ஏற்காடு இலக்கியமுகாம் – சுனில் கிருஷ்ணன்

ஏற்காடை வந்தடைவது வரை ஊட்டி இல்லையே என்றொரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஊட்டியில் என்ன இருக்கிறது? ஓரளவு ஒத்த மனமுடைய நண்பர்களின் கூடுகை அது எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது என்றுணர்த்தியது இவ்வாண்டு ஏற்காடு நிகழ்வு. மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த விஜயராகவன் சார், பிரசாத், சதீஷ் போன்ற நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உணவு ஏற்பாடு அற்புதம்.

இந்த ஆண்டு புதிய நண்பர்கள் பலரின் அறிமுகம் கிட்டியது. மகிழ்ச்சியும் ஆரவாரமும் ஆண்டுக்காண்டு கூடி வருவதாகவே தோன்றுகிறது. பிரகாஷ் சங்கரன், தனா, விஜய், சென்னை அரவிந்த், கே.ஜெ.அசோக், சங்கீதா ஸ்ரீராம், செல்வா ஜெயபாரதி, டாக்டர்.வேணு, வானவன் மாதேவி, வல்லபி, எனப் பல நண்பர்களை முதன்முறையாக சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் சொல்வது போல், இத்தகைய கூட்டங்களில் உள்ள off stage உரையாடல்களும், நிகழ்வுகளும் முக்கிய நிகழ்வுகளின் அளவுக்கே வசீகரமாக இருந்தன. ஒவ்வொருவரிடமும் இரண்டு மூன்று முறை விடைபெற்றுக் கிளம்புவதற்கே எனக்கு இருபது நிமிடங்களுக்கு மேல் பிடித்தது.

நிகழ்வுகளைப் பொறுத்தவரை நாஞ்சிலின் கம்ப ராமாயண வகுப்புடன் துவங்கியது முகாம். மதியம் உலக சிறுகதைகள் அமர்வு நடந்தது. இரவு இந்திய சிறுகதைகளுக்கான விவாத அரங்கு. சிறுகதை விவாதங்களில் பரவலான பங்கேற்பு இருந்தது. தொடர் உரையாடல்கள் புதிய கோணங்களைக் காட்டின. அஜிதன் அவ்வப்போது முக்கியமான அவதானங்களை வைத்தபடி இருந்தான். இரண்டாம் நாள் காலை நாஞ்சிலாரும், ஜடாயுவும் கம்பன் பாடம் சொன்னார்கள். மதியம் தமிழ் சிறுகதை விவாத அரங்கு நடந்தது. மீண்டும் மாலை இரண்டு கதைகளும், பின்னர் கவிதை அரங்கும் இரவு பத்து மணிவரை நீடித்தன. மூன்றாம் நாள் முனைவர் கு.ஞானசம்பந்தம் அவர்களின் வில்லி பாரதம் அமர்வு நடந்தது.

ஜடாயு நிகழ்வு முழுவதும் நல்ல ஃபார்மில் இருந்தார். கம்பன் பாடல்களுக்குப் பொருள் சொல்லி விளக்குவதில் அவருக்கு ஒரு லாவகம் கூடியிருப்பதாக பட்டது, கிருபானந்த வாரியார் மிமிக்ரி, இரவு பாடல்கள் பாடுவது, ராகம் கண்டுபிடிப்பது என அசத்திக் கொண்டிருந்தார். இரண்டாம் நாள் இரவு பத்து மணிக்குத் தொடங்கிய இசை நிகழ்வு இரவு முழுவதும் நீண்டு காலை நான்கு மணிக்கு நிறைவுக்கு வந்தது. ராம், சுரேஷ் என இரு ஆஸ்தான வித்வான்கள் எப்போதும் போல் அச்சத்தினாலும், இந்த முகாமின் கண்டுபிடிப்பு சங்கீதா ஸ்ரீராம் என சொல்வேன். அந்த அத்துவான இரவில் ராமை பிரம்ம ராட்சதன் பிடித்துக்கொண்டான் என்று தோன்றியது. ஆற்றல் ஊற்று வற்றாமால் இசையாக அங்கு சுரந்து கொண்டே இருந்தது. பிரகாஷும், விஜயும், சுரேஷும், அருணாவும் அந்த இசை அனுபவத்தை உச்சத்தை நோக்கி இட்டுச் சென்றார்கள். அந்த இரவு ஒரு மறக்க முடியாத அனுபவம்.

சந்தித்திராவிட்டாலும் விட்ட இடத்திலிருந்து தொடர்வதைப் போல். அன்பை வாரி இறைக்கும் அற்புதமான நட்புவட்டம். இந்த அன்பும் நட்பும் எப்போதும் நீடிக்க வேண்டும் என உண்மையில் மனமாரப் பிரார்த்தித்து கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் கட்டுரையை வாசித்த பிறகு ஏதோ ஒரு பரீட்சையில் தேர்ந்த உணர்வு மேலிட்டது. இன்னும் வாசிப்பதற்கு எத்தனை இருக்கிறது! செய்வதற்கு எத்தனை உள்ளது எனும் மலைப்பையும் செயலூக்கத்தையும் பெற்று திரும்பி இருக்கிறேன். காலை, மாலை உலாக்களின் போதும், விவாதங்களின் ஊடேயும் ஜெ எழுத்தைப் பற்றியும் வாசிப்பைப் பற்றியும் சொன்னவற்றை அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.

சுனில் கிருஷ்ணன்.
முந்தைய கட்டுரைஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் – 2013
அடுத்த கட்டுரைஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி