சுஜாதா, இருவம்புகள்

சுஜாதா அறிமுகம்

உயிர்மை சுஜாதா அஞ்சலி மலரில் மாலன் எழுதிய அஞ்சலிக்குறிப்பில் மாலனின் வழக்கமான புகை தவறாமல் வெளிப்படுகிறது. சுஜாதாவை இலக்கியவாதியாக கருதாமல் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பார்த்துக் கொண்டவர்கள், சுஜாதாவின் படைப்புகளை பதிப்பித்த மனுஷயபுத்திரனை எழுத்து வியாபாரி என்று அழைத்தவர்கள் [அனைவரும் ஒருவரா என்ன?] இப்போது சுஜாதாவை ஒரு மாபெரும் இலக்கியவாதி என்று சொல்லி அஞ்சலிக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். எழுதிச் சாதிக்காத்தை சுஜாதா மரணம் மூலம் சாதித்துவிட்டாராம். மாலன் சொல்கிறார்.

இலக்கிய வாசகன் ஆர்வத்துடன் கேட்கக் கூடும் யார் அவர்கள் என்று. நானும் அதையே கேட்க விரும்புகிறேன். யார் அவர்கள்?

உயிர்மை இதழ் சுஜாதாவை கரையின்றி புகழ்ந்திருக்கிரது. அது இயல்பு, அவ்விதழின் பின்புல வலிமையாக இருந்தவர் அவர். வைரமுத்து கனிமொழி உள்பட பிரபலங்கள் புகழ்ந்திருக்கிறார்கள். காரணம் அவர் இன்னொரு பிரபலம். நான் உட்பட சில இலக்கியவாதிகள் புகழ்ந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் எழுதவரும்போதே சுஜாதா பெயரைச் சொல்லிக் கொண்டுதான் வந்தோம்.

சுஜாதாவை இலக்கியவாதியாக அங்கீகரிக்காதவர்கள் பலர் உண்டு. அவர்களில் முக்கியமான படைப்பாளிகள் உண்டு, நாஞ்சில்நாடனைப் போல. விமரிசகர்கள் உண்டு வெங்கட் சாமிநாதன்,வேதசகாய குமார் போல. பெரும்பாலான சிற்றிதழ்களுக்கு அவர் மீது கடும் விமரிசனம் கலந்த நோக்கே உள்ளது. அதற்கான நியாயங்கள் அவர்களுக்கு உள்ளன. அத்தகைய வலுவான தரப்புகளால் தான் இலக்கியம் தன் பன்மைத்தன்மையை உருவாக்கிக் கொள்கிறது, வளர்கிறது. அவர்களுடன் நாம் விவாதிக்கலாம். அவரக்ளை நிராகரிக்கவும்ச் எய்யலாம்

நான் வாசித்தவரை உயிர்மை தவிர எல்லா சிற்றிதழ்களும் அவரது அஞ்சலியிலும் கறாரான மதிப்பீட்டை முன்வைத்து விமரிசித்த பின்னர்தான் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. எந்த இலக்கியவாதியும் அவருக்கு கூட்டம்போட்டதாக தெரியவில்லை– கூட்டம் போடுவது அவசியம் என்றே எண்ணுகிறேன். எனக்கு இப்போதுள்ள பிரச்சினைகள் இல்லையென்றால் நானே கூட்டம் ஏற்பாடு செய்திருப்பேன்.

அப்படியானால் மாலன் என்ன சொல்கிறார்? ஒன்றுமில்லை, அவரது புகையை வெளியே விடுகிறார். நெடுங்காமலமாக இப்படி புகைந்து கொண்டிருக்கிறார்.

மாலனின் பிரச்சினை என்ன? அவர் யார் என்று அவருக்கு தெரியவில்லை, அதுதான். இதழாளரா? அங்கும் ஒன்றும் சாதிக்கவில்லை. சிறுகதையாளரா? ஐயோபாவம். சிற்றிதழ்? சொல்வதற்கில்லை. எல்லா வணிக இதழ்களிலும் எல்லாவகையிலும் எழுதிவிட்டார். பேரவில்லை. ஆக குழப்பம் மிச்சம். கொஞ்சநாள் இலக்கியவாதியாக வணிக எழுத்தாளர்களைக் காய்ந்தார். பின்னர் வணிக எழுத்தாளராக இலக்கியவாதிகளைக் காய்ந்தார். பிறகு இரண்டுமிலலமல் இருதரப்பையும் காய்ந்தார். இப்போது மீண்டும் சுஜாதாபக்கம் சாய்ந்து இலக்கியவாதிகளைக் காய்கிறார்.

கலாப்ரியாவின் கவிதை இது. ‘புகைபோக்கி வழியாக வீட்டுக்குள் வந்துவிட்ட பச்சோந்திக்கு என்ன நிறம் மாற்றிக் கொள்வது என்று தெரியவில்லை!’

**

உயிர்மை இதழில் சாரு நிவேதிதா எடுத்துக் கொடுத்திருக்கும் சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கத்து வரிகளை வைத்து சில விசாரிப்புகள். ‘அகிலன் நினைவுப்பரிசு பெற்ற இளம் எழுத்தாளர் பரிசு கிடைத்ததும் நிலைகுலைந்து தமிழில் ஜெ.ஜே.சிலகுறிப்புகள் தவிர இலக்கியமே இல்லை மலையாளத்தில்தான் உள்ளது என்றாராம், இந்தமாதிரி ஆசாமிகளையெல்லாம் கூட்டிவந்து காபிடிபனெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று எழுதியிருப்பது உங்களையா என்று

என்னையேதான்.ரப்பர் நாவலுக்கு அகிலன் பரிசு பெற்ற விழாவில் 1991ல் நான் பேசிய செய்தி அவருக்கு எவராலோ அப்படி கூறப்பட்டது.ஆனால் பின்னர் நாவலைப் படித்துவிட்டு மிகவும் பாராட்டி எழுதினார். அதனூடாக என் இலக்கிய வருகையை அறிவித்து எழுதியவரே அவர்தான். அதன் பின் என் சிறுகதைத் தொகுதிகள் , நாவல்கள் அனைத்தைப் பற்றியும் பாராட்டி எழுதியிருக்கிறார். தொடர்ச்சியாக என்னைப்பற்றி பேசி இளம் எழுத்தாளனாகிய எனக்கு பரவலான வாசக கவனத்தைப் பெற்றுத்தந்தவர் அவரே.

நாவல்களின் வடிவம் பற்றி நான் சொன்ன கருத்தே சுஜாதாவுக்கு அப்படி போய்ச் சேர்ந்தது. அவரை மட்டும் படித்துவிட்டு நான் தமிழில் படிக்க ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டேன் என்று வல்லிக்கண்னன் உட்பட பலர் எழுதிக் கோண்டே இருந்தார்கள். ஆகவே நான் என் தரப்பை விளக்க ‘நாவல்’ என்று நாவலின் வடிவம் பற்றி ஒரு நூலையே எழுதினேன். தமிழிலக்கிய மரபைபப்ற்றி விரிவாக கட்டுரைகள் எழுதினேன். ஆனால் இன்றும் சிலர் அதையே சொல்லத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது?

முந்தைய கட்டுரைகம்பனும் காமமும் 3: அருளும் மருளும் அது
அடுத்த கட்டுரைஇயற்கை உணவு ஒரு கடிதம்