சாமானியனின் காழ்ப்பு

நண்பர் ஒருவர் விவாதக்குழுமத்தில் இந்த இணைப்பை எடுத்துப்போட்டிருந்தார்.

விம்பிள்டன் வென்ற ஒரு வீராங்கனையைப்பற்றிய டிவிட்டர் வசைகள்

குழுமத்தில் உடலழகுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும் தகுதியற்ற முக்கியத்துவத்தைப் பற்றிய விவாதத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டது.

இதில் உள்ளது அழகு சார்ந்த முன்முடிவுகள் மட்டுமல்ல. common man’s grudge என்று சொல்லப்படும் ஓர் உணர்வு என நான் நினைக்கிறேன்.

சாமான்யன் தொடர்ந்து பிரபலங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் மீது மோகமும் வெறுப்பும் ஒரேசமயம் அவனுக்கிருக்கிறது.மோகம் அவர்களைப்போலத் தன்னைப் பகற்கனவில் காண்பதனால். வெறுப்பு அவர்களைப்போல தன்னால் ஆகவே முடியாது என்ற புரிதலால். தன்னை சாமானியன் மட்டுமே என்ற உணர்வுள்ளவர்கள் அடையும் கசப்பு மிக அந்தரங்கமான ஒரு சமூகக் கூட்டியக்கம்.

சென்ற காலகட்டத்தில் இதற்கு வெளிப்பாட்டு வழிகள் இல்லை. பெரும்பாலும் டீக்கடை விவாதமாகவே போய்விடும். எம்ஜியாரையும் சிவாஜியையும் எல்லாம் அவன் இவன் என்றே பேசுபவர்களை அங்கேதான் பார்த்திருப்போம். குடித்ததும் திட்ட ஆரம்பிப்பவர்கள் ஏராளம்

வாரஇதழ் ஆசிரியராக இருந்த நண்பர் ஒருமுறை சொன்னார். வார இதழுக்கு வரும் கடிதங்களில் 99 சதவீதம் மொட்டை வசவுகளாகவே இருக்கும் என. அவை அச்சேறுவதில்லை.

ஆனால் இன்று அவர்களுக்கு வெளிப்பாட்டு வடிவம் உள்ளது. டிவிட்டர், ஃபேஸ்புக். அவற்றின் மகத்தான வெற்றிக்குக் காரணம் அதுதான். அங்கே பெரும்பாலும் வெளிப்படுவது இதுதான். இக்கணம் சென்று டிவிட்டர், ஃபேஸ்புக்கை பாருங்கள், இதைத்தான் காண்பீர்கள்.

இந்த சாமானியனின் கசப்பு வெவ்வேறு பூச்சுகளைப் பூசிக்கொண்டு வெளிவரும். ஜனநாயகத்துக்கான குரலாக. அடித்தள அரசியலுக்கான அறைகூவலாக. நியாயத்தைத் தட்டிக்கேட்கும் முகமிலா மனிதனாக. ஆனால் அவற்றின் மொழியைக் கூர்ந்து கவனித்தால், தொடர்சியாக அவை எவரைக் குறிவைக்கின்றன என்று பார்த்தால் உண்மை வெளிப்படும்.

இவ்வாறு வசையைக் கொட்டும் நோக்குடன் முகமிலிக்களாகத் தங்களை முன்வைக்கிறார்கள். இதுவே கூட சாமானியனின் மனநிலைதான். நூறுபேர் தன்னை கவனிப்பதை அவனால் தாங்கமுடியாது. பெரிய ஆள்கூட்டத்தில் ஒருவனாக நின்று அரசியல்தலைவரை நோக்கிக் கெட்டவார்த்தை கூவுவான். அது தன் சாதி, மதம், கட்சி சார்ந்த திரள் என்றால் கூட்டத்தோடு சென்று வன்முறையிலும் ஈடுபடுவான்.

இந்த இணைப்பில் ஒரு பிரபலத்தை வசைபாட நிறமும் அழகின்மையும் காரணமாகின்றன அவ்வளவுதான். அழகான பெண் வேறு காரணங்களுக்காக வசைபாடப்பட்டிருப்பார். இங்கும் ஏராளமான உதாரணங்களை நாம் காணலாம்,

இந்த வீராங்கனை அவர்களும் இந்த சமூக வலைத்தளங்களுக்கு வந்து இவர்கள் பேசுவதைக் கேட்பார் என்றால் இன்னும்கூட உக்கிரமாக ஆகும் இந்த வசை. இதுகூட அவர் எப்படியும் கேட்கக்கூடும் என்ற நம்பிக்கையில் வெளிப்படுத்தப்படுவதே. இன்று எந்தப் பிரபலமும் இந்தப்பொதுவெளிக்கு வரமுடியாது.

மிஞ்சி வருபவர்கள் ஓர் அமைப்பை அல்லது இயந்திரத்தைக்கொண்டு இந்தத் தளங்களைத் தொழில்முறைப் பிரச்சார ஊடகங்களாக நடத்துகிறார்கள். அது இவற்றில் திரண்டுள்ள சாமானியர்களை நோக்கி நீங்கள் சாமானியர்கள் என்று ஓங்கிச்சொல்வதுதான். புல்டோசர் வைத்து அள்ளுவதுபோன்ற ஒரு செயல்.

இவற்றைக் கருத்துக்கள் என எடுத்துக்கொள்வது அறிவின்மை. இவை வெறும் அந்தரங்க வெளிப்பாடுகள் மட்டுமே. இவற்றை வெளிப்படுத்திய மனிதர்கள் மேலும் நிதானமான, நாகரீகமான மனிதர்களாகவே இருப்பார்கள். இவற்றை மக்களின் கூட்டுக்குரல் என எடுத்துக்கொள்வதும் பிழை. ஏனென்றால் இவை சமூகத்தின் பொதுவான குரலாக ஒலிப்பதில்லை

சமூகத்தின் நோய்க்கூறு ஒன்றை ஆவணப்படுத்தும் ஒரு கூட்டுநிகழ்வாக மட்டுமே இவற்றைக் காணவேண்டும். உளவியலாளர்களும் சமூகவியலளர்களும் ஆராயவேண்டும். எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டும்

முந்தைய கட்டுரைமனிதர்களின் வீழ்ச்சி-கடிதம்
அடுத்த கட்டுரைசாதி அடையாளமா?