மேலைத்தத்துவம் ஒரு விவாதம்

“டெல்லியில் ஜவகர்லால் பல்கலையில் அகில தத்துவ மாநாட்டுக்காக உலகமெங்கிலும் இருந்து தத்துவப்பேராசிரியர்கள் வந்து குழுமி, பல ஐரோப்பிய மொழிகளில் குழறி, காகிதக்கோப்பைகளில் காப்பி குடித்து, ‘வேணுமானா நீயே எடுத்து தின்னுக்கோ’ முறையில் வரிசையாக நின்று உணவருந்தி, கைகுலுக்கியபின் அதிகாரபூர்வமாக கருத்தரங்கு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களை உற்சாகப்படுத்தும்முகமாக காசிரங்கா சரணாலயத்துக்கு ஒரு சிறு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

வேறு எதைப்பற்றியுமே பேசியறியாத தத்துவப்பேராசிரியர்கள் காற்றுருளை ஊர்தியின் வசதியான இருக்கைகளில் சாய்ந்தமர்ந்து தத்துவ விவாதம் செய்தபடி சென்று காட்டுக்குள் இறங்கினர். தத்துவ விவாதம் செய்தபடி விடுதிக்குள் சென்று ,தத்துவ விவாதம் செய்தபடி பெட்டிகளைப் போட்டுவிட்டு, தத்துவ விவாதம் செய்தபடி டீயும் பிஸ்கோத்தும் அருந்தி, தத்துவ விவாதம் செய்தபடி கால்களில் கானுலாவுக்கான கனத்த காலணிகளும் தொப்பிகளும் அணிந்துகொண்டு, தத்துவ விவாதம் செய்தபடி முன்னால் செல்லும் வழிகாட்டியைத் தொடர்ந்து காட்டுக்குள் சென்று, தத்துவ விவாதம் செய்தபடி கொடிகளிலும் வேர்களிலும் தடுமாறி அடர்காட்டை அடைந்து, தத்துவ விவாதம் செய்தனர்.

அப்போது லூங்கா என்று உள்ளூர் வன உலாவிகளால் அழைக்கப்பட்டதும், ஏற்கனவே காட்டுக்குள் நுழைந்த நாற்பத்தெட்டு பேரைக் கொன்றதுமான, மாபெரும் காட்டுயானை மண் செறிந்து சிறு புற்கள் முளைத்த முதுகும், பனிச்சறுக்குக் கால்கட்டைகள் போன்ற வெண்தந்தங்களும் முகமெங்கும் ஆப்ரிக்கர்களின் சட்டை போல கன்னாபின்னாவென்று சிவப்பு பூக்களுமாக ஒரு கரும்பாறைக்கு அருகே நின்று வெயில் காய்ந்து கொண்டிருந்தது. லூங்கா பொதுவாக சூழியல்வாதிகளையும் சூழியல் சுற்றுலாப் பயணிகளையும்தான் விரும்பிக் கொன்று வந்தது. தத்துவஞானிகளை அது பார்தது இல்லை.

அமெரிக்க நடைமுறைவாதியான ·ப்ராங் ஓ கானர் குளிக்கும் பழக்கத்துக்குப் பதிலாக நறுமணத்தைலம் அடித்துக் கொள்வது 87 சதவிகித நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்று இருபது வருடங்களுக்கு முன்னரே கண்டு கொண்டவர் என்பதை துதிக்கை தூக்கி உணர்ந்த லூங்கா மூக்குநுனியால் ‘ச்சீய்ய்ய்’ என்று சீறி ரயில் இயந்திரம் போல ஓர் ஒலியை வெளியிட்ட அக்கணமே வனவழிகாட்டி துப்பாக்கியுடன் தப்பி ஓடி மறைந்ததை தத்துவ விவாதம் செய்தபடி வந்த அறிஞர்கள் அறியவில்லை.

