வேதமூலம்

கரிய மெலிந்த உடலில் ஏராளமான ரத்தக்குழாய்களுடன், ஒட்டிய கன்னங்கள் மீது நான்குநாள் தாடியும், கூர்மையாக முறுக்கப்பட்ட அடியில் நிக்கோடின் பழுப்பு படிந்த வெள்ளை மீசையும் பச்சைநிறத்தில் முண்டாசுக்கட்டுமாக ஒரு மனிதர் தேடிவந்தார். ”அய்யா வணக்கமாக்கும்” என்றார்.”வாங்க”’ என்றேன்.”அஞ்சு நிமிஷம் கிட்டுமா?” என்றார் பணிவுடன். ”எதுக்கு?” என்றேன், என்ன விற்கிறார் என்று குழம்பி.”சதுர்வேதங்களைக் குறிச்சு ஒரு குறெ வர்த்தமானம் சொல்லணும்”

என் திகிலை அனுமதியாகப் பெற்று உள்ளே வந்து அமர்ந்தவர் ”சாய வேண்டா, நான் பால் குடிக்குக இல்ல” என்றார். ”கடும் சாய?” என்றேன். ”கருப்பட்டி சேர்த்தால் ஆகாம்” என்றார். அருண்மொழியிடம் சொன்னேன்.

”என் பேரு சிருதன். சிருதன் காணி எந்நாக்கும் முழுப்பேரு.இப்பம் ஜாதிப்பேரு சொல்லுந்நது பேஷன் இல்ல அல்லயோ?” ஆனால் நல்ல மலையாளம் கலந்தது போன்ற பேச்சுமொழி. ”ஸாறு நினைக்கப்பட்டது சத்தியமாக்கும். நான் காணி பாஷையிலே பேசமாட்டேன். என்னுடைய இடம் நெடுமங்காடுக்கு அந்த பக்கம், கோழிமலை. நான் காட்டாக்கடை, வேங்கவிளை, ஆரியநாடு எல்லா ஸ்தலத்திலேயும் மலையாளம் டீச்சரா இருந்நு ரிட்டையர் ஆனேன். தமிழிலும் வ்யுல்பத்தி உண்டும். பலகாலம் நான் ரிசர்ச் செய்த காரியங்ஙளை எஸ்டாபிலிஷ் செய்யுகதுக்கு அலையுந்நேன்….”

நான் நிமிர்ந்து அமர்ந்தேன். இன்று ஆபீஸ¤க்கு போக முடியாது. இவரையே கிளப்பிக் கொண்டு ஆபீஸ் போனாலென்ன? ஆனால் நல்ல மணிக்குரல். அந்த வளாகமே அதிரும். ஒருமலையிலிருந்து இன்னொரு மலைநோக்கி பேசிப்பழகிய மனிதர். அடிப்படையிலேயே தொலைபேசிக்கு எதிரானவர்.

”ஸாறு வாசிப்பும் வ்யுல்பத்தியும் உள்ள ஆளாக்குமே. வேதம் எந்நால் எந்து?” என்றார். நான் தயங்கி ”வேதம்ணா புராதன புஸ்தகங்கள்.. சம்ஸ்கிருதத்தில் உள்ள பழைய பாட்டுகளும் பிரார்த்தனைகளும் எல்லாம் சேர்ந்தது. பின்னே, முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அவங்க புஸ்தகங்களையும் வேதம்ணு சொல்லுவாங்க” என்றேன். ”செரியாக்கும். இந்நே வரை மனுஷனுக்கு கிட்டியிட்டுள்ள கிருதிகளிலே பழைய கிருதிகள் வேதங்ஙள். ரிக், யஜூர், சாமம், அதர்வம் எந்நு நாலு. சதுர் வேதம். அல்லயோ?” என்றார்.

”ஆமா” என்றேன். அவர் திருப்தியுடன் புன்னகைசெய்து ”எந்நால் இந்நுவரை ஆராவது அந்த நாலுவேதத்துக்கும் மூலவேதமாய் ஏதாவது உண்டா எந்நு நோக்கினார்களா? இல்ல, கேக்கேன்” .

