ஏற்காடு – 2

பொதுவாக இரவு நெடுநேரம் விழித்திருந்தால் காலையில் எழுவது கடினம். ஆனால் இத்தகைய தருணங்களில் ஒரு விழாமனநிலை வாய்த்துவிடுவதனால் காலையில் முதல் பிரக்ஞை வந்ததுமே பாய்ந்து எழுந்துவிடுவோம். மேலும் மலைப்பகுதிகளின் காலைநடையை இழக்க முடியாது. அவசரமாகப் பல்தேய்த்துக் காபிசாப்பிட்டுவிட்டு நடை கிளம்பினோம். கூட்டமாகப் பேசிக்கொண்டே ஏரிக்கரைவரை சென்றோம். எங்கள் நிகழ்ச்சிகளில் எப்போதும் பல குழுக்கள் அமையும். நாஞ்சில்நாடனைச்சுற்றி ஒரு குழு. தேவதேவனைச்சுற்றி ஒரு குழு. தேவதேவனுடன் தயக்கத்துடன் அணுகுபவர்கள் அவரை நெருங்குவது மிக எளிதென்று கண்டுகொள்வார்கள். ஒரு மெல்லிய திறப்பு போதும். நாஞ்சில் எப்போதுமே பழகுவதற்கு நேரடியானவர்.

முதல் அரங்கில் நாஞ்சில்நாடன் மீண்டும் ஆரண்யகாண்டத்தை ஆரம்பித்தார். கரன் வதைப்படலம். ஜடாயு உயிர்நீத்தபடலம். கம்பன் அவனுடைய மகத்தான கற்பனைசக்தியால் கதாபாத்திரங்களிடையே நிகழும் பெரும் தியாகங்கள், அர்ப்பணங்கள், புரிதல்கள் மூலம் உருவாக்கும் மனநெகிழ்ச்சி அரங்கை நிறைத்தது. இரண்டுமணிநேரம் நாஞ்சில்நாடன். எஞ்சிய இரண்டுமணிநேரம் ஜடாயு. ஜடாயு சூர்ப்பனகை படலத்தை நடத்தினார். ஜடாயு இதுவரை பல செவ்விலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் இம்முறைதான் அவரது உச்சகட்ட வெளிப்பாடு நிகழ்ந்தது.

மதிய உணவுக்குப்பின் மீண்டும் சிறுகதை அமர்வு. தமிழின் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சிறுகதை வீதம் முன்வைக்கப்பட்டது. கதைகள் முன்னரே அனுப்பப்பட்டிருந்தன, ஆகவே அவை வாசிக்கப்படவில்லை. முன்வைப்பவரின் குறிப்புக்குமேல் கதையைப்பற்றிய விவாதம். ஒரே பறவைப்பார்வையில் தமிழிலக்கியத்தின் முக்கால்நூற்றாண்டுப் பரிணாமத்தை முன்வைத்து விவாதிப்பதற்கு ஏற்பவே இந்த தலைமுறைப்பிரிவினை அளிக்கப்பட்டது.

முதல்தலைமுறைக்கதை புதுமைப்பித்தனின் அன்றிரவு. ஜடாயு அதை முன்வைத்துப் பேசினார். புதுமைப்பித்தனின் கதை எள்ளலை அதன் அடிநாதமாகக் கொண்டது. ஆனால் கதை சென்று முதிரும்போது தீவிரமான ஒரு கவித்துவத்தை அடைகிறது. அந்த பொற்பிரம்பு கதையைப் பல தளங்களுக்குக் கொண்டுசெல்கிறது. ஆண்டவனில் தொடங்கி அனைத்தின் மீதும் விழுந்து செல்லும் அந்தப் பொற்பிரம்பின் அடி உண்மையில் என்ன என்ற கற்பனையே அக்கதையைப் பெரும் படைப்பாக ஆக்கும்.