ஐயவாதியான பிரெஞ்சு தத்துவஞானி கிளாட் ஷுல்ட்ஸ் தன் மூக்குக் கண்ணாடியை இன்னொரு முறை துடைத்துப் போட்டுக் கொண்டு அமெரிக்க அனுபவவாதி ஸ்டீவ் மெக்கானிடம் ”…அருமையான நண்பரே, இது நல்ல காலைநேரம்” என்றார் ”…தத்துவ நோக்கில் ஒரு காட்டுப் பாறையானது பாம்பு சீறுவதுபோன்ற சத்தமெழுப்புவதற்கான வாய்ப்புகள் எத்தனை சதவீதம் உள்ளன என்று சொல்தற்கு தங்களுக்கு ஆட்சேபணைகள் இருக்காதல்லவா?” என்று கேட்டார்.

”ஆம் அருமையான நண்பரே, இது சிறந்த காலை நேரம்” என்றார் அனுபவவாதியான ஸ்டீவ் மெக்கான். ”இந்த கால- இடச் சூழலில் நாம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டுள்ள இந்த விஷயத்தை விரிவாக ஆராய்வதற்கு முன் நமக்குக் கிடைத்துள்ள தரவுகளை நாம் தொகுத்துக் கொள்ளுதல் வேண்டும். முதலில் காட்டுப்பாறை எங்கே உள்ளது, அதன் அமைப்பு மற்றும் தோற்றம் என்ன, அதற்கும் நமக்கும் இடையேயான தூரம் என்ன, அதை நாம் பார்க்கும் கோணம் என்ன, அதை நாம் எந்தப் பொது அளவுகோல்களின்படி மதிப்பிடப்போகிறோம் — இவற்றின் அடிப்படையிலேயே நாம் மேற்கொண்டு சிந்திக்க முடியும் என்பதை நாம் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறதல்லவா?”

நடைமுறைவாதியான ·ப்ராங் ஓ கானர் ”இது பயனுள்ள காலைநேரம் என்பதில் எனக்கும் பெருமளவுக்கு உடன்பாடு இருக்கிறது” என்றார். ”ஆனால் இந்த விவாதத்தை நாம் தொடங்குவதற்கு முன்னர் ஒரேயொரு புள்ளியை மட்டுமே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒரு பாறை ஒலியெழுப்புமா இல்லையா என்ற வினாவை நாம் எதற்காக பரிசீலிக்க விரும்புகிறோம்? அதன் மூலம் நமக்கு கிடைக்கும் விடையை வைத்து நாம் என்ன செய்ய போகிறோம்? அவ்வாறாக நாம் எதிர்பார்க்கும் விடையின் அமைப்பை முன்னரே வகுத்துக் கொண்டால் மட்டுமே என் இனிய நண்பர் அனுபவவாதியான ஸ்டீவ் மெக்கான் அவர்கள் கேட்ட கேள்விகளை தொகுத்துக் கொள்ள முடியும்…”

புதுபிளேட்டோவியரான பிரிட்டிஷ் பேராசிரியர் ஜோசப் மெக்கின்ஸி கொம்புக்கண்ணாடிச் சில்லுகள் வழியாக கூர்ந்து நோக்கி ”…தெய்வீகமான காலை நேரம் இனிய நண்பர்களே….” என்றார் ”… ஆனால் அதற்கு முன்னால் எதைப்பற்றி நாம் பேச விரும்புகிறோம் என்பதை வகுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது அல்லவா? நாம் பாறை என்ற சொல்லால் சுட்டப்படும் ஒன்றைப்பற்றி பேச விரும்புகிறோம். ஆனால் அத்தகைய ஒன்று நமக்கு வெளியே உள்ளதா இல்லை உள்ளேயா? உதாரணமாக நான் இதோ எனக்கு முன்னல் தெரியும் இந்த கரிய உருண்ட அமைப்பைப் பார்க்கிறேன். இது என் கண்ணாடியின் மேலே உள்ள சில்லு வழியாக ஒரு பெரிய காட்டுமிருகம் போல தெரிகிறது. அவ்வடிவத்தை நான் இக்காட்டில் உள்ள யானை, காண்டாமிருகம், மறிமான் அல்லது வேறு ஏதோ ஒரு மிருகமாக எண்ணிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் என் கீழ்ச்சில்லு வழியாக நோக்கும்போது அது ஒரு மொத்தையான புல்மேடு போல தெரிகிறது.  இந்த அம்சத்தை விரித்து நோக்குவோம். இங்குள்ள அனைவருமே இரட்டைச்சில்லு கண்ணாடி போட்டிருக்கிறோம். ஆகவே இங்குள்ள பத்துபேரும் நமக்கு முன்பாக இருபது வெவ்வேறு பொருட்களையே காண்கிறோம். இந்த இருபதில் எது உண்மை? அதை எப்படி அறிவது?” பேராசிரியர் நாடகீயமாக நிறுத்தினார்.