அப்படி யாரும் பார்த்த மாதிரி தெரியவில்லை. ”அதெப்டி பாக்கறது? வெள்ளைக்காரன் சொன்னதுக்குப் பிறகு?” என்றேன்.”ஸாறு என்ன சொல்லுகது? வெள்ளைக்காரன் சொல்லை மனுஷன் கேப்பானா? நான் சொல்லுகது நல்ல படிப்பும் குடுமியும் குடவண்டியும் உள்ள பிராமணன்மாரை…….”

நான் பெருமூச்சுடன் ”அவங்க எப்டி பாப்பாங்க?பச்சரிசிப் பிரச்சினையில்லா?” என்றேன். ”அதே அதே” என்றார் மகிழ்ந்து. ”அதனால அவ்விதம் நோக்கிக்காணும் பொறுப்பு இப்பம் நமக்காக்கும்… அல்லயோ?”

”உங்களுக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?” என்றேன் ”நந்நாயி தெரியும் சார். வேதங்ஙளை நான் எழுத்தெண்ணி படிச்சிட்டுண்டு…”என்றபடி அவர் தன் தோல்பையை பிரித்து காகிதக் கட்டுகளை எடுத்தார். நுண்ணிய கையெழுத்தில் மலையாளம் தமிழ் தேவநாகரி எல்லாவற்றிலும் எழுதப்பட்ட தாள்களைப் பரப்பினார். அவற்றிலிருந்து இரு நூல்களை எடுத்தார்.

”வேதங்ங்களைப்பற்றி படிக்கும்போ இந்நாட்டில் வேறே அதே போலுள்ள பழைய கிருதிகள் உண்டோ எந்நாக்குமே முதலில் நோக்க வேண்டியது. துரைமார் நோக்கியாரில்லை. நான் நோக்கினேன். அப்போ கண்ட காரியம் இதாக்கும். வேதங்ஙள் அப்படியே வரிக்குவரி வேறே கிருதிகளில் உண்டாயதாய் காணுந்நு. வேதத்தை விட பழைய கிருதிகளில்!”

”உள்ளதா?”என்றேன். ”பின்னே அல்லாம?” என்று ஒரு வெடிசிரிப்பு சிரித்தபடி ஒரு தாள் கட்டை எடுத்து என்னிடம் நீட்டினார். ”படிச்சுப் நோக்கணும் ஸாறே.”

கவிதைகள் போன்ற மலையாளத்தமிழ் வரிகள், தமிழ் லிபியில். ”என்ன இது?” என்றேன். ”ஸாறின் கையில் உள்ளது ரண்டு கிருதிகள். ஒந்நு கெ.பானூர் எந்ந கேரள ஆந்த்ரபாலஜிஸ்ட் கேட்டு எழுதி புஸ்தகமாக்கிய ‘மலைவேடர்மொழிகள்’ எந்ந கிருதி . மற்றொந்நு நான் புஸ்தகமாக்கிய ‘மலங்காணிகளுடே மாயாத்த பாட்டுகள்’ எந்ந கிருதி. பின்னே உள்ளது நான் நான் தேடி பதிஞ்š எடுத்த காணிப்பாட்டுகள். இனியும் புஸ்தகமாய் வந்நிட்டில்ல….”

நான் படித்தேன். காணிகள் பூசையின்போது பாடும் பாடல்கள் அவை. நானே பலமுறை அவர்கள் பாடும்முறையைக் கேட்டிருப்பதனால் எனக்கு அந்த ஓசையே காதில் கேட்டது

”மலந்தீ தேவே நின்னே கும்பிடுந்நேனய்யா
எல்லாம் காணுந்ந சோந்ந கண்ணல்லயோ நீயி?
நீ ஞங்ஙக்கு தருவே நல்ல பய்யினே
குடிக்கான் சூருள்ள கள்ளினே தருவே
நிம்முடே சங்கு குளுந்நாச்சால் தருவல்லோ
பொன்னும் முத்தும் நல்ல கொம்பும் குருவுமெல்லாமே
மலந்தீ சாமியே கனியேணமய்யா
நின்னே கும்பிடுந்நேருக்கு கொண்டு வரே
இனிப்பிக்குந்ந தீனியெல்லாம் சாமியே..”

