«

»


Print this Post

இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்


சமகாலத்தில் நவீன தமிழ்க் கவிஞர்கள் பெரும்பாலும் சூதுகவ்வும் திரைப்படத்தின் நாயகனைப்போலவே இருக்கின்றனர் மானசீகமாக இல்லாத ஒரு பெண்ணை கற்பனை செய்துகொண்டு, அவளோடு வாழ்வதாக, காதலிப்பதாக, புணர்வதாக, பினங்குவதாக, பின்பு மரிப்பதாக பாவனை செய்கின்றனர்.

சாத்தான், கிழக்கடவுள், புணர்தல் இன்;னும் சில உடல் உறுப்புக்களை குறிக்கும் சொற்களுக்கு தமிழ்க் கவிதைகளில் தடை விதிக்கப் படுமேயானால் ஒரு பெருந்திரள் கவிஞர்கள் கவிதைப் பரப்பிலிருந்து விலகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

நல்ல கவிதையை வாசிப்பதென்பது மதுரைப் பகுதியில் நடக்கும் திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் மூன்று சீட்டு விளையாட்டு போல ஆகிப்போனது. நிகழ்த்துபவர்களே எப்பொழுதும் ஜெயிக்க, மிக அரிதாகவே நாம் வெல்கிறோம். வினையத்துடன் சுருட்டப்படுகிறது. விரிக்கப்பட்ட சாக்கு இத்தனை சோதனைகளையும் தாண்டி (உண்மையாகவே அது சத்திய சோதனைதான்) பயணப்படும் பொழுது அரிதான, அசலான குரல்களை கேட்கிறோம். அப்படியான அசலான குரல்களில் ஒன்றாகவே நான் லிபி ஆரண்யாவையும், இசையையும் கருதுகிறேன்.


உள்ளே வைத்து உடைப்பவர்கள் – லிபி ஆரண்யா

பொதுவாக இடதுசாரி கவிஞர்கள் பிரகடனங்களை மாத்திரமே எழுதக் கூடியவர்கள். அவர்களுக்கு கோசங்கள் மாத்திரமே வரும். அவர்களின் கொள்கை அறிக்கை மறு வடிவமே கவிதை என கடும் குற்றச்சாட்டு எப்பொழுதும் உண்டு. அந்த விருதை வாங்குவதற்கு தாங்களும் முழு தகுதி வாய்ந்தவர்கள் என்று விடாது நிரூபிப்பார்கள் இடதுசாரி கவிஞர்கள். அதனிலிருந்து வேறுபட்ட ஒரு குரலாக, கூர்மையான பகடியை, சாடலை கவிதைக்கான கலை நியாயங்களை தவற விடாதவையாக லிபியின் கவிதைகள் இருக்கின்றன.
இயற்கை அழித்தல், தண்ணீர் பஞ்சம், சிறுநீரகக்கல், தனியார் மருத்துவமனை, சிண்டெக்ஸ் டேங்க், ஹார்லிக்ஸ், மலைகளை உடைத்து குவாரியாக்குபவர்களே நம் குடலுக்குள் கற்களை கடத்திவிடுகிறார்கள், பின்பு அவர்களே மாறு வேஷத்தில் வந்து அறுவை சிகிச்சையும் நடத்துகிறார்கள் என்பதை கவிதையாக்க முடியுமா என்ன ? லிபியினால் முடிந்திருக்கிறது.

இந்த உலகமயமாக்க சூழலில் எல்லாம் ஒன்றோடொன்றாய் பிரிக்கவே முடியாத அளவுக்கு பின்னிக் கிடக்கிறது, குழம்பிக்கிடக்கிறது. இப்படி குழம்பிக் கிடப்பதாக நம்மை நம்ப வைப்பதில்தான் அவர்களின் “வெற்றியும்” இருக்கிறது. இந்த மாயப்பின்னலை பிரித்து, ஒரு மேசையின் மீது துலக்கமாக பரப்பி வைப்பதில்தான் ஒருஇடதுசாரி கவிஞனின் அல்லது அரசியல் பிரக்ஞை உடையவனின் பணி. அது துல்லியமாக இந்த கவிதையில் நிகழ்ந்தேறியிருக்கிறது. ?