”…இது அப்பட்டமான கருத்துமுதல்வாதப் பிற்போக்கு ·பாஸிசக் கூற்று என்று சொல்லி வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார் ஜெர்மானிய மார்க்ஸியரான ஹென்றிச் ஸ்கட்டர்.”… இதோ நமக்கு முன் ஒரு அமைப்பு உள்ளது. இதை அறிய இயற்கை நமக்கு ஐந்து புலன்களை அளித்துள்ளது. அப்புலன்களைக் கொண்டு தொகுத்து நோக்கும் பகுத்தறிவை நாம் பரிணாமம் மூலம் அடைந்திருக்கிறோம். மேலும் நம்பொருட்டு துணிந்து முன்னால் சென்று அதைத் தொட்டுநோக்கி தன் அறிதல்களை நம்மிடம் சொல்வதற்கு தியாக உள்ளமும் அர்ப்பணிப்பும் கொண்ட உழைக்கும் வர்க்கத்தையும் நாம் வரலாற்றின் மூலம் அடைந்திருக்கிறோம்….உதாரணமாக இங்கே நம்முடன் வந்த அந்த இந்தியப் பாட்டாளி—-” ஹென்றிச் ஸ்கட்டர் திரும்பிநோக்கி  முகம் வெளுத்து”…துரோகி, ஐந்தாம் படை… ஓடிவிட்டான், தோழர்களே!” என்று கூவினார்

”தத்துவம் தனித்து நின்று இயங்கக்கூடியது” என்றார் புதுபிளேட்டோவியரான ஜோச ப் மெக்கின்ஸி. உற்சாகமாகத்தொடர்ந்தார் ” அதற்கு புற அமைப்புகளின் உதவி தேவையில்லை. ஆக, நாம் வெளியே நோக்கி அறியும் இந்த அமைப்புக்கு அர்த்தமளிப்பது நமக்குள் உள்ள கருத்துவடிவமேயாகும். அந்தக் கருத்துவடிவமே நாம் அருந்தும் பானம். இந்த வெளிவடிவம் அந்தப் பானம் இருக்கும் பாத்திரமே என்று சொல்வதில் உவகை கொள்கிறேன்…”

”…இதை கருத்துலகத்து தலைகீழ் நடை என்று மார்க்ஸ் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலிலே சொல்கிறார்…” என்று ஜெர்மானிய மார்க்ஸியரான ஹென்றிச் ஸ்கட்டர் தொடங்க இடைமறித்த புதுபிளேட்டோவியரான ஜோச·ப் மெக்கின்ஸி ”…இப்படி நீங்கள் சொல்லக்கூடுமென உணர்ந்தே சற்றுமுன் நான் தலைகீழாக குனிந்தும் இந்தக் காட்சியைப் பார்த்தேன். உண்மையில் இருபத்தி ஒன்றாவது வடிவத்தையே நான் கண்டேன்….”