பழங்கால குறமொழியில் அமைந்த பிரார்த்தனை. ”ஸாறு வாசிச்சு அல்லயோ? இப்போ நான் வாசிக்காம்” என்றார் சிருதன் காணி.

”அனைத்தயும் காணும் அக்னி
மிக்க தீனியுள்ள குதிரையை
மனிதனுக்குத் தருகிறான்.
செல்வத்துக்காக சீரிய சோமபானத்தை
அக்கினி அளிக்கிறான்
அவன் மனமகிழ்ந்தால்
செல்வத்தை வாரிவழங்குகிறான்.
அக்கினியே
உன்னைபோற்றுபவர்களுக்கு
நல்ல உணவைக் கொண்டுவருக!”

படித்து முடித்து ”இது ரிஷி வசுதன் ஆத்ரேயன் அக்னியை நோக்கி சொல்லிய ரிக்வேத சூக்தமாக்கும். கண்டல்லோ? ரண்டும் அப்பிடியே ஒந்நாக்கும்” என்றார் காணி.

என்னால் கொஞ்சநேரம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. சொல்லப்போனால் காணிகளின் பாடலில் அக்னியை அனைத்தையும் காணும் கண் என்று மட்டுமல்ல, சிவந்த கண் என்று சேர்த்து இன்னும் அழகாகச் சொல்லியிருக்கிறது. அடுத்தடுத்த பாடல்கள்கூட அப்படியே ரிக்வேத வரிகளாக வரும்படியாக அமைத்திருந்தார் சிருதன்.

நான் சற்று கழிந்து ”ஆனால் வேத ரிஷிகள் இயற்கையைத்தானே தெய்வமாகக் கும்பிட்டாங்க?” என்றேன். ”காலைநேரத்தையும் சாயங்கால நேரத்தையும் எல்லாம் தனித்தனியாகக் கும்பிட்டாங்களே?”

”நங்ஙளும் அப்படித்தான் கும்பிடுந்நது” என்றார் சிருதன் காணி. உடனே ஒரு தாளை பிரித்து படிக்கச் சொன்னார்.

”பொலர்ச்சயுடே பெண்ணே
என்றே கொச்சு மாதீ
காக்கயும் கரிங்குருவீம்
கூடுவிட்டு பறந்நல்லே
ஞங்ங தேனெடுக்கானாயீ போணூ
நீ ஞங்ஙக்கு நல்ல தேனும் மீனுமாயி வா”

எளிமை! கண்டிப்பாக இதேவரி வேதத்தில் எங்காவது இருக்கும் என்று அவர் அவசரமாக தேடும்போதே தெரிந்தது. உடனே படிக்க ஆரம்பித்தார்.ரிஷி பாரத்வாஜன் தேவியான உஷையை நோக்கி பாடியது.

”உஷாதேவி
பறவைகள் அதிகாலையில்
கூடுவிட்டெழுகின்றன
மனிதர்கள்
உணவுதேடி கிளம்புகிறார்கள்
அருகிலிருபவனும்
அவியளிப்பவனுமாகிய
எனக்கு
செல்வத்தை ஏந்தி வருக!”

கொஞ்சநேரம் பரவசமா பிரமையா என்றறியாத நிலையில் தாள்க்கற்றைகளை நோக்கி அமர்ந்திருந்தேன். புராதனமான ரிஷிகுலம் ‘ஓய்யாரே ஓய்யாரே ஒய்யா! தெய்யாரே தெய்யாரே தெய்யா!’ என்று பாடியபடி ஜாலியாக தேனெடுக்கப் போகும் காட்சியை கண்டேன். பின்னர் மெல்ல ”ஆனா வேதத்திலே வரி முக்கியமில்லை. அதைச் சொல்ற சந்தஸ்தான் முக்கியம். அதிலேதான் சக்தி இருக்கு..”

