பாலுணர்வெழுத்தும் தமிழும்

EROTIC BY ARTIST RAKESH BANI

இணையத்தில் உரையாட வருபவரான நண்பர் பெத்துச்சாமி வெங்கடாச்சலம் ‘பாலுணர்வு எழுத்து இலக்கியமா?’ என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். ‘ஆம் பாலியல் எழுத்திலும் இலக்கியப்படைப்புகள் உண்டு’ என அவருக்குப் பதிலளித்தபின்னும் அதையொட்டியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எந்த ஒரு வகை எழுத்திலும் நமக்கு உடனே கிடைப்பது தரமற்ற எழுத்துதான். அதுவே அதிகமான பேரால் எழுதப்படுவதாக இருப்பதே அதற்குக் காரணம். பொதுவாக அதையொட்டியே நமது மனச்சித்திரங்களும் மதிப்பீடுகளும் அமைகின்றன.பாலுணர்வு பற்றி ஆழமான குற்றவுணர்வு உள்ள மக்கள் நாம் என்பதனால் அந்த தரமில்லாத எழுத்தைப் படித்ததுமே தீவிரமான எதிர்நிலைப்பாடுகளை உருவாக்கிக் கொள்கிறோம்.

இலக்கியத்தின் வகைமைகள் முடிவிலாதவை. அவற்றின் வெகுசில வகைகளையே நாம் தமிழில் இலக்கியம் என்ற பேரில் வாசித்துக் கொண்டிருக்கிறோம். துப்பறியும் கதை, திகில்கதை, பேய்க்கதை, அறிவியல்கதை, புதிர்கதை, முதிராக்காதல்கதை போன்ற பல வகைமைகளுக்குள் பேரிலக்கியங்களை நாம் உலக இலக்கியப் பரப்பில் காணலாம். அவற்றில் பாலுணர்வுக் கதையும் ஒன்று.

தமிழில் நாம் பெருவாரியான வணிக எழுத்துக்கு மாற்றான ஒரு போக்காக மட்டுமே தீவிர இலக்கியத்தை புரிந்துகொண்டு வகுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான வரலாற்றுக் காரணங்கள் பல. ஆகவே நம் மனத்தில் தீவிர இலக்கியம் என்பது வாசிப்பார்வத்தைத் தூண்டாதது, குறைவானவர்களால் படிக்கப்படுவது, நுட்பத்தை மட்டுமே இலக்காகக் கொண்டது என்ற எண்ணம் வலுவாக வேரூன்றியது.

அதேபோல எழுத்தாளர்களும் ஒரு எதிர்நிலையில் நின்றே எழுதிவந்தார்கள். வெகுஜன ஊடகங்கள் முன்னிலைப்படுத்திய எழுத்துக்களால் தொடப்படாத தளங்களை மட்டுமே அவர்கள் இலக்கியத்தில் இலக்காக்கினார்கள். வெகுஜனஎழுத்து என்பது காமம்,திகில்,கேளிக்கை என்று மட்டுமே விரிந்தமையால் தமிழ் வாழ்க்கையின் சொல்லப்படாத யதார்த்தங்களை நோக்கித் திரும்பியது நமது இலக்கியம். இன்றும் யதார்த்தவாதமும், இயல்புவாதமும் நமது இலக்கிய அழகியலின் மைய ஓட்டங்களாக மேலோங்கியிருப்பதற்குக் காரணம் இதுவே. இந்த இயல்பு வரலாற்றுப் பின்புலம் கொண்டது, இயற்கையானது, சிறப்பானது.

ஆனால் இக்காரணத்தால்தான் நாம் பிற இலக்கிய வகைமைகள் இலக்கியமே அல்ல ,அவை வணிக எழுத்துக்கள் என்ற எண்ணத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். தீவிர இலக்கியம் படிக்கும் வாசகர்களில் ஒருசாரார் உற்சாகமாகச் சொல்லப்பட்ட எழுத்தையே இலக்கியமல்ல என்று நிராகரிக்கும் மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆதவன் அதனாலேயே அவர்களால் புறக்கணிக்கப்பட்டார். ஏன், எளியமொழியில் நேரடியாக எழுதுகிறார் என்பதனாலேயே அசோகமித்திரனை ஏற்காதவர்கள் உண்டு. இந்நிலையில் பிறவகைமைகளைப் பற்றி பேசவே வேண்டாம்.

உண்மையில் திகில்,காமம்,மனக்கிளர்ச்சி போன்ற தளங்களில் கூட இலக்கியப் படைப்புகளே தீவிரமாகவும் உக்கிரமாகவும் இயங்கமுடியும். வணிக எழுத்து அவற்றையே சார்ந்திருக்கிறது, அவற்றை மீண்டும் மீண்டும் எழுதுகிறது என்றாலும் வணிக ஊடகங்கள் பெருவாரியான மக்களைச் சார்ந்துள்ளன. ஆகவே அவர்களின் பொதுவான ஒர் ஒழுக்க எல்லையை அவை மீறிச் செல்ல இயலாது. அந்த எல்லையை அவையும் உணர்ந்து தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டாகவேண்டும். மாறாக இலக்கியம் எல்லைகள் இல்லாதது. தன் தேடலை தன் திறனின் உச்சம் வரைக்கும் கொண்டுசெல்வது. ஆகவே பாலியல் எழுத்து என்றால் அதன் உச்சம் இலக்கியத்திலேயே சாத்தியம்.

இன்று வணிக எழுத்து என்பது தமிழில் அனேகமாக இல்லை. வணிகக் கேளிக்கை ஊடகமான தொலைக்காட்சி அதன் முதுகெலும்பை முறித்துவிட்டது. எழுத்து என்றாலே இன்று இலக்கியம்தான். ஆகவே இன்று இலக்கியத்துக்கு எதிர்மறைப் பண்பு தேவையில்லை. வணிக எழுத்துக்கு மாற்றாக தன்னை முன்வைக்கும் அவசியமும் இல்லை. அதனால் தன் எல்லைகளை அனைத்துத் தளத்திலும் விரித்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது இலக்கியம். பாலுணர்வெழுத்தும் அதில் ஒன்று.

தமிழில் நல்ல பாலுணர்வெழுத்து மிகக்குறைவே. பாலுறவையும் பாலுணர்வையும் எழுதும்போதே சொல்லலங்காரங்களில் சென்று அடைக்கலம் தேடுவது நம் எழுத்தாளர்களின் வழக்கமாக இருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு பாலுணர்வுநாவல் எழுதி வைத்து நண்பர்களுக்கு கொடுத்து வந்ததாக தொ.மு.சி.ரகுநாதன் எழுதியிருக்கிறார். ஏன் இதெல்லாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், ”என்ன கேள்வி இது? தமிழன் நல்ல போர்னோகிரா·பி படிக்கவேண்டாமா?” என்று அவர் வேடிக்கை செய்வார் என்று ரகுநாதன் சொல்கிறார். புதுமைப்பித்தன் வேடிக்கை செய்யவில்லை.

தொ.மு.சி.ரகுநாதன் புதுமைப்பித்தன் ஆங்கிலப் பாலுணர்வு எழுத்துக்களை விரும்பிப் படிப்பார் என்றும் தனக்கும் அதில் ஆர்வம் உண்டு என்றும் சொல்லியிருக்கிறார். சி.சு.செல்லப்பா பாலுணர்வு நூல்களைப் படிப்பதில் மோகம் உடையவர் என்று அவ்வப்போது பேச்சு உண்டு — பிரமிள் அதை வெளிப்படையாகச் எழுதியிருக்கிறார். பிரமிளும் அந்த மோகம் உடையவரே. வல்லிக்கண்ணனிடம் ஒரு தகரப்பெட்டி நிறைய பாலுணர்வுப் புத்தகங்கள் இருந்தன என்று சொல்வார்கள்.

