சந்தனுவின் பறவைகள்- பால் சக்காரியா

கையில் கொங்கிணிப்பூவின் கிளையுடன் சந்தனு காத்து நின்ற முற்றத்தின் மூலையில் மாலைநிழல், பலாமரக் கிளைகளின் இடைவெளியில் சாய்ந்து இறங்கி மண்ணில் வீழ்ந்த இலைகளைப் போர்த்தி உறங்கியது. உயரத்தில் பரவியிருந்த ஆகாயத்தில் மேகங்களும், மேலே ஒரு பெரிய துளை விழுந்த கூடாரம்போல இருக்கும் பலாமரத்தின் கிளைகளும், அவற்றினூடாக வரும் வெயிலின் அசையும் நிழலும் சந்தனுவின்மீது ஒளியினை வரைந்தது.

அவனுக்குப் பின்னால் முற்றத்தின் ஓரத்தில் செம்பருத்திப் புதர், சில உள்ளசைவுகளால் குலுங்கின. அவன் அசையாமல், மூச்சடக்கி, இறுக்கிய கையில் ஒரு வாளைப்போலப் பிடித்த கொங்கிணிப் பூக்கிளையோடு, செம்பருத்திப் புதரை உற்றுப் பார்த்துக்கொண்டு, காய்ந்த இலைகளின்மீது ஒரு பொம்மையைப் போல் அசையாமல் நின்றான். திடீரென, புதரின் அசைவுகள், இலைகளை உதிர்த்து சிறகடிப்புகளாக மாறி ஆகாயத்துக்கு உயர்ந்து, பலாமரத்தின் உச்சியில் சில அசைவுகளோடு முடிந்தன. சந்தனு மீண்டும் ஒருமுறை தோல்வியுற்றான்.

பறவைகள் அவனை மேலும் ஒருமுறை ஏமாற்றின. அவன் மிக விருப்பத்துடன், அசையாமலும் பேசாமலும் காத்திருந்தும், அவனுடைய கொங்கிணிக் கொம்பில் அவை வந்து அமரவில்லை. கொங்கிணிப்பூ வாசத்தை மீறி நோக வைக்கும் சிறு உதடுகளும் மாயஜன்னல்கள் போன்ற கண்களும், காற்று வீசி ஒதுக்கும் பறவைகளின் இறகுகளும் அவனை ஆர்ப்பரிக்க வைக்கவில்லை. அவனோ, அவை தன் கன்னத்தில் சிறகடிப்பதும், கீழே வந்து அமர்வதுமான ஆனந்தத்தினை விடவும், எத்தனையோ காலமாக அவற்றிடம் ஒரு செய்தியைக் கேட்டறியக் காத்திருக்கிறான். நீங்கள் மரணமடையும்போது எங்கே போகிறீர்கள்? அல்லது உங்களுக்கு மரணமேயில்லையா?

தன்னுடைய ஐந்து வயதிற்குள்ளாக, சந்தனு பல முயற்சிகளின்மூலம் பறவைகளுக்கு மரணமில்லை என்பதையும் அதனுள் வேறேதோ ஒரு ரகசியம் மறைந்திருப்பதையும் அறிந்துகொண்டான். சந்தனு இறந்த மனிதர்களையும் மிருகங்களையும் முன்பே பார்த்திருக்கிறான். இறந்து கொண்டிருந்த ஒரு பூனைக்குப் பக்கத்திலேயே ஒருமுறை இருந்திருக்கிறான். மழைநீர் தேங்கியிருந்த ஒரு குட்டையினருகே, நனைந்த ரோமத்தோடு ஒரு பூனை போவதைப் பார்த்து, சந்தனு அதன் பின்னாலேயே ஓடினான். தன் கூரிய நகங்களால் மண்ணைச் சுரண்டியபடி ஒரு மனிதனைப்போல மூச்சிரைத்தபடி அது எதிலிருந்தோ தப்பித்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தது. ஏதோ ஒரு கனவில் நடப்பதைப்போல இயல்பற்ற மெதுவான அசைவுடன் அது மேலும் நகர்ந்தது. சந்தனு அதனருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து சுற்றிலும் பார்க்க, மூன்று நாய்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவனைகூடச் சட்டை செய்யாமல் பூனையை நோக்கிப் பாய்ந்து வந்தன. பூனையின் உடலிலிருந்த காயங்களை அவன் அப்போதுதான் கவனித்தான். அவன் ஆக்ரோஷத்தோடு நாய்களைக் கல்லெறிந்து அடித்துத் துரத்தினான்.

