அலை, இருள், மண்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

“அலை அறிந்தது” படித்தேன். எளிய கதையாக இருப்பினும், அழகான கதை. The characterization is beautifully done. The contrast between the mother’s affectionate deprecation of the little boy and the outsider’s certainty of his greatness is endearing.

அக்கதையை பற்றி நீங்கள் விவரித்ததை (http://www.jeyamohan.in/?p=8322) படித்தபிறகு மீண்டும் அதை வாசித்தேன்.

இரு முறையும் என்னைக் கவர்ந்ததும், கதையின் மையமாக விளங்கியதும் இதுதான்:

கபீர்பாயின் குடும்பத்திற்கு எற்படுவது போன்ற துரதிர்ஷ்டமும், நிலைமாற்றமும் யாரால் விளக்க முடியும்? அவை நடக்கின்றன, அவ்வளவுதான். கதையில் பாய் கூறுவது போல “அலை மேலேறினா கீழிறங்கணும்…”

“நாலாம்மாடி உப்பரிக்கையிலே நிண்ணுட்டு ரூவாநோட்டா அள்ளி அள்ளி வீசிட்டே இருப்பாரு” என்று பாய் சொல்லும் போது மனம் லேசாக உறுத்தியது. ஆனால் கதையின் ஓட்டத்தில் அதைத் தாண்டிச்சென்றேன்.

கடைசியில் பாய் அதையே காரணம் காட்டும்பொழுது அவர் மேல் வியப்புடன் கூடிய மரியாதை உருவாகிறது. அவருடைய இடத்தில் இருப்பவர் மிக சுலபமாக தன்னிரக்கத்தில் ஆழ்ந்துவிட இயலும். மாறாக, பிறருக்குக் கூட (அம்மா அதை தவறாக எண்ணவில்லை/கவனிக்கவில்லை) தென்படாத அந்த எள்ளளவு விவரத்தை அவர் போதுமான காரணம் என்று உணர்ந்திருக்கிறார்.

காரணத்தை விட காரணம் தேடியடைந்த பாயின் மனப்பக்குவமும் புரிதலுமே என்னைக் கவர்ந்தது.

Life of Pi இல் பை படேல் சொல்வது நினைவிற்கு வந்தது “The world isn’t just the way it is. It is how we understand it, no? And in understanding something, we bring something to it, no? Doesn’t that make life a story?”

அழகான கதைக்காக நன்றி.

பிரியம்வதா

அன்புள்ள பிரியம்வதா

மேலோட்டமான பார்வையில் எளிமையான கதை அலை அறிந்தது. உண்மையில் தலைப்பில் மட்டுமே அக்கதையின் ஆழத்தைச் சுட்டும் குறிப்பு உள்ளது. கதையின் இறுதிவரை பொதுவாசகன் அதன் உட்குறிப்பை உணரமுடியாது. ஆகவே உங்கள் கூர்ந்த வாசிப்பு நிறைவை அளித்தது

கடலை அறிந்தவனுக்கு அலை மிகச்சாதாரணமான ஓர் அன்றாட உண்மை மட்டுமே

ஜெ

அன்பு ஜெயன்,

கவிஞர் சுகுமாரன் ” One Hundred years of solitude” ன் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் பேசும் போது தங்களின் டார்த்தீனியம் மாந்திரீக எதார்த்தவாத எழுத்து என்று சொல்லியிருக்கிறார். அது பிரசுரமான போது படித்தது. அது அவ்வகை எழுத்துதானா?
மிண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

சந்தானகிருஷ்ணன்

அன்புள்ள சந்தானம்

பொதுவாக வாசிப்பு என்பது கதையை அருவமாக உள்வாங்குவது. ஆனால் வகைவகையாகப் பகுத்து அடையாளப்படுத்திக்கொண்டபின்னர்தான் அதைப்பற்றி பேசமுடியும். நானும் செய்வது அதையே

அடையாளங்கள் வழி கதையை அடையலாம். அந்தரங்க வாசிப்பு அவ்வடையாளங்கள் அற்றதாகவே இருக்கவேண்டும். டார்த்தீனியம் இருளின் கதை

ஜெ


“உழப்படாத மண்ணில் உடைமுள் மண்டிக்கிடந்தது. பாலிதீன்தாள்கள் அவற்றில் சிக்கிக் காற்றில் அதிர்ந்து கொண்டிருந்தன. நிலத்தின் ஆயிரம் நாக்குகள் போல. ர்ர்ர்ர் என அவை கூச்சலிட்டன.

மொத்தக் கட்டுரையின் வீச்சையும் படமாகக் காட்டி விட்டன இந்த வரிகள்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

நன்றி

பாலிதீன் தாள்கள் சிலசமயம் மண்ணின் ஈரக்கண்கள் போலவும் தெரிகின்றன

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகாந்திராமன்