தமிழில் எந்த ஒரு இலக்கிய வகைமைக்கும் முதல்தொடக்கம் புதுமைப்பித்தனின் ஆக்கங்களிலேயே இருக்கும். அவரது ‘விபரீத ஆசை’ யே தமிழ் பாலுணர்வு எழுத்தின் முதல் முன்னுதாரணமாக கொள்ளத்தக்கது. நண்பனின் பிணம் கிடக்க அவன் மனைவியுடன் கூடுபவனின் தடுமாற்றமும் பதற்றமும் பிறழ்வுநிலையும் சொல்லப்பட்ட கதை அது. அதன் பின் நேராக எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’ ‘தீ’ என்ற இரு ஆக்கங்கள். பாலுணர்வெழுத்தில் தமிழில் இன்றுவரை சிறப்பாகச் சொல்லப்படவேண்டிய ஆக்கம் சடங்குதான்.

எழுபதுகளில் தமிழ்நாடனின்’காமரூபம்’ போன்ற நூல்கள் பாலுணர்வுஇலக்கியங்கள் என்று கொண்டாடப்பட்டன. ஆயினும் அவை சொல் அலங்காரங்களில் மறைந்து நின்று சொல்ல முயன்றவையே. பாலுணர்வெழுத்தில் தமிழின் அடுத்த முக்கியமான ஆக்கம் தஞ்சை பிரகாஷின் ‘மீனின் சிறகுகள்’ அவரது கரமுண்டார் வீடு, கள்ளம் போன்ற நாவல்களிலும் பாலுணர்வு அம்சம் இருக்கிறது.

சமீபத்தில் ஜெ.பி.சாணக்யா பாலுணர்வுக் கதைகளை எழுதியிருக்கிறார். ‘அமராவதியின் பூனை’ என்ற அவரது கதை குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான கதைகளில் சொற்களின் புதருக்குள் கதையைச் சிக்கவைக்கும் உத்தியையே அவரும் மேற்கொண்டிருக்கிறார். எஸ்.பொன்னுதுரை உட்பட பலரும் செய்துவந்த விஷயம் அது.

மேலே குறிப்பிட்ட தமிழ் பாலுணர்வுக்கதைகளில் பாலுணர்வுக்கூறு சற்றே மேலோங்கியிருக்கிறதே ஒழிய அவை முழுமையான பாலுணர்வுக்கதைகள் அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்– மீனின் சிறகுகள் விதிவிலக்கு. பாலுணர்வுக்கதை என்பது தன் மையக்கருவாகவே பாலுணர்வை எடுத்துக் கொண்டிருக்கும். அதைப் பற்றி கூர்ந்த அவதானிப்புடன் விவாதிக்கும். அதை நுண்ணிய விவரிப்புடன் சித்தரித்துக் காட்டும். அதன் மனநிலைகளை பல தளங்களில் விரித்துச் செல்லும்.வெறுமே கிளர்ச்சியுறசெய்வது மட்டுமல்ல அதன் நோக்கம். அது ஒரு ரகசிய உலகை உருவாக்கி அளிக்கும்.

ஐம்பதுகளில் டி.எச்.லாரன்ஸின் எழுத்துக்களும் அறுபதுகளில் ஆல்பர்ட்டோ மொரோவியோவின் எழுத்துக்களும் தமிழ்நாட்டில் பாலுணர்வெழுத்துக்களின் சிறப்பான முன்னுதாரணங்களாக இலக்கிய தனிநபர்பேச்சுகளில் முன்வைக்கப்பட்டன. எழுபதுகளில் ஹென்றி மில்லர். இவ்வெழுத்துக்கள் ஒவ்வொன்றும் தங்கள் எல்லையை தாங்களே தாண்டி வந்திருக்கின்றன என்பதைக் காணலாம்.

பாலுணர்வெழுத்திற்கும் பாலியல்கவர்ச்சி எழுத்துக்கும் என்ன வேறுபாடு? வெறுமே சற்று நேரம் நமக்கு ஒரு மனச்சித்திரத்தின் இன்பத்தை மட்டுமே அளித்து நின்றுவிடுவது பாலியல்கவர்ச்சி எழுத்து. இலக்கியம் எந்த வகையானாலும் அது நம்மை நாமே அறியச்செய்யும். கூர்ந்து நோக்க வைக்கும். நமக்குள் நம்மைக் கொண்டுசெல்லும். அதுவே முக்கியமான வேறுபாடு.

