(குறிப்பு : தசைசிசைவு நோயால் பாதிப்பட்ட சகோதரிகள் வானவன் மாதேவி,இயலிசை வல்லபி இருவரும் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் ஆதாவா டிரஸ்ட் என்ற அமைப்பை சேலத்தில் நடத்திவருகிறார்கள் , (இவர்களைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய பதிவு) ஏற்காடு சந்திப்பு குறித்து வானவன் மாதேவி எழுதிய குறிப்பு )
இலக்கியம் ஏன் என்னை வசீகரிக்கிறது? என்ற கேள்வி அதற்கான பதிலை மெல்ல
உணரும் தருணத்தில்தான் வந்திருக்கிறது . வாழ்வின் எல்லாப்பக்கங்களும்
மூடிக்கொண்ட பிறகும் தளராமல் வெளிச்சம் தேடும் கண்கள் என்னுடையவை. புவி
தனக்குத் தேவையானதைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் பெரும்பாலும்
தோற்பதில்லை. ஆனால் மனிதம் எதிர்மாறாக இருக்கிறது. அன்பை எளிய
கோபத்தினால், ஏமாற்றத்தால், சுயநலத்தால் தூக்கி எறிய முடிகிறது. அன்பு
அதன் வலிமையின் மூலம் இவற்றை தூக்கி வீசிட சதா முயன்றாலும் ego ஒரு
மாபெரும் தடையாக இருக்கிறது. அதைத் தகர்க்கும் , தவறென உணர்த்தும் சக்தி
இலக்கியத்திற்கே இருக்கிறது. நான் பெரும்பாலும் வாசிப்பில் உணர்வது
மனிதர்கள் எத்தனை விதமான முகங்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படை மனநிலை
பொதுவானதுதான் என்பதே. அது ஒருவரை ஒருவர் தாண்டிச்செல்லும் உந்துதல்
என்பதே. அதை இந்த சந்திப்பில் நிகழ்ந்த உரையாடலிலும், பழகிய, பழகாத
பெரும்பாலான நண்பர்களிடமும் உணர்ந்தேன். :) எனது இந்த புரிதலில் ஏதேனும்
பிழை இருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.
பொதுவாக நாங்கள் புத்தக வாசிப்பின் மகிழ்ச்சியை எங்கள் இருவருக்குள்
மட்டுமே பகிர்ந்துகொள்வோம். மெல்ல மெல்ல வட்டம் பெருகி வந்து இப்போது
பகிர்தலின் மகிழ்வை இன்னும் அதிகரித்திருக்கிறது. கருத்து வேறுபாடுகளைக்
கூட ஒரு ஆரோக்கியமான முறையில் பகிர்ந்துகொள்வது என்பதுதான்
இலக்கியத்தில் மிக முக்கியமானது எனக்கருதுகிறேன். இதன் மூலம் வாசிப்பின்
பல்வேறு படிகளைக் கடக்க இயல்கிறது. அடிப்படை வாசிப்பில் இருந்து மேலே செல்ல
ஒரு படி இருக்கிறது என்பதையே இதுபோன்ற விவாதங்கள்தான் உணர்த்துகின்றன.
இந்நிகழ்வில் எங்கள் பங்கேற்பை சாத்தியப்படுத்திய விஜராகவன் சார்,
பிரசாத் இருவருக்கும் நன்றிகள் பல .
அடுத்து, எல்லாக் கதாபாத்திரங்களிலும் என்னைப் பொருத்திப்பார்க்கும் மனநிலை
இருக்கிறது. அதனாலேயே பெரும்பாலும் உணர்வுரீதியில் பாதிப்புக்கு
உள்ளாக்கும் எழுத்துக்களே எனது தேர்வாக இருக்கிறது. பொதுவாக மற்றவர்களைப்
புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கு அதிகம் என்ற இறுமாப்பு இருக்கிறது. அது
அடிக்கடி அடி வாங்கினாலும் மீண்டும் துளிர்க்கிறது. அதற்கு முக்கிய
காரணம் வாசிப்பே. அதுதான் மீண்டும் மீண்டும் மனிதர்களைப் புரிந்துகொள்ள
உதவுகிறது. மனிதர்களைப் புரிந்துகொள்வது என்பது சமூகத்தைப்
புரிந்துகொள்வதன் அடிப்படைதானே. உலகை சுற்றிப்பார்க்காமலே
புரிந்துகொள்ள எளிய வழி இலக்கிய வாசிப்பு என்பது என்னளவில் மறுக்கமுடியாத
உண்மை. அதை சாத்தியப்படுத்திய ஜெயமோகன் சாருக்கும், எஸ்ரா சாருக்கும்
எப்போதைக்குமான நன்றிகள் .
ஏற்காட்டில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கியக் கூடலில் பங்கேற்ற ஜூன்
28,29,30 ஆகிய நாட்கள் என்வாழ்வின் மறக்க இயலாத மூன்று நாட்களாக
அமைந்தது. இதில் பங்கேற்க வெளியூரில் இருந்து வந்தவர்கள் எங்கள் வீட்டில்
இருந்து ஏற்காடு செல்ல ஏற்பாடு. எனவே வியாழன் மாலையில் இருந்தே களைகட்டத்
துவங்கிவிட்டது. விவாதத்தை அப்போதே துவக்கிவிட்டர்கள். நாங்கள் இரவில்
விழித்திருப்பது என்பதில் அப்பா, அம்மாவுக்கு விருப்பமில்லை எனவே
படுத்துக்கொண்டோம். அதிகாலை எழுந்ததும் ஜெயமோகன் சாருடன் தேவதேவன் சாரும்
வந்திருப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சி பிடிபடவில்லை. பிறகு அனைவரும்
கிளம்பினார்கள். நாங்கள் இறுதியாக சதீஷ் காரில் கிளம்பினோம். சரியாகப் போய்
சேர்ந்ததும் உணவு தயாராக இருந்தது.
முதலில் நாஞ்சில்சாரின் “கம்பராமாயண அமர்வு”. ஓரளவுக்குக் கம்பராமாயணம் குறித்து
அறிந்திருந்ததாலும், தெரியாத பல புதிய பாடல்களுக்கு அருமையாக விளக்கம்
கொடுத்தவிதமும் ஆர்வமாகக் கேட்க முடிந்தது. கற்றது கையளவு, கல்லாதது
உலகளவு.
சுசிலா அம்மா அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்வான அனுபவம்.
பிறகு மதியம் சிறுகதைகள் குறித்த வாசிப்பு அனுபவ பகிர்வு. மிகவும் புதிய
அனுபவம். எனவே கூர்ந்து கவனிக்கவைத்தது.பிறகு பாட்டுக்கச்சேரி ஆரம்பம்.
சுரேஷ் சார் அருமையாகப் பாடினார். மிமிக்ரி வேறு வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
இரவு பத்துமணி ஆனதும் ஜெயமோகன் சாரே நீங்கள் போய்த் தூங்குங்கள்’ என்று அனுப்பிவிட்டார்.
அடுத்தநாள் மீண்டும் மீதம் இருந்த கம்பராமாயணப் பாடல்களும் விளக்கமும்
நாஞ்சில் சார் தொடர்ந்தார் பிறகு ஜடாயு சார் தொடர்ந்தார்.
பிறகு மீண்டும் சிறுகதைகள் குறித்த பகிர்வு. இறுதியாகக் கவிதை வாசிப்பு.
அன்றைய நாள் மிகவும் நிறைவாக இருந்தது. இரவு மீண்டும் பாட்டுக்கச்சேரி
ஆரம்பமானது. அன்று ராம் சாரின் குரல் வேறு சேர்ந்து எங்களை எங்கேயோ
கொண்டு சென்றுவிட்டது. பிறகு தங்குமிடத்திற்கு எதிரே தீ மூட்டி அதன்
அருகில் அமர்ந்து பாட்டு கேட்டோம். வெகுநேரம் நெருப்பையே
பார்த்துக்கொண்டிருந்தேன். பொன்னிறத் தீயின் அழகு , அதன் நடன அசைவு தரும்
வடிவங்கள் பேரழகு. அடுத்த நாள் காலை முதல் மதியம் வரை கு. ஞானசம்பந்தம்
அவர்களின் வில்லி பாரதம். அத்துடன் ஒரு பெருநிகழ்வு முடிவடைந்தது.
பிரிவின் நிழல் மூடத்துவங்கியது. ஆம், வெளிச்சத்தின்பின் நிழல் விழத்தானே செய்யும.