புதுமைப்பித்தன் தமிழ்ச்சிறுகதையின் தொடக்கநாட்களிலேயே எப்படி எல்லா வகைக் கதைகளுக்கும் முன்னோடிப்படைப்பை உருவாக்கியிருக்கிறார் என்று விவாதம் நீண்டது. இக்கதை தமிழ்ப்பண்பாடு நமக்கு எப்படிக் கிடைக்கிறதோ அதே வடிவம் கொண்டது. புராணங்கள், இலக்கியங்கள், உரைகள் , வாய்மொழிகள் என நான்கும் விரவி வரும் கதையில் ஒற்றர்களும் கூடவே வருவதுதான் புதுமைப்பித்தனின் குறும்பு. ஒருபக்கம் பித்தும் மறுபக்கம் புதுமையும் விரவிய கதை இது. அன்றிரவு, பிரம்மராட்சஸ், கபாடபுரம் ஆகிய மூன்றையும் ஒரேவகையான கதைகள் எனலாம். என்னவென்று முழுக்க உள்வாங்கிக்கொள்ளமுடியாத திகைப்பை அளிக்கும் கற்பனைவெளிகள் இக்கதைகள்.

அன்றிரவு கதை பற்றிய விதவிதமான வாசிப்புகள் நிகழ்ந்தன. கதை பல தளங்களில் திறக்கப்பட்டது. புதுமைப்பித்தனின் சைவம், அவனது நாத்திகம், அவனுடைய கவித்துவம், அவனுடைய நக்கல். ஒரு கட்டத்தில் அவ்வளவுதான் பேச முடியும் என்ற திகைப்புடன் விவாதம் முட்டி நின்றது. புதுமைப்பித்தனின் மேதமையின் சான்று அந்தத் திகைப்பு

அடுத்த தலைமுறைக்கதை சுந்தர ராமசாமியின் விகாசம். அருணா வெங்கடாசலம் அதை முன்வைத்துப் பேசினார். இயந்திரத்துக்கும் மனிதனின் படைப்பூக்கத்துக்கும் இடையேயான முடிவில்லா மோதலை, அதில் மனிதன் தன் அகஆற்றலால் வென்று செல்வதைச் சொல்லும் கதை. ஆனால் அப்படி வென்றுசெல்பவர் சாதாரண மனிதரல்ல, மேதை. சாதாரணமனிதன் என்ன செய்வான் என்பதுதான் கதை. அந்தக்கதையில் உழைப்பவனின் திறமையை மட்டம்தட்ட இயந்திரத்தின் வருகை பயன்படுத்தப்பட்டிருப்பதை ஒருவாசிப்பு சுட்டிக்காட்டியது.

உடல்குறையுள்ளவர்களை இழிவுபடுத்தி விலக்குவதுபோலவே அசாதாரணமாக ஆக்கி விலக்குவதும் பொதுவழக்கம் என்ற கூற்று முன்வைக்கப்பட்டது. ராவுத்தரை ஒரு விளையாட்டுப்பொருளாகவே பிறர் பார்க்கிறார்கள். அவரைக்கதைசொல்லியான சிறுவன் வீட்டுக்குச்சென்று பார்க்கையில் தன்னை மனிதராக மதித்ததன் பேரின்பத்தை அவர் அடைவது ஓர் உதாரணம். அவர் தன்னை பொம்மையாக ஆக்கும் பிறர் பார்வையில் இருந்து தொடர்ந்து மனிதனாக மாறி விகாசம் அடைந்தபடியே இருக்கிறார் என்பதுதான் கதை என இன்னொரு வாசிப்பு.

சுந்தர ராமசாமியின் நடை செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவும் அவர் அளிக்கும் தகவல்கள் திட்டமிட்டு அளிக்கப்படுவதாகவும் தோன்றுவதாக இளம் வாசகர்தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. குறிப்பாக அவர் ராவுத்தர் கடைசியில் கண்டுசொல்லும் பல காரியங்களை வரிசையாக அடுக்கும் இடம்.