”சரியாக்கும். காணிப்பாட்டிலும் அதேதான்.பாட்டில் அல்ல காரியம். அப்பாட்டை எப்டி, எவ்விதம், ஏது ராகத்தில் பாடணும் எந்நும் உண்டு. அப்படி பாடியால் மாத்ரமே அந்த தேவியும் தேவனும் வருவார் எந்நாக்கும் சட்டம். பாட்டு மாத்ரமல்ல ஒப்பம் கொட்டும் தாளமும் அந்த வாத்யமும் கணக்காய் சொல்லியிட்டுண்டு. மாற்ற முடியாது”

”வேதம் ஓதும்போது நிறைய சைகைகள் உண்டே .கோகர்ணம்,பசுவின் காது மாதிரி கையால் காட்டுறது…இந்தமாதிரி”

”ஸாறே எங்களுக்கு கஜகர்ணம் உண்டு! ஆனைக்காது!”

மேலே என்ன சொல்ல? தத்துவம்? நான் மெல்ல ரிக்வேதம் பத்தாம் மண்டலத்தைப் புரட்டினேன்.

”புருஷன் அளவிலா தலைகளும் அளவிலா கண்களும் அளவிலா கைகளும் அளவிலாக் கால்களும் உடையவன். அவன் பூமியின் எல்லா திசைகளிலும் நிரம்பி தன் விரல்களால் நிறைகிறான்”

வாசித்துமுடிப்பதற்குள் ”இது காட்டம்மையைப் பற்றியுள்ள காணிப்பாட்டாக்குமே ஸாறே” என்று படித்தார்.காட்டம்மாவுக்கு அளவிலாத நாக்குகளும் கூடுதலாக இருந்தன. அவளும் இருக்கும், இருந்த, இருக்கப்போகும் அனைத்துமாக இருந்தாள். எங்கும் பரவியிருக்கும் அது ஒன்றே என்ற வேததத்துவம் நீரிலும் வானம் பரவியிருப்பதைப் பற்றிய சித்திரமாக இங்கே காணக் கிடைத்தது.

”அப்போ சங்கதி இதாக்கும். சத்தியத்தில் வேதம் ஆருக்குள்ள ஞானமாக்கும்?” என்றார் சிருதன்.

”அப்டிக் கேட்டா, இப்ப, வேதம்லாம் பத்து மூவாயிரம் வருஷம் பழக்கமுள்ள பாட்டுண்ணாக்குமே பேச்சு…”

”இருக்கும். ஆனா நங்ங பாடும் பாட்டும் அதேபோல பழைமையாக்குமே.பண்ணிமலை உண்டாகுந்நதுக்கு முன்னால உள்ள பாட்டு எந்நாக்கும் கணக்கு. பந்நிமலையை சயண்டிஸ்டுமாரைக் கொண்டு பரிசோதிச்சால் இந்தப் பாட்டுகளுடே காலமும் தெளிஞ்š கிட்டும்”

”வேதத்தோட காலத்தை அந்த பாஷையை வச்சு சொல்றாங்க”

”நங்ங பாட்டையும் பாஷையை வைச்சு சொல்லட்டே”

”வேதத்தில் உள்ள தகவல்களும் ரொம்ப பழைய காலத்தை காட்டுது. உதாரணமா அவங்களுக்கு எழுதத் தெரியாதுன்னு…”

”—நங்ஙளுக்கும் தெரியாது”

”வேதகால ஆரியர்கள் தினமும் தீ மூட்டி அதிலே அவிஸ் போட்டு யாகம்லாம் செய்தாங்க…”

”நங்ங தீ மூட்டி அவிஸ¤ போடாம ஒரு நாளுகூட இருந்நது இல்ல ஸாறே”

நான் சற்றே மூச்சுத்திணறி, ”வேதத்திலே உள்ள வாழ்க்கை ரொம்ப பழசு…அப்ப ராஜாவும் ராஜ்யமும் ஒண்ணும் இல்லை..”

