அன்பின் ஜெ எம்.,
நாடகக்காதல் பதிவிலுள்ள உள்ளடக்கத்தோடு இக்கடிதம் நேரடித் தொடர்பு கொண்டதில்லையென்ற போதும் அதிலுள்ள வேறொரு குறிப்புச் சார்ந்து இக்கடிதம்.நேற்றிரவே குறுஞ்செய்தி வழி உங்களோடு தொடர்பு கொண்டு நீங்களும் எனக்கு மறுமொழி அளித்து விட்டபோதும் இன்னுமொரு சிறு விளக்கம் தர அனுமதியுங்கள்.
மதுரை பாத்திமாக்கல்லூரி,நான் பணியாற்றிய கல்லூரி என்பதாலும், சில நடப்புக்கள் எனக்குத் தெரிந்திருக்கின்றன என்பதாலும் இதை நடுநிலையோடு எழுதுகிறேனேயன்றி எதையும் நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளக்கூடும்.
மதுரையில் அமெரிக்கன் கல்லூரியை அடுத்து தமிழின் நவீன இலக்கியத்தைப் பாடத் திட்டத்தில் அதிகம் முன்னெடுத்தது பாத்திமாக்கல்லூரிதான் என்பதையும் மதுரையில் நிஜநாடக இயக்கத்தை நிறுவிய தமிழ்ப்பல்கலையின் முன்னாள் பேராசிரியர் மு ராமசாமியின் மனைவி திருமதி செண்பகம் ராமசாமியின் [ அவர்களின் சிறுகதைகள் ‘70,’80களில் கணையாழியில் அதிகம் வந்ததுண்டு] பங்களிப்பு அதில் அதிகம் இருந்ததென்பதையும் நான் பல ஆண்டுக்காலம் கூடவே இருந்து பார்த்திருக்கிறேன்; பல்கலைக்கழகப்பாடத் திட்டத்திலிருந்து தன்னாட்சிப்பாடத் திட்டத்துக்கு மாறிய பின் நவீன படைப்புக்களை மிகுதியாக வைக்கும் வாய்ப்பும் சுதந்திரமும் எங்களுக்குக் கிடைத்தது; நாங்களும் அதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.’’படைப்புத் தமிழ்’’ என்றே ஒரு தனித் தாளை வைத்து உங்கள் ரப்பர் நாவல், மற்றும் சோதனை முயற்சிகளாகக்கருதத்தக்க பல காலகட்டச்சிறுகதைகள் ,கவிதைகள் எனப் பலவற்றையும் பாடத் திட்டத்தில் இணைத்தோம்; ஜெயகாந்தன் தொடங்கி , லா ச ரா, கி ரா, சி சு செல்லப்பா, வண்ணதாசன், தமிழ்ச்செல்வன்,சுந்தரராமசாமி ,அம்பை எனப் பல படைப்பாளிகளும் மாணவியரைச் சந்திக்க ,உரையாட ஏற்பாடு செய்ததும் உண்டு; பிறகு நீங்கள்,நாஞ்சில் நாடன்,எஸ் ரா ஆகியோர்.
நீங்கள் இருமுறை எங்கள் கல்லூரிக்கு வந்திருக்கிறீர்கள்;
2004 இல் நான் பணியிலிருந்தபோது முதல்முறை [நாஞ்சிலோடும்,அ.ராமசாமியோடும்- அப்போது எனக்கு ஏற்பட்டிருந்த ஒரு தனிப்பட்ட நெருக்கடியால் என்னால் அந்த நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை]. அந்த நிகழ்ச்சிக்கு வந்து திரும்பியபோது மாணவியர் எதிர்வினை எப்படி இருந்ததோ என்ற அச்சத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள, நீங்கள் எனக்கு எழுதிய இன்லாண்ட் கடிதம் இன்னும் பத்திரமாக என்னிடம் உள்ளது.நீங்கள் பதிக்கும் விதைகள் ஒரு சிலரிடம் சென்று சேர்ந்தால் கூட நல்லதுதான் என அதில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக நானும் எங்கள் மாணவியர் சிலரும் காடு நாவல் குறித்து உங்களுக்கு எழுதிய கடிதங்களும் நீங்கள் எழுதிய மறுமொழிகளும் இன்னும் மறக்காமல் என் உள்ளத்தில் தங்கியிருக்கின்றன.