மூன்றாம் தலைமுறைக்கதை கந்தர்வனின் கதை. தனசேகர் அக்கதையை முன்வைத்துப் பேசினார்.பெரியவர்களின் ‘கதை’ எப்படி குழந்தைகளின் உலகை நிரந்தரமாக அழித்து விடுகிறது, அவர்களைக் கற்பனையில் வாழச்செய்கிறது என்று அக்கதை சொல்வதாகக் குறிப்பிடப்பட்டது. அந்தக் கதையில் சிறியவர்களை சிக்கச்செய்யும் பெரியவர்களும் அதில்தான் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் சொல்லும் கதையால் ஏமாற்றப்படுகிறார்கள். அந்தக்கதை எதுவாகவும் இருக்கலாம், மதம் அரசியல் எதுவாகவும். அக்கதையில் ஒரு உண்மையான சமூக நிகழ்வு துல்லியமாக உள்ளது. ஆனால் மேலெழுந்து செல்லும் உச்சம் நிகழவில்லை என விவாதிக்கப்பட்டது.

நாலாம் தலைமுறைக்கதை பெருமாள் முருகனின் நீர்விளையாட்டு. கவர்ந்திழுத்து உள்ளே ஆழ்த்தி விளையாட்டுக்காட்டி மெல்லமெல்ல மரணம் நோக்கிக் கொண்டுசெல்லும் அந்தக்கிணறு ஒரு பெரும் குறியீடு என்று சுதா ஶ்ரீனிவாசன் பேசினார். கதையரங்கில் வாசிக்கப்பட்ட முக்கியமான கதையாக அதைப் பலரும் கருதினர். அந்த விளையாட்டைக் குறியீடாக எடுக்காவிட்டாலும் அக்கதை பொருள் அளிக்கிறது. சிறுவர்களிடம் இயல்பாக உறைந்திருக்கும் வன்முறையை அது அச்சமூட்டுமளவுக்குக் காட்டுகிறது.

குறியீடாக எடுத்தாலும் அது முக்கியமானது. The pit என்பது மேலைச்சிந்தனையில் முக்கியமான ஒரு குறியீடு. நரகம். மறு உலகம். தன்னை நிரப்பிக்கொள்ளக் கவர்ந்திழுக்கும் ஆழம். தொடர்ந்து பலகோணங்களில் விரியக்கூடிய வலுவான கதை அது என்று வாசிக்கப்பட்டது.

புதியதலைமுறைக்கதையாகக் கவின்மலர் எழுதிய இரவில் கரையும் நிழல்கள். அதை மலேசிய எழுத்தாளரான சுயுவராஜன் முன்வைத்தார். கதையின் பொதுவான நுட்பம் ரசிக்கப்பட்டாலும் அதன் பயிற்சியற்ற முதிரா மொழி ஒரு முக்கியமான குறைபாடாகவே பொதுவாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் திருமணம் குடும்பம் போன்ற அமைப்புகளைப்பற்றிய மிக எளிமைப்படுத்தப்பட்ட பொதுப்பார்வையைத்தான் அந்தக்கதை சொல்கிறது, நல்ல இலக்கியப்படைப்பு தனித்துவம் கொண்ட சிறப்பு நோக்கால்தான் முக்கியத்துவம் பெறுகிறது என்றார்கள். மேலும் அதே தளத்தில் மேலும் அழுத்தமான பல கதைகளை வண்ணதாசன் தலைமுறையினர் எழுதியும்விட்டனர்.

ஒவ்வொருகதையும் முக்கால்மணி நேரம்வரை விவாதிக்கப்பட்டது. எல்லாக் கதைக்குமே முற்றிலும் மாறுபட்ட வாசிப்புகள் இருந்தன.. ஒவ்வொரு கதையையும் எந்தெந்த வகையில் எல்லாம் வாசிக்கலாமென்று இத்தகைய விவாதங்களே காட்டுகின்றன. விவாதம் மிகத்தீவிரமாக நடந்தது. முடித்துக்கொள்ளலாமென சொன்னதும் மேலும் சிலர் எழுந்து பேச ஆரம்பிப்பார்கள். முடிகையில் ஆறரை மணி தாண்டிவிட்டது.

