அன்புள்ள திரு ஜெயமோகனுக்கு
தங்கள் பதிலுக்கு நன்றி. வழக்கம் போல் எடுத்துக்கொண்ட விஷயத்தை நுட்பமாக அலசியுள்ளீர்கள். ஒரு வாசகனுக்கு எழுதும் தனிப்பட்ட கடிதத்திற்கு இவ்வளவு சிரத்தை எடுத்து செயல் படும் உங்கள் அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.
ஆன்மிகம், தத்துவம் இவற்றை பற்றியெல்லாம் என்னுடைய புரிதல் மிக மிக குறைவு . இருந்தும் ஆன்மிகம் என்பது மந்திர மாயங்கள் அல்ல என்ற கருத்து எனக்கு எப்போதும் உண்டு. தங்கள் கடிதம் அந்த கருத்தை மேலும் உறுதி படுத்தியது. நன்றி. தங்கள் கடிதத்தை படித்ததும் தாங்கள் பதஞ்சலி யோகம் பற்றி எழுதியதை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. படித்து புரிந்து கொள்ள முயல்கிறேன். (ஆனால் விஷ்ணுபுரத்தை ஆறு மாதங்களாக படித்தும் இன்னும் முடிக்க வில்லை; கொற்றவையை இன்னும் தொடங்கவேயில்லை. என் வாசிப்பின் வேகம் அவ்வளவு தான். ஆனால் கிளி சொன்ன கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்)
கடைசியாக, தங்கள் கடிதத்தில் “தனிப்பட்ட விமர்சனம்” என்று கூறியிருந்ததை பற்றி எனது தரப்பை கூற விரும்புகிறேன். தங்களுடம் வாதாடுவதாக நினைக்க வேண்டாம். அதற்கான தகுதி எனக்கு இருப்பதாக விளையாட்டுக்கு கூட எண்ணி கொள்ளும் அளவுக்கு அசடு அல்ல நான்.
என்னுடைய கடிதத்தில் நான் பாலகுமாரன் மீது வைத்திருந்த விமர்சனங்கள் தனிப்பட்ட விமர்சனங்கள் என்பது போல் கூறி அவற்றுக்கு தங்கள் எழுத்தில் இடமில்லை என்று கூறியுள்ளீர்கள். பல இளைஞர்கள் மீது பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் உள்ள ஓர் எழுத்தாளர் பொது வெளியில் தன்னை பற்றி தவறான பிம்பத்தை தோற்றுவிக்கும் வண்ணம் நடந்து கொள்ளும்போது அதை பற்றி விமர்சிப்பது எப்படி தனிப்பட்ட விமர்சனமாகும் என்று எனக்கு புரிய வில்லை. பாலகுமாரனின் எழுத்துகளும் நடவடிக்கைகளும் இந்து மதத்தை கொச்சை படுத்துகின்றன என்பது எனது கருத்து. ஆனால் எனக்கு தெரிந்து யாரும் இவரது போலி ஆன்மீக வேஷத்தை விமர்சித்ததாக தெரியவில்லை. இந்து ஞான மரபின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும் தாங்கள் இது பற்றி எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனவே தான், தாங்கள் இது பற்றி எழுதாததால் வந்த ஆதங்கத்தை என் கடிதத்தில் தெரிவித்து இருந்தேன்.
நீங்கள் இது பற்றி எழுதுவதை தவிர்ப்பதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக இந்த சர்ச்சையில் நேரத்தை செலவிட விரும்பாமல் இருக்கலாம். ஆனால் பாலகுமாரனின் ஆன்மீக வேஷத்தை விமர்சிப்பது தனி மனித விமர்சனம்; அதனால் அதை செய்ய மாட்டேன் என்ற தங்கள் நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. கமலா தாஸ் மரணத்தின் போது தாங்கள் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது.
“இரண்டாவது வகை எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வெட்டவெளிச்சமாக்குபவர்கள், அல்லது தங்களுடைய ஆளுமை என்று ஒன்றை தாங்களே புனைந்து முன்வைப்பவர்கள். அத்தகைய எழுத்தாளர்களின் அந்தரங்கத்தைப்பற்றி பேசுவது இன்றியமையாதது. ஏனென்றால் அதை அவர்கள்தானே தொடங்கி வைக்கிறார்கள்”
நான் சொல்ல நினத்ததை சொல்லி விட்டேன். என்னுடைய புரிதலில் தவறு இருப்பின் தெரிவிக்கவும். திருத்தி கொள்ள தயாராக இருக்கிறேன்.
தங்கள் நேரத்திற்கு நன்றி.
அன்புள்ள ராஜேந்திரன்
மன்னிக்கவும், தங்கள் கடிதத்தில் தனிப்பட்ட தாக்குதலின் தொனி இருப்பதாக நான் நினைக்கவில்லை — அது ஒரு வாசகனின் ஆர்வமும் தீவிரமும் மட்டுமே. நான் தனிப்பட்ட முறையில் பாலகுமாரனின் ஆளுமையை ஆராய்வது இலக்கிய விமரிசனத்தின் எல்லைக்குள் வராது என்று மட்டுமே குறிப்பிட்டேன். ஒரு முதன்மையான இலக்கியவாதியின் தனிப்பட்ட ஆளுமையை அவரது ஆக்கங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வது போன்றதல்ல அது
நீங்கள் சொல்வது உண்மை. இப்போது இப்படிப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்படாமலேஎயே ஒருபக்கம் நிறுவப்பட்டுக்கொன்டே செல்கின்றன. அதைப்பற்றிய விரிவான விவாதம் அவசியம்தான்
ஜெ