«

»


Print this Post

இளவரசன்


சில சமகால நிகழ்வுகள் அரசியல் சமூகவியல் செய்திகள் என்பதற்கும் அப்பால் சென்றுவிடுகின்றன. அவற்றில் விவாதிப்பதற்குக்கூட ஏதுமிருப்பதில்லை. நெடுங்காலநோக்கில் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் உடையவை அவை. அதிலொன்று இளவரசனின் மரணம்.

தமிழகத்தின் முக்கியமான அரசியல் நிகழ்வாக இளவரசன் திவ்யா காதல் மணம் உருவாகி வருவதை கவனித்துக்கொண்டிருந்தேன். அதில் எனக்கு விவாதிக்க ஏதுமே இல்லை. இந்த நூற்றாண்டு உருவாக்கிய விழுமியங்கள், நெறிகள் எதிலும் நம்பிக்கையற்ற கீழ்மனிதர்களுக்கும் இந்நூற்றாண்டு உருவாக்கிய அறத்தை நம்பிய இரு புதிய தலைமுறையினருக்கும் இடையேயான போர்தான் அது. அதில் அடிப்படை அறவுணர்வோ எளிய சிந்தனை உணர்வோ உடைய ஒருவர் எடுக்கக்கூடிய நிலைப்பாடு ஒன்றே. சமரசமில்லாமல், ‘ஆனால்’களும் ‘இருந்தாலும்’களும் இல்லாமல் இளையதலைமுறையினரை ஆதரிப்பது. அதுதான் என் நிலைப்பாடு.

அது என்னைப்பொறுத்தவரை அரசியல் நிலைப்பாடு அல்ல. சமூகவியல் புரிதல் அல்ல. சொந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் செல்லுபடியாகும் ஒரு வாழ்க்கைமுறை. அந்தத் தளத்தில் நின்றபடியே ஒருவர் பேசியாகவேண்டுமென்பதே என் எண்ணம்.

எந்தத் தருணத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியை நான் ஏற்றுக்கொண்டதில்லை. அருவருப்பூட்டும் ஒரு பழமைவாதக்கும்பல் என்பதற்கு மேலாக அவர்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை. ஒரு நாகரீகமான சிவில்சமூகம் கடுமையாக முரண்படவேண்டிய, வெறுத்து ஒதுக்கவேண்டிய எதிர்மறைச் சக்தி அவர்கள். ஒரு நேர்மையான அரசால் ஒடுக்கி அழிக்கப்படவேண்டிய சமூகவிரோதக்கும்பல். எந்தவித அடிப்படை அறமும் இல்லாத அந்த ஒட்டுண்ணிக்கும்பலின் மிகப்பெரிய இரை வன்னிய மக்கள்தான். இன்று அவர்களே அதை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

இந்தத் தளத்தில் இதற்கு முன்னரே இதே கருத்தைத்தான் எழுதியிருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் அந்த அமைப்பின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது, அந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது அதை வன்மையாகக் கண்டித்திருக்கிறேன். ஏன், இருபதாண்டுகளுக்கு முன்னால் அவ்வமைப்பை இங்குள்ள பெரியாரியர்களும் இடதுசாரிகளும் சிற்றிதழ் கலகக்காரர்களும் தூக்கிப்பிடித்தபோது என் வன்மையான கண்டனத்தை பதிவுசெய்து அதற்காக வசைபாடப்பட்டிருக்கிறேன்.

ஏதேனும் ஒரு கட்டத்தில் அவ்வமைப்பை ஆதரித்த ஒவ்வொருவரும் அதை முழுமையாக நிராகரித்துப் பேசக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இன்று தமிழகத்தில் வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஒரு தரப்பு என்றால் அவர்கள்தான். அதைச் செய்யாத ஒவ்வொருவரும் இந்தக் குற்றத்தில் பங்கேற்கிறார்கள் என்றே பொருள்.

தமிழகச் சாதிவெறியர்கள் தூக்கிப்பிடிக்கும் பெரியாரியம் தமிழ்த்தேசியவாதம் போன்ற போலிச் சொல்லாடல்களுக்கு அடியில் இருக்கும் அப்பட்டமான யதார்த்தம் வெளிவர இந்தத் தருணம் காரணமாகியிருக்கிறது. இனியேனும் நேரடியாக உண்மையின் கண்களில் பார்த்து சிந்திக்க நாம் பழகியாகவேண்டும்.

நாம் சாதியொழிப்பு முதல் சமத்துவம் வரையிலான அனைத்து கருத்துக்களையும் அதிகார அரசியலுக்கான ஆயுதங்களாக மட்டுமே கையாண்டிருக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்களை, நமக்குப்பிடிக்காதவர்களை வசைபாடுவதற்காக மட்டுமே கையில் எடுத்திருக்கிறோம். நாம் அக்கருத்துக்களை நம் இல்லங்களுக்குக் கொண்டு சென்றதில்லை. நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தந்ததில்லை.

நடந்திருப்பது ஒரு கொடூரமான கொலை மட்டும் அல்ல. ஓர் இளம்தம்பதியினருக்கு எதிரான கொடூரம் மட்டும் அல்ல. நாகரீக சமூகத்துக்கு எதிரான அறைகூவல். அதை தமிழக சிந்தனையாளர்களும் சாமானியர்களும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில் மட்டுமே நம் எதிர்காலம் உள்ளது. இதில் ஒரே வரிதான் பதிலாக இருக்க முடியும். ‘இந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் தரப்பில் நான் இல்லை’.

என் மகனின் வயதுதான் இளவரசனுக்கு. ஒரு தந்தையின் நெஞ்சில் ஊறும் கண்ண்ணீருடன் அவனுக்கு அஞ்சலி.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/37573

1 ping

  1. வெள்ளையானை – வாசிக்கால் ஒரு விமர்சனம்

    […] தர்புமபுரி, கலவரம் கட்டுரை […]

Comments have been disabled.