின்றனர்.

மேலாங்கோட்டு அம்மனின் உற்பத்தி இடம் என்ன? தெரியவில்லை. அந்த இடம் சமீபகாலம்வரை காடு. உதயகிரிக் கோட்டையின் பின்பக்கம் அது. பொதுவாக கோட்டைகளின் பின்பக்கம்தான் தண்டனைகளை நிறைவேற்றும் இடம் இருக்கும். அங்கிருந்த ஏதோ வனதெய்வத்துடன் தண்டிக்கப்பட்ட தெய்வங்கள் கலந்து உருவான தெய்வங்கள் அவை என்று படுகிறது.

குமாரகோவில்போகும் வழியில் இடப்பக்கமாகத் திரும்பினோம். என் சிறுவயதில் அது ஒற்றையடிப்பாதைதான். இப்போது செம்மண்சாலை. குமாரகோவில்பகுதி பத்தாண்டுகாலம் முன்புவரை மிகவும் கைவிடப்பட்ட நிலமாக இருந்தது. வேளிமலையின் ஒரு வளைவுக்குள் இருக்கும் சமவெளிப்பகுதி அது. குமாரகோவிலை ஒட்டிய சில வீடுகள் மட்டுமே முன்பு இருக்கும். முதலில் சில ஆசிரமங்கள் வந்தன. பின்பு நூர் உல் இஸ்லாம் பொறியியல்கல்லூரி வேளிமலையின் அடிவாரத்தில் வந்தது.  கேரளப்பையன்கள் வந்துதங்கி படிக்க ஹாஸ்டல்கள் ஏற்பட்டன.

உதயகிரி கோட்டையின் பின்பக்கம் தெரிந்தது. கற்களால் ஆனபெரிய கட்டுமானம். முன்பு மண்ணால் ஆனதாக இருந்த கோட்டையை மார்த்தாண்டவர்மாவின் காலத்தில்தான் கருங்கல்லால் எடுத்துக் கட்டினார்கள். சிறிய கோட்டை. உள்ளே புலியூர் குறிச்சி என்று இன்று சொல்லப்படும் ஓர் ஊரும் செங்குத்தான ஒரு குன்றும் உண்டு. குன்றுக்குமேல் கண்காணிப்பு மண்டபம். அக்காலத்தில் படைகளை நிறுத்தி வைக்கும் இடமாக இருந்திருக்கிறது.

கோட்டையை ஒட்டி ஒரு ஆலமரம். அடியில் சில சூலங்களும் ஒரு சிறு கல்லும். செம்பட்டாடையும் மஞ்சள் குங்குமமும் அது ஒரு இசக்கி என்று காட்டின.

வசந்தகுமார் ‘ ஜெயன், இதுமாதிரித்தான் மேலாங்கோட்டு அம்மனும் இருந்திருக்கவேண்டும் ‘ என்றார்.

‘ஆமாம். என் நினைவிலேயே ஓலைவேயப்பட்ட மண்சுவர் கட்டிடம் இருந்திருக்கிறது… ‘ என்றேன். அஜிதன் கோட்டைச்சுவர் மீது தொற்றி ஏற முயன்றான்.

‘நான் மேலாங்கோட்டு அம்மன் பற்றி ஒரு கட்டுரையை தீராநதி இதழில் எழுதியதை படித்திருப்பீர்கள் சார்’ என்றேன் அ.கா.பெருமாளிடம் . ‘அக்கதை முதலில் மலையாளத்தில் பாஷாபோஷிணி இதழில் வெளிவந்தது. அதற்கான எதிர்வினை ஆச்சரியமாக இருந்தது. பலர் ஃபோன்செய்து இது அவர்கள் குலதெய்வம் என்று பாட்டிகள் சொன்னதாகச் சொன்னார்கள். நடிகர் முரளி கூட ஃபோனில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். சுகதகுமாரியின் அக்கா ஹ்ருதய குமாரி ஒரு நீண்ட எதிர்வினையை பாஷாபோஷிணியில் எழுதியிருந்தார் ‘

‘இது தெற்கு திருவிதாங்கூர் நாயர்கள் பலருக்கு முக்கியமான தெய்வம். போருக்கான தெய்வம் என்றும் சொல்கிறார்கள் ‘ என்றார் அ.கா.பெருமாள்.

‘மார்த்தாண்டவர்மாவை எதிர்த்துப் போரிட்ட பப்புத்தம்பி ராமன்தம்பி ஆகியோரின் தங்கை உம்மிணித்தங்கச்சி தன் நாக்கைப் பிடுங்கி இறந்ததாகவும் அவள்தான் இங்கே தெய்வமானாள் என்றும் பத்மனாபபுரம் அரண்மனையில் எழுதிவைத்திருக்கிறதே ? என்றேன்.

‘அதற்கு ஆதாரமே இல்லை. இங்கே இருப்பது வடிவுடை அம்மன், குலசேகரத்தம்புரான், யக்ஷி ஆகியோர்தான். அவர்களுக்கு பலவகையான கதைகள் இருக்கின்றன… ‘ என்றார் அ.கா.பெருமாள்.

கோவிலைப் பார்த்ததும் வசந்தகுமார் ஏமாற்றம் அடைந்தார். கான்கிரீட்டில் கோவில் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. ‘என்ன ஜெயன் உங்கள் வர்ணனை படித்து ஏதோ காட்டுதெய்வம் என்று எண்ணிக் கொண்டிருந்தேனே ‘ என்றார்.

‘குமரிமாவட்டத்தில் இப்போது எல்லா சிறுதெய்வக் கோவில்களும் கான்கிரீட்டில் கட்டப்படுகின்றன. வேண்டுமென்றால் சிறுதெய்வ வழிபாட்டு மரபை மரத்தடிக்காலம், ஓலைக்கூரைக்காலம், ஓட்டுக்கூரைக்காலம், கான்கிரீட் காலம் என்று பிரிக்கலாம் ‘ என்றார் பெருமாள்.

வசந்தகுமார் காமிராவை திறக்கவே மறுத்துவிட்டார். ‘என்ன ஜெயன் இந்த இரும்பையும் கம்பியையும் என்னத்துக்கு எடுக்கவேண்டும்?’ என்றார்.


உள்ளே சென்று அம்மன்களைப் பார்த்தோம். கண் பளபளக்கும் அக்கா கோவில். பிள்ளையைக் கடித்துக் கொண்டு நிற்கும் தங்கையின் கோவில். கோவிலைச்சுற்றி இருந்த கொன்றைவனம் மட்டும் விசித்திரமாக மனதைக் கவர்வதாக இருந்தது.

‘சிறுதெய்வக்கோவில்களில் பிராமணர்கள் பொதுவாக பூஜை செய்வது இல்லை. ஆனால் இப்போது எல்லா இடத்திலும் நிலைமை மாறிவிட்டது. குமரிமாவட்ட கோவில்களில் உயிர்பலிகொடுப்பது கிட்டத்தட்ட இல்லாமலாகிவிட்டது. ஆகவே பிராமண பூஜை ஆரம்பித்து விட்டது .சம்ஸ்கிருத மந்திரங்களும் தோத்திரங்களும் வந்துவிட்டன. நாட்டார் தெய்வங்கள் ‘அருள்மிகு சுடலைமாடன்கள், அருள்மிகு இசக்கிகள்’ ஆகிவருகின்றன. இந்த தெய்வங்களில் பொதுவாக அருள்புரியும் பாவனையோ அபயக்கரமோ இருப்பது இல்லை. இவை உக்கிரதெய்வங்கள். இப்போது கருவறைச்சிலைகள் கூட மாறிவருகின்றன. பல கோவில்களில் மூலச்சிலைகளை தனியாக ஓர் இடத்தில் ஒதுக்கிவிட்டு புதிய சிலைகளை அருள்புரியும்பாவனையில் நிலைநிறுத்துகிறார்கள்.. ‘

‘அதற்காக வருத்தப்பட்டுப் பயனில்லை. இந்த தெய்வங்கள் தொடர்ந்து மாறியபடியேதான் இருக்கின்றன. அந்த மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை அவையிலும் காண்கிறோம்’ என்றேன். ‘ஏதோ ஒரு கட்டத்தில் இவற்றுக்கு இணையதளங்கள் , வலைப்பக்கங்கள் உருவாகலாம். விர்ச்சுவல் ஆலயங்கள் எழலாம் ‘

அங்கிருந்து குறுக்கு வழியில் பத்மநாபபுரம் சென்றோம். கோட்டைக்கு வெளியே வயலில் ஒருவர் உழுதுகொண்டிருந்தார். வசந்தகுமார் சில புகைப்படங்கள் எடுத்தார். கோட்டைக்கு வெளியே ஒரு கோவில் இருந்தது.

‘அந்தக் கோவில்கூட இரு வருடம் முன்பு இடிந்து பாழடைந்து கிடந்தது. இப்போது பழுதுபார்த்து வெள்ளையடித்துவிட்டார்கள் ‘ என்றேன். ‘பொதுவாக கோட்டை என்பது ஒரு குறியீடுபோல. கோட்டைக்குள் உயர்சாதிகள். வெளியே தாழ்ந்த சாதிகள். உள்ளே பெருந்தெய்வங்கள் வெளியே சிறுதெய்வங்கள். இது ஒரு அம்மன் கோவில்’  என்றேன்.

‘ எல்லா சாதிகளும் வழிபடுகிறார்களா?’

‘நாயர்கள் வழிபடுகிறார்கள், மற்ற சாதியினரும் உண்டு. பழங்காலத்தில் உயிர்பலி நடந்தது. இதுதான் பெரியகோட்டை. உள்ளே போய்விட்டு உதயகிரிக்கோட்டைக்குள் போகலாம் ‘ என்றேன்.

உள்ளே சென்றோம்.

[தொடரும்]

நன்றி திண்ணை

2003-இல் செய்த பயணம்

முந்தைய கட்டுரைபுறப்பாடு – கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைசமூகவலைத்தளங்கள் – கடிதம்