உலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்

நண்பர்களே!

உலக அளவிலான செவ்வியல் காலகட்டச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த, எனக்குப் பிடித்த ஒரு சிறுகதையினை இங்கே பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றியுடன் தொடர்கிறேன்.

இந்த செவ்வியல் காலகட்டம் என்பதனை 1800-களின் பின்பாதி முதல் 1900-களின் முதல் இருபது வருடங்கள் எனக் கொண்டே வாசித்தேன். ஏராளமான சிறுகதைகள், பெரும் பட்டியல் இட முடியுமளவு எழுத்தாளர்கள். ஆனால், ஒரு சிறுகதையைக் கொண்டு பேச வேண்டுமென்பதால் ஒரு எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. இறுதிகட்டத் தேர்வில் மாப்பஸானும், செகாவும் கடும் போட்டியிட்டார்கள். அதில் தன் வெளிப்பாட்டு முறை காரணமாக மாப்பஸான் என்னை ஆக்ரமித்துக் கொண்டார்.

ஹென்றி ரெனே கைய் டே மாப்பஸான் என்ற பெயருடைய மாப்பஸான் ஃப்ரான்சில் 1850-இல் பிறந்தவர். தனது 11ஆவது வயதில் பெற்றோர் பிரிந்ததன் காரணமாக, தனது தாயாருடன் ஃப்ரான்சின் நார்மண்டியில் வசிக்கலானார். சட்டப் படிப்பினை முடித்தபோதும் ராணுவ ஆசை காரணமாக அதில் இணைந்து ஃப்ரான்கோ-ப்ரஷ்யன் போரில் பங்கு பெற்றார். பின்னர் பாரிஸுக்குத் திரும்பி குடும்ப நண்பரான கஸ்தவ் ஃப்ளவுபர்ட் நடத்தி வந்த இலக்கிய வட்டத்தில் இணைந்தார். இங்குதான் அவருக்கு இவான் துர்கனேவ், ஹென்றி ஜேம்ஸ், எமிலி ஜோலா போன்ற எழுத்தாளர்களின் பரிச்சயம் ஏற்பட்டது.
இருபதுகளில் ஏற்பட்ட உடல் கோளாறுகள், போர் அனுபவங்கள், பெற்றோரின் பிரிவு முதலியன உருவாக்கிய அழுத்தங்கள் அவரது படைப்புகளில் வெளிப்பட்டன. ஒரு கதை சொல்லி என்னும் தளத்தில் இருந்த சிறுகதை ஆசிரியனை மேலே நகர்த்தியது மாப்பஸானின் சாதனை எனலாம்

.
சிறுகதை ஒரு சம்பவத்தை, சம்பவங்களின் கோர்வையைக் கொண்டு அமைக்கப்படுவதை மாப்பஸான் மாற்றினார். சம்பவங்களின் காரணிகளை, நிகழ்த்துபவனத் தூண்டும் மனநிலைகளை, மனநிலைகளை உருவாக்கும் சூழ்நிலைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு கூறுமுறையை மாப்பசான் உலக முழுவதுமுள்ள சிறுகதை எழுத்தாளர்களில் தனது பாதிப்பாக இன்றும் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

மனப்பிறழ்வு நிலையின் வெவ்வேறு பரிமாணங்களை தன் எழுத்துக்களில் கொண்டுவந்த மாப்பஸான் மனித மனம் செயல்படும் விதத்தை எவ்வித சார்புமின்றி சொன்னவர் எனும் வகையில் சிறப்பிடம் பெறுகிறார். 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை படைத்த மாப்பஸானின் சிறுகதைகளில் ஒன்றை இங்கு பேச முன்வைக்கிறேன்.
இங்கு முன்வைக்கப்படும் சிறுகதை தான் நேசித்த ஒரு பெண்ணை கொன்றுவிட்ட ஆணின் வாக்குமூலமாய் அமைந்திருக்கிறது.

இக்கதை என்னைக் கவர்ந்தமைக்குக் காரணங்கள்:

1. கதையின் அமைப்பு:

மிகச்சாதாரணமான ஒரு கேள்வி போலத் தொடங்கும் கதை இரண்டாவது நீளமான வரியிலேயே வாசகனை சிறு அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பெரும் சம்பவங்கள், எதிர்பாரா திருப்பங்கள், உணர்ச்சிகர மோதல்களின் உச்சகட்டங்கள் என்ற எதுவும் இக்கதையில் இல்லை. வர்ணனைகள், விவரிப்புகள், சித்தரிப்புகள் போன்ற மொழித்திறன் வெளிப்படும் இடங்களும் இக்கதையில் கையாளப்படவில்லை. இவ்வளவு ஏன், மூன்றே பக்கங்களில் முடியும் இக்கதையில் மொத்த கதாபாத்திரங்களே மூன்றுதான். அதில் ஒன்று குதிரை. கதாபாத்திரங்களில் எவருக்கும் பெயரும் இல்லை. ‘நான்’, ‘அவள்’ என்ற தன்னிலை படர்க்கை சுட்டல்கள் மட்டுமே.

பிரிவும் வெறுப்பும் ஏன் என்பதற்கான காரணங்களும் வாசகனின் யூகத்திற்கே விடப்படுகின்றன. வெறுமே ஒரு ஆணின் மனதில் பெண்மீது தோன்றும் வெறுப்பு மட்டுமே பேசப்படுகிறது. இப்படி சிறுகதைக்குரிய அம்சங்கள் பல இல்லாதிருப்பினும் இதை சிறுகதையாக்குவது எது?

தமிழினி வசந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இலக்கியப் படைப்புகளின் பொதுத்தன்மை குறித்து ஒன்று சொன்னார். “அனைத்து இலக்கியங்களுமே எதைப் பேசுகின்றன? மீண்டும் மீண்டும் ஓயாத மனித உறவுகளின் சிக்கல்களைத்தான். அதிலும் குறிப்பாக ஆணுக்கும். பெண்ணுக்குமான உறவின் நாடகத்தைதான். இதையே வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பின்னணிகளில் வாசிக்கிறோம்” என்றார், அவருக்கே உரிய பாணியில்.
இக்கதை ஆண் பெண் உறவின் நாடகத் தருணங்களில் ஒன்றை நம்முன் நிறுத்துவதன் மூலம் தன்னை படைப்பாக நிறுவிக்கொள்கிறது

2. கதையின் கூறுமுறை:

மாப்பஸானின் காலகட்டத்தைய பிற கதைகளில் பெரும்பாலும் ஒரு பண்பட்ட கதைசொல்லி வந்துவிடுவார். கதை சம்பவங்களிலிருந்து சற்று விலகி நிற்கும் கதைசொல்லி ஒரு லெளகீக விவேகத்துடன்தான் கதைகளை நமக்குச் சொல்லுவார். ஆனால் மாப்பஸான் படைப்புகளில் சம்பவங்களில் ஈடுபடுவோரே கதைசொல்லிகள். சம்பவங்கள் சரியோ, தவறோ – கதைசொல்லி அதன் முழுப் பரிமாணத்தையும் வாசகனுக்கு உணர்த்தி விடுகிறார். முடிவினை வாசகனுக்கு விட்டுவிடுகிறார். இடுக்குச் சந்து பெருஞ்சாலையில் திறப்பதுபோன்ற உணர்வினை படைப்பு தருகிறது. பெருஞ்சாலையில் செல்லவேண்டிய திசையை மாப்பஸான் வாசகனுக்கு விட்டுவிடுகிறார்.

இக்கதையில் முதல் வரியில் கதைசொல்லி கேட்கிறான் “நான் பைத்தியக்காரனா?” அடுத்த இடத்தில் “நான் பொறாமை கொண்டவனா?” எனக் கேட்கிறான். இக்கேள்விகள் கதை முழுவதும் அவனை சுழற்றித் தாக்குவதைக் காணலாம்.
தனது காதலுக்குரிய பெண் தன்னால் மகிழ்ந்திருக்கும்போது அவளைக் குறித்த அவனது விவரிப்புகள் மிக சுவாரசியமானவை. ஆனால், அவள் அவனிடம் மாறுபட்டு விலகும்போது அவள் குறித்த அவனது சித்தரிப்புகள் வெகு நுட்பமாக அவனது மனப் பேதலிப்பைக் காட்டுகின்றன. மாப்பஸான் தனது கூறுமுறையின் சிறப்பினை இங்கே வைக்கிறார்.

ஒவ்வொரு முறையும் பெண்ணின் சிறப்பை காதலுடன் தொடங்கும் கதைசொல்லி அவள் மீதான வெறுப்பையும் அசூயையும் காட்டித்தான் சித்தரிப்பை முடிக்கிறான். மறுபடி, மறுபடி அவன் சொல்வது ஒரு நுட்பமான இடம். அவன் அப்பெண்ணை மட்டும் வெறுக்கவில்லை. அவன் பெண்களையே வெறுத்துப் பேசுகிறான். அவளும் “நீ எரிச்சலூட்டுகிறாய்” என்று சொல்லவில்லை, “ஆண்கள் என்னை வெறுப்படையச் செய்கிறார்கள்” என்றுதான் பேசுகிறாள். அவளது அழகினை, அதன் தெய்வீகத்தைப் புகழும் அவன் அந்த அழகினுள் உறையும் பெண்ணை வெறுப்பதாகச் சொல்கிறான்.

அவளைக் கொல்லும் இடத்திலும் அவள் அவனை அடிக்க வருவதால் சுட்டுவிடுகிறானே தவிர அவன் கொலை எல்லாம் செய்யக்கூடியவனா என்ன? மனப்பேதலிப்பின் மர்மமான விசித்திரங்கள் எண்ணிறந்தவை. சட்டென அவற்றிலொன்றின் மீது வெளிச்சம் வீசும் மாப்பஸான் வாசகனில் நிகழ்த்தும் அற்புதம் இதுதான் – பத்து நிமிடங்களில் இக்கதையினை வாசகன் வாசித்து விடலாம். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வேறு எதையும் வாசிக்காமல் யோசிக்க வேண்டியிருக்கிறது.

3. படைப்பு உருவாக்கும் எண்ணத்தூண்டுதல்கள்:

தன்னிடமிருந்து வெறுப்பில் ஒதுங்கும் அவளைத் தொடர்ந்து சென்று அவளது ரகசியத்தை அறிய முயலும் அவன் அவளது மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல்தான் அவ்வாறாகிறான். அவனை சமநிலை இழக்கச் செய்வது அவளது வெறுப்பல்ல. அவனற்று அவளடையும் மகிழ்ச்சியே.

பெண்ணின் வெறுப்பை, சோகத்தை, ஆத்திரத்தை தாங்க முடிந்த ஆணால் அவளது மகிழ்ச்சியை மட்டும் தாங்க முடியாததன் மர்மம்தான் என்ன?

தன்னியல்பில் மகிழ்ந்திருக்கும் பெண் ஆணை கூசிப்போகச் செய்கிறாளா என்ன? கன்னிமையின் தொட்டிலில் இப்படி தன்னியல்பான மகிழ்வில் இருக்கும் பெண்ணைத்தானே ஆண்கள் வெல்ல நினைப்பதும்!

தன்னால் பெண் மகிழும்போது அல்லது அவ்வாறாக நினைத்து அந்த மகிழ்வை ஏற்கும் ஆண் தானற்ற மகிழ்வை அப்பெண் அடையும்போது வெறி கொள்வது அவனது இயல்பின் கோளாறா என்ன?

ஆண் மகிழ்ச்சி கொள்ளும் எத்தனையோ காரணங்களில் பெண்ணும் ஒன்று என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் பெண் மகிழ்ச்சியடையும் காரணங்களில் ஆணும் ஒன்று என்பது ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லையோ?
தானற்ற மகிழ்வினை பெண் அடைவதை ஏற்க முடியாத ஆணின் மன விசித்திரம், பெண்ணிடம் அந்த ரகசியத்தை தேடியபடியே இருக்கிறதா? தனது சுபாவமாகக் கொண்டிருப்பதால் பெண்ணும் ஆணறிய முடியா இடங்களுக்கு அந்த ரகசியத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறாளா?

ஓயாத இந்தப் போராட்டம்தான் இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணா?

நண்பர்களே! முடிவின்றித் தொடரும் இந்த விளையாட்டின் உறுப்பினர்கள் நாமும்தான் என்றாலும் இங்கு நமக்குக் கிடைத்திருக்கும் இடம் பார்வையாளனுடையது. அவ்விடத்தைக் கொடுத்த மாப்பஸான் முதலிய படைப்பாளிகளுக்கும், பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் நன்றி!

ஏற்காடு

முந்தைய கட்டுரைஅறிபவனின் அகம்-சில கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇஸ்லாம் – கடிதம்