என் நோக்கில், நல்ல பாலுணர்வெழுத்து என்பது சில இயல்புகள் கொண்டது. அது எந்நிலையிலும் அழகாகவே இருக்கும். பகற்கனவுகளுக்கு மட்டுமே உரிய மென்மையான அழகு அது. தொட்டால் பொலபொலவென உதிர்ந்துவிடக்கூடிய, பிறரிடம் பகிர முடியாத அழகு. எல்லா இலக்கிய ஆக்கங்களைப் பற்றியும் சொல்வதுதான் இது, நல்ல பாலுணர்வெழுத்து குறைவாகவே சொல்லி வாசகனின் கற்பனையைத் தூண்டும். அவனுடைய அந்தரங்கமான கனவுகளில் மட்டுமே அது முழுமையடையும்.

மனத்திரிபு நிலைகளை எழுதுவது பாலுணர்வெழுத்து அல்ல. அதை வேறு வகைமையில்தான் சேர்க்க வேண்டும். மனதை சிதைப்பதும் வதைப்பதும் பாலுணர்வெழுத்தின் இயல்பல்ல. பாலுணர்வெழுத்து இனிய மனக்கிளர்ச்சி ஒன்றை மட்டுமே அளிக்கும். அதன் உச்சியில் ஒரு வகை தனிமையின் துயரையும், இழப்பின் ஏக்கத்தையும் சொல்லி முடியக்கூடும். எப்போதும் அது மூளைக்குள் பரவும் இனிய தென்றலாகவும் கற்பனையில் விரியும் இளவெயிலாகவுமே இருக்கும்.

எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை. வேதங்களில், பைபிளில்.இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தின் இரு சிகரங்களாகவே சொல்ல வேண்டும்.

ஏனென்றால் மனிதர்களுக்கு பாலுணர்வெழுத்து மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிப்படையான இச்சை. இச்சைகள் அனைத்துமே ருசிகள். ருசிகளே அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பனையை பாலுறவுசார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாகவேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர்வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது.

இயற்கை நமக்கு உயிர்த்துடிப்பான வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் அளித்தபடியே உள்ளது. நாம் அமைத்துக் கொண்ட வாழ்க்கை நம்மை ஒவ்வொரு கணமும் விதவிதமான சிறைகளில் அடைத்துக் கொண்டே இருக்கிறது.பருவுடலால் அச்சிறைகளை மீற முடியாதபோது நாம் கற்பனையால் மீறிச் செல்கிறோம். ஒரு வயலினின் ரீங்காரம் கேட்டு நாம் மூடிய கான்கிரீட் அறைக்குள் இருந்துகொண்டே பூத்த வனாந்தரத்தில் உலவுகிறோம். எல்லா கலையும் மனிதனின் கற்பனையின் அடிப்படை அலகான படிமங்களால் ஆனதே.

கற்பனையில் இருந்து எப்படி காமத்தை விலக்க முடியும்? நல்ல பாலுணர்வெழுத்தும் ஓயாத படிமவெளியை உருவாக்கக் கூடியது. சுவர்களை மறையச் செய்யக்கூடியது. நம்மை கட்டற்ற பசுமை வெளியில் நிறுத்தக் கூடியது. அத்தகைய எழுத்துக்கள் தமிழில் இனிவரும் காலத்தில் உருவாகுமென எண்ணுகிறேன். தொழிலின் சிறையில் மனிதர்கள் அடைபடும்தோறும் அதற்கான தேவை அதிகரிக்கும்.

