சமணம் ஒரு கடிதம்

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,

இங்கு நாங்கள் நலமே. தாங்களும் ,குடும்பத்தினரும் நலம்தானே? தங்களின் அன்பான கடிதத்திற்கு நன்றி. சமீபத்தில் நான் இந்தியாவிற்கு வந்திருந்தேன். தங்களின் கடிதத்தால் கவரப்பட்டு  மேல்சித்தாமூர் கோவிலுக்கு  சென்று தீர்த்தங்கரர்களை  தரிசிக்கும் பேறு பெற்றேன். பல்வேறு ஜைன திருக்கோயில்களுக்கு வழக்கமாக சென்று வழிபாடு செய்தாலும், நினைவு தெரிந்து இப்போதுதான் சித்தாமூர் சென்றேன்.
.
என்னை பற்றி:-அடிப்படையில் நான் வடஆர்க்காடு மாவட்டம் பெரியகொழப்பலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவன். ஆனால் என் தந்தை ஒரு தமிழாசிரியராய் ஆர்க்காடு என்ற ஊரில் பணியாற்றியதால், அங்கே நிரந்தரமாய் தங்கிவிட்டோம்.பெற்றோர் மற்றும் சகோதரிகள் இங்கு வசிக்கின்றனர்.    நம் நாட்டில்  கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டில் பல்வேறு Chemical/Petrochemical industries ல் பணியாற்றிவிட்டு, கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிங்கபூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். குழந்தைகள் இங்கேயே படிக்கிறார்கள்.

என் மனைவி பொன்னூர் என்ற ஊரை சேர்ந்தவள். பல்வேறு ஜைன சமய நூல்களை தந்த குந்தகுந்தாச்சர்யாரின் பாதங்கள் பட்ட மலை இன்றும் இங்கு வழிபாட்டுக்கு உள்ளது. பொன்னூர் கிராமத்திலும் அழகிய கோயில் உள்ளது. [திருக்குறளாசிரியர் குந்தகுந்தர் என்று ஜைனர்கள் நம்புகிறார்கள் (விவாதத்திற்கு ஂஉரியதாய் இருந்தாலும்) அவருக்கான ஒரு சிலையை இக்கோயிலில் வைத்திருக்கிறார்கள்]  நித்ய பூஜை நல்ல முறையில் நடந்து வருகிறது. இவ்வூரில் புலவர் திரு. தன்யகுமார் (76), என் மாமனார் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டுக்காரர்; உறவினர். இவர் “ஸ்ருத கேவலி” என்ற மாத இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினர்; சமய கட்டுரைகளை எழுதும் ஓய்வு பெற்ற ஆசிரிய பெருமகன்.  ஊருக்கு செல்லும்போது அவரிடம் பேசுவது வழக்கம்.

நானும் என் தந்தையும் ,இம்முறை அவரிடம் பேசும்போது,  தங்களை பற்றியும், தாங்கள் சமண மதத்தை பற்றி நூல் எழுத எண்ணம் உள்ளதையும், சிந்தாமணி, மற்றும் “திண்ணை” இணைய தள கட்டுரைகள் பற்றி உரையாடினோம். . அப்போது அவர், தங்களுக்கு “ஸ்ருத கேவலி” இதழை மாத மாதம் தங்களுக்கு அவரின் அன்பளிப்பாக அனுப்ப விரும்பினார். அவரிடம் இணையதள வசதி இல்லை. தாங்கள் விரும்பினால் ஜைன மத தத்துவ  -தமிழ் மொழி பெயர்ப்பு நூல்களையும் அனுப்புவதாகவும் கூறினார். தங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு ஜைன தத்துவம் பற்றி மேலும் அறிய அது வுதவியாக இருக்க கூடும் என்றார்.
எனவே தாங்கள் விரும்பினால், தங்களின் வீட்டு முகவரியை எனக்கோ அல்லது திரு தன்யகுமார் அவர்களுக்கோ தெரியபடுத்தலாம். மின்னஞ்சலில் அனுப்பினால், நான் விரைவில் தெரியபடுத்திவிடுகிறேன்.
 
அவரின் முகவரி:
புலவர் S. தன்யகுமார்,
கிழக்கு ஜைன வீதி
பொன்னூர். PIN: 604 408
வந்தவாசி தாலுக்கா
திருவண்ணாமலை மாவட்டம்.

