இஸ்லாம் – கடிதம்

முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றும் கொலை செய்வது மதச்சடங்கு என்றும் கூறி உள்ளீர்கள்.[கௌரவக்கொலை ]இஸ்லாமிய அடிப்படை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இஸ்லாமியனாக வாழ்வது எப்படி என்று தெரியுமா? இன்று முஸ்லிம் என்ற போர்வையில் வாழும் சினிமாக் கூத்தாடிகள் “கான்” களையும், தாடி வைத்துக்கொண்டு குல்லா போட்டுக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடி அலைபவர்களைத்தான் உங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும் ….

மனிதனாகப் பிறந்த, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுகொண்ட யாவரும் சக மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதுதான் இஸ்லாமிய அடிப்படை சட்டம். இதைப் பின்பற்றாதவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகளே அவர்களை வேண்டுமானால் தீவிரவாதிகள் என்று விளித்துக் கொள்ளுங்கள். இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அழைத்து உங்களைத் தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எழுத்துகளை ரசித்து வாசிப்பவன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இஸ்லாம் மார்க்கம் பற்றி சுய விருப்பத்தோடு ஆராய்ந்து மறுமையில் வெற்றி பெற உங்களை இஸ்லாத்திற்கு அழைத்தவனாக விடைபெறுகிறேன் …

அஸ்ஸலாமு அல்லைக்கும் ( ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக )

அப்துல் காதர்

அன்புள்ள அப்துல்காதர் அவர்களுக்கு,

தங்கள் கடிதத்துக்கு நன்றி

நான் இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதநோக்குள்ளவர்கள் என்றோ, இஸ்லாம் வன்முறை வழி என்றோ சொல்லவில்லை. நேர்மாறாகவே சொல்லி வந்திருக்கிறேன். ஆகவேதான் நாகர்கோயில் கொலையை நான் கௌரவக்கொலை பட்டியலில் சேர்க்கவில்லை என்பதுதான் என்னுடைய அந்த விளக்கம்

சாதிசார்ந்த கௌரவக்கொலைகளின் பட்டியலில் நாகர்கோயில் இளைஞர் கொல்லப்பட்டதை ஏன் சேர்க்கவில்லை என்றால் அது இந்திய இஸ்லாமியரின் மனநிலையின் வெளிப்பாடல்ல என்பதனால்தான். , இங்கே புகுத்தப்படும் தீவிரவாதத்தின் கொள்கை மட்டுமே. அதுவே நான் சொன்னது

இஸ்லாமியத்தீவிரவாதிகள் என ஏன் சொல்லப்படுகிறது என்றால் அவர்கள் அப்படி தங்களைச் சொல்லிக்கொள்வதனால். அவர்கள் குர்ஆனைஅடிப்படையாகக் கொண்டு அவ்வாறு செயல்படுவதாக விளக்குவதனால். அது இஸ்லாமுக்கும் குர்ஆனுக்கும் எவ்வளவு பெரிய இழுக்கை உலகளாவ உருவாக்கிக்கொடுக்கிறது என உணரவேண்டியவர்கள், அதை முன்வைக்கவேண்டியவர்கள் ஈமான் கொண்டவர்கள்

ஆனால் இன்று தமிழகத்தில் ஒவ்வொருநாளும் தொலைக்காட்சிகள் வழியாக உக்கிரமான தீவிரவாத நோக்கே இஸ்லாம் என்ற அளவில் பிரச்சாரம் நிகழ்கிறது. இஸ்லாமியருக்கு அப்படி அல்ல என்று தெரியும். இஸ்லாமியரல்லாதவர் அதை எளிதில் நம்பிவிடுகிறார்கள். அதைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டியவர்களும் தீன் வழி நடப்பவர்களே.

ஆனால் அப்படி ஒரு வலுவான குரல் இங்கே இன்றில்லை என்பதே உண்மை. உண்மையில் அப்படிப்பட்ட குரலாக உங்கள் கடிதம் இருப்பது நிறைவளிக்கிறது. நாகர்கோயில் கொலையில்கூட சம்பிரதாயமாகக்கூட ஒரு கண்டனம் இஸ்லாமியர் தரப்பில் இருந்து வரவில்லை என்கிறார்கள். நீங்களும் எழுதவில்லை.

இஸ்லாம் அமைதியின் சமத்துவத்தின் சாராம்சம் உள்ள மதம் என நான் அறிவேன். இஸ்லாமையும் தீவிரவாதத்தையும் பிரித்துநோக்கும் பார்வையை வலியுறுத்துவதாக நான் எப்போதும் செயல்பட்டு வருகிறேன். நீங்களும் அவ்வண்ணமே செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதத் தரப்பால் நான் தொடர்ந்து பலமுறை மிரட்டப்பட்டிருக்கிறேன். தொடர்ச்சியாக வசைபாடவும் படுகிறேன். அது என் நிலைப்பாட்டை மேலும் உறுதியாக்கவே செய்கிறது. காரணம் நான் உண்மையான இஸ்லாமை முழுமையாக நம்பி வாழ்ந்த,வாழும் பல பெரியோர்களை அறிவேன். தேடிச்சென்று சந்தித்திருக்கிறேன்.

உங்கள் அழைப்பை நான் எனக்களிக்கப்பட்ட கௌரவமாகவே எடுத்துக்கொள்வேன். இஸ்லாமை என்றும் பக்தியுடன் கற்று வரக்கூடியவன் நான். அழைப்பு எனக்குள்ளும் எழும் என்றால் அவ்வாறே ஆகட்டும்

ஜெ

முந்தைய கட்டுரைஉலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்
அடுத்த கட்டுரைஆசீவகம்