***

என் நண்பரும் வாசகருமான ‘கே.எஸ்’ இந்தியாவுக்கு வெளியே ஒரு பல்கலையில் பணியாற்றுகிறார். அசாதாரணமான வாசிப்பு கொண்டவர். கம்பன் முதல் நாயன்மார்கள் வரை. புதுமைப்பித்தன் முதல் சு.வேணுகோபால்வரை. ஆனால் இலக்கியம் பற்றி எப்போதும் ஒரு ஏளனத்துடன் மட்டுமே எதிர்வினையாற்றுவார். ஏன், எனக்கு தெரிந்து அவர் எதிலுமே நேர்நிலைக் கருத்துச் சொன்னதில்லை. அவர் வாழும் சூழல் என்னால் கற்பனைசெய்யக்கூடுவதல்ல.

ஆனால் அவ்வப்போது நல்ல பாலுணர்வுக் கவிதைகளை அனுப்புவார். எட்டுவரி இருக்கும், ஆனால் ‘நேற்று இரவு முழுக்க அதை எழுதினேன்’ என்பார். இரவெல்லாம் அந்த வரிகளுக்குள் இருந்திருக்கிறார் என ஊகிப்பேன். கவிதை மின்னஞ்சலில் வந்ததுமே தொடர்ந்து திருத்தங்களும் வரும். ஆச்சரியமாக எல்லாப்பாலுணர்வுக்கவிதைகளும் மிக நேரடியான உணர்வு வெளிப்பாடு கொண்டவை.

நேற்றுவந்த இரு கவிதைகள்தான் இக்கட்டுரைக்கே தூண்டுதலாக அமைந்தன.

Forbidden love(Erotica) Nik Helbig

மெய்க்காட்சி

கண்கள் என்று ஏன் பெயர்?
தொட்டுச் சிலிர்க்க வைப்பதனாலா?
குத்தும் கூர்மையினாலா?
நாணிப் புதைந்துகொள்வதனாலா?

என் நாவின்
உரையாடலில்
சிலிர்த்து
விழித்தெழுவதனாலா?

உணர்வுகளின் தழலில்
சுட்ட செம்புபோல்
சிவந்து ஒளிர்வதனாலா?

என் இனிய
அதிகாலைத் துயிலில்
மெதுவாகத் தொட்டு
வருடிச் செல்வதனாலா?

என் துயரில்
அமுதூட்டுவதனாலா?

அவை
யான்நோக்காக்கால்
நிலம் நோக்கும்
நோக்குங்கால்
தான் நோக்கி
மெல்ல நகும்.

Katsushika Hokusai, Tako to ama 蛸と海女 (Dream of the Fisherman’s Wife)

புலியாவது

பூனைக்குட்டிகளை உங்களுக்குப் பிடிக்குமா?
பூனைக்குட்டிகள் மிக அழகானவை
கரிய பளபளப்புள்ள மென்மயிர்.
அல்லது இளம்பொன்னிறம்.

வெம்மையானவை.
அடைக்கலம் தேடுபவை.
அன்பின் வருடலுக்கு
நெகிழ்ந்து கொடுப்பவை.
மழைக்குப்பின் எழும்
இளம்புல்பரப்பு போல
அவ்வளவு மென்மையானவை.
உயிர்துடிப்பானவை.

செந்நிறச் சிறுவாயுடன்
இளஞ்சிவப்புச் சிறு மூக்குநுனிபுதைத்து
தன்னுள் தான் ஒடுங்கி
தூங்குபவை.
பூனைக்குட்டிகள் எப்போதும்
பதுங்கியே இருக்கின்றன.

பூனைக்குட்டி சிலிர்தெழுவதைக்
கண்டிருக்கிறீர்களா?
மூச்சு ஒலிக்க
கண்கள் ஒளிர
வாய் திறந்து சீறி
கூர் உகிர்கள் எழுந்து வர?

புலி பதுங்குவது பாய்வதற்கே
பூனையும் புலியே.
மென்மையான அழகான
கைக்கடக்கமான
நல்ல புலி.

[மறுபிரசுரம் /முதல் பிரசுரம், 2008]

முந்தைய கட்டுரைகுமரியும் குருவும்
அடுத்த கட்டுரைதிருமணம்