ஏற்காடு

ஏற்காட்டிலிருந்து கோவை, பாலக்காடு ,எர்ணாகுளம், திருவனந்தபுரம் என அலைந்து இன்றுதான் வீடு திரும்பினேன். ஆகவே தாமதமாக ஒரு நினைவுப்பதிவு. நிகழ்ச்சிகளைப்பற்றிப் பங்கெடுத்தவர்கள் எழுதிவிட்டார்கள். இது சில விளக்கங்கள், சில எண்ணங்கள்.

முதலில் இந்நிகழ்ச்சிக்கு வருகைதர ஆசைப்பட்டு இடமில்லாமலானவர்கள் எழுதியிருந்ததற்குப் பதில். இந்த நிகழ்ச்சியை ஒரு இனிய நட்புக்கூடலாக நடத்தவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இலக்கியம் என்பது நட்பார்ந்த விவாதங்கள் மூலம் இனிய அனுபவமாக மாறக்கூடியது என்பதையும் விவாதங்கள் வாசிப்பைக் கூர்மையாக்கி ரசனையை செழுமைப்படுத்துகின்றன என்பதையும் எப்போதும் சொல்லிவந்திருக்கிறேன்.நமக்குப் பொதுவாக அத்தகைய நட்புகள் நம் சூழலில் அமைவதில்லை. மேலும் அப்படிப்பட்ட நட்பை அமைத்துக்கொள்ளும் அளவுக்கு நமக்கு இன்று அலுவலக, தொழிற்சூழல்கள் இல்லை.

ஆகவேதான் இணையக்குழுமம். அக்குழுமம் வழியாக உரையாடிக்கொண்டே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில்நேரில்சந்திக்கவேண்டியிருக்கிறது. ஆகவேதான் கூட்டம். இங்கே நிகழ்வது தீவிரமான கொள்கை விவாதமோ கருத்துமோதலோ அல்ல. ரசனைப்பகிர்வுதான்.

இதற்கு எண்ணிக்கைக்கட்டுப்பாடு உண்டு. முதல்காரணம் பெரிய கூட்டங்களை அமைக்குமளவுக்கு எங்களுக்கு நிதி மற்றும் அமைப்பு வசதிகள் இல்லை என்பதே. நாங்கள் வெளியே நிதி வாங்க விரும்பவில்லை. செலவைப்பகிரும்போது அது பெருந்தொகையாக இல்லாமலிருப்பது பலருக்கும் அவசியமானது என அறிந்திருக்கிறோம். செலவை அளிக்கமுடியாதவர்களுக்குரிய தொகையை அமைப்பாளர்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதும் விதி. அமைப்பாளர்கள் தங்கள் அன்றாட அலுவல்களுக்கு அப்பால் சுய ஆர்வத்தால் இதைச்செய்கிறார்கள். இதற்கு ஓர் எல்லை உள்ளது

இந்தக் கூட்டம் ஒரே கட்டிடத்தில் நடந்தது. அங்கே 50 கட்டில்கள்தான். 20 பேர் தரையில் மெத்தைபோட்டுப் படுத்துக்கொள்ளவேண்டும் என எழுபதுபேர். வருகையாளர்கள் அதிகரித்தமையால் மேலும் சில அறைகள் வெளியே எடுக்க நேர்ந்தது. பெண்களுக்குத் தனி இடம் ஒதுக்கநேர்ந்தது. ஆகவே அதிகபட்சம் 80 பேர். கூட்டம் குழுமத்தில் அறிவிக்கப்பட்டபோதே 40 பேர் சேர்ந்துவிட்டனர். மிச்ச இடங்கள் ஒரே நாளில் சேர்ந்துவிட்டன. ஆகவே பிறகு கேட்டவர்களைச் சேர்த்துக்கொள்ள முடியவில்லை.

அடுத்த வருடம் இன்னும் கொஞ்சம் ஆட்களைச் சேர்க்கலாம். ஆனால் அதற்கான் ஏற்பாடுகள் அமையவேண்டும். இடம். அமைப்பு. நிதி. பார்ப்போம். பங்கெடுக்கமுடியாதவர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்.

ஊட்டியில் நான் குருநித்யா ஆய்வரங்கம் என்றபேரில் இலக்கிய விவாத நிகழ்ச்சியை ஆரம்பித்தது 1995 டிசம்பரில். குரு இருந்தபோதே ஏழு சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.நித்யா சமாதியான பின்னர் குற்றாலம் , ஒகேனேக்கல் திற்பரப்பு கன்யாகுமரி ஆலப்புழா மற்றும் ஊட்டியிலாக தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்து வந்திருக்கின்றன. சிலவருடங்களில் நான்கு சந்திப்புகள் கூட நடந்திருக்கின்றன. இப்போது வருடம் இரு நிகழ்ச்சிகள் குறைந்தபட்சம் நடத்துகிறோம்.

தமிழகத்தில் நெடுங்காலம் தொடர்ச்சியாக நடந்துவரும் இலக்கியக்கூடல் நிகழ்ச்சி என்றால் இதுதான் என்று சொல்வேன். இத்தனைகாலம் இது நடக்கும் என எப்போதும் எதிர்பார்த்ததில்லை. இதை ஒருங்கிணைத்து நடத்திய நிர்மால்யா , அரங்கசாமி போன்றவர்களே நன்றிக்குரியவர்கள்.

இம்முறை ஈரோடு நண்பர் விஜயராகவன் முழுப்பொறுப்பு எடுத்து நிகழ்த்தினார். அவருக்குச் சேலம் பிரசாத்,சேலம் சதீஷ், கிருஷ்ணன் ஈரோடு ஆகியோர் உதவினர். ஈரோட்டு நண்பர்கள் விஸ்வம், தாமோதர் சந்த்ரு ஆகியோரின் பேருதவிகளுக்கு நானும் நண்பர்களும் நன்றி சொல்லியாகவேண்டும்.

*

ஏற்காடு கூட்டம் நடந்த இடம் நூறு ஏக்கர் அளவிலான தோட்டத்துக்குள் இருந்த செட்டியார் பங்களா என்ற கட்டிடம். நான்கு பெரிய கூடங்களும் ஒரு முகப்புக்கூடமும் கொண்டது. ஐம்பது படுக்கைகள். அருகே இருந்த சிறிய கட்டிடத்தையும் எடுத்துக்கொண்டோம்.

28 ஆம் தேதி அதிகாலை நானும் அஜிதனும் சேலம் சென்றிறங்கினோம். முந்தையநாளே நிறையபேர் வந்துவிட்டதனால் சேலத்தில் வானவன் மாதேவி ஏழிசை வல்லபி வீட்டில் எல்லாரும் கூடியிருந்தனர். கிட்டத்தட்ட இருபத்தைந்துபேர். எல்லாருமே இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். நானும் விடியவிடிய பேசிக்கொண்டிருந்துவிட்டு காலை ஆறுமணிக்கு ஏற்காடு கிளம்பினேன்.

ஏற்காடு பங்களாவிலேயே பல்தேய்த்துக்குளிர்த்தோம். காலை பத்துமணிக்குள் அனைவரும் வந்துவிட்டார்கள். கடைசியாக வந்தவர்கள் முதல் அமர்வு கம்பராமாயணம். நாஞ்சில்நாடன் கனடா பயணத்தின் களைப்புடன் இருந்தார். முதலில் சென்றமுறை அவர் நடத்திய கம்பராமாயண பாலகாண்டத்தின் முக்கியமான பகுதிகளை வாசித்துத் தொடர்ச்சியை உருவாக்கியபின் ஆரண்ய காண்டத்தை ஆரம்பித்தார்.


நாஞ்சில்நாடனின் கம்பராமாயண வாசிப்பின் தனிச்சிறப்பு அது வழக்கமான கம்பராமாயண அறிஞர்களின் இலக்கியப்பேருரை அல்லது விளக்கவுரை போன்று கம்பனின் பொதுவான நயங்களைச் சுட்டிக்காட்டுவதல்ல என்பதுதான். அது தமிழின் தலைசிறந்த எழுத்தாளன் ஒருவனால் உருவாக்கப்படும் ரசனையுலகம். நாஞ்சில்நாடன் முதலில் கம்பனில் உள்ள உணர்ச்சிகரமான புனைவுத்தருணங்களைத் தொட்டுக்காட்டுகிறார். விளக்குவதில்லை, விவரிப்பதில்லை. சுட்டிக்காட்டுகிறார். அதன் முக்கியமான செய்யுட்களை மட்டும் வாசித்துப் பொருள்கொண்டு அதன் கலையழகை சுட்டிக்காட்டுகிறார். பாடல் சிலமுறை வாசிக்கப்படுகிறது.