மார்க்ஸியரான ஹென்றிச் ஸ்கட்டர் கோபமாக ”உங்கள் உள்ளத்தில் உள்ள கருத்து அதோ தெரியும் அப்பொருளை மாற்றியமைக்குமா நணபரே? முட்டாள் மாதிரி உளற வேண்டாம் என்று மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

”உங்கள் குதவாயை மூடும்படி நானும் மரியாதையுடன் கேட்டுக்கொள்ள அனுமதி உண்டல்லவா?” என்ற புதுபிளேட்டோவியரான ஜோச·ப் மெக்கின்ஸி ”…அந்தப்பொருள் என்ன செய்தாலும் அதன் மூலம் என் உள்ளே உள்ள கருத்து எவ்விதத்திலும் மாறுவதில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

”நல்லடக்கம் செய்வோம், வேறென்ன?” என்றார் மார்க்ஸியர்.

தொப்பியை கையில் எடுத்து தலையை ஆட்டிய நடைமுறைவாதியான ·ப்ராங் ஓ கானர் ” ஓ! காளைச்சாணம்!” என்று சொல்லிக் கொண்டார். அதை ஐயவாதியான கிளாட் ஷுல்ட்ஸ் ”பெரும்பாலும்…!” என ஆதரித்தார்.

”ஓ ·பிராங்க் நீங்கள் செய்வதாக எனக்குத் தோன்றுவது என்ன?” என்று ஐயவாதியான கிளாட் ஷுல்ட்ஸ் கேட்க ”முதலில் அறிபடுபொருளைப்பற்றிய தரவுகளை சேகரிப்பது இன்றியமையாதது என்பதனால் அது நிற்குமிடத்தைச் சுற்றியுள்ள மரங்களின் இலைகளின் மாதிரிகளை சேகரிக்கிறேன்.” என்றார் நடைமுறைவாதியான ·ப்ராங் ஓ கானர்.

”ஆனால் அந்த பொருள் வெகுவாக அப்பால் அல்லவா காணப்படுவதுபோல தெரிகிறது?” என்றார் ஐயவாதியான கிளாட் ஷுல்ட்ஸ்.

”ஆம், ஆகவே இங்கேயே தரவுகளைச் சேகரிப்பதுதான் பொதுவாக பாதுகாப்பானது என்பது நடைமுறைவாதத்தின் முதல் பாடம்..” என்றார் ·ப்ராங் ஓ கானர்.

”ஒரு பாறையை நாம் அறிந்துகொள்வதென்பது அதைப்பற்றிய நம் அச்சங்களில் ஒன்று களையப்படுகிறது என்று மட்டுமே பொருள்படுகிறது. பாறை என்பது ஒரு புறப்பொருள். புறப்பொருளை நாம் முடிவின்மை வரை அச்சப்படலாம் என்பதனால் ஓர் அச்சம் குறைவதென்பது குறைவதாகவே ஆகாது. முடிவின்மையில் எதைக் கழித்தாலும் முடிவின்மையே எஞ்சும் அல்லவா?” என்றார் இருத்தலியரான சாம் ·பெர்கூஸன்.

”நாம் என்ன செய்து தொலைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாமல்லவா?” என்றார் மார்க்ஸியர் ஹென்றிச் ஸ்கட்டர்

”ஒன்றின் இருத்தல் என்பது அதனாலேயே தீர்மானிக்கப்படுகிறது….”

”ஆகவே நாம் அதனிடமே போய்க் கேட்கலாம் என்கிறீர்களா?” ஹென்றிச் ஸ்கட்டர் கேட்டார்.

”ஆனால் அது அதன் புறச்சூழல்களின் ஒரு விளைவு மட்டும்தானே?” சாம் ·பெர்கூஸன் மென்னகையுடன் சொன்னார்.

”அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். சூழல் குறித்த தகவல்களை திரட்டுகிறேன்…” என்றார் நடைமுறைவாதி

”அந்த மையம் இருப்பதனால் தானே இவை புறச்சூழல்கள் ஆகின்றன? அதை விலக்கி இவற்றை எப்படி அறிய முடியும்?”

”இனிய நண்பரே, நாம் வேறு எதைச்செய்து பிசாசைப்புணர வேண்டும் என்று சொல்ல முடியுமா?” என்றார் மார்க்ஸியர் ஸ்கட்டர் பொறுமை இழந்து..

