புண்படுத்தாத நகைச்சுவை என்பது…

 

அன்புள்ள ஜெமோ

நீங்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகளில் விமரிசனம் அத்துமீறிப்போகின்றன என்று எனக்கு தோன்றியிருக்கிறது. சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறீர்கள். நல்ல நகைச்சுவை என்பது எவரையும் கிண்டல்செய்யாததாக இருக்க வேன்டும். எவர் மனதையும் புண்படுத்தக் கூடாது. ஆனந்தவிகடனில் தேவன் எழுதிய நகைச்சுவை அப்படிப்பட்டது. அத்தகைய நகைச்சுவையை நீங்கள் ஏன் எழுதக்கூடாது?

 

நாதன்

 

 

அன்புள்ள நாதன்,

எவர் மனதையும் புண்படுத்தாத நகைச்சுவை என்பது எங்கே உள்ளது? கேட்பவர்கள் பொதுவாக ஒத்துக் கொள்ளும் நகைச்சுவையை நீங்கள் சொல்கிறீர்கள். அந்த நகைச்சுவையை இப்போது கவனித்து பாருங்கள், அவற்றில் உள்ள அதார்மீகமே உங்களுக்கு தெரியும்.

உதாரணமாக நீங்கள் சொல்லும் விகடனில் நெடுங்காலமாக வந்துகொண்டிருக்கும் வேலைக்காரி நகைச்சுவை. வீட்டு வேலை செய்து வாழும் எளிய மக்களை பாலியல் கருவிகளாக சித்தரிப்பவை அவை. ‘வேலைகாரி இடிச்ச்சுட்டு போறா சும்மா நிக்கிறீங்களே? வரட்டும் திருப்பி இடிச்சு காட்டறேன்’ யாருடைய பார்வையிலான நகைச்சுவை இது? அந்த வேலைக்காரிகள் அதை படிக்க மாட்டார்கள் படித்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சொல்லப்படும் நகைச்சுவைஅல்லவா  இது?

இதை நீங்கள் புண்படுத்தும் நகைச்சுவை என்று சொல்லமாட்டீர்கள். ஏன் என்றால் புண்படக்கூடியவர்களுக்கு இங்கே குரலே இல்லை. இதுதான் மலிவான நகைச்சுவை. நர்ஸ்களை, செகரடரிகளை, டைப்பிஸ்டுகளை போகப்பொருளாக மட்டுமே காட்டும் எத்தனை தரம் தாழ்ந்த நகைச்சுவைகளை நாம் கண்டிருக்கிறோம். அவற்றுக்கு எதிராக உங்களைப்போன்றவர்களின் குரல் எழுந்ததா என்ன? அவை அரை நூற்றாண்டுக்காலமாக எந்த தடையும் இல்லாமல் வெளிவந்துகொன்டுதானே இருக்கின்றன?

நம்முடைய கதாகாலட்சேபங்களில் நெடுங்காலமாக ‘வண்டிக்காரன்’ நகைச்சுவைகள் மிகவும் பிரபலம். இன்றும்கூட நமது மேடைப்பெச்சாளர்கள் எளிய உழைப்பாளி மக்களை முட்டாள்களாகச் சித்தரிக்கும் நகைச்சுவைகளை பரிமாற நீங்கள் எல்லாம் வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.”…நம்மாளு இருக்கானே தினத்தந்தியக்கூட தினத்தொந்தின்னுதான் படிப்பான்…” ‘

அத்தகைய நகைச்சுவையைத்தான் நான் தவறானதாக எண்ணுவேன். அதை ஒருபோதும் எழுதக்கூடாது என்று சொல்லிக் கொள்வேன். சமூகத்தின் நலிந்த பிரிவினரை இழிவுபடுத்தக்கூடிய நகைச்சுவை. அவர்களின் இயலாமைகளை சுட்டிக்காட்டக்கூடிய அவர்களின் இயல்புகளை  நக்கல் செய்யக்கூடிய நகைச்சுவையை நான் ஒருவகை சமூக வன்முறை என்ரே எண்ணுகிறேஎன்

நான் விரும்பும் நகைச்சுவைக்குள் சமூக விமரிசனம் இருக்கும். சமூகத்தின் போலி ஆசாரங்கள், மிகை பாவனைகள் போன்றவற்றை கிண்டல் செய்வதே நல்ல நகைச்சுவை என நினைக்கிறேன். அது புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் தி.ஜானகிராமனும் நாஞ்சில்நாடனும் செய்தது. அது இலக்கியத்தின் வழிமுறை.  கண்டிப்பாக அது அந்த போலிபாவனைகளுக்குள் இருப்பவர்களை, அந்த போலி பிம்பங்களை சுமப்பவர்களை புண்படுத்தும். அது அதன் தர்மம்.

இந்தப்புண்படலே சமீபகாலமாக மிகவும் அதிகரித்து விட்டிருக்கிரது. ஒரு சமூகத்தில் வரலாறு எத்தனையோ பேதங்களை உருவாக்குகிறது. பல பேதங்கள் வரலாற்றின் குருதி படிந்தவை. நகைச்சுவை வழியாக அந்த பேதஙளை அந்த குருதி வீச்சத்தை மானுடம் கடந்துசெல்கிறது.

திருநெல்வேலியில் முஸ்லீம்களும் நாயக்கர்களும் சந்தித்துக் கொண்டால் உடனே மாமா மாப்பிளே என்று கூப்பிட்டு சகட்டுமேனிக்கு நக்கல்செய்து கொள்வார்கள். பலசமயம் அவை நாகரீக விளிம்புகளை மீறும்.வெளியாள் கேட்டால் இதோ கொலை விழப்போகிறது என்று தோன்றும்.  அந்தச் சிரிப்பு வழியாக அவர்கள் தாண்டும் எல்லை மிக மிகப்பெரிது. நாயக்கர்க்ளும் முஸ்லீம்ளும் முந்நூறாண்டுகள்  எதிர்த்துப் போர் புரிந்த  சமூகங்கள்!

மிகச்சமீபகாலம்வரை இந்த நகைச்சுவை உணர்ச்சி நீடித்தது. சமூகத்தின் ஓர் உயவுப்பொருளாக இருந்தது இது. ஒரு குமரிமாவட்ட நண்பர் சொன்னார் , அவர் நெல்லையில் ஒரு மேடைப்பெச்சை எண்பதுகளில் கேட்டார். நெல்லையின் பிரமுக பேச்சாளர் பேசுகிரார். பேச்சு நெல்லையின் இஸ்லாமியர் பகுதியான பேட்டையில். இஸ்லாமியர்களின் பேச்சுவழக்கை நக்கல் செய்துகொண்டே போனார் பேச்சாளர்

முஸ்லீம் பெண்கள் அது என்பதை அரு என்பார்கள். இது என்பதை இரு என்பார்கள்.  வயதான முஸ்லீம் பெண் சந்தைக்கு போனாள். ”இந்தாலே இந்த பெலாபெளம் என்னெலே வெலே?” ” அம்பது ரூவா” ”அம்பது ரூவாயா? யம்மா..அரு?” அவன் அறுத்துவிட்டான். அறுத்த பழத்தை வாங்கித்தான் ஆகவேண்டும் என்று ஒரே சண்டை.

மேலும் கிண்டல். ராவுத்தர் மின்சார அலுவலகம் சென்று புகாரை எழுதினாராம். ”முத்துவாப்பா தொருவிலே மூணாம் நம்பர் ஊட்டிலே பொளக்கு எரியலே” தெருவில் ஒரே சிரிப்பு. கும்மாளம். சிரிப்பவர்கள் முஸ்லீம்கள்

அதன்பின் ஒரு முஸ்லீம் பிரமுகர் எழுந்தார். முதலில் பேசிய சைவப்பிள்ளை பேச்சாளரை நக்கல்செய்ய ஆரம்பித்தார். பிள்ளைவாள்கள் சிவ தீக்கை எடுத்து கழுத்தில் கொட்டை போட்டுக்கொண்டால் சிவபூஜை செய்யாமல் அன்னம் ஆகாரம் தொட மாட்டார்கள். சிறு செம்பு பெட்டிக்குள் லிங்கங்களை வைத்திருப்பார்கள். அதற்கு அபிஷேகம் ஆராதனை நைவேத்யம் எல்லாம் செய்வார்கள்.

ஒரு பிள்ளைவாள் கிணற்றடியில் பூஜைசெய்கிறார். அப்போது ஆச்சி கைக்குழந்தையை கொண்டு வந்து போட்டு ”ஏங்க இத கொஞ்சம் பாக்குதேளா? அடுப்பிலே சோலி கெடக்கு” என்றாள். கடுப்பாகி பிள்ளைவாள் கத்தினாராம் ”நான் இந்த எளவை பாப்பேனா அந்த எளவைப்பாப்பேனா?”

பிறிதொரு சமயம் பிள்ளைவாள் சிவலிங்க பூஜை செய்துகொண்டிருந்தபோது காக்கா வந்து  காயப்போட்டிருந்த மிளகாயைக் கவ்விப்போகக் கண்டுஆத்திர அவசரத்துக்கு  சிவலிங்கத்தை தூக்கி எறிந்தாராம். பேச்ச்சாளர் வாய்விட்டு சிரித்தாராம். நண்பர் சொன்னார். ”இந்த தின்னவேலி ஆட்களுக்கு எல்லாமே நக்கலுதான்டே”

அன்றைய திருநெல்வேலி இன்று எப்படி இருக்கிறது? இதை ஒருவர் மேடையில் சொன்னால் கொலை அல்லவா விழும்? சமூகங்கள் ஒருவருக்கொருவர் சந்தேகத்தை, வன்மத்தை வளர்த்துக் கொன்டிருக்கின்றன. கசப்புகளை அரசியல் வாதிகளும் மதவாதிகளும் வளர்க்க அதை மக்கள் வாங்கி வீட்டுக்குக் கொண்டுபோய் பதியம் போட்டுக்கொள்கிறார்கள். அந்த மனநிலையே இந்த எளிதில் புண்படும் தன்மையை உருவாக்குகிறது.

எவரையும் புண்படுத்தாத நகைச்சுவை என்று அபத்தமான சொல்லாட்சி வழியாக நாம் இன்று சொல்லிக்கொண்டிருப்பது இந்த பொறுமையின்மையைத்தான். நம்மைப்பற்றிய வீங்கிய அகந்தையை தக்கவைத்துக் கொன்டு, அதற்கெதிரான சிறு விமரிசனத்தைக் கூட தாங்க முடியாத நிலையை வளர்த்துக் கொண்டு, இந்த வரியை சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த வரியை இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையை நாம் அடைந்திருப்பதற்காக நாம் வெட்கப்படவேன்டும்.

நம்முடைய ஆதர்சங்கள் ஒரு சிறு கிண்டலிலேயே தகர்ந்துவிடுபவர்கள் என நாம் நம்புகிறோமா? நாம் ஆதர்சங்களாக எண்ணுவனவற்றை பிற அனைவருமே அதே போல ஆதர்சங்களாக எண்ணவேண்டும் என எண்ணுகிறோமா? நம்மை விமரிசிக்க மண்ணில் எவருக்குமே உரிமை இல்லை என்று நம்புகிறோமா?

அப்படியானால் எத்தனை மோசமான ஃபாஸிஸ்டுகளாக நாம் ஆகிக் கொண்டிருக்கிறோம். ஒரு சமூகம் ஃபாஸிசம் நோக்கி நகர்வதற்கான முதல் அடையாளமே அது நகைச்சுவையை அஞ்சும் என்பதுதான்

 

[மறு பிரசுரம்- முதற்பிரசுரம் 2009 ஆகஸ்ட்2]

முந்தைய கட்டுரைமொழி மதம் எழுத்துரு- கடிதம்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை 30 அழைப்பிதழ்