இரணியல் கொட்டாரம்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு ,

நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
சிதிலமடைந்த இரணியல் கொட்டாரம் பற்றி யூடியூபில் காணக்கிடைத்த வீடியோ ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=4V7WeNQX1Kg&feature=player_embedded

நன்றி.

ஆர் பாலா

அன்புள்ள பாலா,

இரணியல் அரண்மனைக்கு நானும் வசந்தகுமாரும் சென்றதைப்பற்றி ஒரு நீண்டபதிவு எழுதியிருக்கிறேன்.

வரலாற்றின்படி சேரன் செங்குட்டுவனின் வழிவந்த பெருமாள்வம்சம் சேரநாட்டை வஞ்சி என்று சொல்லப்படும் கொங்கல்லூரை தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தது. அந்த வம்சம் சாமூதிரியின் தாக்குதலால் அழிந்தபோது பதிநான்காம் நூற்றாண்டுவாக்கில் கடைசி பெருமாளான குலசேகரப்பெருமாள் தன் கிரீடம் மற்றும் உடைவாளுடன் தெற்கே வந்தார். முதலில் திருவட்டாறிலும் பின்னர் இரணியலிலும் தங்கியிருந்தார். இங்கிருந்த ஒரு தாய்வழி ஆட்சியாளர் குடும்பமான திருப்பாம்பரம் சொரூபத்தில் ஒரு பெண்ணை மணந்தார். அப்பெண்ணுக்கு சேரன் செங்குட்டுவனின் உடைவாளையும் மணிமுடியையும் அளித்தார்.

அவ்வாறு அந்தக்குடும்பம் அரசகுடும்பமாக ஆகியது. அதை மற்ற சிறு ஆட்சியாளர்கள் தலைமை ஏற்க அனுமதித்தனர். திருவிதாங்கூர் என்னும் சிற்றரசும் அரசகுலமும் உருவாகி வந்தது. ஆகவேதான் திருவிதாங்கூர் அரசர்கள் வஞ்சீசபால என்ற அடைமொழி சூட்டிக்கொள்கிறார்கள். வஞ்சி ஒருபோதும் அவர்களின் ஆட்சியில் இருந்ததில்லை என்றாலும்.

இந்தக்கதை ஒரு தொன்மம் மட்டுமே என்றும், திருப்பாம்பரம் சொரூபம் அதிகாரத்தை வெல்ல உருவாக்கி பரப்பிய நம்பிக்கைதான் என்றும் சில ஆய்வாளர் சொல்லிவந்தனர். குலசேகரப்பெருமாள் பற்றி எந்த பெரிய ஆதாரமும் இல்லை. ஆனால் சமீபத்தில் திருவனந்தபுரம் கோயில் நிலவறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் நிதிக்களஞ்சியம் அது உண்மை என்பதற்கான திட்டவட்டமான ஆதாரம். சேரன் செங்குட்டுவனின் கஜானாவே திரும்பாம்பரம் சொரூபத்திடம் கொடுக்கப்பட்டிருக்கலாமென அது காட்டுகிறது.

ஜெ

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20310109&format=print&edition_id=20031010

முந்தைய கட்டுரைபுறப்பாடு 7 – கையீரம்
அடுத்த கட்டுரைபஞ்சமும் ஆய்வுகளும்