”நாம் விவாதிக்கலாம். அதை மட்டுமே நம்மால் செய்ய முடியும்” என்றார் இருத்தலியர்.

”இனிய காலைநேரம் நணபர்களே” என்றார் மறைஞானவாதியான லூஸியன். ”நாம் எதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறியலாமா?”

தத்துவஞானியர் சற்றே திகைத்ததனால் ஆழமான அமைதி நிலவியது. மார்க்ஸியர் மட்டும் மெல்லிய குரலில் ”மூன்றாமுலக நாடுகளில் கரிய பாறைகளை உருவாக்கும் ஏகாதிபத்தியம்பற்றி நாம் கொண்டுள்ள முரண்பாடுகளையும் அது தத்துவஞானத்தில் உருவாக்கும் பாரதூரமான விளைவுகளையும் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தோம் என நினைக்கிறேன்…” என்றார்.

”பேசப்படும் விஷயம் முக்கியமல்ல. பேசும் மூறைமையே முக்கியமானது…” என்றார் அனுபவவாதி. ”…நாம் இங்கே எதைப்பற்றி பேசினோம் என்றால் ஒன்றை நாம் எவ்வண்ணம் தர்க்கபூர்வமாக வகுத்துக் கொள்வது என்பதைப்பற்றியாகும்…”

ஐயவாதி மெல்லிய குரலில் ”அன்புள்ள நண்பர்களே நாம் முதலில் தர்க்கம் என்றால் என்ன என்பதை வகுத்துக் கொண்டோமா?” என்றார் ”அதற்குமுன் வகுத்தல் என்றால் என்ன என்பதைப்பற்றியும் நாம் சிறிது பேசவேண்டியிருக்கும் என நினைக்கிறேன்…”

”நண்பர்களே,வெளியே காணாப்படும் இந்நிகழ்விற்கு இணையான நம் அகச்சித்திரம் எத்தகையது என்பதே முக்கியமானது. புறப்பொருளை அளவிட அகக்கருத்து அளவிடப்படுதல் வேண்டும்…” என்றார் நிகழ்வியலாளரான சைமன் ·பௌரியர். ” நாம் புறவய தர்க்க முறைமைகளை உதறி மேலெழுந்து ஏன் ஒரு உச்சகட்ட ஊகத்தைச் செய்யக்கூடாது? வெளியே நின்றுகொண்டிருக்கும் இது ஓர் யானையாக ஏன் இருக்கக் கூடாது?”

மார்க்ஸியர் ஸ்கட்டர் கொல்லென்று சிரித்து ”முட்டாள்தனம். கருத்துமுதல்வாதம் எந்தவடிவில் வந்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம்” என்றார்

”நாங்கள் என்றால்?” என்றார் ஐயவாதியான கிளாட் ஷுல்ட்ஸ்.

”உலகளாவிய பாட்டாளி வர்க்கம்தான்….” ஸ்கட்டர் சற்று குன்றி ”…மன்னிக்கவும் கோட்பாட்டுப்படி நாங்கள் அப்படி பன்மையில்தான் சொல்லவேண்டும். இந்த விதி இருப்பதனால் எங்கள் எதிரியையும் பன்மையில் சொல்லியாக வேண்டியிருக்கிறது….”

அனுபவவாதியான ஸ்டீவ் மெக்கான் ”முட்டாளைப்போல பேசவேண்டாம் சைமன். வெளியே உள்ள பொருள் ஏன் ஒரு பாறை அல்ல என்பதை நாம் இன்னும் நிறுவவில்லை. அப்படியானால் அது எப்படி அடுத்த ஊகத்துக்கு இடம் கொடுக்கும்?”

”இல்லை, நான் சொல்லிப்பார்த்தேன்… ஏனென்றால் நிகழ்வியலின்படி…” என சைமன் ·பௌரியர் தயங்கினார்.

