கிராவும் காந்தியும் – கடலூர் சீனு

கடந்த புதன்கிழமை , கிரா  அவரைச் சந்திப்பதற்கு  சாயங்காலம் 5 மணிக்கு ,எங்களுக்கான  நேரம் ஒதுக்கி இருந்தார் . சரியாக ஐந்துமணிக்கு  நானும் , மலேசிய எழுத்தாளர் யுவராஜும் , சிவாத்மாவும் , புதுவை லாஸ்பேட்டை , அரசினர் குடியிருப்பில்  அவரது இல்லத்தை அடைந்தோம் .  யுவராஜ்  ஒவ்வொருமுறையும்  இலக்கியமுகாமுக்காகத் தமிழகம் வரும்போது , கிரா  அவர்களைச் சந்திப்பதைப் பல காரணங்களால் இழந்துகொண்டிருந்தார் . இம்முறை இந்தச் சந்திப்புக்காகவே இந்த நாளை ஒதுக்கி இருந்தார் .

கிரா  வெற்று  உடம்புடன்  சாய்வு நாற்காலியில் அமர்ந்து , எதோ புத்தகத்திலிருந்து குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தார் .எங்களைக் கண்டதும்  மலர்ந்து வரவேற்றார் .  சம்பிரதாயமான  அறிமுகங்கள் முடிந்தபின் ,கிராவே  ,இயல்பாக உரையாடலை முன்னெடுத்தார் .” அழகிரிசாமி மலேசியா போய்ட்டுவந்து சொன்னான் .அங்க பலநாள் வீட்டசாத்திட்டு ,திரும்பவந்து பொருள்கள விரலால தடவிப்பாத்தா , விரல்ல தூசி எடுக்க முடியாது அப்டின்னான் ”  எனத்துவங்கி சரளமாக உரையாடலைத் தொடர்ந்தார் .  அங்கு கணிசமாக விரும்பப்படும் டொரியன் பழம் பற்றி ,விசாரித்தார் . அது பயங்கர சூடு என யுவா சொல்ல . கிரா  ’’நம்மூருல பழ சூட்டுக்கு மாற்று  பசும்பால் , ரத்தக்கொதிப்பு உள்ளவங்க  உப்பு  சேக்கக்கூடாது அப்டீம்பாங்க . நம்மகிட்ட இந்துப்பு  அப்டின்னு ஒரு உப்பு உண்டு ,லேசா ரோஸ் கலர்ல இருக்கும் , அதப்பயன்படுத்தினா ஒரு பழுதும் இல்ல . இப்படி இயற்கையா நம்மகிட்ட எதுக்கும் ஒரு மாற்று இருக்கு . அதனால நல்ல அனுபவம் எல்லாம் தவிர்க்காம ருசிச்சிடனும் ’’.

பேச்சு இயல்பாக விவசாயம் பக்கம் திரும்பியது .கிரா  மசனோ பூக்கோவின்  ”இயற்கைக்குத் திரும்பும் பாதை ” நூலை எடுத்துக் காட்டிச் சொன்னார் .”இவஞ் சொல்றான்  நிலத்த உழுது கெடுத்தோம் . பாத்தீங்களா  இந்த அறிவு வந்து சேரதுக்குள்ள எல்லாம் போச்சு .இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல , திரும்பலாம் . ஏனோ நாம விருப்பப்படுரதில்ல ”      பேச்சு உடல்நலம் நோக்கித் திரும்பியது ” முன்ன மாடில இருந்தோம் .படில வழுக்கி விழுந்துட்டேன் . எலும்புல அடி . அதனால கீழ மாறிட்டோம் . நடமாட்டம் கொரஞ்சுபொச்சு . பாத்தீயள்னா  மொகலாய  காலத்துலிருந்து கட்டடக்கல சிறந்து விளங்கினாலும் .இந்தப் படி மட்டும் வைக்க எவனுக்கும் விளங்கல பல ராசாக்க படில இறங்கயில, விழுந்து செத்துருக்கான் . ஏன்னா  படிய வலது கால லாபம்னு சொல்லிக்கிட்டு எடுத்து வச்சா , உள்ளபோகையில வலதுகால் லாபம்னு வைக்கணும் . அப்டீங்கற கணக்குல  படிய எதேதோ  கணக்குல அடக்குறான் . அதனால  உள்ளவரும்போது லாபம் ,வெளிய போகும்போது நட்டம் . வெள்ளைக்காரன் அப்டி இல்ல ,படிய ஏற ,இறங்க மட்டும்  யோசிச்சான் . அவன் கட்ன படி நல்லா இருக்கு . எப்டியோ வைத்தியனுக்கும் பொழப்பு ஓடணுமே . அதிலும் இப்போ உள்ள வைத்தியம் , நோயாளிய குணப்படுத்தறதுக்குப் பதிலா , நோயாளிய அந்த வைத்தியருக்கு  ரெகுலர் கஸ்டமரா  மாத்திடுது ”.

தொடர்ந்து சங்கீதம் பற்றித் திரும்பினார் ” காருக்குருச்சி அருணாசலம் இடைச்செவல்லதான் மூத்ததாரம் கெட்டினார் . அப்போ அவரோட பழக்கம் அவர் ரொம்ப நல்ல பாடகர் .அவர சுத்தி அற்புதமான பாடகர் ஜமா சேரும் . என்சங்கீத ரசனை கேட்டு ,கேட்டு வளந்தது , கர்நாடக சங்கீதத்தின் அடிப்படைகளை பிற்பாடு தெரிஞ்சுக்கிட்டேன் .பதிலா சங்கீதம் கேக்க   சுர வரிசை கத்துக்க ஆரம்பிச்சீங்க , அன்னைக்கு சாகும் உங்க ரசனை ”

ஏற்காடு இலக்கிய முகாம் , கம்பராமாயண உரைகள் பற்றி யுவா விவரித்தார் .மறுமொழியாக கிரா ” இதுல எனக்கு சொல்ல கொஞ்சம் இருக்கு . எழுத்து ,செவ்வியல்,எல்லாமே பின்னால வந்தது .முதல்ல இருந்தது வாய்மொழி மரபு . அதுதான் ஊத்து . அதப்பராமரிக்காம இதக் காப்பாத்த முடியாது . உதாரணமா எதாவதொரு கிளைக்கதை , அந்த கிளைக்கதையும்  குறிப்பிட்ட சிக்கலை புரிந்துகொள்வதற்கு  வாய்மொழி மரபு கண்டடைந்தாக இருக்கும் .அதை இந்த செவ்வியல் நீக்கிவிடும் . அப்புறம் இதெல்லாம் வில்லிபாரதத்துல  கிடையாது , வால்மீகில கிடையாது அப்டீன்னு சொல்லி ,இதை இந்த வாய்மொழி மரபை ஒடுக்கிடுவாங்க . சமஸ்க்கிரதத்துல  தாலாட்டு ,ஒப்பாரி கிடையாது . ஆனா இந்தியா பூரா இது உண்டு . இது எல்லாத்தையும் நீக்கி செம்மொழி உருவாக்குறாங்க . சரி . நான் செம்மொழிக்கு  எதிரி இல்லை . ஆனா நாம இழக்கறது, அது எவ்வளவு பெருசு ? அதப் பராமரிக்காம ,வேர பராமரிக்காம ,மரம் எப்படி செழிப்பாகும் ? இப்போ தமிழ்  செம்மொழியாம் . ஆகட்டும்  கொஞ்சம் இழக்கறது என்னன்னும் பாருங்க .அதுதான் நான் கேக்கறது .  வாய்மொழி மரபு என்னைக்கும் காப்பாத்தப் படனும் . அன்னக்கி கோபல்ல கிராமம் எழுதினேன் .இதோ இன்னிக்கி பாண்டிச்சேரி பத்தி  வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு எழுதுறேன் . எங்க என்ன மண்ணு கிடைக்குதோ , அதவைச்சு விவசாயமோ பானையோ செய்ய வேண்டியத்துதானே ?”

நான் காந்தி பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க என வினவ ” அவன் விவசாயி இல்ல , ஆனா ஒரு விவசாயி வாழும் முறைதான் ,இந்தியாவைக் காப்பாத்தும்னு புரிஞ்சிக்கிட்டான் . தேவைக்கு வாழு . பேராசைக்கு சாகாதே அப்டின்னான் . அவனோட மலக்கழிவு நீக்கம் முறை முதல் ,கிராம நிர்வாக முறைமை வரை எல்லாமே நம்ள காலா காலத்துக்கும் காப்பாத்தக் கூடியது . எல்லாத்துக்கும் மேல அவன் வந்து சேந்த  ஒத்துளையாமை . ஒரு அதிகாரம், பயம் .அதன் வழியா கிடைக்கிற வரி இதும் மூலமாத்தான் நிக்குது .  ஒத்துளையாமை வழியா இந்த நாட்ட ,வெள்ளைக்காரனுக்கு பயனில்லாததா ஆக்கினான் . வெள்ளைக்காரனுக்கு  செத்தாக் காப்பணம் ,சொமகூலி முக்காப்பணம்னு ஆகிப்போச்சு .போய்ட்டான் . ராணுவம் வச்சி அடுத்தவன் நம்மள புடிக்கலாம் .புடிச்சி ?  உனக்கு இணங்க மாட்டேன்னு அத்தனைபேரும் ஒண்ணா நின்னா என்னாகும் ?  இத உலகத்துக்கே மொத  மொதலா காட்னவன் காந்தி . காந்தியம் ,கம்யுனிசம்  பேரு நிறைய வரும் போகும் , ஆனா யதார்த்தத்துல  ”வாழ ” வழி கட்னவன் காந்தி .”

இரவு 9 வரை வெவ்வேறு தளங்களில் கிரா பேசிக்கொண்டிருந்தார் .இடையில் யுவா குடும்பத்தைப் பற்றி விசாரித்தார் .யுவா -”ஒரே ஒரு பையன் ” ,   கிரா -”என் ஒண்ணோட நிப்பாட்டிட்டீங்க ?” யுவா -”நேரம் இல்லசார் ”  கிரா -”எனக்குத்தெரிஞ்சு ‘அதுக்கெல்லாம் ‘ரொம்பநேரம் ஆகாதே ”  அனைவரும் வெடித்து சிரித்துத் தளர்ந்தோம் .

விடை பெறுகையில் யுவா , கிராவின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டார் . கிரா கனிந்த மனதுடன் விடையளித்தார் . விலகும் வரை கிராவைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தேன் .  இடைச்சேவலின் நாற்று ஒன்று  புதுவையில்  மறு பதியனிடப்பட்டதுபோல்  தோன்றியது .நகர்மயமாதலின்  மற்றொரு கண்ணி .

முந்தைய கட்டுரைஏற்காடு – சித்தார்த் வெங்கடேசன்
அடுத்த கட்டுரைசமகாலத் தமிழ்க்கவிதை-சாம்ராஜ்