பெருமுயற்சியுடன் நாய்களுக்கெதிராக உயர்த்திய கூர் நகங்களுடனான ஒரு கையை, பூனை கீழிறக்கியது. அதன் சீறல் தொண்டையிலிருந்து உயர்ந்து ஒரு மனித சப்தமாக மாறியது. அது ஒரு ஆசுவாசத்துடன் மழைநீருக்குள் விழுந்தவாறே சந்தனுவைப் பார்த்தது. அதன் கண்களை அவனும் உற்றுப் பார்த்தான். அப்படி அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது கண்களை மூடி சந்தனுவின் எதிரிலேயே இறந்தது. அவன் நிம்மதியடைந்தான். அவன் எழுந்து ஓர் இலையைப் பறித்து பூனையின் நனைந்த வாலைப் பிடித்துத் தூக்கி வழியோரத்துப் புல்லின்மேல் போட்டான். நாய்களுள் ஒன்று தொலைவிலிருந்து மறுபடியும் திமிறிக்கொண்டு வேகமாய் ஓடிவந்தது. சந்தனு அசையாமல் நின்றான். நாய் பூனையின் உடலினருகே சென்று அதை முகர்ந்தது. மறுபடியும் முகர்ந்தது. தலையையுயர்த்தி ஓரிருமுறை வாலாட்டியது. ஒரு நிமிடம் நம்பிக்கையின்றி அது அங்கே நின்றது. பின்னர் விழத்தொடங்கிய சாரல் மழையினூடாக நனைந்துகொண்டே மெதுவாக எங்கேயோ நடந்து சென்றது.

ஆனால், பறவைகள் அவனுக்குள் புரியாத ஒரு ரகசியத்தை உருவாக்கியிருந்தன. அவை மரணமடைவதென்றால் எங்கே அவற்றின் சடலங்கள்? ஒரு பறவைகூட இறந்துகிடப்பதை சந்தனு பார்த்திருக்கவில்லை. அவனுடைய ரகசியத் தேடல்களெல்லாம் சென்றடைந்ததது, வேறேதோ மறைக்கப்பட்ட புதிரான ரகசியத்திற்குத்தான். பறவைகளின் மரணத்தைப் பற்றியதான இந்தத் தேடல்களில் சந்தனுவிற்கே ஒரு தெளிவான நோக்கமிருந்தது. ஒருபோதும் தன்கையில் அகப்படாமல் பறந்து சென்ற பறவைகளை, அவை இறந்து கிடக்கும்போதாவது நிதானமாகக் கையிலெடுத்துப் பார்த்திருக்கலாமே என்ற சுயநலம்தான் அது.

அவை ஏதோ மறைவிடங்களில்தான் மரணமடைகிறது என்றெண்ணி அவன் குருவிகளை அவற்றின் காற்றிலாடும் கூடுகளிலும், பொன்மான் பறவைகளை அவற்றின் பொந்துகளிலும், கருகிலாஞ்சிப் பறவைகளை சிறு காடுகளிலுமாக நிரந்தரமாகப் பின் தொடர்ந்தபடி இருந்தான். ஆனால், அவையெல்லாம் இறகுகளின் ஜாலவித்தையில், இலைகளின் அசைவில் அவனிடமிருந்து தப்பித்துச் சென்றன. பொந்துகளிலும், சதுப்புகளிலும், மூங்கில் காடுகளின் கல்லும் முள்ளும் நிறைந்த மறைவான பாதைகளிலும் சந்தனு பறவைகளைப் பின் தொடர்ந்தான். அவன் எவ்வளவோ சின்னச் சின்ன உயிரற்ற உடல்களைக் கண்டடைந்தான். அணில்கள், எலிகள், பாம்புகள், ஒருமுறை ஓர் ஓநாய், பட்டாம்பூச்சிகள் என்றிப்படி எவையெல்லாமோ அவனுடைய இந்தத் தேடுபாதைகளில் கிடைத்தன. ஆனால், இவற்றின் வரிசையில் அவன் ஒரு பறவையைக் கூட இதுவரை பார்க்கவில்லை.