”நிகழ்வியல் குதம் வழியாகப் புணரட்டும்” என்று கருத்துமுதல்வாதியான ஜோச·ப் மெக்கின்ஸி” நமக்கு முன் ஒரு பொருள் உள்ளது என்பதை முதலில் நாம் அனைவருக்கும் பொதுவாக எப்படி நிரூபிப்பீர்கள் என்று நான் கேட்கிறேன்”

”நாம் அப்பொருளைப் பார்ப்பதில் வேற்றுமை இருந்தாலும் அப்பொருள் நம்மைப் பார்ப்பதில் ஒருமை இருக்கும் அல்லவா?”

”பெர்ட்ரண்ட் ரஸ்சலை நாம் புதைத்து அதன் மீது நியூட்ரல் மோனிசத்தின் நடுகல்லையும் நிறுவி விட்டோம் என்று நினைக்கிறேன்” என்றார் மார்க்ஸியரான ஸ்கட்டர். ”மேலும் கார்ல் மார்க்ஸ் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, ‘பிதாவே இந்தப்பாவிகளை மன்னியும் இவர்கள் செய்வதென்ன என்று இவர்கள் அறியமாட்டார்கள்…’ என்று அலறியதுபோல அவர் செய்யவுமில்லை”

”இது ஒரு யானை என்றால் நமக்கு ஆபத்து உள்ளதல்லவா என்ற ஐயத்தில் கேட்டேன்..” என்றார் சைமன் பரிதாபமாக.

நடைமுறைவாதியான ·ப்ராங் ஓ கானர் ”வடிகட்டிய முட்டாள்தனம். இந்தச் சூழல் முழுக்க சிறிய கற்கள் உள்ளன. ஆகவே இதோ தெரியும் இதுவும் ஒரு கரும்பாறையாகவே இருக்க முடியும்..” என்றார். ” ஆகவே, ஒரு பாறை நம்மைப் பார்க்க முடியும் என்பது நடைமுறைவாதக் கோட்பாட்டின்படி செல்லுபடியாகக் கூடியதல்ல”

”நாம் ஏன் இந்த இடத்தில் பொதுவாகக் காணக்கூடிய ஒன்று என்னவாக இருக்க முடியும் என இங்கிருக்கக் கூடியவர்களிடம் கேட்கக் கூடாது?” என்றார் நவஇயற்கைவாதியான டேவிட் ·போர்டைஸ். ”ஏனென்றால் அவர்கள் இங்கு என்ன நிகழும் என்பதை உணர்ந்திருப்பார்கள். இயற்கையில் நிகழ்ந்தவைக்கு ஒரு தொடர்நீட்சி உள்ளது…”

நான்கு அறிஞர்கள் ஏககாலத்தில் தங்கள் தொப்பிகளை எடுத்து அசைத்துக்காட்டி ”ஓ, வரலாற்றுவாதக் காளைச்சாணம்” என்று அதை நிராகரித்துவிட்டார்கள்.

டேவிட் ·போர்டைஸ் அவசரமாக, ”நண்பர்களே, உண்மையில் இது புதுவரலாற்றுவாதம். இங்கே உள்ளவர்கள் இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை நாமே ஏன் சொல்லிக்கொள்ளக் கூடாது என்றுதான் நான் கேட்டேன்”

”இதை நிபந்தனைகளுடன் ஒத்துக் கொள்ளலாம்” என்றார் ஐயவாதி. நடைமுறைவாதி புன்னகைசெய்தார். அனுபவவாதி அப்புன்னகையை அங்கீகரித்து புன்னகைக்க சைமன் ·பௌரியர் அதை புன்னகையால் வழிமொழிந்தார்.

”இந்தச் சூழலில் நாம் எதைப்பற்றி விவாதிக்கவிருக்கிறோம் நண்பர்களே?” என்றார் மறைஞானியான லூசியன் மெல்ல தன் தொப்பியை எடுத்தபடி ”இனிய தென்றல் வீசுகிறதல்லவா?”

அதற்குள் பொறுமையிழந்த லூங்கா வேசமாக முன்னால் வந்து ஐயவாதியை தூக்கி வீசியது. புதருக்குள் விழுந்த அவர் எழுந்து தன் மூக்குக் கண்ணாடியை தேடி எடுத்து பொருத்தியபடி ”நாம் ஒரு பாறையைப் போய் முட்டுவது போல ஒரு பாறை நம்மை வந்து முட்டுவதற்கும் சரிசமமான வாய்ப்புகள் இருக்கின்றன- அவ்வாய்ப்புகள் அடிக்கடி பயன்படுத்தப்படாவிட்டாலும்கூட” என்ற தேற்றத்தை அடைந்து தன் பைக்குள் இருந்து குறிப்பேட்டை அவசரமாக எடுத்தார்.

லூங்கா மார்க்ஸியரை சுருட்டித்தூக்கியதும் அவர் ”சதி! இது அப்பட்டமான ஏகாதிபத்திய சதி!” என்று காட்டுத்தனமாகக் கத்தியதனால் திகைத்து விட்டுவிட்டது. ”நான் இதை விடப்போவதில்லை. இந்த சதியை நான் கட்டுடைப்பேன். கண்டிப்பாக கட்டுடைப்பேன்! அதுசரி , அந்த அளவுக்கு போய் விட்டாயா? இரு உன்னை… நீ ஒரு பிற்போக்கு, வகுப்புவாத, பிரிவினைவாத, திரிபுவாத, முதலாளித்துவ, ஏகாதிபத்திய, ·பாஸிஸ, திருத்தல்வாத,தனிநபர்வாத, புரட்டுவாத ஐந்தாம்படை!!!  ஜாக்கிரதையாக இரு… இன்னும் பத்தே நாளில் உன்னை கட்டுடைக்கிறேனா இல்லையா பார்… என்ன என்று நினைத்தாய்? அதன்பிறகு நீ ஒட்டுமொத்த வடிவமாக இப்படி நடமாடமுடியும் என்று நினைத்தாயா? கட்டுடைத்தால்தான் நீயெல்லாம் சரிவருவாய்…!ஆ! ஆ ! ஆ!” என்று நவமார்க்ஸியர் ஹென்றிச் ஸ்கட்டர் குதித்து கைகால்களை ஆட்டி கத்தினார்.

சத்தம் தாங்காத லூங்கா எதற்கு வம்பு என்று பின்னால் நகர்ந்துவிட்டது. கடுப்புடன் திரும்பிச் சென்ற வழியில் கருத்துமுதல்வாதியான புதுப்பிளேட்டோவியர் ஜோச·ப் மெக்கின்ஸி நின்று கொண்டிருந்தார். சினம் கோண்ட லூங்கா கொம்புகளை ஆட்டி உரக்க சின்னம் விளித்தபடி அவரை நோக்கிச் சென்றது.

அவர் புன்னகை செய்து ”இல்லை. இது என் எண்ணத்தில் ஏற்படும் ஒரு கரிய அலை மட்டுமே. தத்துவார்த்தமாக என் முன் யானையோ கரிய பாறையோ ஏதும் இல்லை. கருத்துரீதியாக என் முன் வெற்றிடமே உள்ளது” என்றார்

லூங்கா வேசமாக கொம்புகுலுக்கி பிளிறியபோது புதுப்பிளேட்டோவியரும் கருத்துமுதல்வாதியுமான ஜோச·ப் மெக்கின்ஸி ” நீ  ஆயிரம் தடவை பிளிறினாலும் என் தத்துவநிலைபாட்டை நான் மாற்றப் போவதில்லை. நீ வெளியே இல்லை. என் உள்ளே இருக்கும் நீ ஒரு வெற்றிடம் மட்டுமே” என்றார்

லூங்கா எதற்கும் இருக்கட்டுமே என்று இன்னொரு தடவை பிளிறிப்பார்த்தது

”முட்டாள்தனம். வெற்றிடம் ஒருபோதும் ஒலி எழுப்புவதில்லை. வாயை மூடு” என்றார் ஜோச·ப் மெக்கின்ஸி

லூங்கா ஐயத்துடன் திரும்பி உக்கிரமாக விவாதித்தபடி நின்றிருந்த பிறரைப்பார்த்தது. பிறகு பலவீனமாக முனகியது.

