தனசேகரின் ‘உறவு’- கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

புதியவர்களின் கதைகளில், தனசேகரின் “உறவு” கதையைப் படித்து அசந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவன் என்கிற முறையில், அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை இடங்களும் எனக்குப் பரிச்சயமானவை. உணர்வும் அப்படியே.

“உறவு” ஒரு புதிய எழுத்தாளர் எழுதிய கதை மாதிரி இல்லை என்பேன். இது வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

அடுத்த தலைமுறை குறித்து எனக்குள் நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.

அன்புடன்,
நரேந்திரன். பி.எஸ்.

அன்புள்ள நரேந்திரன்

நீண்ட இடைவெளிக்குப்பின் நீங்கள் எழுத கதை காரணமாக அமைந்தமைக்கு மகிழ்கிறேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

நல்லகதைதான். கதைக்குள் இருக்கும் இருவேறு வாழ்க்கைப்பார்வைகள் மிக முதிர்ச்சியான ஓர் ஆசிரியரைக் காட்டுகின்றன. வாழ்க்கையின் சிக்கலைச் சொல்லக்கூடியவன் கலைஞன். வாழ்க்கையை மிகச்சிக்கலற்றதாக சாராம்சப்படுத்தக்கூடியவன் நல்ல கலைஞன் இலலையா?

ஜெ

அன்புள்ள ஜெ

நலம்தானே

ஏற்கனவே புதிய எழுத்தாளர்களின் கதைகளை வரவேற்றிருந்தீர்கள். எவருமே எழுதவில்லையோ என்ற எண்ணம் வந்தது எனக்கு. இப்போது தொடங்கியிருக்கிறீர்கள். அருமையான கதையுடன் தொடக்கம். நன்றி

உறவு சாதாரணமான கதை அல்ல. அலட்டல் இல்லாமல் நேரடியாகச் சொல்லப்படும் கதையில் நுட்பமாக ஆண் பெண் உறவின் பல தளங்கள் சொல்லப்பட்டுவிட்டன. நான் ஜி நாகராஜனின் குறத்திமுடுக்கு கதையை வாசித்த போது அடைந்த உணர்வை இந்தக்கதை வாசித்தபோதும் பெற்றேன். குறத்தி முடுக்கிலே ஓர் இடம். கதையின் அந்த இடம் வரை கதாநாயகனை ஜி.என் ஒரு வகையான ‘ரவுடி’யாகவும் ‘நிகிலிஸ்டு’ ஆகவும் சித்திரித்திருப்பார். மனிதர்கள் நடுவே தேவையானது அன்பு அல்ல, மரியாதைமட்டுமே என்ற ஜி என்னின் புகழ்பெற்ற பொன்மொழி அந்தக்கதைக்குள்ளும் வருகிறது.

ஆனால் அந்த இடத்தில் விபச்சாரியான தங்கத்தைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் கதாநாயகன் அவளைக் கட்டிப்பிடிக்கிறான். காமமே இல்லாமல் வயது வந்த ஒரு பெண்ணைக் கட்டிப்பிடிப்பது அதுதான் முதல்முறை என உணர்கிறான். அடுத்தவரி இன்னும் நுட்பமானது. இந்த உலகில் நானும் அவளும் மட்டும் அனாதைகள் ,வெளியே உள்ள உலகம் எங்களை ஒதுக்கிவிட்டது – என உணர்கிறான். அவன் நம்பிவந்த எல்லாவற்றுக்கும் எதிரான ஒரு மனநிலை அது. அங்கே அவன் தங்கத்தை திருமணம்செய்துகொள்ள முயற்சிசெய்வதற்கான எல்லாக்காரணங்களும் கிடைத்துவிடுகின்றன. தங்கம் அவனைப் புறக்கணித்துச்செல்லும்போது அவன் ஏன் அழுகிறான் என்பதும் தெரிகிறது. அந்தப்புள்ளியை மீண்டும் தொட்டுவிட்ட கதை உறவு.

அவர்கள் இருவருக்குமான உறவின் சாராம்சம் என்ன என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால் அவன் அவளை தன் ஆன்மாவை பங்கிடும் ஒரு சக ஆன்மாவாக உணர்ந்துகொண்டான். இந்த உலகமே அன்னியமாக வெளியே நிற்க இருவரும் அனாதைகளல்ல என்பதை ஒருவரைக்கொண்டு ஒருவர் உணர்ந்துகொண்டார்கள்.

புதிய எழுத்தாளர் என்கிறீர்கள். அற்புதமான கதை. நல்ல தொடக்கம். ஜெ, அறம் கதைகள் வர ஆரம்பித்தபோதிருந்த மன எழுச்சி ஏற்படுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்

சண்முகம், மதுரை

அன்புள்ள சண்முகம்,

மழை பெய்தால் மட்டும் கிளம்பும் ஈசல்களைக்கண்டு இத்தனைநாள் எங்கிருந்தன என்ற வியப்பு ஏற்படும். கதை வெளிவந்த இரண்டாவது மணிநேரத்திலேயே நீங்களும் அமெரிக்காவிலிருந்து நரேந்திரனும் எழுதிவிட்டீர்கள். உங்கள் கூர்ந்த வாசிப்பு இளம் எழுத்தாளர்களுக்கு ஆசியாகவும் வழிகாட்டியாகவும் அமையட்டும். நல்ல வாசகனைப்போல ஆசிரியனுக்கு குரு வேறு எவரும் இல்லை

ஜெ

அன்புள்ள ஜெ,

புதியவர்களின் கதைகளில் தனசேகரின் முதல்கதை உறவு மிகச்சிறந்த ஒரு படைப்பு. எந்தவகையான சுற்றிவளைப்பும் இல்லாமல் எழுதப்பட்ட கதை. ஆசிரியரின் கமெண்டரியே இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதற்காகவே உறவு என சாதாரணமாக தலைப்பு வைத்திருக்கிறார். நேரடியான கதைக்குள் உறவுகள் சிக்கிக்கொண்டிருக்கின்றன.

நான் நேற்று என்னுடைய கார்ஷெட்டை கழுவும்போது ஒரு பள்ளத்தில் ஏதோ ஒன்றைப்பார்த்தேன். ஐம்பதுக்கும் மேல் மண்புழுக்கள் மழைநீரில் வந்துசேர்ந்திருக்கின்றன. அவை ஒன்றோடொன்று பிணைந்து ஒரு பொருள் போல மாறியிருந்தன. அவை எலலாமே நெளிந்துகொண்டும் இருந்தன. சில மண்புழுக்கள் முடிச்சுகள் கூட போட்டிருந்தன. அந்த ‘பொருளை’ பார்த்ததும் எனக்கு ஏதோ ஓர் உணர்ச்சி. இதுதான் உறவுகளா என்று நினைத்தேன். இந்த முடிச்சுபோட்டுக்கொண்ட மண்புழுக்களுக்கு அவற்றின் பந்தம் பற்றி ஏதேனும் தெரியுமா? இவை ஒன்றுசேர்ந்ததற்கு மழை மட்டும்தான் காரணமா?

காலையில் எழுந்ததும் உறவுகதை படித்தேன். அதே அதிர்ச்சியை மீண்டும் அடைந்தேன். மிகச்சின்ன விஷயங்களாலும் மிக உயர்ந்த விஷயங்களாலும் ஆனதாக உள்ளது மனித உறவு. மிகச்சின்ன விஷயங்கள்கூட மிக உயர்ந்த விஷயங்களாக ஆகிவிடலாம். எனக்கு அந்தக்கதையின் உறவை அலசுவதில் ஆர்வமில்லை. ஆனால் அந்த உணர்ச்சியை வழிபடத்தோன்றுகிறது. நல்ல உறவுகளை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்பதற்குமேலாக மனிதர்களிடம் மேலான குணம் என ஏதும் இல்லை என்று பட்டது

செம்மணி அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம்,

நேற்றுமாலை நாகர்கோயில் புத்தகக் கண்காட்சியில் இன்றையகாந்தி நூலை சும்மா எடுத்து புரட்டினேன், புதியபதிப்பு. உங்கள் கேள்வி கண்ணில் பட்டது. உங்களை நினைத்துக்கொண்டேன். காலையில் உங்கள் கடிதம்.

நல்ல கதைகளுக்கான தேடலுடன் இருக்கும் தங்களைப்போன்ற வாசகர்களே தமிழில் இலக்கியத்தை வாழவைக்கிறார்கள். நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்
அடுத்த கட்டுரைஉறவு,தனசேகர்-கடிதங்கள்