இத்தருணத்தில்தான் சந்தனு கடவுளைப் பற்றி அறிந்தான். இறந்து போகின்றவர்களை வரவேற்கின்றவனும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நேசிப்பவனுமே கடவுள். அவர் மேகங்களுக்குள் பறந்து செல்வார். காடுகளுக்குள் பதுங்குவார், குழந்தைகளுடன் விளையாடுவார். நீரில் ஓர் இலையாக மூழ்கிச் செல்வார். இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் இறைவன் மேகங்களுக்குப் பின்னால் பறந்து விளையாடுபவராகவும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஆனந்தக் கூப்பாடுகளைக் காதுகொடுத்துக் கேட்பவராகவும் இருப்பார். இறைவனைக் காண்பது வெகு எளிது. அவர் எங்கேயும் இருக்கிறார். அவ்வாறிருக்க ஒரு நாள் ஓடைக்கரையில் இறந்துகிடந்த ஒரு மீனின் செதில்களின் வண்ணங்களை சந்தனு பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்த ஈரத்திலிருந்து தெய்வம் ஒரு தவளையாக அவன் முன்னால் குதித்து வந்தது.

அவனை உற்றுப் பார்த்தபடியே அது நட்புடன் மெதுவாக அவனிடம் என்னவோ சொல்லிற்று. சந்தனு ஒரு பெருந்திருப்தியுடன் மீனை கையில் பிடித்துக்கொண்டு ஓடைக்குள் குதித்தான். இறந்த மீன் வெயிலில் ஒரு வெள்ளிக்கீற்று போல மின்னிக்கொண்டு கைகளிலிருந்து நழுவி அலைகளில் விழுந்து மூழ்கிப் போனது. சந்தனு கரையேறி ஒரு கை தண்ணீர் எடுத்து அத்தெய்வத்தின்மீது தெளித்தவாறே, ‘நாம் பறந்து போகலாமா?” என்று கேட்டான். தெய்வம் சந்தனுவின் விரல்களிலிருந்து பொழிந்த மழையை ஸ்வீகரித்துக்கொண்டு அவனிடம் ஏதோ ரகசியத்தை மீண்டும் மீண்டும் சொல்லியது.

சில நாட்களுக்குப்பிறகு சந்தனு ஒரு கனவு கண்டான். பூக்கள் நிரம்பிய மரம்போல இருந்த ஒரு கொங்கிணிக் கிளையைக் கையில் பிடித்தபடி, முற்றத்தின் மூலையில் நிற்கிறான். மரங்கொத்திகளும், பொன்மான்களும், ஓலேஞ்ஞாலிகளும் இலைகளிலிருந்து தலைகளை வெளியே நீட்டி அதன் காய்களையும் பூக்களையும் பார்த்துக்கொண்டு பறந்து உயர்வதும், தாழ்ந்து அமர்வதுமாக இருக்கின்றன. அவற்றின் சிறகசைத்தலும், பாட்டும், உற்சாகமும் சந்தனுவிற்குக் கேட்கின்றன. மேகங்கள் கீழிறங்கி வந்து மூடுபனிபோலக் கொங்கிணிக் கிளைகளை உரசிச் சென்றன. அக்கிளைகளில் நட்சத்திரங்கள் வந்தமர்ந்து ஒளிர்ந்தன. ஒரு கிளையில் பிறைநிலா பேரழகோடு அமர்ந்திருந்தது. அவற்றிற்கிடையிலெல்லாம் பறவையின் இறகுகள் அலைந்து திரிந்து கொண்டிருந்தன.

சந்தனு மெல்லமெல்ல ஓர் இயந்திர பொம்மையைப் போல தலையைத் திருப்பி அப்பறவைகளைப் பார்த்து தன் நாவின் நுனியில் அரித்துக் கொண்டிருந்த அக்கேள்வியைக் கேட்டான்.

‘உங்களுக்கு மரணமேயில்லையா? நீங்களெல்லாம் மரணத்திற்குப் பிறகு எங்கே போகிறீர்கள்?’

ஏதோ ஓராயிரம் ஜன்னல் கதவுகள் ஒன்றாக மூடுவது போன்றதொரு சிறகடிப்போடு அவனைச் சுற்றிலும் ஒரு மென் சூறாவளியை உருவாக்கியபடி அப்பறவைகள் மொத்தமாய் ஆகாயத்தை நோக்கிப் பறந்தன. கொங்கிணிக் கொம்பும் நட்சத்திரங்களும்கூட மறைந்துபோயின.