இரண்டாம் முறை நான் ஓய்வு பெற்று தில்லியில் இருந்தபோது- 2011இல் – இக்கால இலக்கியத்துக்காகவே நான் எங்கள் கல்லூரியில் நிறுவியிருந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுக்குப்போய்த் திரும்பியபோதுதான் தங்களுக்குச் சில கசப்பான எதிர்வினைகள் கிடைத்தன.அதில் பங்கு கொள்ள வைத்து உங்களை எரிச்சலடையச்செய்து விட்டோமே என நானும் வருந்தினேன்…
இனி..பெண் பற்றி….!
பெண் என்பவள் பொத்திப்பொத்தி வளர்க்கப்பட வேண்டியவள் அல்ல, அவள் எவரின் உடைமைப் பொருளும் அல்ல…அவள் ஒரு தனிப்பிரகிருதி – she is an independant entity– என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்வதிலும் அது சார்ந்த எழுத்துக்களை முன்னிறுத்துவதிலுமே அந்த வளாகத்தில் நான் செலவிட்ட 36 ஆண்டுக்காலமும் கழிந்தது என்று கூட ஒரு வகையில் என்னால் சொல்லி விட முடியும்; தொடர்ந்து….ஒத்த மனப்போக்கு கொண்ட சக பேராசிரியர்கள் இப்போதும் அதைச் சொல்லியே வருகிறார்கள்.
பல எதிர்ப்புக்களையும் விமரிசனங்களையும் மீறித்தான் எங்களாலும் அதைச் செய்ய முடிந்தது. செய்தோம்..செய்கிறோம்….
எல்லா இடங்களையும் போல ஒரு சில விதி விலக்குகள் இங்கும் இருக்கலாம்…,
நீங்கள் முன் குறிப்பிட்டது போலவே நாங்கள் நேர்மையான அர்ப்பணிப்போடு விதைத்தவை ஒரு சில உள்ளங்களிலாவது மாற்றங்களைக் கொணர்ந்திருக்கும்தானே?
அன்புடன்,
எம்.ஏ.சுசீலா
அன்புள்ள சுசீலா
நான் எந்த அமைப்பையும் எந்தத் தனிப்பட்ட சாதியையும் குறிப்பிட்டுக் குறைசொல்லவில்லை. நாம் கொண்டுள்ள பொதுவான மனநிலைகளைப்பற்றி மட்டுமே பேசினேன். அதன் ஒரு பகுதியாகவே நான் என் அனுபவத்தைச் சொல்ல நேர்ந்தது.
மதுரை பாத்திமாக் கல்லூரி பெண்களைப்பற்றி என்ன நினைக்கிறதென்பதை அனேகமாக அனைவருமே அறிவார்கள். நம்மவர் அந்தக்கல்லூரிக்குப் பெண்களைப் படிக்க அனுப்புவதே அந்த அதிதூய்மைவாத நோக்குக்காகத்தான்
ஆனால் சமகாலச் சிந்தனை அலைகள் காற்றில் உள்ள வாசனை போல. அவற்றை மூடித் தடுக்கமுடியாது. மூச்சாக வந்துசேர்ந்தே ஆகும். நீங்கள் அதில் பெரும்பணி ஆற்றியிருக்கிறீர்கள் என அறிவேன்.
குறைந்தபட்சம் தமிழறிஞர்களாவது
சிறைகாக்கும் காப்பு எ[வ]ன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
என்ற குறளைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும் இல்லையா?
ஜெ