ஜெ,
உங்கள் பதிலுக்கு நன்றி.
நலமாகவே இருக்கிறேன். உங்கள் தளத்தில் உங்களுக்கு வரும் கடிதங்கள், விவாதங்களைப் படித்துவிட்டு கடிதம் எழுத உட்கார்ந்து பின்னர் தவிர்த்திருக்கிறேன் என்பதே உண்மை. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சாமியார் மனோபாவத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். வயதாகிக் கொண்டிருக்கிறது பாருங்கள்! :)
ஆம்; தனசேகருக்குள் ஒரு முதிர்ச்சியான கதையாசிரியன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ‘உறவு’ ஒரு சிக்கலான கதை. ஆனால் அதை அவர் சொன்ன விதம் எனக்குப் பிடித்திருந்தது. கதையைப் படிக்கையில் ஏனோ அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கி, பரத் கோபி நடித்த ஒரு பழைய கறுப்பு வெள்ளைத் திரைப்படம் நினைவுக்கு வந்தது. பரத் கோபி ஒரு லாரி கிளீனராக வருவார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.
ஜூன் மாதம் இந்தியா வந்திருந்தேன். தமிழ் நாட்டிலும், கர்நாடகாவிலும் நீண்ட நெடிய பயணங்கள். உங்களைச் சந்திக்க விருப்பமிருந்தாலும் எனது தயக்கம் காரணமாக அது கைகூடவில்லை. நண்பர் ஜடாயுவை பெங்களூரில் சந்தித்தபோது அது குறித்துக் கேட்டேன். நீங்கள் திரைப்பட வேலைகளில் மிகத் தீவிரமாக இருப்பதால் சந்திப்பது சிரமமாக இருக்கலாம் என்றார். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள் என்றார். வீணாக தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்து விட்டுவிட்டேன். காலம்வரை காத்திருக்க வேண்டியதுதான் போலிருக்கிறது. :)
ஏறக்குறைய எட்டு வருடங்களுக்குப் பிறகான தமிழ் நாட்டுப் பயணம் என்னை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது எனலாம். எங்கும் பிளாஸ்டிக்கும், குப்பையும், கண்ணில் பட்ட இடமெல்லாம் தெரியும் கருவேலங்காடுகளும், பிளாட் போட்டு விற்கப்படும் விவசாய நிலங்களும், நீக்கமற நிறைந்திருக்கும் ஃப்ளக்ஸ் போர்டுகளும், வெற்றுக் கோஷங்களும், சாக்கடையும், வறண்டு கிடக்கும் ஆறுகளும், குளங்களும் என்னை அதிரச் செய்துவிட்டது. அங்கேயே வாழ்பவர்களுக்கு இது வித்தியாசமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இது மாபெரும் அதிர்ச்சிதான். விவசாயம் என்பது தமிழ் நாட்டில் ஏறக்குறைய அழிந்தேவிட்டதைக் கண்டேன். அடுத்த பத்தாண்டுகள் தமிழ் நாடு மிக மோசமான நிலைமையை அடைய இருக்கிறது.
இதையெல்லாம் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவனின் மேட்டிமைத்தனத்துடன் எழுதவில்லை. நான் கண்டு வளர்ந்த தமிழ்நாட்டை இன்றைய தமிழ்நாட்டுடன் ஒப்பிடுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை. இது மனித இயல்புதானே?
நன்றி.
பி எஸ் நரேந்திரன்
அன்புள்ள நரேந்திரன்
வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு மட்டும் அல்ல ஒருமுறை வெளிநாட்டுக்குச் சென்று வந்த எவருக்கும் இது முகத்திலறைந்து நிம்மதியிழக்கச் செய்கிறது. ஆனால் எவரும் எதுவும் செய்வதில்லை. என் நண்பர் கொழும்புக்குச் சென்றுவந்ததும் கேட்டார் ஏன் இந்தியா இவ்வளவு குப்பையாக இருக்கிறது என. நான் சொன்னேன், நான் கண்ட உலகநாடுகளில் அசுத்தமான நாடு இந்தியாதான் என்று.
தனிப்பட்ட முறையிலான பேச்சுகள் இதற்கு பெரிதும் உதவாது. கூட்டான பிரக்ஞையாக இதுமாறவேண்டும். அது அரசியலாற்றலாக உருப்பெறவேண்டும்
ஜெ
அன்புள்ள ஜெ
தனசேகரின் உறவு கதை வாசித்தேன். உணர்வுரீதியாக என்னை மிகவும் பாதித்த கதை. நல்ல கதைகள் எல்லாம் உறவுகளைப்புரிந்துகொள்ள உதவுவது இல்லை, உறவுகளை புரிந்துகொள்ளவே முடியாது என்றுதான் சொல்லவருகின்றன என்று ஒரு மேற்கோள் நினைவுக்கு வந்தது. இந்தக்கதையும் அதைத்தான் காட்டியது. நுட்பமாக ஒரு வாழ்க்கை உண்மையைத் தொட்டுச்சொல்லியிருக்கிறார் தனசேகர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளராக மலர என்னுடைய வாழ்த்துக்கள்
சரவணன்
அன்புள்ள சரவணன்,
நன்றி.
வாழ்க்கையைப்பற்றி எதையும் உறுதியாகச் சொல்லிவிடமுடியாது என்ற வரிக்குக் கீழே மட்டும்தான் வியாசன் கையெழுத்திடுவார் என்று சுந்தர ராமசாமியின் ஒரு மேற்கோள் உண்டு
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
இன்று வெளிவந்த உறவு சமீபத்திலே வாசித்த அற்புதமான கதை. நான் தொடர்ச்சியாகச் சிற்றிதழ்களை வாசிக்கக்கூடியவன். இளம் எழுத்தாளர்கள் செக்ஸைமட்டும்தான் எழுதுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு உருவாகியிருந்தது. வாழ்க்கையை எழுத ஆளில்லை, உத்திகளை இலக்கியம் என்று நினைக்கிறார்கள் என்று நினைத்தேன். இந்தக்கதை விபச்சாரத்தைப்பற்றி, காமத்தைப்பற்றி , காமமே இல்லாமல் எழுதப்பட்டிருந்தது ஆச்சரியம் அளித்தது. எந்த உத்தியும் இல்லாத நேரடியான கதை என்ற பாவனை இருந்தாலும் நுட்பமாக எல்லா விஷயங்களையும் கோர்த்திருப்பதிலும் , கதையை முன்பின்னாக பின்னியிருப்பதிலும் ஆசிரியருக்குக் கதை உத்தி கைவந்திருப்பதும் தெரிகிறது. பாராட்டுக்கள்
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஜெ
நெடுங்காலம் கழிந்து ஜானகிராமனின் நல்ல கதைகளின் நினைவை எழுப்பிய ஒரு கதை உறவு. எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்த கதை மாப்பிள்ளைத்தோழன்.
சம்பந்தன்
அன்புள்ள சம்பந்தன்
ஆம். நினைவூட்டியதற்கு நன்றி. அந்த அழகில்லாத வசதியில்லாத திருமணத்தன்று சமையற்கார அம்மாள் ஆற்றும் சிற்றுரை தமிழிலக்கியத்தில் திருமண உறவு பற்றி சொல்லப்பட்ட மிகக்கனிந்த வார்த்தைகள்
ஜெ