கன்னிநிலம் கடிதங்கள்

வணக்கம் குரு.
    ஒவ்வொரு காலையிலும், பதினாறு நாட்கள் வாசகர்களை திணறடித்துவிட்டீர்கள்.!!
    நேர்மையான, கடமையுணர்வுள்ள ராணுவ வீரனின் போர்க்கள காட்சியுடன் தொடங்கி, ஆன்மீகமான, ஒப்பற்ற காதலில் நுழைந்து, அதன் பரிசாக உட்சபட்ச தண்டனைகளை அனுபவித்து, மீண்டும் காதலின் முடிவிலியை நோக்கி செல்கிறது நெல்லையப்பனின் பாத்திரம்.,
    அவன் முதல் பார்வையிலேயே “உலகின் மகத்தான அதிஷ்டசாலிகளில் நானும் ஒருவன்” என்று உணரும் தருணத்திலேயே காதல் தொடங்கிவிடுவதாக எண்ணுகிறேன், இல்லையென்றால் ஒரு பணயக்கைதிடம் ஏன் பிறகு இத்தனை பரிவு காட்ட வேண்டும்? காதலுடன் சீண்ட வேண்டும்?
    அத்தியாயம் நான்கில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் மிகவும் உற்றுநோக்க வேண்டியவை.
“1949 லேயே நாங்கள் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டோம். 1972 முதல் இந்தியாவின் மாநிலம் நாங்கள். ஆனால் நாற்பதுவருடம் போராடிய பிறகு 1992ல் தான் மணிப்புரி மொழியை மட்டுமாவது தேசியமொழியாக அங்கீகரிக்கவைக்க எங்களால் முடிந்தது…. இன்னும் இருக்கின்றன எண்பத்தெட்டு மொழிகள் இங்கே…. நீங்கள் எங்களைப் புரிந்துகொள்ள இன்னும் நூற்றைம்பது வருடம் ஆகும். நாங்கள் சும்மா இருந்தால் எங்களையும் ஹிந்தி பேச வைப்பீர்கள்”.
நம் அரசின் தவறான அணுகுமுறைகளால் தான் இம்மாதிரியான இனக்குழு போராட்டங்களும், வன்முறைகளும் மானுட பேரழிவை ஏற்படுத்த காரணம்,ஜ்வாலா சொல்வது போல் புரிந்துகொள்ள இன்னும் நூற்றிஐம்பது வருடம் கூட ஆகலாம்,அதற்குள் அவ்வினக்குழுக்கள் இருந்ததற்க்கான சுவடுகளை தொல்லியலார்வளர்கள் தேடிகொண்டிருப்பார்கள்.!!
 
அனல் காற்றை மிஞ்சிய காதல் (கவிதை) வரிகள்
காலம் என்பது இன்ப துன்பங்களுக்குடையேயான ஊசலா? இன்பம் மட்டுமேயான உச்சத்தில் காலமே இல்லையா? காலமன்பது தனியுடல் ஒன்று கொள்ளும் பதற்றம்தானா? இணையும் உடல்களுக்கு காலமே இல்லையா”?
”இது தேக்குமரம். இந்த மாதம்தான் பூக்கவேண்டும். பூக்காமலேயே நிற்கிறது”
“நீ அதை தொட்டால்போதும், அப்படியே பூத்துவிடும்”

    எதைவிடுவது? அனைத்தும் கவிதையான வரிகள்.!
இலக்கியம் வாசகனை எங்கெல்லாம் அழைத்து செல்லும் என்றால்,மதூக வனத்திற்க்கே என சொல்ல தோன்றுகிறது.!
 
        ஒரு வலியை மறக்க மற்றொரு வலியை நாமாக உருவாக்க வேண்டும் அதாவது நம் சிந்தையை முற்றாக வேறொரு நிகழ்வில் முடக்கிவிட வேண்டும். இது ஒரு தியான பயிற்சி போல் தான் அல்லவா?
        ஆனாலும் சில கருத்துக்களில் ஐயம் ஏற்படுகிறது. அனல் காற்றில் ஒரு வரியுண்டு “நமக்கு பிடித்தமானவர்களுக்கு நாமளிக்கும் மிகச்சிறந்த பரிசு, அவர்கள் விரும்பும் நடிப்பையே” என. கனவுகளும், தீவிர கடமையுணர்வும் நிறைந்த ஒரு ராணுவவீரன் எவ்வாறு காதலால் இவ்வளவு அழக்கழிக்கப்படுவான்? பதவி,கடமை,நட்பு,குடும்பம்,பாசம்,தாய்மண் இவையனைத்தையும்விட்டு பெண்ணுறவே மேல் என்று செல்லும் அளவிற்க்கு முதிர்ச்சியில்லாமல் தன் நாயகிக்கு நடிப்பை வழங்க கூடியவனா நாயகன்?
 
ஏன் இப்படியொரு சிறந்த படைப்பை தாமதமாக வெளியிட்டுள்ளீர்கள்? ஏதும் தனிப்பட்ட காரணம் உண்டா? உங்களுக்கு நிறைவளிக்கவில்லையா?
பணிவன்புடன் மகிழவன்.,

 

 

அன்புள்ள மகிழவன்,

கன்னிநிலம் மிக ரொமான்டிக் ஆனது. ஒரு ரொமான்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல. ஆகவே ஒரு தயக்கம்– ஓர் அந்தரங்கம் வெளியே தெரிவது போல.

காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால் தான் அது கதை

அப்படிப்பட்ட உலக நிகழ்வுகளை நாம் மீண்டும் மீண்டும் காணலாம். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் இதேபோல நாம் சந்தேகப்பட்டுக்கொன்டிருப்போம்.

ஜெயமோகன்

 

 

உயர்திரு ஜெ மோ சார் வணக்கம்.
 
கன்னிநிலம் குறுநாவல் முழுதும் படித்தேன். மிக மிக அற்புதம்.
முதல் இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்கள் படித்தபொழுது எதோ ஜனரஞ்சக கதை எழுதும் எழுத்தாரின் கதையை படிப்பது போல உணர்ந்தேன். பிறகு போக போக கதை தீவிரமான அனுபவத்தை வழங்க ஆரம்பித்துவிட்டது.அட்டகாசம்.
கிளி சொன்னகதையில் இயல்பு வாதத்தை சொன்னீர்கள்,கன்னி நிலத்தில் கற்ப்பனா வாதத்தை சொல்லியுள்ளீர்கள். அடுத்து கதையில்   மீ எதார்த்தவாதம் பற்றி  சொல்லப்போகிறீர்களா?இதை எல்லாம் ”நவீன தமிழிலக்கிய அறிமுகம்” என்ற தங்களின் நூல் வாயிலாக தெரிந்து கொண்டேன். நன்றி.
கன்னி நிலம் குறு நாவல் ஒரு அருமையான திரைப்படம் எடுக்க சாத்தியமுள்ள கதை என்பது என் எண்ணம்.  மணி ரத்னம் முயற்சி  செய்யலாம்.
பணிவுடன்
பெருமாள்
கரூர்

அன்புள்ள பெருமாள்

நன்றி. கன்னிநிலம் சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. அதற்கு கட்சிகள் துணை, அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைவிவசாயிகள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி