கௌரவக்கொலை

அன்புள்ள ஜெமோ

நான் நாடகக்காதல் பற்றி நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியிலும் முழுமையாக உடன்படுகிறேன். ஆனால் ஒரே ஒரு விஷயம் பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

நாகர்கோயில் அருகே இடலாக்குடி பகுதியைச்சேர்ந்த ரமேஷ்குமார் என்ற நாடார்சாதி இளைஞர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் இஸ்லாமியப்பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அந்தப்பெண் இஸ்லாமாகவே நீடித்தார். ஆனால் ரமேஷ்குமாரும் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்று இரண்டு இஸ்லாமிய அமைப்புகள் வீடுதேடிவந்து வெளிப்படையாகவே மிரட்டின. ரமேஷ்குமார் அவர்களிடம் கெஞ்சியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தலைமறைவாகியிருக்கிறார்.

ஒருவருடம் கழித்து அவர்கள் அவரைக் கண்டுபிடித்தனர். நாகர்கோயிலில் இடலாக்குடி அருகே நடுத்தெருவில் வைத்து சூழ்ந்து பிடித்து கழுத்தை அறுத்துக் கொன்றுபோட்டார்கள். கொன்றவர்கள் ஏன் கொன்றோம் எனத் தெளிவாக போலீசாரிடம் வாக்குமூலமும் கொடுத்தார்கள். கொலையாளிகள் இருபது வயதை ஒட்டிய பையன்கள். கைதாகி பெருந்தொகையைப் பிணையாகக் கொடுத்து வெளிவந்துவிட்டார்கள். இனி எப்போது வழக்கு முடியும், என்ன தண்டனை கிடைக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.

இன்று திவ்யா விவகாரத்தில் தமிழக முற்போக்கு சிந்தனையாளர்கள் எல்லாரும் குமுறிக்கொந்தளிக்கிறார்கள். ரமேஷ்குமாருக்காக பெற்றதாய்தந்தை மட்டும்தான் கண்ணீர்வடித்தார்கள். அந்தக்கொலை தவறு என்று ஒரு வார்த்தை சொல்ல தமிழகத்தில் இந்துக்களிலும் ஆளில்லை இஸ்லாமியரிலும் ஆளில்லை. ஏன் ,குமரிமாவட்டத்தில் சென்ற ஒரு வருடத்தில் நிகழ்ந்த கௌரவக்கொலைகளைப்பற்றி நீங்கள் பட்டியல்போடும்போதுகூட அவர்களைச் சேர்க்கவில்லை.

அவ்வளவுதான். உங்கள் மனசாட்சிக்கு

சுவாமி

அன்புள்ள சுவாமி,

நான் பேசிக்கொண்டிருந்தது இந்து சமூகத்தின் சாதியப்போக்கு பற்றி. இஸ்லாமிய தீவிரவாதிகள் கௌரவக்கொலைகளை மதச்சடங்குபோல ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அது மதநம்பிக்கையின் ஒரு பகுதியாகவே அவர்களால் கருதப்படுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததுதான்

ஜெ

முந்தைய கட்டுரைநாடகக்காதல்
அடுத்த கட்டுரைஏற்காடு – சித்தார்த் வெங்கடேசன்