முன்பொருகாலத்தில் குணசேகரன் என்று ஒருவன் இருந்தான்

80களின் நடுப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த குணசேகரன்கள். அரசியல்  பிரக்ஞையோடு எதோ ஒரு இடது சாரி இயக்கத்தோடு இணைந்து, முழு நேரமாக இயங்கி, பின்பு அதனோடு முரண்பட்டு, விலகி, இந்த சமூகத்தோடும் தங்களை பிணைத்துக் கொள்ள முடியாமல் தவிப்பவர்கள்ஃசரியாக சொன்னால் தவித்தவர்கள் (இன்றைக்கு குணசேகரன்கள் மிகக் குறைவு) அந்தரங்கமாய் நான் பல குணசேகரன்களை அறிவேன். பலவிதமாய் மரித்த, மனம் பிறழ்ந்த குணசேகரன்களை.

இந்தக்கவிதை பெரிதும் என்னை துக்கம்கொள்ள வைக்கிறது. இந்த குணசேகரன்கள் இதுவரை தமிழ் இலக்கியத்திற்குள் தென்பட்டதே இல்லை. சேஷய்யா ரவி, புதிய ஜீவா போன்றவர்கள் 90களின் நடுப்பகுதியில் இவர்களைப் பற்றி ஒரு மெலிந்த சித்திரத்தை தீட்ட முயற்சித்தார்கள் “முன்பொரு காலத்தில்” என்று கவிதை துவங்குவதே ஒரு குரூர பகடிதான். படிப்படியாக இந்தக்கவிதை ஒரு வெறுமை ஓவியத்தை சித்தரிக்கிறது

குணசேகரனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்
நண்பர்களுக்கு மனைவிகளும் காதலிகளும்
செல்லக்குட்டிகளும் புச்சுப் பையன்களும்
இருந்தனர்

எனும்பொழுது அடர்த்தி கூடுகிறது

நிலா உதிக்கத் துவங்கிய பொழுதில்
நண்பர்கள் ஒவ்வொருவராக வற்றத்தொடங்கினர்
அருகிருக்கிற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் மணி
தனியனின் செவிகளில் ஓலித்தது
பல்லாண்டுகள் கழித்து கடவுளுக்கு
காட்சியளிப்பது குறித்து அவன் யோசித்தான்

எனும்பொழுது துயரத்தில் ஆழ்ந்து

ரயில் கடக்கட்டும் என்று காத்திருந்தவன்
கடைசிப் பெட்டிக்கும் முந்தைய
பெட்டிக்குமிடையே ரயிலைக் கடந்தான்

என முடிகையில் கவிதை அதன் உச்சத்தை அடைகிறது.

ஒரு நல்ல கவிதைக்கான எல்லா சாத்தியங்களையும் படிப்படியாக திரட்டிக்கொண்டு பயணிக்கிறது இக்கவிதை.
மனிதர்களின் மகா பெரிய துயரமே தனிமைதான். நீங்களும் நானும் எப்பொழுதேனும் புசித்து பார்த்ததே அத்தனிமை அந்தரங்கமாய் ஏதோ ஒரு கணத்தில் நம்மை நாம் இந்த வாழ்வில் குணசேகரன்களாக உணர்ந்திருக்கிறோம். நமது வழியிலும் ஆளில்லா லெவல் கிராஸிங் வந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அல்லது அகத்திலிருந்து சொன்னோமேயானால் துரதிர்ஷ்டவசமாக ஒரு பாசஞ்சர் இரயில் கூட அந்த நேரத்தில் வரவில்லை.

நன்றி

[ஏற்காட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை ]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/37831/

1 ping

  1. இரு விருதுகள்

    […] சாம்ராஜ் கவிதைகள் பற்றி […]

Comments have been disabled.