இந்தமுறை கம்பன் பாடல்களில் உள்ள நுட்பங்களை மட்டும் தொட்டுக்கொண்டு மேலே செல்லக்கூடியது. அனைவரும் அறிந்தவற்றை முற்றாகவே விட்டுவிட்டுச் செல்கிறது. கூடியிருப்பவர்கள் அனைவரும் இலக்கிய ரசனையுள்ளவர்கள் என்ற முடிவிலிருந்து உருவாகும் ரசனை இது. இன்றைய இலக்கியவாசகன் இத்தகைய வாசிப்பு வழியாகவே கம்பனுக்குள் நுழைய முடியும். தமிழறிஞர்கள் வழியாக அவன் கம்பனுக்குள் நுழைந்தால் சிதறிவெளியேறவேண்டியிருக்கும்.

மதிய உணவுக்குப்பின் சிறுகதை அமர்வு, ஒரு விரிவான வரலாற்றுச்சித்திரம் ஒரேவீச்சில் மனதில் வரவேண்டும் என்ற நோக்கம் இந்தக் கதைவிவாதங்களை அமைப்பதில் இருந்தது. இரண்டே நாட்களில் நான்கு அமர்வுகள் வழியாக உலகச்சிறுகதையின் வளர்ச்சி பரிணாமச்சித்திரம் வாசகன் மனதில் எழவேண்டும். ஆகவே முதலில் உலக இலக்கியத்தின் ஆரம்பகாலச் சிறுகதைகளில் ஒன்றை ராஜகோபாலன் தேர்வுசெய்து முன்வைத்து வாசித்தார்.

மாப்பசானின் ’நான் பித்தனா?’ உலக இலக்கியத்தின் ஆரம்பகாலக் கதைகளுக்கு சரியான உதாரணம். அதே வகையான கதைகளை உலகச்சிறுகதையின் ஆரம்பகாலப்படைப்பாளிகள் பலரும் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக கூல்ரிட்ஜ் முதலிய பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களில் அதே கதைக்கரு வெவ்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நேரடியான உதாரணம் என்றால் ராபர்ட் பிரவுனிங்கின் “Porphyria’s Lover” என்ற புகழ்பெற்ற கவிதையைச் சொல்லலாம். தமிழில் புதுமைப்பித்தனும் இதே வகையான கருவை எடுத்து எழுதியிருக்கிறார். கொன்றசிரிப்பு இதேவகையான கதை. புதுமைப்பித்தனின் இரு கதைகளில் இதே கதைக்கரு உள்ளது.

இந்தக்காலகட்டத்தில் ஏன் இத்தகைய ஒரு பொதுக்கதைக்கரு உலகமெங்கும் புழங்கியது, அதன் வேர் என்ன என்ற அளவில் விவாதம் நீண்டது. அக்கதையின் வெவ்வேறு தளங்கள் விவாதிக்கப்பட்டன. நான் பித்தனா கதையின் நாயகனின் பிறழ்ந்த மனநிலை, அவன் அந்தக்குதிரையுடன் கொள்ளும் மனநிலை, ஐரோப்பிய மரபில் குதிரை எப்படி ஈக்கஸ் என்ற ஆண்மைத்தெய்வமாகக் கருதப்பட்டது என விரிந்தது விவாதம்.

அடுத்தகாலகட்டத்தைச் சேர்ந்த ரேமண்ட் கார்வரின் ‘வீடருகே மாபெரும் நீர்த்தேக்கம்’ என்னும் கதையை முன்வைத்து விஜயராகவன் பேசினார். அந்தக் கதை பேசுவது தார்மீகத்தின் கூட்டுப்பொறுப்பு பற்றி. அதை ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளும் விதங்களில் உள்ள பார்வைமாறுபாடுகளைப்பற்றியும் அந்தச் செயல் எழுப்பும் அடிப்படையான அறக்கேள்விகள் பற்றியும் விரிவான விவாதங்கள் நிகழ்ந்தன. வீட்டருகே நீர்ப்பரப்பு என்ற தலைப்பின் பொருளாக இரு கோணங்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்று பெருவெள்ளம் காத்திருக்கிறது என்பது. இன்னொன்று வெள்ளம் என்பது மேலைமரபில் கருணை. கருணைப்பெருக்கு ஒவ்வொருவரின் இல்லத்துக்கு அருகிலும் உள்ளது என்பது.

மூன்றாவது கதை நாதன் இங்கிலாண்டரின் விதவைகளுக்கு இலவசமாக பழங்கள். அந்தக்கதை பற்றி சித்தார்த் பேசினார். அக்கதை இரு தளங்களில் முக்கியமானது என்றார். ஒன்று, அது ஒரு மனிதனின் குரூரம் மற்றும் உணர்ச்சிவேகம் ஆகியவற்றை அவன் கோணத்தில் அவனுடைய இறந்தகாலத்தைக்கொண்டு பார்க்கவேண்டும் என்று பேசுகிறது. மனிதர்கள் ஒரு கணத்தில் வெளிப்படுபவர்கள் அல்ல. அதுவரை பரிணாமம் கொண்டு வந்திருப்பவர்கள் என்று பார்க்கவேண்டும். இன்னொன்று அது இஸ்ரேலின் அரசியலை அதன் கோணத்தில் பார்க்கவைக்கிறது

ஆனால் அந்தக்கதைமீது மிகமிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துவந்தன. ஒருவன் [அல்லது ஒரு தேசம்] கொடூரமான வாழ்க்கையைச்சந்தித்தான் என்பது அவன் அதார்மீகமாக, குரூரமாகச் செயல்படுவதற்கான நியாயப்படுத்தலாக ஒருபோதும் ஆவதில்லை. இங்கிலாண்டரின் கதை அந்த நியாயப்படுத்தலைச் செய்கிறது. அது ஒருநிதானமான தந்தையால் களங்கமில்லாத மகனுக்குச் சொல்லப்பட்டு மகனால் ஏற்றுக்கொள்ளப்படுவது வழியாக அந்தக் குரூரம் நியாயப்படுத்தப்படுகிறது

அமெரிக்க யூத ஊடக மேலாதிக்கம் யூதக்கொடூரங்களை உலகத்தின் முன் நியாயப்படுத்தும்பொருட்டு திரைப்படம் இலக்கியம் என எல்லா ஊடகங்கள் வழியாகவும் அரை நூற்றாண்டாக நடத்திக்கொண்டிருக்கும் பிரச்சாரத்தின் பகுதியாக எழுதப்பட்டு முன்னிறுத்தப்படும் கதை அது என்ற விமர்சனம் எழுந்து வந்தது.. அது கச்சிதமாக எழுதப்பட்டது, தன்னிச்சையான கலையமைதி கொண்டது அல்ல. அக்கதையின் நாயகனின் மனதைப்புரிந்துகொள்ள முடிகிறது என்றவகையிலும் கருத்துக்கள் வந்தன.

பின்பு நண்பர்களுடன் அருகே இருந்த பகோடா பாயிண்ட் என்னும் இடம் வரை ஒரு மாலைநடை. அந்த இடம் ஒரு சுற்றுலா மையமாகத் திட்டமிடப்பட்டது. பின்பு கைவிடப்பட்டது. பல கட்டிடங்கள் பழுதடைந்து நின்றன. அந்த மலைமுனையின் சிறப்பு கீழே ஒரு சிறிய மலைக்கிராமத்தை ஒட்டுமொத்தமாக ஒரே பார்வையில் பார்க்கமுடிந்தது என்பதுதான்

மாலையில் மீண்டும் சிறுகதை விவாதம். இம்முறை இந்தியச்சிறுகதையின் ஆரம்பகால முயற்சி ஒன்று. பாரதி மொழியாக்கம் செய்த தாகூரின் ஆசாபங்கம் என்னும் சிறுகதை. கனகச்சிதமான வடிவம் கொண்ட கதை அது. அந்தக்கதையை மொழியாக்கம் செய்த பாரதி கடைசிவரை சிறுகதை என்ற இலக்கிய வடிவைப் புரிந்துகொள்ளவில்லை, கதைகளைத்தான் அவர் எழுதினார். தாகூரின் கதை பல வகையான உள்ளோட்டங்களைக் கொண்டது. ஆசாரமான இலட்சிய உருவம் ஒன்றின் உடைவைப் பற்றிய அக்கதை பின்னாளில் அவரால் கோரா என்ற பெருநாவலாக எழுதப்பட்டது.

ஆசாபங்கம் கதையின் பல்வேறு தளங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் முதல் சுதந்திரப்போர் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம். ஒரு இலட்சியவடிவின் சரிவு அளிக்கும் அதிர்ச்சி. அதனூடாக உருவாகி வரும் வாழ்க்கைச்சித்திரம் என.

அடுத்த இந்தியக்கதை சந்தனுவின் பட்சிகள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கதை இது. சகரியா எழுதிய இக்கதையை முன்வைத்து சுனீல்கிருஷ்ணன் பேசினார். அந்தக்கதையில் சந்தனுவின் இழப்பு, அவன் தேடும் உண்மையான காரணம், கதைமுடிவில்தான் வருகிறது. அந்தக்கதை தன்னைத் தனிப்பட்ட முறையிலும் வெகுவாகக் கவர்ந்தது. தான் தன் தந்தையை இளவயதில் இழந்தது அதற்குக்காரணம் என்றார் சுனில்

சந்தனுவின் பட்சிகள் கதையின் படிமங்களும் அதன் எளிய மொழி குழந்தைகளின் அகவுலகை சகஜமாக சித்தரிக்கும் விதமும் பேசப்பட்டன. சகரியா ஓர் இடுங்கிய ஸ்தலம், ’தேடிப்போகவேண்டியதில்லை’ போன்ற கதைகளில் இதே கதைக்கருவைக் கையாண்டிருக்கிறார். இந்தக்கதையின் முக்கியத்துவம் இது குழந்தையின் அகவுலகமாக விரிய முடிந்திருப்பதே என்று சொல்லப்பட்டது

இரவு ஒன்பது மணிக்கு அமர்வுகள் முடிந்தன. சிறுகதை அமர்வுகளில் ஏராளமான பங்கேர்பு இருந்தது. தொடர்ந்து பேச்சுக்களை மட்டுப்படுத்தி அனைவரையும் பேசவைக்கவேண்டியிருந்தது. கதைகள் முன்னரே கொடுக்கப்பட்டிருந்தமையால் எல்லாரும் தங்கள் கருத்தைச் சொன்னார்கள். விவாதங்கள் வழியாகத் தொடர்ச்சியாக முன்வந்த பல்வேறு வாசிப்புகள் கதைகளைப் பல கோணங்களில் திறந்து திறந்து விரித்துக்கொண்டே சென்றன.

இத்தகைய விவாதத்தின் பயனே அதுதான். நாம் கதைகளை வாசிக்கையில் நம் ஒரு கோணம் மட்டுமே நம்மிடம் உள்ள்து. நம் வாசிப்பு எத்தனை நுட்பமானதாக இருந்தாலும் அதன் எல்லை குறுகியதே. நமக்குச்சமானமான பலபேரின் வாசிப்பை அறிகையில் நம் வாசிப்பு பலமடங்கு பெரிதாகிறது. ஆனால் அதற்குப் பல வருடங்களாலாகலாம். இத்தகைய விவாதங்கள் அதை சில மணிநேரத்தில் சாதித்துவிடுகின்றன

விவாதங்களை முழுமையாகப் பதிவுசெய்யவேண்டாம் என்பது எங்கள் கொள்கை. ஏனென்றால் பல வாசகர்கள் தங்கள் கருத்து பதிவாவதை விரும்புவதில்லை. அந்த மறைவிலேயே அவர்கள் தீவிரமாகப் பேசமுடிகிறது. பலமணிநேர விவாதங்களின் மெல்லிய கோட்டுச்சித்திரமே இக்குறிப்பிலும் உள்ளது.

இரவில் பன்னிரண்டுமணி வரை இசை. சுரேஷ்,சங்கீதா ஸ்ரீராம் இருவரும் பாடினர். சுரேஷ் எங்கள் வழக்கமான பாடகர். சங்கீதா புதிய வரவு. இருவருமே தொழில்முறைப்பாடகர்களுக்கிணையாகப் பாடினார்கள். இலக்கிய விவாதங்களின் கனத்தை இசை மிக எளிதாக சமன்செய்துவிடுகிறது. ஊட்டி அளவுக்குக் குளிர் இல்லாத ஏற்காட்டின் இரவில் காட்டின் ரீங்காரம் வெளியே ஒலிக்க அந்த இசை இரவு நீண்டு கொண்டே சென்றது

[மேலும்]

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைஅறம்,மனிதர்கள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைசந்தனுவின் பறவைகள்- பால் சக்காரியா