சம்பந்தர் யார்?

//சங்ககாலத்திற்குப் பிறகு களப்பிரர் காலத்தில் மங்கியிருந்த தமிழிசை மரபை மீட்டவர் திருஞான சம்பந்தர். அவரது காலம் 6ம் நூற்றாண்டு. அவர் பிராமணர் தான்//

சோலை சுந்தரப்பெருமாள் எழுதிய ‘தாண்டவபுரம்’ நாவலில் வரிக்கு வரி சம்பந்தரை, ஆளுடைய பிள்ளை என்று விளிக்கிறார். அவர் வேளாளர் குலத்தைச்சேர்ந்தவர் என்று எழுதி இருக்கிறார். அவர்களுடையசமூகத்தை ஆதிசைவர்கள் என்கிறார். சிவாலயங்களில் அவர்களுடைய சமூகமே சிவாசாரியர்களாக இருக்க உரிமை கொண்டிருந்திருக்கிறது. ஆலயம் இருக்கும் தெருவில் நடக்க பிராமணர்களுக்கு அடுத்து அவர்களுக்கே உரிமை இருந்திருக்கிறது.

சம்பந்தர் நிறுவிய மதுரை ஆதினதிற்கு இன்றுவரை பிள்ளை சமூகத்தை சேர்த்தவரே ஆதீன கர்த்தராக நியமிக்கப்படுகிறார்கள் என்று கேள்வி.

ஜடாயு சார் கூறியபடி சம்பந்தர் ஒரு பிராமணர் என்றால் 700 பக்கங்கள் கொண்ட ஒரு
நாவல் தகவல் பிழைகளால் தன் மதிப்பை இழக்கும்

குருமூர்த்தி பழனிவேல்

ஐயா குருமூர்த்தி அவர்களே,

சம்பந்தர் கவுணியர் குலத்தில் (கௌண்டின்ய கோத்திரம்) தோன்றிய வேதியர் – சைவ இலக்கியம் கொஞ்சம் படித்த சிறு குழந்தைக்குக் கூடத் தெரிந்த ஒரு விஷயம் இது. சம்பந்தரது ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் தனது பேரைப் பதித்து (திருக்கடைக்காப்பு) வேதியன், மறையவன், வேத விரகன், கவுணியன் என்றெல்லாம் தன்னை அவரே குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

சம்பந்தரின் வரலாற்றை நாம் அறிய முழுமுதல் ஆதாரமாக உள்ள பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் ஏராளமான இடங்களில் இதைப் பதிவு செய்துள்ளார். “சீரார் சண்பைக் கவுணியர் தம் தெய்வ மரபிற் திகழ் விளக்கே” என்றுதான் வள்ளலார் சம்பந்தரைப் போற்றும் தனது துதிப்பாடலையே ஆரம்பிக்கிறார்.

ஆளுடைய பிள்ளை என்ற அடைமொழி இறைவியே திருமுலைப்பால் அளித்ததாலும் இறைவனுக்குப் பிள்ளையாகத் தன்னைக் கருதி சம்பந்தர் பக்தி செய்ததாலும் ஏற்பட்டது – இதற்கு சைவநெறியில் “சத்புத்திர மார்க்கம்” என்று பெயர். இதற்கும் வேளாளப் “பிள்ளைக்கும்” ஒரு தொடர்பும் கிடையாது.

இதே போல, தன்னைத் தொண்டனாகக் கருதி அன்பு செய்தவர் திருநாவுக்கரசர் – ஆளுடைய அடிகள்.

தோழனாகக் கருதி அன்பு செய்தவர் சுந்தரர் – ஆளுடைய தோழர்

இறைவனைக் குருவாகவும் தன்னை சீடனாகவும் கருதி அன்பு செய்தவர் மாணிக்க வாசகர் – ஆளுடைய சீடர்.

ஆதிசைவர் எனப்பட்டது வேறொரு அர்ச்சக குலம் – இவர்கள் வேதங்களுடன், சிவாகமங்களையும் கற்றுணர்ந்தவர்கள்.. சுந்தரர் இக்குலத்தில் உதித்தவர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் குலங்கள் தெளிவாகவே பெரிய புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன .. அதில் வேதியர்கள் திருமறையோர் என்றும், ஆதிசைவர்கள் தனியாகவும் குறிக்கப் பட்டுள்ளனர். கிருபானந்த வாரியர் சுவாமிகள் எழுதிய பெரிய புராணம் புத்தகத்தில் முன்னுரையிலேயே அந்தப் பட்டியலைத் தருகிறார் (மரபறியாதார் என்று 10-12 நாயன்மார்களும் உள்ளனர்).

இன்னொன்றூ.. பிள்ளை என்ற பட்டப் பெயர் வேளாளர்க்கு மட்டும் உரியதல்ல. பல சாதிகள் அந்தப் பட்டப் பெயரைப் பூண்டிருந்தனர். வைஷ்ணவ ஆச்சாரியார்களான நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்றோர் பிராமணர்கள்.

*

தாண்டவபுரம் என்ற நாவலுக்கு மதிப்பு என்று ஒன்று இருந்தால்தானே அதை இழப்பதற்கு? வரலாற்று அடிப்படையும் இல்லாமல், எந்தக் கலை நேர்த்தியும் இல்லாத பாலியல் வக்கிரங்களுடன், கோடிக்கணக்கான தமிழ் இந்துகள் தெய்வமாகத் தொழும் திருஞான சம்பந்தரை அவமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அரைகுறை மார்க்சிஸ்ட் ஆசாமியால் எழுதப் பட்டது அந்தப் புத்தகம்.. அது இருக்க வேண்டிய இடம் குப்பைக் கூடை

ஜடாயு

அன்புள்ள குரு,

இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் கோட்பாட்டுக் குருட்டுத்தனத்தை வெளிப்படுத்துவது வழக்கம்தான். முன்முடிவுகளின் ஒரு பழகிய தடம் வழியாகவே அவர்கள் நகரமுடியும்.

ஆனால் அதேசமயம் அவர்களின் வரலாற்றாய்வுக்கு என் நோக்கில் பெரும் முக்கியத்துவம் உண்டு. அவர்கள் பிறரது வரலாற்றாய்வில் இருந்து இருவகையில் வேறுபடுகிறார்கள். ஒன்று, அவர்கள் பண்டைப்பெருமை , முன்னோர் வழிபாடு என்ற வழக்கமான பாதையில் செல்வதில்லை. இரண்டு, அவர்கள் ஆதிக்கத்தின் வரலாற்றுக்கு நிகராக ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றையும் எழுதுகிறார்கள்.

ஆகவே நான் இடதுசாரி வரலாறுகளை எப்போதும் மதிப்புடன் வாசிப்பவன். அவர்கள் அளிக்கும் தகவல்களைக் கவனிப்பவன். தமிழக இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் தமிழிலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் அளித்துள்ள கொடை முக்கியமானது

ஆனால் இடதுசாரி இயக்கத்தில் அறிவார்ந்த தகைமை எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு சோலை சுந்தரப்பெருமாளின் நாவல் பெரும்சான்று. அதைப்பற்றி நான் ஏன் எழுதவில்லை என்று பலர் கேட்டனர். அது முதன்மையாக ஒரு நாவலே அல்ல. உள்நோக்கம் கொண்ட கீழ்த்தரமான ஜோடனை. கலையோ வாழ்க்கைப்பார்வையோ இல்லாதது

அத்துடன் அதில் தகவல்பிழைகள் என சொல்லமுடியாது, அது சொல்லும் எல்லா தகவல்களுமே பிழைதான். இப்படி ஒரு நாவலை இடதுசாரி ஒருவர் எழுதமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. குறைந்தபட்சம் இந்த ஆசாமி இடதுசாரி வரலாற்றாசிரியர்களையாவது வாசித்திருக்கவேண்டும் இல்லையா?

அந்நாவலை உண்மையில் கண்டிக்கவேண்டியவர்கள் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள்தான். அது இடதுசாரி வரலாற்றாய்வின் கௌரவத்தையே அழிக்கிறது. இந்நாவலை உதாரணமாகக் காட்டி இடதுசாரி வரலாற்றாய்வு என்பதே ஒரு வெற்றிகொண்டான் பாணி மேடைவசைதான் என வலதுசாரிகள் எதிர்காலத்தில் வாதிடுவார்கள்

ஜெ

[குழும விவாதத்தில் இருந்து]

முந்தைய கட்டுரைகொற்றவை ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள்