பிற்கால இந்தியச் சிறுகதைகள் எனும் பிரிவின் கீழ், இந்த அமர்வில் விவாதிப்பதற்காகத் தேர்வு செய்துள்ள ‘சந்தனுவின் பறவைகள்’ என்னளவில் நான் வாசித்த மாற்று மொழி மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதைகளில் ஒன்று.
இக்கதை மலையாள எழுத்தாளர் பால் சக்காரியாவின் எழுத்தில், வம்சி வெளியீடாக கே.வி.ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள ‘அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்’ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சக்காரியா பாலக்காடு பகுதியை சேர்ந்தவர். 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை உதிர்ப்பவர் எனும் அளவில் மட்டுமே ஊடகங்கள் அவரை முன்னிறுத்தினாலும், இந்திய அளவில் நம் காலத்தில் வாழும் மிக முக்கியமான புனைவாசிரியர்களில் ஒருவர்.
மரணமெனும் பெரும் புதிரை மனிதன் குழப்பத்துடனே எதிர்கொள்கிறான் சில வேளைகளில் நம் சுவாதீனமான தேர்வுகளும், பலவேளைகளில் தர்க்க வரையறைகளுக்குள் அகப்படாத முரட்டு வெள்ளப் பெருக்குகளுமே நம் பாதைகளைத் தீர்மானிக்கின்றன. இது தான் நிஜம் என்றானபோது, மரணத்தின் வலியல்ல வாதை. மரணத்தின் வழியாக அழியும் நம் சுயத்தைப் பற்றிய அச்சமே வாதை. அரூவமே மரணம். எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் உருபெரும் வல்லமை கொண்ட அரூவ மரணமெனும் பூடக மாயவாசலில் மனிதன் தன் வாழ்நாளில் சர்வ நிச்சயமாகக் கால் பதித்தாக வேண்டும் என்பதில் உள்ள நிச்சயமின்மையே வாதை.
நிச்சயமாக சுயம் அழியும் எனும் அச்சமும், அது எந்நேரமும் நிகழலாம் எனும் நிச்சயமின்மையும் யுகம் யுகமாக மனிதர்களைத் துரத்திக்கொண்டு வரும் நர பட்சிணிகள். ஒருவகையில் மனிதன் உருவாக்கிய கடவுளர்களும், மதங்களும், தத்துவங்களும், இலக்கியங்களும், அறிவியலும், மரணத்தில் தொடங்கி மரணத்தில் முடிவதாகவே எனக்குத் தோன்றுவதுண்டு. மனிதனுக்குள் சுடரும் ஜடராக்னியாக அவனை இயக்குகிறது மரணத்தைப் பற்றிய பெருவினா.
குழந்தைகளுக்கு உண்டான முரட்டு வெகுளித்தனத்துடன் ஐந்து வயது சிறுவன் சந்தனு கொங்கிணிப்பூ கிளையைப் பற்றிக்கொண்டு பறவைகள் வந்தமரும் தருணத்திற்காக தினமும் காத்து நிற்கிறான். பொதுவாக அவ்வயதுக் குழந்தைகளுக்கு இருக்கும் குறுகுறுப்புகளும் பரவசங்களும் அவனுக்கில்லை. வெளியைத் துளைத்து செல்லும் பறவைகளின் பறத்தலோ, அவை உடல் உலுக்கி உதிர்க்கும் இறகுகளோ, அவைகளின் மென்மையான ஸ்பரிசமோ அவனுக்கு ஒரு பொருட்டல்ல. மாறாக அவைகளிடம் அவனைத் துளைத்தெடுக்கும் கேள்வியொன்றை அவன் கேட்டாக வேண்டும். ‘நீங்கள் மரணமடையும் போது எங்கே போகிறீர்கள் ? அல்லது உங்களுக்கு மரணமே இல்லையா?
இந்தக் கேள்வி அவனுள் தன்னிச்சையாக சுரந்தது அல்ல. எலிகள், பூச்சிகள், பாம்பு, ஓநாய், பட்டாம்பூச்சி என உயிர்கள் உகுத்த சடலங்களைக் கண்டிருந்தாலும், அவன் ஒரு போதும் மரணித்துக் கிடக்கும் பறவைகளின் சடலங்களைக் கண்டதில்லை.
தொன்மங்களில் மேலுலகத்தையும் பூவுலகத்தையும் இணைக்கும் உயிரினங்களாகப் பறவைகள் கருதப்பட்டதுண்டு. மூத்தோர்கள் காகங்களாக மாறி நம்முடன் புழங்குகிறார்கள் என்பது நமது மரபில் ஊறிய நம்பிக்கை. பறவைகள் ஆன்மாவின் குறியீடாக எப்போதும் கருதப்படுவதுன்டு. வான்வெளியில் பறக்கும் பறவைகள், விடுதலையின் குறியீடாக நெடுங்காலமாகவே கருதப்படுகிறது.
மாலை நிழலில் கொங்கிணிப்பூ கிளையுடன் காத்து நிற்கும் சிறுவன், நாய்களால் வேட்டையாடப்பட்டுத் தண்ணீருக்குள் மூழ்கி மரிக்கும் பூனை, சந்தனு காணும் கனவு என சக்காரியாவின் இக்கதை நமக்கு அபாரமான காட்சி அனுபவத்தை அளிக்கிறது. குறிப்பாக சந்தனு காணும் அந்தக் கனவு. கையில் பற்றி இருக்கும் பூக்கள் நிறைந்த கொங்கிணிக் கிளையில் (உண்மையில் கொங்கிணிப் பூச் செடி, நொச்சி செடியளவுக்கு வளரும் தாவரம், அது ஒரு மரம் அல்ல- தமிழில் உண்ணிப்பூ செடி என்று வழங்கப்படுகிறது)) மேகம் படர்கிறது, நட்சத்திரங்களும், நிலவும் வந்து அமர்கின்றன. வெவ்வேறு பறவைகள் அங்கு அமைதியாக வந்து அமர்கின்றன. சிறகுகள் எங்கும் சுற்றிப் பறக்கின்றன. அவன் அப்பறவைகளிடம் உரையாடத்தொடங்கும் அந்த நொடியில் எல்லாம் மறைந்து போய் விழிப்பு தட்டுகிறது.
கனவில் நெருங்கி வந்த பறவைகளை நிஜத்தில் அவனால் அண்ட முடியவில்லை. ஐந்தே வயது சிறுவனான சந்தனு உண்மையில் பறவைகளைத் தேடவில்லை, மரணத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் கவலைகொள்ளவில்லை என்பது இறுதியில்தான் நமக்கு உணர்த்தப்படுகிறது. உண்மையில் அவன் இழந்த அன்னையின் ஆன்மாவின் அண்மையை நாடுகிறான் என்றே எனக்குத் தோன்றியது. அவளிடம் சொல்வதற்கு அவனுக்கு எத்தனையோ இருக்கலாம். அவன் நெருக்கத்தில் கண்ட அவதியுற்று மறைந்துபோன பூனையின் மரணம் ஒன்றும் அத்தனை சுகமானதாக இல்லை. மரணம் அவளுக்கு வலித்திருக்குமோ? அப்பறவைகளில் ஒன்று அவனது அன்னையாக இருக்கக்கூடும். யாரறிவார். மரணமற்ற வாழ்வு வாழ்வதாக அவன் நம்பும் பறவைகளிடம் அவன் தன்னுடைய நெருடலைப் பகிர்ந்தாக வேண்டும். அவனது அன்னையும் புலனுக்கு அப்பால் உள்ள வெளியில் எங்கோ மகிழ்ச்சியுடன் பறந்து கொண்டிருக்கிறாள் எனும் நம்பிக்கையை மட்டுமே அவன் யாசித்து நிற்கிறான்.
மரணம் பற்றிய சிந்தனைகள் இயல்பாகவே அதன் மீட்சியைப் பற்றிய சிந்தனைகளுக்கு கருவாகிறது. பெரும்பாலான மரணம் சார்ந்த எழுத்துகளில் தவிர்க்க முடியாமல் இறைவனுக்கும் இடமிருக்கும். முறையிடலோ, சினமோ, அங்கதமோ, அவநம்பிக்கையோ, ஏதோ ஒருவகையில் அங்கு இறைவன் பிரசன்னமாவார். சக்காரியாவின் இக்கதையிலும் சந்தனுவிற்குக் கடவுள் அறிமுகப்படுத்தப்படுகிறார். சந்தனுவின் கடவுள் மிக சுவாரசியமானவர். ‘இறந்து போகின்றவர்களை வரவேற்கின்றவனும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நேசிப்பவனுமே கடவுள்.’ என அறிகிறான். நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பின் தள்ளி புதிய உலகை நோக்கிச் செல்லும் பறவைகளுக்கு மத்தாப்பு போல எரியும் வால் நட்சத்திரமாக நின்று வழிகாட்டுகிறார். மேகங்களில் பறந்து, காடுகளில் பதுங்கி, குழந்தைகளுடன் விளையாடி, நீரில் இலையாக மூழ்கி எழுகிறார் கடவுள். இறந்தவர்களுடன் மேகங்களுக்கு அப்பால் விளையாடிக் கொண்டிருப்பவர், வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஆனந்தக் கூப்பாடுகளைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பவர். எங்கும் நிறைந்த கடவுள் தத்திக் குதிக்கும் தவளையாக மாறி சந்தனுவின் முன் நிற்கும் போது, “நாம் பறக்கலாமா?” என்று அவரிடம் கேட்கிறான் சந்தனு. மதங்களுக்கு அப்பாற்பட்ட எங்கும் நிறைந்த அன்பே வடிவான இறைவன்தான் சந்தனு அறிந்த கடவுள்.
கடவுள் எத்தனை இயல்பானவரோ அப்படித்தான் காலனும். சக்காரியா மரணத்தை ஒரு வதையாக எதிர்மறைக் கோணத்தில் அணுகவில்லை. மாறாக இங்கே பறக்கும் பறவை புலன்களுக்குப் புலப்படாத அந்தர வெளியில் வேறு எங்கோ பறப்பது போன்ற ஒரு இயல்பான நிகழ்வாகக் காண்கிறார். அமைதியாகப் பதட்டம் ஏதுமின்றி இயல்பாகக் கடக்கும் வாசல்தான் மரணம். இத்தொகுப்பில் உள்ள மற்றொரு சிறுகதையான அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் கதையை வாசிக்கும் போது அவருடைய பார்வை நமக்குத் தெளிவாகத் துலங்கக்கூடும். நோயால் வாடி இளம் வயதில் உடலைத் துறந்து வரும் அல்ஃபோன்சம்மாவின் ஆன்மா நன்றிப்பெருக்குடன், மகிழ்ச்சியுடன் உடலை விட்டு விடைபெறுகிறது. மரணம் தன் போக்கில் நிதானமாக ஊர்ந்து செல்லும் பெருநதியைப்போல் கரைபுகுந்து உயிர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறது.
சக்காரியாவின் இக்கதை மரணத்தைப் பற்றியதா என்றால், இல்லையென்றே சொல்வேன். உண்மையில் இக்கதையும் சரி அல்ஃபோன்சம்மாவும் சரி வாழ்வின் மகத்துவத்தைப் பேசுகிறது என்றே சொல்வேன். மரணத்தின் முனையிலிருந்து அழகிய மயில் தோகையாக வாழ்வு பிரம்மாண்டமாக தன்னை விரித்துக்காட்டும் அற்புதத்தைக் காட்டுகிறது. மரணம், கடவுள் போன்ற பிரம்மாண்டமான கேள்விகள் அன்னையின் இழப்பு எனும் ஒரு தனிமனித அனுபவத்துள் ஒடுங்குவதை சக்காரியா இக்கதையில் காட்டிச் செல்கிறார்.
‘சந்தனுவின் பறவைகள்’ தமிழின் தலைசிறந்த கதைசொல்லிகளின் இரு கதைகளை எனக்கு நினைவூட்டியது. லா.ச.ராவின் கண்ணனும், புதுமைப்பித்தனின் மகாமசானமும் மரணத்தை குழந்தைகளின் பார்வையில் நுட்பமாக வெவ்வேறு வகையில் பதிவு செய்கின்றன. தனக்கு அணுக்கமானவர்களின் மரணத்தை இழப்பாகவும் அன்னியரின் மரணத்தையும் வெறும் வேடிக்கையாகவும் இக்கதைகள் பதிவு செய்கின்றன. லாசராவின் கண்ணன் சந்தனுவைப் போன்றே தாயை இழந்த சிறுவன். நினைவுகள் வழியாகப் பிரிந்து சென்ற தாயை மீட்டு எடுக்கிறான். அவள் ஏன் மறைந்தாள்? எங்கு மறைந்தாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. சந்தனுவிற்கு இருக்கும் தத்துவ விசாரங்கள் ஏதும் கண்ணனுக்கு இல்லை. அவளுக்காக ஏங்கித் தவிக்கும் ஓரிரவில் அவளைக் கண்டுகொள்கிறான்.
புதுமைப்பித்தனின் மகாமசானத்தில் சாலையோரம் மடிந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் உயிருக்கு சாட்சியாக அங்கு என்ன நடக்கிறது என்பது பிடிபடாமல் நின்றுகொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி. அவளுக்கு மரணம் கனக்கவில்லை, அதைக்கண்டு அஞ்சவும் இல்லை. உலகெங்கிலும் எழுத்தாளர்கள் குழந்தையின் பார்வையில் மரணத்தை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அனுபவங்களாக மீண்டும் மீண்டும் எழுதி வந்ததை நாம் கண்டுகொள்ள முடியும். ஒருவேளை தத்துவங்களும், நன்நம்பிக்கைகளும் மரணத்திலிருந்து தமக்கு அளிக்க இயலாத ஆசுவாசத்தை பால்ய காலத்து அறியாமை அளிக்கக்கூடும் எனும் நம்பிக்கை காரணமாக இருக்குமோ? வாழ்வின் ஒவ்வொரு துளியையும் கண்டு வியந்து மகிழ்ந்து அனுபவிக்கும் குழந்தையின் மனநிலையுடன் மரணத்தைக் கடக்க முடிந்தால் நாம் வரம் பெற்றவர்கள் தானே. அறிதலின் துடிப்பு குழந்தையின் மனதில் தொடர்பற்றவைகளை ஒன்றோடொன்று பிணைத்து விடும் அற்புதத்தை சக்காரியா அழகாகக் கட்டமைக்கிறார்.
இந்திய சிறுகதை எனும் வரையறையை முன்வைக்கும் போது, இக்கதையில் இந்தியத்தன்மை என்று என்னவிருக்கிறது என்று ஆராயத் தோன்றியது. ஒரு நல்ல சிறுகதை மொழி, பிராந்திய பேதங்களுக்கு அப்பால் நுண்ணுணர்வு கொண்ட வாசகரை நிச்சயம் சென்றடைய முடியும். மானுட குலம் உட்பட உலகின் உயிர்தொகையின் ஏதோ ஒரு பொதுக் கூறைத் தனது பேசுபொருளாகக் கொண்டதாகவே தேர்ந்த இலக்கியம் இருக்க முடியும். மண்ணில் வேர்விட்டு வளரும் மரத்தில் காய்க்கும் கனிகளிலும் கூட மண்ணின் இயல்பு புதைந்திருப்பது போல், தான் வாழும் மண்ணின் கூறுகளை ஆசிரியன் அவனறியாமலே தன் படைப்புகளில் கடத்துகிறான். மரணம், கடவுள் என பல தத்துவச்சிக்கல்களை கனமின்றித் தொட்டு மீள்கிறது சக்காரியாவின் கதை.
