பாட்டாளி மக்கள் கட்சி பற்றி…

இளவரசனின் மரணத்தைப் பற்றிப் படித்ததில் இருந்து ஒரு வருத்தமான மன நிலையிலேயே இருந்து வருகிறேன். ஆழ்ந்த தார்மீகத்துடன் எழுதப்பட்ட உங்கள் கட்டுரை மன ஆறுதல் அளிக்கிறது. ஒரு வேளை அந்த இளைஞன் நல்ல வேலையில் இருந்து அதனால் நல்ல பொருளாதார நிலையில் இருந்திருந்தால் இந்த கீழ் மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பியிருக்கலாமோ என்னவோ.

நீங்கள் சமகால அரசியல் விஷயங்களில் நேரடியான கருத்துக்கள் கூறுவதைத் தவிர்த்து வந்தாலும், நீங்கள் பாமகவை ஒரு ஆக்கபூர்வ அமைப்பாக அடையாளப்படுத்தி வருவதாகவே நான் மனப்பதிவு கொண்டிருந்தேன். “தீண்டாமைக்கு உரிமை கோரி ” கட்டுரையிலும் இருந்தும், மற்றொரு கட்டுரையில் (பாமக வன்னியர்களை முதலாளித்துவஅமைப்பிற்குக் கொண்டுவர உதவியது என்று கூறும் கட்டுரை, அண்ணா ஹஜாரே போராட்ட சமயத்தில் வந்ததாக நினைவு) இருந்தும் இந்த பிம்பம் ஏற்பட்டிருக்கலாம். என் மன பிம்பம் சரியல்ல என்ற புரிதலும் நிம்மதி அளிக்கிறது.

பாலாஜி என்.வி
பெங்களூர்

[சொல்புதிது குழுமத்தில் இருந்து]

அன்புள்ள பாலாஜி,

நான் எப்போதும் சொல்லிவரக்கூடிய ஒன்றுண்டு. இலக்கியவாதியின் குரல் என்பது ஆய்வின் அடிப்படையிலானது அல்ல. ஆய்வுசெய்து எழுதுபவன் இலக்கியவாதியும் அல்ல.  புள்ளிவிவரங்கள் சேகரிப்பதும் அலசி முடிவுக்கு வருவதும் அவன் வழிமுறை அல்ல.

அதேபோல மாறாத நிலைப்பாடுகள் கொண்டவன் இலக்கியமெழுதக்கூடாது என்றே சொல்வேன்.  சீரான தர்க்கமுறை என்பதே எழுத்தாளனின் மனம் செயல்படும் முறைக்கு எதிரானது என்பதும் என் எண்ணம்.

எழுத்தாளனின் வழிமுறை தன் முன் வரும் அனுபவங்களை நேர்மையாக, முழுமையான அக்கறையுடன் அணுகுவது மட்டுமே. அவற்றின் மீது தன் சிந்தனையாலும் உணர்ச்சிகளாலும் உள்ளுணர்வாலும் மோதுவது. அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வது . அதனூடாக அறிந்தவற்றை முன்வைப்பது. தன் நேரடி அனுபவத்தாலான துளியில் இருந்து முழுமையை தன் உள்ளுணர்வால் அடைபவனே எழுத்தாளன். அதுவே அவன் பார்வை.

ஆகவே இலக்கியவாதி முன்வைப்பவை எப்போதும் அந்தரங்க உண்மைகள் மட்டுமே. புறவயமான சமூக, அரசியல் உண்மைகள் அல்ல. அவற்றின் மதிப்பு அவனுடைய ஆழ்மனம், நுண்ணுணர்வு அந்த கருத்துக்களில் உள்ளது என்பதனாலேயே. அதற்கான ஆதாரம் அந்த இலக்கியவாதியின் பிற புனைவுப்படைப்புகள்.

இந்த விவகாரத்திலும் என் குரல் ஒரு இலக்கியவாதியின் குரல். நானறிந்த நேரடி யதார்த்தத்தை, அதிலிருந்து பெறும் உணர்வுகளை மட்டும் முன்வைத்தே எப்போதும் எழுதியிருக்கிறேன். ஒருங்கிணைந்த அரசியல்நிலைப்பாட்டை அல்லது சித்தாந்தத்தை நான் முன்வைப்பதில்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

‘தீண்டாமைக்கு உரிமைகோரி’ கட்டுரையில்கூடத் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன், எனக்கு ராமதாஸின் அரசியல் மீது நம்பிக்கை இல்லை, அவரை ஆதரித்தது இல்லை என. அந்தக்கட்டுரையே வன்னியசாதிவெறிக்கு எதிரான கட்டுரை. நான் நேரடியாக தருமபுரியில் கண்ட யதார்த்தத்தை முன்வைத்து அது எழுதப்பட்டுள்ளது.