தமிழ் ஜைன சமய இதழ்கள்  பற்றி:
தமிழ் ஜைனர்களுக்காக தமிழில் நான்கு  இதழ்கள் வெளி வருகின்றன:
அவை 1) முக்குடை (30 + வருடங்களுக்கு மேலாக வரும் சமூக சமய மாத இதழ்)
2) அருகன் தத்துவம் & 3) ஸ்ருத கேவலி  ( இவை இரண்டும் 10+ ஆண்டுகளாக வரும் சமய இதழ்கள்)  4) ஸ்ரீதவளம் (திருமலை -ஸ்ரீ தவளகீர்த்தி சுவாமிகள் மடத்தில் இருந்து வரும் இதழ் – ஒரு ஆண்டாக வருகிறது).

அன்புடன்,

த.வர்த்தமானன்

[email protected]

 

 

அன்புள்ள வர்த்தமானன்

மேல் சித்தமூர் சென்றீர்கள் என்றறிந்து மகிழ்ச்சி. நான் என் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி கணிசமானவர்கள் அங்கே சென்றதாகச் சொன்னார்கள். பலருக்கு அங்கே ஓர் அற்புதமான கோயில் இருப்பதே தெரியாது. நீங்கள் ஒரு முறை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அப்பாண்டநாதர் கோயிலுக்கும் செல்ல வேண்டும். மிகத்தொன்மையான பார்ஸ்வநாதர் ஆலயம் அது.

சுருதகேவலி முக்குடை ஆகிய இரு இதழ்களையும் நான் நெடுங்காலமாகவே வாசிக்கிறேன். கொஞ்ச்நாள் சுருதகேவலி ஓர் அன்பரால் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இரு இதழ்களுமே சமணத்தை பற்றி தெரிந்து கொள்ள மிக முக்கியமான இதழ்கள்.

நான் முன்பொருமுறை வடலூர் சென்று அங்கிருந்து குந்தகுந்தர் ஆலயம் வரை சென்றிருக்கிறேன். ஈரோடு நண்பர்களுடன் மீண்டும் ஒருமுறை செல்லவேண்டும் என்றிருக்கிறேன்

[ராமலிங்க வள்ளலாரின் ஆளுமை, அவரது தரிசனம் ஆகியவற்றில் உள்ல சமண பாதிப்பு மிக முக்கியமான ஒன்ரு. சமணத்துக்கும் சைவத்துக்கும் ஒரு கருத்துப் போர் தமிழில் நடந்தது. சைவம் சமணத்தின் பல அம்சங்களை உள்ளிழுத்துக்கொண்டு புதிய வடிவம் எடுத்தது. குறிப்பாக சைவ உணவு போன்ற வழக்கங்கள். சைவ சித்தாந்தத்திலும் சமண பாதிப்பு அதிகம். வள்ளலார் சைவத்தில் இருந்து அதன் ஆழத்தில் உள்ள சம்ண கோட்பாடைந் எருங்கிச் செல்ல முயன்றார். அதுவே அவரது சோதி தரிசனம். அதை முன்வைத்து தமிழ் சித்தர் மரபை அவர் நிராகரிக்கத்தலைப்பட்டபோது அவரது முதன்மைச் சீடர்களான தொழுவூர் வேலாயுத முதலியார் போன்ரவர்களே அவரை கைவிட்டார்கள்]

தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்கள் சமண ஆலயங்களாக இருந்தவை. உதாரணமாக நாகராஜா கோயில் [நாகர்கோயில்]. அது சமணர்களால் கைவிடப்பட்டு நெடுங்காலமானபின் இந்துகோயிலாக ஆக்கப்படது. அங்குள்ள அனந்தகிருஷ்னன் சிலை என்பது பார்ஸ்வநாதர்தான். அதேபோல பழனி கூட சமணக் கோயிலாக இருக்கலாம். ஆண்டிக்கோலத்தில் முருகன் என்ற கருத்தே சமணத்தில் இருந்து வந்ததுதான். பழனிக்கு சொல்லபப்டும் ஆவினன்குடி என்ற பெயர் கீழே உள்ள இன்னொரு முருகன் கோயிலுக்குச் சொந்தமானது. முருகன் அங்கே சமணத்துறவிக் கொலத்தில்தான் இருக்கிறார்

 
சமணர்களால் உருவாக்கபப்ட்டவையே எல்லா பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும். வள்ளுவரும் சமணரே– அல்லது சமணர்களுக்கு முன்னோடியான ஆசீவக மதத்தைச் சேர்ந்தவர். சங்க இலக்கியங்களிலேயே ஆசீகவக கருத்துக்கள்  ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் சம்ணத்தின் தொன்மை வீச்சு ஆகியவை இன்னும் முழுதாக ஆராயபப்டவில்லை

முந்தைய கட்டுரைநூல் வெளீயீட்டு விழா
அடுத்த கட்டுரைபாலகுமாரன் கடிதங்கள்