மரித்தவர்கள் எதுவாகவோ மாறி இங்கு வருகிறார்கள் எனும் நம்பிக்கையை நாம் இந்தியத் தன்மையுடன் அடையாளப் படுத்தலாம். கல்வி கற்ற, வாசிப்புப்பழக்கம் உள்ள மேற்கத்தியத் தந்தை ‘ அவளும் அப்படிப் பறந்து மறைந்தாள்’ என்று தன் மகனிடம் இறந்த மனைவியைப் பற்றி சொல்வாரா என்பது சந்தேகமே. ஆன்மாவின் இருப்பை இது அங்கீகரிப்பதாகும். இதையும் கூட இந்தியத் தன்மை என கணக்கில் கொள்ளலாம். அல்லது அவருக்கும் அந்த நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், எனினும் சந்தனுவை சமாதானப்படுத்த சொன்ன எளிய பொய்யாகவும் கருதலாம். லா.ச.ரா வின் கண்ணனுக்கும் சக்காரியாவின் சந்தனுவிற்கும் உள்ள வேறுபாட்டை கவனித்தால் மரபுக்கும் நவீன பாணிக்குமான வேறுபாடு நமக்கு பிடிபடக் கூடும். இது உண்மை என்று வழி வழியாக அடையாளப்படுத்தப் படுவதை அப்படியே ஏற்பது மரபு என்றால், அதை தன் அனுபவ வட்டத்தில் கொணர்ந்து திட்டவட்டமாக நிரூபணவாதக் கண்ணோட்டத்தில் அணுகித் தான் உண்மை என்று உணர்வதை மட்டுமே உண்மையாக ஏற்றுக்கொள்வது நவீனம் என்று வரையறை செய்யலாம். சந்தனுவின் தந்தையின் வழியாக மரபிற்கும் நவீனத்திற்கும் இடையிலான இந்த முரண் வெளிப்படுவதாகக் கொள்ளலாம். சந்தனு எனும் பெயருக்கும் ஒரு தொன்ம வரலாறு இருக்கிறது என்றாலும் இக்கதைக்கும் பாரதத்தின் சந்தனுவிற்கும் தொடர்பு இல்லை என்றே எண்ணுகிறேன்.
ஏ.கே ராமானுஜம் சொன்னதாக ஜெ ஒரு அங்குலப் புழு கதையை சொல்லியிருப்பார். அனைத்தையும் தன்னையே அளவையாகக் கொண்டு அளக்கும் புழு இசையை அளக்க முடியாமல் மரித்துப் போகும். ஒருவகையில் இலக்கிய வாசகனும் ஒரு அங்குலப் புழு என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால் அவன் அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு வாசிப்பின் வழியாகவும் வளரும் புழு. வாசித்தவற்றை செரித்துத் தனதாக்கித் தன்னளவைப் பெருக்கித் தன் வாழ்வையும் தன்னையும் அளந்துகொண்டே இருக்கிறான். இக்கதையை நான் தேர்வு செய்வதற்கு அந்தரங்கமான சில காரணிகளும் உண்டு. நம் தேர்வுகளைத் தீர்மானம் செய்யும் அத்தகைய காரணிகளுக்கும் வாழ்விற்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு என்பதால் அவைகளும் ஏதோ ஒருவகையில் முக்கியம் என்று நான் நம்புகிறேன்.
நான் என்னை சந்தனுவின் இடத்தில் நிறுத்திக்கொண்டேன். ஆழத்தில் அவனை எனக்கு மிகவும் நெருக்கமானவனாக உணர்ந்தேன். எட்டு – ஒன்பது வயதுகளில் எவரோ சொன்னவற்றை நம்பி மூடிய இருட்டு அறையில் ஒற்றை மெழுகுவர்த்தி ஒளியில் ‘மேல் தேசத்திற்கு’ சென்ற தந்தையின் குரல் கேட்க நாட்கணக்கில் முயன்றிருக்கிறேன். எல்லையற்ற இருளின் சிறுதுளிக்கு மட்டும் ஒளி வழங்கி உருகி மீண்டும் இருளில் கலந்திடும் மெழுகுவர்த்தியின் ஒளிப்பரப்பில் என் தந்தையைத் தேடித் திரிந்தேன், சந்தனுவும் மலர்கள் நிறைந்த கிளையைப் பற்றிக்கொண்டு பறவைகள் வந்தமரும் தருணத்திற்காக அங்கு காத்து நிற்கிறான். எனக்கும் அவரிடம் சொல்வதற்கு எத்தனையோ விஷயங்கள் உண்டு, ஆனால் அவரிடமிருந்து அறிந்துகொள்ள ஒன்றேயொன்றுதான் அன்று எனக்கு இருந்தது.
[ஏற்காடு அமர்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை]