தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்

‘பேரிலக்கியமென்பதன் இலக்கணங்களில் முக்கியமானது அதை மரபின் அடையாளமாக மரபுவாதிகளும் மாற்றத்தின் அறைகூவலாக புதுமைவாதிகளும் ஒரேசமயம் முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்’ நித்ய சைதன்ய யதியின் ஒரு வரி. அது தாந்தேவுக்கு மிகவும்பொருந்தும் என்பார். கம்பனுக்கு இன்னும்கூட. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் யாரெல்லாம் கம்பனை விரும்பிக்கற்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் வியப்பேற்படும். மரபார்ந்த கவிராயர்களுக்கு அது தமிழின் உச்சம். ஆனால் புதுமரபு சமைத்த பாரதிக்கும் அது முன்னுதாரணமான நூல்தான்.முடிவின்மை என்பதை எட்டமுடிந்த தமிழ் பேரிலக்கியம் அது.

மரபான முறையில் கம்பனை வாசித்து நயம்பாராட்டல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தபோது தமிழில் புதிய இலக்கியம் உருவாக அடித்தளமிட்டவரான வ.வே.சு.அய்யர்தான் கம்பனை நவீன நோக்கில் ஆராய்வதற்கான தொடக்கத்தை அளித்தார்.ஆங்கிலத்தில் கம்பனைப்பற்றி அவர் எழுதிய நீளமான ஆய்வுமுன்னுரை கம்பனை வழக்கமானமுறையில் ஒரு பக்திக்கவிஞர் என்ற நோக்கில் இருந்து விடுவித்து உலக இலக்கியத்தின் பேரிலக்கியவாதிகளில் ஒருவராகக் காட்டியது. கம்பனின் அழகியலை உலகளாவிய செவ்வியல்கூறுகளாக விவரித்து வழிகாட்டியது.

அதன்பின் இந்த அரைநூற்றாண்டில் மரபுவாதிகளும் மாறுதல்வாதிகளும் ஒரேசமயம் கம்பனைத் தங்களவராக எண்ணி வாசித்திருக்கிறார்கள். ஒருபக்கம் ரா.ஸ்ரீ.தேசிகன், அ.ஸ்ரீனிவாசராகவன், மு.மு.இஸ்மாயில் போன்றவர்கள் என்றால் மறுபக்கம் ஜீவா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள். ஒருபக்கம் ராஜாஜி, டி.கே.சிதம்பரநாத முதலியார் போன்றவர்கள் என்றால் மறுபக்கம் புதுமைப்பித்தன்,கு.அழகிரிசாமி போன்றவர்கள். கம்பன் அனைவருக்கும் அவர்கள் தேடுவதை அளிக்கக்கூடிய ஒரு காலப்பெட்டகமாக இருக்கிறான்.

ஐம்பதுகளில் க.நா.சு அலை உருவானபோது கம்பன் நவீன இலக்கியத்தால் விலக்கப்பட்டான். க.நா.சு தமிழ்ச்செவ்விலக்கியங்களைக் கூர்ந்து கற்கவில்லை. பின்னாளில் கற்றபோதுகூடக் குறளும் சிலம்பும் அவரைக் கவர்ந்த அளவு கம்பன் கவரவில்லை. க.நா.சுவால் தூண்டப்பட்டு உருவான தமிழ் நவீனத்துவம் தமிழின் நீண்ட மரபை நிராகரிக்கும் மனநிலை கொண்டிருந்தது. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜி.நாகராஜன் ஆகிய நவீனத்துவத்தின் உச்சிகள் கம்பனைக் கருத்தில்கொள்ளவே இல்லை.

விதிவிலக்காக இருந்தவர் அழகிரிசாமி. அழகிரிசாமி டி.கே.சி வழியாகக் கம்பனை அறிமுகம் கொண்டு தன் நோக்கில் மேலே சென்றவர். எஸ்.ராமகிருஷ்ணனின் மாணவரான ஜெயகாந்தன் மரபிலக்கியத்தில் இருந்து வள்ளுவரையும் தாயுமானவரையும் எடுத்துக்கொண்டாரே ஒழிய கம்பனுக்குள் செல்லவில்லை.

அதற்கடுத்த தலைமுறையில் வண்ணநிலவன் போன்றவர்கள் மிகக்குறுகிய வாசிப்பும் அதைவிடக்குறுகிய அனுபவமண்டலமும் கொண்டவர்கள். அவர்களின் அன்றாடவாழ்க்கைக்கு அப்பால் பார்க்கும் கண் இல்லாதவர்கள். ஆகவே மீண்டும் மீண்டும் மிகச்சில விஷயங்களையே எழுதியவர்கள். அதற்கடுத்த தலைமுறையிலும் கம்பனின் செல்வாக்கு பெரும்பாலும் இல்லை. என்னுடைய தலைமுறையில் கம்பன் மீதான தொடர் கவனம் என்னிடமும் பிரேமிடமும் மட்டுமே இருந்தது. பிரேம் சிலம்பையும் மணிமேகலையையும் குறளையும் மட்டுமே தனக்கான பிரதிகளாகக் கொண்டார். கம்பராமாயணத்தைப்பற்றிக் கொஞ்சமேனும் எழுதியவன் நான் மட்டுமே

வண்ணநிலவனின் தலைமுறையில் மாபெரும் விதிவிலக்கு என நாஞ்சில்நாடனைச் சொல்லலாம். நாஞ்சில்நாடன் அவரது ஆரம்பகாலப் புனைகதைகள் முதலே பேரிலக்கியங்களின் நிறத்தீற்றலைத் தன் மொழியிலும் மனநிலைகளிலும் கொண்டிருந்தவர். நூல்தலைப்புகளில் பெரும்பாலும் அவரது செவ்வியல்ரசனை வெளிப்படும். என்பிலதனை வெயில்காயும், எட்டுத்திக்கும் மதயானை, நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை, நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, சூடியபூ சூடற்க போன்ற பல உதாரணங்கள்.

கதைமாந்தரை வருணிப்பதிலும் அவரது செவ்வியல்சார்பு வெளிப்படும். ஒரு தீவிரமான மனநிலையை செவ்வியல் புனைவுத்தருணத்துடன் அவர் ஒப்பிடக்கூடும். உதாரணம், சிவனைக்கண்டதும் பார்வதியின் மூன்றாம் முலை மறைந்ததை ஒரு காதல் தருணத்தில் எழுதியிருப்பார், என்பிலதனைவெயில் காயும் நாவலில். அல்லது அங்கதத்துக்காக செவ்வியல்குறிப்பு கையாளப்பட்டிருக்கும். மூன்று சிறுவர்களை வகுப்பிலிருந்து வெளியேற்றும் ஆசிரியரை விமர்சிக்கும் கதை ‘வாலி அங்கதன் வதைப்படலம்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும்.

பின்னாளில் நேரடியாகவே செவ்வியல் பற்றிப்பேச ஆரம்பித்தார் நாஞ்சில்நாடன். அவரது வாழ்நாளின் இரண்டாம்பகுதியில் அவர் புகழும் அங்கீகாரமும் பெற ஆரம்பித்தபோது மெல்லமெல்ல அவரையறியாமலேயே ஒரு பேச்சாளராக மாற நேர்ந்தது. நேரடியாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசக்கூடிய அவரது முறை புகழ்பெற்றது. மேடையில் அவர் நவீன இலக்கியத்தைவிட அதிகமாக மரபிலக்கியத்தையே முன்வைத்தார். பின்பு மேடையில் இருந்து அந்தமரபிலக்கிய உரையாடல் அவரது எழுத்திலும் குடியேறியது. .

தமிழின் நவீனப்படைப்பாளிகள் பெரும்பாலும் நவீன ஆக்கங்களில் இருந்தே மரபுக்குள் செல்கிறார்கள். அவர்கள் செவ்விலக்கியங்களுக்குள் புகும் வாசலை உருவாக்குவது நவீனப் பேரிலக்கியங்களே. ஏதோ ஒருவயதில் சமகாலப் படைப்புகளின் குறுகிய எல்லை நல்ல வாசகர்களான படைப்பாளிகளைச் சலிப்புறச்செய்கிறது. நவீன இலக்கியத்தின் உடனடித்தன்மை, சமகாலவிமர்சனத்தன்மை காலம்கடந்த சிலவற்றைத் தொடுவதற்குத் தடையாக உள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அது அவர்களைக் கம்பனுக்கோ வள்ளுவனுக்கோ கொண்டுசென்று சேர்க்கிறது.

மாறாக நாஞ்சில்நாடன் மரபிலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியத்துக்குள் வந்தவர். அவரது பின்புலத்தில் மரபிலக்கியம் எப்போதுமிருந்தது. சைவத்தமிழுடன் கம்பராமாயணமும் கேட்டுவளர்ந்தவர் அவர். பின் மும்பையில் வாழ்ந்தநாட்களில் ராய.சொக்கலிங்கம் அவர்களின் மாணவரும் கம்பராமாயண அறிஞருமான ரா.பத்மநாபனின் மாணவராக இருக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பத்மநாபனிலிருந்து நாஞ்சில்நாடன் கம்பனைப்பாடம் கேட்டார். தன்னை பத்மநாபனின் முதன்மை மாணாக்கனாகவே முன்வைக்கிறார்.

நாஞ்சில்நாடனின் கம்பராமாயண அணுகுமுறை நவீன எழுத்தாளர்களின் நோக்கில் அமைந்தது அல்ல என்பது கவனிக்கத்தக்கது. நவீன எழுத்தாளர்கள் கம்பனை அணுகியது இருவகையில் எஸ்.ராமகிருஷ்ணன் [கம்பனும் மில்டனும் ஓர் ஒப்பாய்வு] கம்பனில் உள்ள சமூகவியல் அரசியல் கருத்துக்களை, வாழ்க்கைச்சிந்தனைகளைப் பெரிதும் கவனிக்கிறார். அவற்றில் இன்றைய சூழலில் பொருத்தமும் முக்கியத்துவமும் உள்ளவை எவை என நோக்குகிறார். அழகிரிசாமி கம்பனின் நுட்பமான மொழியாட்சியையும் சொல்லியும் சொல்லாமலும் செல்லும் கலையமைதியையும் மட்டுமே கருத்தில்கொள்கிறார். நவீன இலக்கியத்தின் இலக்கிய ஆய்வுமுறையை இருசாராருமே கையாள்கிறார்கள்.

மரபான பார்வை என்பது நயம்பாராட்டல்தான். ’எப்படிச் சொல்லியிருக்கிறான் கம்பன்’ என்பதே அவர்களின் பாவனை. நவீன இலக்கியத்தின் அழகியல்கருவிகள் எதையும் அவர்கள் கம்பன் மேல் போடுவதில்லை. கம்பனிலிருந்து அவர்கள் மரபார்ந்த விழுமியங்களையே பெறுகிறார்கள். அணிகள்,இறைச்சி என மரபார்ந்த நுட்பங்களையே கண்டடைகிறார்கள். நாஞ்சில்நாடன் ரா.பத்மநபனின் வழிநின்று இந்த மரபான நோக்கிலேயே கம்பனை அணுகுகிறார்.

நாஞ்சில்நாடனின் கம்பராமாயண அணுகுமுறையும் ஒருவகை நயம்பாராட்டல்தான். ஆனால் அது சம்பிரதாயமானது அல்ல. நாஞ்சில் கம்பனில் உள்ள உக்கிரமான புனைவுத்தருணங்களை மட்டுமே கருத்தில் கொள்கிறார். அந்த வாழ்க்கைத்துளியில் உள்ள உக்கிரமான உணர்ச்சிகளை, அவை மோதி உருவாகும் நாடகீயத்தை, அந்த நாடகீயம் வெளிப்படும் சொல்லாட்சிகளை ரசித்து எடுத்து முன்வைக்கிறார். அவை என்றுமழியாத மானுடத்தருணங்கள் என்பதை நமக்குக் காட்டுகிறார்.

இன்னொருவகையிலும் நாஞ்சில் கம்பனை அணுகுகிறார். இன்றைய மொழிநடை என்பது அன்றாடவாழ்க்கையை மட்டுமே சொல்லக்கூடியதாக உள்ளது, அதன்பொருட்டு உருவாக்கப்பட்டதாக உள்ளது என்பது நாஞ்சில்நாடனின் எண்ணம். ஆகவே அது அன்றாடவாழ்க்கைக்கு அப்பால் செல்லும் எதையும் சொல்லும் திராணியற்றதாக உள்ளது. அதற்கான சொல்வளம் இன்றைய மொழியில் இல்லை. அன்றாடவாழ்க்கைக்கு அப்பால் உள்ள ஆன்மீகம், அதிதீவிர மன எழுச்சிகள், சென்றகால வரலாறு ஆகியவற்றை சொல்ல முடியாமல் சமகால மொழி திணறுகிறது.

அன்றாடவாழ்க்கை என்பது துளித்துளியாக ஓடிமறைவது. அதை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துநோக்கும் தத்துவநோக்குக்கும் இந்த மொழி உவப்பானதல்ல..அத்துடன் நம் அன்றாட வாழ்க்கை தொடர்ச்சியாகச் சிறுத்துக்கொண்டே செல்கிறது. விவசாயியின் வாழ்க்கையைவிட ஒரு தொழிலாளியின் வாழ்க்கை சிறியது. தொழிலாளியின் வாழ்க்கையைவிட குமாஸ்தா வாழ்க்கை சிறியது. கிராமதுக்குமாஸ்தா வாழ்க்கையைவிட நகர்ப்புற குமாஸ்தா வாழ்க்கை மிகச்சிறியது. அதற்கேற்ப மொழியும் சிறியதாகிறது. ஒருகட்டத்தில் அதனால் வாழும்சூழலில் பெரும்பகுதியைத் தொட்டுச்சொல்ல முடியாமலாகிறது.

இன்றைய நவீனமொழியில் இருந்து தமிழ்நிலத்தின் மரங்கள் ,பறவைகள், செடிகள், காய்களின் பெயர்கள் உதிர்ந்தபடியே வருகின்றன. சென்றகால விவசாய வாழ்க்கை உருவாக்கிய சொற்கள் அழிந்துவிட்டன. கைத்தொழில்சார்ந்த சொற்கள் அழிகின்றன. பருவநிலைகள் பற்றிய அவதானிப்புகளால் ஆன சொற்கள் மறைகின்றன

இந்தக்குறையை உணரும் நாஞ்சில்நாடன் அதை ஈடுகட்டவும் சொற்களின் பெருங்கடலான கம்பராமாயணத்தைத் துணைக் கொள்கிறார். கம்பன் கையாண்ட லட்சம்சொற்களில் இருந்து இன்றைய சூழலுக்கான சொற்களை எடுத்தாளமுடியுமா என்று பார்க்கிறார். கம்பராமாயணத்தை அவ்வகையில் தமிழ்ப்பண்பாட்டின் விதைச்சேகரிப்பு என்றே நாஞ்சில்நாடன் எண்ணுகிறார். மொத்த தமிழ்ப்பண்பாட்டையும் கம்பராமாயணத்தில் இருந்து மீட்டுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்.

சமீபகாலமாகக் கம்பனின் சொற்களைப்பற்றிய நாஞ்சில்நாடனின் தொடர் உரையாடல்களின் சாரம் இதுவே. பல்வேறு இடங்களில் அவர் பேசியவற்றைத் தொகுத்துக் காரைக்குடி கம்பன்கழகத்தில் நீண்ட தொடர்சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவ்வுரைகளை விரித்து ‘கம்பனின் அம்பறாத்தூணி’ என்றபேரில் நூலாக்கியிருக்கிறார். காரைக்குடி கம்பன்கழகம் வெளியிட்டிருக்கிறது

தமிழில் கம்பராமாயண ஆய்வுகள் ஒரு தனித்த இலக்கியத்துறையாகவே கொள்ளத்தக்கவை. என் வாசிப்பில் எப்படிப்பார்த்தாலும் நூறு முக்கியமான நூல்கள் உள்ளன. இந்த அரியநூல் அந்த வரிசையில் தயக்கமில்லாமல் வைக்கத்தக்கது. மரபிலக்கியநோக்கின் யானைச்செருக்கும் நவீனஎழுத்தாளனின் துள்ளலும் கலந்த நடை இந்நூலின் மிகச்சிறந்த அம்சம். அதற்காகவே எந்தப் பொதுவாசகனாலும் வாசிக்கத்தக்க நூல் இது.

மணிமேகலையின் அட்சயபாத்திரத்தில் ஒருபோதும் அன்னம் அற்றுப்போவதில்லை. அதுபோலக் கம்பனின் சொல்லம்புப்பையில் சரம் குறைவதே இல்லை.ஆகவேதான் நூலுக்குக் கம்பனின் அம்பறாத்தூணி என்று பெயரிட்டேன் என்று சொல்லும் நாஞ்சில்நாடன் தூணி என்ற சொல் கம்பனில் எப்படிக் கையாளப்பட்டிருக்கிறது என்று ஆரம்பிக்கிறார். முதலில் சொல்லுக்கான பேரகராதிப்பொருள். எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்பேரகராதியில் இருந்து. பின்பு குறள் உட்பட தமிழ்ப்பேரிலக்கியங்கள் எப்படியெல்லாம் அச்சொல்லைக் கையாண்டிருக்கின்றன என்று பார்க்கிறார்

பின்பு கம்பன் அச்சொல்லை எங்கெல்லாம் எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறான் என்று பார்க்கும் ஒரு பார்வை. மிக அரிய சொல்லாட்சிகளை எடுத்து அளித்து அச்சொல்லின் சாத்தியங்களை முழுக்க முன்வைத்துவிட்டு மேலே செல்கிறார்

‘மெய்ம்மைபோல் என்றும் தேய்வுறா தூணி ஆர்த்து’

என்ற கம்பன் வரியில் நம் பிரக்ஞை நின்றுபோகிறது. அது ஒரு பழைய கவிதையின் வருணனை மட்டும் அல்ல. மெய்மை என்பது ஓர் அம்புப்பை என்பதே பிரமிக்கச்செய்யும் கற்பனை. எடுக்க எடுக்க அம்புப்பை தொய்வுறும். மெய்மை தொய்வுறுவதே இல்லை என்கிறான் கம்பன். இலக்கியம் எங்கே அழியாத உண்மையைத் தொடுகிறதோ அந்தப்புள்ளி பழமையாவதே இல்லை என்பதைக் காட்டும் வரி

நாஞ்சில்நாடனின் சொல்லாராய்ச்சி சொல்லை ஒரு பண்பாட்டுத்துளியாகப் பார்க்கக்கூடியது. ஆகவே ஒரு சொல்லில் தொடுத்து ஒரு பெரும் பண்பாட்டுவெளியையே உள்ளே இழுத்துக்கொள்கிறார். விதவிதமான புள்ளிகளில் தொட்டுத்தொட்டுச் செல்லும் நாஞ்சில்நாடனின் பார்வை அச்சொல்லை உருவாக்கிய மனநிலை, அச்சொல்லில் அடங்கியிருக்கும் விழுமியங்கள் என அகலமாக செவ்விலக்கியங்களைப் பிணைத்துத் தொகுத்துக்காட்டுகிறது.

கம்பனின் சொல்லில் நாஞ்சில்நாடன் காணும் இரு சிறப்புகள் அவர் ஒன்றைக்குறிப்பிட வேறுவேறு சொற்களைக் கையாள்வது. விதவிதமான சொற்கள். ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் நுட்பமான வேறுபாடு உண்டு. அதை உணர்ந்தே அதைக் கையாண்டிருக்கிறான் கம்பன். இன்னொன்று ஒரு சொல்லை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நுண்ணிய அர்த்தவேறுபாடுகளுடன் கையாண்டிருப்பது. அவ்வகையில் இங்கே நாஞ்சில்நாடன் கவனம்கொள்வதே கம்பன் சொல்லில் ஏற்றும் நுட்பமான நிறவேறுபாடுகளைத்தான் என்று சொல்லலாம். பண்பாடும் வாழ்க்கையும் அளிக்கும் வண்ணங்கள் அவை.

கம்பனின் சொல்லாட்சியில் நாம் காணும் இன்னொரு சிறப்பம்சம் சம்ஸ்கிருதச் சொற்களை அவன் கையாளும்விதம். அச்சொற்களைக் கம்பன் தமிழ் உச்சரிப்புக்கேற்ப மாற்றி திசைச்சொற்களாகவே கையாள்கிறான். பல சொற்கள் அப்படியே மலையாளம் போன்ற மொழிகளில் இன்றும் புழக்கத்தில் இருப்பதை நாஞ்சில்நாடன் சுட்டிக்காட்டுகிறார். உதாரணம் பரிபவம். ஒரு முழு அத்தியாயமே இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தில் உள்ள தத்துவக்கலைச்சொற்களைக் கம்பன் ஏராளமாகவே கையாள்கிறான். விரிவான தத்துவநோக்கில் ஆராயவேண்டிய விஷயம் இது

கம்பனின் கையாளும் வழக்கொழிந்த உறவுச்சொற்கள், கம்பனின் மொழியாக்கச் சொற்கள், கம்பனின் அசைச்சொற்கள் என பல கோணங்களில் நுட்பமாக விரியும் இந்நூல் கம்பன் மானுடத்தின் கவிஞனாக முழுமையடைவதைச் சொல்லி முடிகிறது

கம்பன் தமிழ்ப்பண்பாட்டின் பெருந்தோரணவாயில். கம்பனைப்பற்றிய எந்த நல்ல நூல்வழியாகவும் கம்பனில் நுழைந்து காவியப்பிராகாரங்கள் சுற்றிக் கல்மண்டபங்கள் தாண்டித்  தமிழ்ப்பண்பாட்டின் கருவறை நோக்கிச் சென்றுவிடமுடியும். நாமறிந்த நவீன எழுத்தாளனின் மொழி நன்கறிந்த வழிகாட்டி போல நம் கரங்களை நட்புடன் பற்றி இட்டுச்செல்கிறது

[கம்பனின் அம்பறாத்தூணி. நாஞ்சில்நாடன். உமாபதிப்பகம் சென்னை]

முந்தைய கட்டுரைகாடு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுழந்தைகளும் நாமும்