ஒரு நிராதரவான சூன்யம் சந்தனுவை சுற்றிச் சூழ்ந்து கொண்டது. சந்தனு தூக்கத்திலிருந்து விழித்து, ஓர் ஆழ்ந்த துக்கத்துடன் ஜன்னலுக்கு வெளியே, இருள் நட்சத்திர ஒளியில் கரையும் ஏதோ ஒரு மாயக் காட்சியைப் பார்த்தபடியே படுத்திருந்தான். தூரத்தில், காடுகளில் தெய்வம் மின்மினிகளாக ஒளிர்வதும், அணைவதுமாக சந்தனுவின் தனிமையைப் பார்த்தபடியே இருந்த்து. ஒளிர்வதும் உதிர்வதுமான அவ்வொளியைப் பார்த்தபடியிருந்த சந்தனு கனவுகளற்ற ஓர் உறக்கத்திற்குப் போனான்.

மறுநாள் பலாமரத்தின் அடியில் ஒரு கொங்கிணிக் கொத்துடன் வந்து நின்றான். அடுத்து வந்த எல்லா நாட்களிலும் அப்படியே. அந்நாட்களிலெல்லாம் பறவைகள் அவனை தோற்கடித்தபடியே இருந்தன.
இன்று சந்தனு அக்கொங்கிணிக் கொத்தை கீழே போட்டுவிட்டு முற்றத்தில் தாழ்ந்து இறங்கிய வெயிலினூடாக நடந்து வராந்தாவில் ஏறினான். ரொம்ப நேரம் அவன் பலாமரக் கிளைகளின் ஊசலாட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு வீட்டிற்குள்ளே ஒரு நாற்காலியில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த அப்பாவின் மடியில் ஏறி அவரைப் பார்த்தபடியே அமர்ந்தான். அப்பாவின் இரு கன்னங்களிலும் கை வைத்து முகத்தை நெருக்கி கண்களுக்குள் பார்த்தான். ‘என்ன சந்தனு? உனக்கு என்ன பிரச்னை?’ என்று கேட்டார் அப்பா.

‘அப்பா, பறவைகள் சாவதில்லையா?’

‘இல்லை சந்தனு’

‘பிறகு இவற்றிற்கு என்ன நேர்கிறது?’ அப்பா சந்தனுவின் முகத்தை தன் கைகளில் தாங்கிப் பிடித்துக்கொண்டே சொன்னார்,

‘நான் உன்னிடம் ரகசியமாகச் சொல்கிறேன். அவை மரணமடைவதற்குப் பதில் பறந்து பறந்து போகின்றன. மேகங்களினூடே, மலைகளும் ஆறுகளும் கடந்து, பிறகு சந்திரனையும் சூரியனையும் கடந்து, நிர்மலமான ஆகாயத்தினூடாக நட்சத்திரங்களையும், கிரகங்களையும் பின் தள்ளி, புதிய உலகை நோக்கிப் பறக்கின்றன. தெய்வம் மத்தாப்புபோல எரியும் வால்நட்சத்திரமாக நின்று அவற்றிற்கு வழிகாட்டுகிறார்.’

சந்தனு அப்பாவின் இரு காதுகளையும் பிடித்து தன்னோடு சேர்த்துக்கொண்டு கேட்டான்,

‘என்னோட அம்மாவும் அப்படி பறந்து போவதைப் பார்த்ததாகத்தானே நீங்க சொன்னீங்க? அம்மா ஒரு பறவையாகத்தான் இருந்தாங்களா?’

ஆமாம் என்று அப்பா சொல்லப் போவதைக் கேட்க ஆவலுடன் சந்தனு அப்பாவின் மடியில் நெருங்கி அமர்ந்தான். வெளியே தாழ்ந்துவரும் வெயிலை நடுங்கச்செய்யும் சிறகடிப்புகளுடன் அவனுடைய பறவைகள் ஆகாயம் நோக்கி உயர்ந்தன. மலைகளிலிருந்து இறங்கி வந்ததொரு காற்றில் அவை பறந்து சென்றன.

[ஏற்காடு இலக்கியமuகாமில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட கதை]

தமிழாக்கம் கே வி ஜெயஸ்ரீ. வம்சிபதிப்பக வெளியீடு

முந்தைய கட்டுரைஏற்காடு
அடுத்த கட்டுரைஆசாபங்கம்