”ஏற்க முடியாது…” என்று சொல்லி கருத்துமுதல்வாதியான ஜோச·ப் மெக்கின்ஸி உதடுகளை இறுக்கிக் கொண்டார்.

லூங்கா மேற்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் தடுமாறி இனிமேல் இங்கே நிற்பதில் பொருள் இல்லை என்று உணர்ந்து போகத்தலைபப்ட்டபோது பேராசிரியர் ஜோச·ப் மெக்கின்ஸி புன்னகையுடன் ”நல்லது இனிய நண்பர்களே, இந்த இனிய மாலையில் இந்த விஷயம் நிறுவப்பட்டுள்ளது. பொருள் என்பது வெளியே இல்லை. அது உள்ளே உள்ள கருத்தின் வெளிவிளக்கமாகும். ஆகவே இதோ வெளியே நிற்கும் இது உண்மையில் இல்லை” என்றார்

‘யார் நானா?’ என்று லூங்கா பீதியுடன் கூவினாலும் பக்கவிலா அதிர்ந்ததே ஒழிய குரல் எழவில்லை. லூங்கா தன்னை தானே திரும்பிப்பார்க்க ஆசைப்பட்டாலும் யானைகளால் அது முடியாதென்பதனால் மேலும் பீதியடைந்து தலையை நன்றாகத் தாழ்த்தி துதிக்கையை நீட்டி ” எதற்கும் நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் துரையே… பாவம், வாயில்லாபிராணி…” என்று விம்மியது. அக்குரலும் எழவில்லை.

அனுபவ வாதியான ”ஆம், உண்மை. நானும் இப்போது ஓர் இன்மையையே அங்கே காண்கிறேன்” என்றார்

மறைஞானியான லூசியன் ”நல்லது இனிய நண்பர்களே, நாம் இப்போது எதைப்பற்றி பேசிக் கோண்டிருக்கிறோம் என்பதை அறியலாமா?” என்றார். ”ஏனெனில் நான் என்னைத்தவிர எதையுமே காணவில்லை!”

அதன்பின் லூங்கா உயிர்தரிக்க முடியவில்லை

ஓடிப்போன காவலன் ஆட்கள் பந்தங்களுடன் வந்து பேராசிரியர்களை மீட்டபோது அவர்கள் செத்துக் கிடந்த யானையைச்சுற்றி அமர்ந்து தத்துவ விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை அள்ளி ஜீப்பில் அடைத்து காட்டிருளுக்குள் விரையும்போதுதான் தத்துவ விவாதம் உண்மையில் சூடுபிடித்தது.

நெருக்கியடித்து ஜீப்பில் செல்லும் போது ஐயவாதியான கிளாட் ஷுல்ட்ஸ் தன் ஆகச்சிறந்த கோட்பாட்டை வந்தடைந்தார். அதை மறக்காமல் இருக்கும் பொருட்டு உடனடியாக தன் பைக்குள் கையை விட்டு குறிப்பேட்டை எடுத்து அதிர்ந்து கொண்டிருந்த நுரைரப்பர் இருக்கை மீது வைத்து இருட்டிலேயே குறித்து போட்டார். ஆனால் அந்தக் கோட்பாட்டின் மூலம் அவர் உலகப்புகழ்பெற இயலவில்லை. அதை அவர் அருகே இருந்த நவமார்க்ஸியரான ஸ்கட்டரின் அகன்ற பிருஷ்டத்தில்தான் எழுதியிருந்தார். பின்னாளில் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் ஐயவாத அடிக்குறிப்பு கொண்ட மார்க்ஸியர் என்று ஸ்கட்டர் குறிப்பிடப்பட்டமைக்குக் காரணம் இதுவே.

இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்

 

முந்தைய கட்டுரைஇயற்கை உணவு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசாப்ளின் – ஒருகடிதம்