அன்பின் ஜெ ,
தொடர்ந்து வாசிக்கவும் தங்களுக்கு எழுதுவதன் மூலம் தொகுத்துக்கொள்ளவும் முயன்று கொண்டு இருக்கிறேன்.youtube இல் SRM TED என்றொரு பதிவில் தாங்கள் இப்படி கூறியிருப்பீர்கள்,”சு.ரா. வின் நினைவுடனே உறங்கச் சென்று அவர் நினைவுடனே விழித்தெழுந்த நாட்கள் என் பிரம்மச்சரிய நாட்கள் என்று”,பெரும்பாலான எனது பொழுதுகளும் அவ்வாறே கழிகிறது என்று நான் கூறுவதையும் மிகையாக எடுத்துகொள்ள மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன் .தங்கள் நேரத்தை உண்பதற்கு மன்னிக்கவும்.
“உணர்வு மற்றும் பொருளியல் ரீதியாக எவரையும் சுரண்டாதவொரு வாழ்க்கை முறை ஒழுக்கமானதே “என்பது விமலாவின் புரிதல்.கன்னியாகுமாரி தேவியை ஆத்மார்த்தமாக வணங்கும் பிரவீணாவை துணுக்குற பார்த்து பதைப்படைகிறார் ரவி .விமலாவின் புரிதலை அந்த சம்பவத்திற்கு பிறகு அவள் தந்தை அணுகிய விதம் அதன் பிறகு அவளது மேற்கத்திய வாழ்வில் கற்பு என்கிற நமது விழுமியமும் அங்கே அதற்கான இடமும் இவைகளையெல்லாம் ஒன்றிணைத்தே விமாலாவின் அந்த புரிதலை நான் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
கி.ரா.வின் “கன்னிமை ” மறு வாசிப்பு செய்துவிட்டே நான் நாவலை தொடர்ந்தேன் .
“எந்தக் களத்திலும் அவள் எவரையும் சந்திப்பதில்லை “, ஒப்பனை கலைத்தால் அவள் எந்த சமயலறைக்குள்ளும் ஒன்றி விடக்கூடும்” ,பிரவீணா ,ஷைலஜா முறையே ரவியின் புரிதல் இது.”பரவாயில்லை இப்படிதான் ஆகும்னு புக்ல போட்டிருந்தான் ” என்ற விமலாவின் சொற்களே அவளை வென்றாகவேண்டிய கட்டாயத்திற்கு ரவியை நகர்த்தியிருக்க கூடும்.
ரவி நிறைவடைவது சைலஜாவிடம் மட்டுமே..தான் அதட்டினால் அழும் கொஞ்சினால் குலவும்,தன் அகங்காரத்தை நிறைவுறச்செய்யும் ஷைலஜா .ரமணி எனக்கு ஏனோ வேணியை ஞாபகப்படுத்தினாள் .
வேணுகோபால் சொன்ன அந்தக்கதை பிரவீணா சொல்லியிருக்கக் கூடுமோ?…என் வாசிப்பு பிழையாக கூட இருக்கலாம்..
ஏதாவதொரு ஒரு கட்டுரை தேறுகிற மாதிரி இருக்கிறதாவென தேடினேன் ஏமாற்றமே எஞ்சியது.சகல கீழ்மைகளுடனும் செக்ஸுக்காக அலையும் நாயகன்,விடுமுறைக்கொரு ஆண் வீதம் ஊர் சுற்றும் அமெரிக்காவாழ் நாயகி என்கிற ரீதியில் ஆரம்பித்திருந்தார் ,திண்ணை என்று நினைவு ,திண்ணை இலக்கிய இதழ் என்றும் கேள்வி.தங்களது மற்ற படைப்புகளுக்கு நல்ல கட்டுரைகளெல்லாம் கிடைக்க கன்யாகுமரிக்கு விசயத்தில் எனக்கு ஏமாற்றமே ,தாங்கள் முன்னுரையில் கூறியதே நினைவுக்கு வருகிறது ,
வாழ்க்கை நோக்கு இயல்பாகவே மாற்றமடைந்து வருகிறது,அதை நாம் இன்னமும் பிரித்தறிந்து விவாதித்து நிறுவிக்கொள்ள முயலவில்லை,ஒரு தயக்கம் அதற்கு இருக்கிறதென ,
“மேல போறதா ஐடியா வே இல்லையா”
“மேல போறதுனா ”
“பொண்ணா ஆகறது ”
“அதுக்கு கீழேல்ல போகணும் ”
ரவி பிரவீணா இடையேயான இந்த உரையாடலில் பெண் பற்றிய ரவியின் புரிதலும் பார்வையும் பதிவாகுமிடம்.இங்கிருந்து மீண்டும் வாசிக்கத்துவங்கலாம்.
பெண் பற்றிய ரவியின் பார்வை நம் சமுதாயத்தின் பொது பார்வையோ என்ற உண்மை என்னை உறையச் செய்கிறது.ஆழ்ந்ததொரு விவாதத்தை கிளப்ப விழையும் படைப்பென்றே நான் கூற விளைகிறேன்.
அன்புடன்
பிரகாஷ் கருப்பசாமி
அன்புள்ள பிரகாஷ்
பொதுவாக என் அவதானிப்பில் காமம் சார்ந்த நல்ல எழுத்துக்கள் இருவகை. 1 காமத்தை நுணுக்கமாகச் சித்தரித்து வாசகனுக்கு ஒரு மெய்நிகர் அனுபவத்தை அளிப்பவை.2 காமத்தை கூர்ந்து அவதானிப்பவை.
பெரும்பாலான வாசகர்கள் காமத்தைச் சித்தரிப்பதையே விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு காம அனுபவத்துக்கு நிகரான கற்பனை அனுபவத்தை அளிக்கிறது. பாலுணர்வு எழுத்துக்கள் முதல் அவ்வகையின் மிக அடித்தர படைப்புக்கள்.
காமத்தை அவதானிக்கும் எழுத்து பெரும்பாலான வாசகர்களை ஒருவகையான சங்கடத்துக்குள் தள்ளுகிறது. காமத்தை அவதானிக்கையில் காமத்தில் இருந்து மனம் விலகிவிடுகிறது. காமத்தை எவ்வளவு தீவிரமாக அணுகினாலும் அதிலுள்ள அர்த்தமின்மையும் தெரியவந்துவிடுகிறது. அதை மிகச்சில கூர்ந்த வாசகர்கள் மட்டுமே அறியமுடியும்
என் எழுத்துக்களில் காமத்தின் மீதான அவதானிப்புகள் மட்டுமே இருக்கும், சித்தரிப்ப்புக்குள் வாசகனைக் கொண்டுவருவதில் எனக்கு ஆர்வமில்லை. என் ஆக்கங்களில் கன்யாகுமரி, இரவு இரண்டும் அத்தகையவை. அது பெருவாரியான வாசகர்களுக்கு உவப்பானதல்ல. ஒருபக்கம் ஒழுக்கவாதிகள் கண்டிப்பார்கள். மறுபக்கம் கிளர்ச்சி நாடும் வாசகர்கள் விலகிச்செல்வார்கள்.
அது எனக்குத்தெரியும், நான் எழுதுவது தன்னைத்தானே கவனிக்கும் நுண்விழி கொண்ட வாசகர்களுக்காக மட்டுமே
ஜெ