மாலையில் மீண்டும் ஒரு நடை. கிளம்பும்போதே சற்று இருட்டிவிட்டது. ஏரிக்கரை வரை பேசிக்கொண்டே நடந்துவிட்டு வந்தோம். திரும்பும் வழியில் நல்ல இருட்டில் கண்பழக்கமாக சாலையை கவனித்து வரவேண்டியிருந்தது.

மாலையமர்வு முழுக்க கவிதை. உலகக் கவிதையின் ஒரு துளி என்றவகையில் மோகனரங்கன் நான்கு கவிதைகளை வாசித்தார். நான்கு  வகையான கவிதைகள். மிக எளிய, பிரகாசமான காதல்கவிதையான லியோபோல்டு செங்கோர் எழுதிய ஆப்பிரிக்கக் கவிதை ஓர் எல்லை என்றால் உக்கிரமான துக்கத்தை வெளிப்படுத்தும் அன்னா அக்மதோவாவின் கவிதை இன்னொரு எல்லை. முந்தையதில் அரசியல் இல்லை. பிந்தையது ஓர் அரசியல் கவிதை. செங்கோரின் கவிதையில் அந்த சிறுத்தை முக்கியமான படிமம். அதன் கரந்துறையும் தன்மை. அது அந்தச்சமூகத்தின் ரகசிய அச்சங்களைக் குறிக்கிறது. அதுவே பிரிவுக்கான காரணமாகவும் இருக்கலாம்

க.மோகனரங்கன் ஒருகாலத்தில் சிக்கலான கவிதைகள் மீது தனக்கு ஈடுபாடிருந்ததாகவும் இப்போது எளிய கவிதைகளையே மனம் நாடுவதாகவும், எளிய கவிதையின் இயல்பான மலர்தல்தான் உண்மையில் உருவாக்குவதற்குக் கடினமானது என்றும் சொன்னார். யாராக இருந்தாலென்ன அதன் எளிமையான தன்மை காரணமாகவே தன்னை மிகவும் கவர்ந்ததாகச் சொன்னார்.

ஏ.வி. மணிகண்டன் இரு மலையாளக்கவிதைகளை முன்வைத்தார். அனிதா தம்பி எழுதி சுகுமாரன் மொழியாக்கம் செய்த ‘பழக்கப்படுத்துதல்’, ‘சோறு’. இரு கவிதைகளிலும் உள்ள ஒரு பொதுத்தன்மையை மணிகண்டன் முன்வைத்தார். மழையின் அழைப்புக்குத் தயங்கி பின்வாங்குவதும் சூரியனை நினைத்து ஏங்குவதும் ஒரே மனநிலையை இரு பக்கங்களில் நின்று பார்க்கின்றன என்றார். பழக்கப்படுத்துதல் நேரடியான உணர்வுவெளிப்பாடு காரணமாக உத்வேகமாக அமைந்த கவிதை. ஆனால் சோறு வழக்கமான கிராமம் நகரம் என்ற முரண்பாட்டை முன்வைப்பதனாலேயே ஆழமற்ற கவிதையாக உள்ளது என்ற வாசிப்பு முன்வைக்கப்பட்டது.

முதல் தலைமுறை தமிழ்ப்புதுக்கவிதையைக் காட்ட இரு கவிதைகளை ஸ்ரீனிவாசன் முன்வைத்தார். பிரமிளின் ‘பாலை’. அபியின் ‘என்ற ஒன்று’. பிரமிள் கவிதை ஒரு படிமத்தை முன்வைக்கிறது. தன் காலடிபட்டதனால் எரிந்து தன்னோடு சேர்ந்தலையும் கைப்பிடி நிலம். அந்தக்கவிதையில் கண்குளிரும் பொன்மணல் என்ற சொல்லாட்சி அழகானது, அக்கவிதையின் நுழைவாசல் அது என்றார். அபியின் கவிதை மீபொருண்மைக்கவிதை எனலாம். அத்தகைய கவிதைகளை அபி நிறையவே எழுதியிருக்கிறார். ‘இல்லாதது’ என்ற க,நா.சுவின் கவிதை இதே தரிசனத்தை அங்கதமாக முன்வைப்பது என்று சொல்லப்பட்டது.

சுரேஷ் இரண்டாம் தலைமுறையினரான கல்யாண்ஜியின் ‘அள்ள அள்ள’ என்ற கவிதையையும் ஆத்மாநாமின் ‘மறுபரிசீலனை’ என்ற கவிதையையும் முன்வைத்தார். இவ்விரு கவிதைகளுமே அக்கால மனநிலையை பிரதிபலிக்கின்றன என்றார். தனிமை, கையாலாகாமை ஆகியவற்றின் விளைவாக உலகை அள்ள விரும்பும் விழைவும் உருவாவதை கல்யாண்ஜியின் கவிதை காட்டுகிறது. தன் வாசிப்பில் அது கல்யாண்ஜியின் இயல்பையும் காட்டுகிறது. பிடித்ததை விடாத தன்மை என அதைச் சொல்லலாம் என்றார். இக்கவிதையுடன் இணைநிற்கும் சுகுமாரனின் ‘அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்’ முதலிய கவிதைகள் வாசிக்கப்பட்டன.

ஆத்மாநாம் அன்றைய சூழலில் உருவாக்கிய விளைவை இன்று விவாதிப்பது கடினம் என்றார் சுரேஷ். அரசியலற்ற அகவயக்கவிதைகளுக்கும் உண்மையான அரசியல் உள்ள கவிதைகளுக்கும் நடுவே அவர் ஒரு பாலம். அவரது கவிதையில் உள்ள அச்சமும் பதற்றமும் அன்றைய முக்கியமான உணர்ச்சிகள். ஆனால் அதை மீறி அவரது நம்பிக்கையும் கவிதையில் உள்ளது. ஆத்மாநாம் பற்றி விரிவான விவாதம் நிகழ்ந்தது. ஆத்மாநாம் எழுதிய முத்தம் கொடுங்கள் போன்ற கவிதைகளில் உள்ள நம்பிக்கையே அவரது குரல் என்ற வாசிப்பு உருவானது.

சமகாலத் தமிழ்க்கவிதைகள் பற்றி இருவர் பேசினர். ஈரோடு கிருஷ்ணன் இளங்கோ கிருஷ்ணனின் ‘தாண்டவம்’, இசையின் ‘லட்சுமி டாக்கீஸ்’ ஆகிய கவிதைகளைப்பற்றி பேசினார். சாம்ராஜ் லிபி ஆரண்யாவின் ‘உள்ளே வைத்து உடைப்பவர்கள்’, இசையின் ‘முன்னொருகாலத்தில் குணசேகரன் என்று ஒருவன் வாழ்ந்துவந்தான்’ என்னும் கவிதைகளைப்பற்றி பேசினார்.

இந்த நான்கு புதியதலைமுறைக் கவிதைகளுமே அரங்கில் மிகுந்த உற்சாகத்துடன் ரசிக்கப்பட்டன. இளங்கோ கிருஷ்ணனின் கவிதையின் ஆன்மீகம் அதன் மெல்லிய எள்ளலுடன் அழகாக இணைந்திருக்கும் விதம் குறிப்பிடப்பட்டது. இசையின் கவிதை நேரடியாகவே அங்கதத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு காலகட்டம் சென்றபின் எஞ்சும் அலைகளாக, வரலாற்றின் பேய்களாக எல்லாம் வாசிக்கப்பட்ட கவிதை அது.