அந்தச் சாதிவெறிக்கு எதிராக ராமதாஸ் செயல்படவேண்டும் என்று கோரும் கட்டுரை அது. அவர் அப்படிச் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும், செயல்பட மாட்டாரா என்ற ஆதங்கமும் கொண்டது. அதற்குக் காரணம் அப்போது அவர் மீது உருவாகியிருந்த மெல்லிய நம்பிக்கை.

அவர் மீது அப்படி ஒரு நம்பிக்கை வந்த ஒரே தருணம், அவர் தலித்துக்களை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுத்தபோது மட்டுமே. திருமாவளவனுடன் அவர் மேடையைப் பகிர்ந்தபோது. அதைத்தான் அந்தக்கட்டுரை காட்டுகிறது. தருமபுரியின் சமூகச்சூழலை கண்டவன் என்ற வகையில் அந்த சமரசநிலைப்பாடு எவ்வளவு முக்கியமானது என நான் அறிவேன்.

அன்று அந்த ஒற்றுமைக்கு தமிழ்த்தேசியம், பெரியாரியம் என்னும் கோட்பாட்டு முகம் அளிக்கப்பட்டது. எனக்கு அவை இரண்டுமே வெற்றுக்கோஷங்கள் என்ற நடைமுறைப்புரிதல் இருந்தாலும்கூட எந்தக்காரணத்தாலானாலும் அந்த ஒற்றுமை இருசாராருக்குமே நல்லது என்ற எண்ணம் இருந்தது. அதை வரவேற்கவேண்டுமென்று தோன்றியது.

அதற்கு என் தனிப்பட்ட ஐயங்கள் அல்லது முன்முடிவுகள் தடையாக அமையக்கூடாதென நினைத்தேன். ராமதாஸின் சாதியரசியல் மீதும் போலி தமிழ்த்தேசியவாதம் மீதும் இருந்த ஐயங்களை தற்காலிகமாகவேனும் ரத்துசெய்து, நானே எழுதிய கடுமையான விமர்சனங்களை ஒத்திவைத்து, நல்லெண்ணத்துடன் அவரது அரசியலைப் புரிந்துகொள்ள முடியுமா என்று முயன்றேன். அந்த நல்லெண்ணப்புரிதல் பிழை என்று இன்றும் படவில்லை.

எந்த அரசியலைப்பற்றியும் அத்தகைய பார்வையையே நான் முன்வைக்க விரும்புகிறேன். முடிந்தவரைவிவாதத்துக்குத் திறந்திருக்கவேண்டும் என்பதனால் மாற்றுத் தரப்பைப்பற்றிக் கடுமையாக ஏதும் சொல்வதில்லை. மாற்றுத்தரப்பில் காணும் நல்ல அம்சங்களை முதலிலேயே பட்டியலிட்டு, என் நம்பிக்கையை சொல்லிவிட்டே விமர்சனங்களை ஆரம்பிப்பேன். ஈவேரா பற்றிய என் கட்டுரையில்கூட நீங்கள் அதைக்காணலாம்.

ஆனால் அதிகாரம் கைவர கைவர பாட்டாளி மக்கள் கட்சி தலித் ஆதரவை ஒரு தந்திரமாக மட்டுமே பயன்படுத்தியது என்று வெளிப்படையாகத் தெரிந்தது. இடைநிலைச்சாதிகளின் அரசியல் உத்திகளில் முக்கியமானது அது. அதிகாரத்தைநோக்கி மிதித்து ஏற ஒரு படியாகவே அவர்கள் தலித்துக்களைப் பார்க்கிறார்கள். அதற்காகவே இனவாதமும் மொழிவாதமும் பேசுகிறார்கள்.

தலித்துக்கள் மெல்லிய உரிமைக்குரலை எழுப்ப ஆரம்பித்ததும் அவர்களின் முகம் மாற ஆரம்பித்துவிட்டது. அவர்கள் பேசிய பெரியாரியமும் தமிழ்த்தேசியமும் அதிகாரத்தை வெல்ல தலித்துக்களை கருவியாக ஆக்கிக்கொள்ள கையிலெடுத்த பசப்புகள் மட்டுமே என தெளிவாகிவிட்டது.

இன்றைய கடும் கசப்புக்குக் காரணம் அந்த ஏமாற்றம்தான். இப்போதுகூட மிகக்கடுமையான நிலைப்பாடாக எதையும் எடுக்கக்கூடாது, கூடுமானவரை புரிந்துகொள்ளவே முயலவேண்டும் என நினைக்கிறேன். முடியவில்லை.

ஜெ

நிழல்தேடுவதில்லை நெடுமரம்

முந்தைய கட்டுரைஇளவரசன்
அடுத்த கட்டுரைசமகாலத் தமிழ்க் கவிதைகள்-கிருஷ்ணன்