”ஸாறே, நங்ஙக்கு இப்பமும் ராஜ்யம் இல்ல”

மேலே என்ன சொல்வது? இவர்கள் இப்போதும் கணங்களாக வாழ்கிறார்கள். ஏன், சில இறைச்சிகளை சுடாமல் உண்கிறார்கள்.வேதத்தில் இறைச்சியை சுடாமல் உண்பது பற்றிய தகவல் உண்டா? இல்லை என்றே பட்டது. போட்டி என்று வந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள்தான், இருந்தாலும்…நான் மோவாயை தடவியபடி அவரையே பார்த்தேன்.

”அப்பம் வேதம் ஆருடேதாக்கும்? நங்ங வேதத்தை அவருமார் எடுத்து வச்சதாக்கும் அல்லயோ? அதைக் காட்டி அவர் இப்போ வலிய ஆளுகளாய் மாறினார். தோளில் பூணூல் இட்டு கோவிலான கோவிலுகள் முழுக்க சொந்தமாக்கினார். பொன்னும் பணமும் கூட்டி வச்சார். நல்ல நெய் விட்டு குழச்சு சாப்பிடுந்நார்—”

ஆழமான அமைதி ஏற்பட்டது. உண்மையிலேயே இது ஒரு பெரிய கேள்விதான். உடனடியாக இதை சமாளித்தால் நான் மதியம் ஆபீஸ் போக முடியும். நான் சொன்னேன் ”சிருதன் மாஸ்டரே, எனக்கு ஒரு சிந்தை தோணுது”

”எந்தா?”

”வேதம் உங்க ரண்டாளுக்கும் உள்ளதல்ல. ரண்டாளும் எடுத்துக் கொண்டதாக்கும்”

ஐயத்துடன் ”ஆரில் இருந்நு?” என்றார்.

”ரண்டாளுக்கும் முன்னால ஜீவிச்ச ஆளுகளில் நிந்நு..”

”ஆராக்கும் அவன்மார்? இப்போ உண்டோ?”

”இல்ல. செத்தழிஞ்சு போயிட்டார். நியாண்டர்தால் இனம்ணாக்கும் அவனுக பேரு…”

”அதுசெரி…” என்றார் சிருதன் பெருமூச்சுடன். நல்லவேளையாக அவர் அப்பெயரை கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் ஒரு தயக்கம். கண்களில் ஒரு மங்கல். சற்று நேரம் மீசையை முறுக்கியபின்னர் ”ஸாறே, அப்பம் ஒரு சம்சயம்”என்றார்

”சொல்லுங்க”

”இப்பம் நங்ஙக்கு பூணூல் இல்ல. பிராமணர்க்கு பூணூல் உண்டு…அதாக்கும் நாங்க ரண்டாளுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்”

”சரியாக்கும்”

”இந்த நியாண்டறன்மாருக்கு பூணூல் உண்டா? எந்தினு கேக்குந்நேன் எந்நால் அது வச்சு கண்டுபிடிக்கலாமே ஆராக்கும் மூத்தது எந்நு?”

அது எனக்கு தெரியவில்லை. ஐயத்தை வலுவாக ஊன்றிவிட்டு சிருதன் போனபின் நான் டாக்டர் எஜன் டியுபூவா எழுதிய தொல்மனிதனைப் பற்றிய அசல் ஆய்வுகளைப் புரட்டினேன். எங்காவது ஏதாவது தகவல் இருக்கிறதா என்று. வரலாறு எப்போது எப்படிப்போகுமென்று யார் கண்டார்கள்?

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் மார்ச் 2011

முந்தைய கட்டுரைபாஸ்டன் உரை – வாசிப்பின் விதிகள்
அடுத்த கட்டுரைஅமெரிக்கா – சந்திப்புகள்