லிபி ஆரண்யாவின் கவிதை அதன் சமகாலத்தன்மை மற்றும் உண்மையான அரசியல்சார்பு காரணமாக முக்கியமானதாகக் கருதப்பட்டது. இசையின் குணசேகரன் பற்றிய கவிதை ஒரு முக்கியமான சமகால யதார்த்தம் என்றார் சாம்ராஜ். குணசேகரன்கள் பிறரால் குடிக்க இடமளிக்கும் அன்னியர்களாக ஆக்கப்பட்டு அர்த்தமிழந்து மறைந்த ஒரு சமகால வரலாறு கண்ணெதிரே உள்ளது. இலட்சியங்களின் தோல்வி வரலாறு அது. அதை மிகையுணர்ச்சிகள் இல்லாமல் சித்தரிக்கும் கவிதை அது.

இந்த அரங்கில் இயல்பாக இரு ஆக்கங்கள் வாசிக்கப்பட்டது இசை எழுதியவைதான். அது ஒரு சிறப்பான விஷயம் என்றே படுகிறது. இரு படைப்புகளும் இரு வகைகளில் முக்கியமானவையாக அனைவராலும் கருதப்பட்டன. ஒருவகையில் சமகாலத்தைய முதன்மையான கவிஞன் ஒருவனை இந்த அரங்கு சுட்டிக்காட்டியிருக்கிறது என்றே பட்டது.

அன்றைய அரங்கு ஒன்பது மணிக்கு முடிந்தது. அதன்பின் உணவு. வெளியே இதமான குளிர். பெரிய நெருப்புத்தொட்டிக்குள் விறகு அடுக்கி நெருப்பு போடப்பட்டது. அதைச்சூழ்ந்து அமர்ந்து கொண்டு பாட ஆரம்பித்தனர். திரையிசைப்பாடல்கள். மரபிசைப்பாடல்கள். ராம் , சங்கீதா ஸ்ரீராம், சுரேஷ் ஆகியோருடன் சுனில்கிருஷ்ணனும் கடலூர் சீனுவும் பாடினார்கள். பாட்டு இரவு முழுக்க நீண்டது.

நான் பன்னிரண்டு மணிக்கு வந்து படுத்துக்கொண்டேன். ஆனால் காலை மூன்றரை மணிவரை தொடர்ந்து பாடினார்கள் என்று கேள்விப்பட்டேன். ஒரு கட்டத்தில் அனைவருமே சேர்ந்து பாடியிருக்கிறார்கள். பலர் ‘அந்த நாள்னு சில நாட்களை லைஃப் முழுக்க ஞாபகம் வச்சுக்குவோம்ல…அது இதுதான் சார்’ என்று சொன்னார்கள்.

மறுநாள் காலை வில்லிபாரதம் பற்றி கு.ஞானசம்பந்தம் பேசினார். அவரும் மனைவியும் முந்தையநாளே வந்திருந்தார்கள். ஞானசம்பந்தம் தன் தந்தையாரிடமிருந்து வில்லிபாரதத்தின் மீதான ஈர்ப்பு எப்படி உருவானது என்பதை விவரித்தார். வில்லிபாரதத்தின் அமைப்பு, தனிச்சிறப்பு ஆகியவற்றுடன் அதன் நுட்பமான கவிதைத்தருணங்களையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

மதியத்துடன் அமர்வு முடிந்தது.. மதிய உணவுக்குப்பின் ஒவ்வொருவராக கிளம்பிச்செல்ல ஆரம்பித்தனர். நான் பிற அமைப்பாளர்களுடன் அங்கேயே இருந்து ஒவ்வொருவரையாக வழியனுப்பி வைத்தாகவேண்டும். அது உண்மையில் வலியா நிறைவா எனத் தெரியாத ஓர் அனுபவம். இலக்கியச்சந்திப்பின் உச்சமும் அதுவே. உவப்ப தலைக்கூடி உள்ளப்பிரிதல்.

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைஆசாபங்கம்
அடுத்த கட்டுரைசில உலகக்கவிதைகள்-க.மோகனரங்கன்