திரு ஜெயமோகன் அவர்களுக்கு.
நான் .அதியமான்
நலமாயிருப்பீர்கள் என நம்புகிறேன்.
இதை கேட்பதற்க்கு தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும் கேட்கிறேன்.
நான்காம்தர பாலியல் கதை புத்தகங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இணையம் பரவலாக கிடைப்பதற்க்கு முன் பிரபலமாக இருந்தவை. (சரோஜாதேவி போன்றவை)
நவீன தமிழிலக்கியத்தின் மேதைகளான புதுமைபித்தன் மற்றும் பிரமிள் போன்றவர்கள் இவ்வகையான நான்காம்தர ஃபோர்னோகிராபி புத்தங்களை வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் என கேள்வி பட்டிருக்கிறேன். இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாபெரும் கலைஞர்களான அவர்கள் இந்த வகையான பாலியல் எழுத்துக்களில் எதை தேடியிருப்பார்கள்? மானுட வாழ்வின் தரிசனங்களை சொற்க்களில் வடிக்கும் அம்மேதைகளின் எந்த தேவையை அந்த மாதிரியான பாலியல் எழுத்துக்கள் நிறைவேற்றியிருக்கும்?
நான் கேட்பது தவறில்லையெனில் விளக்கவும்.
அன்புடன்
வ.அதியமான்
அன்புள்ள அதியமான்
நீங்கள் எழுத்தாளனை சாமியார் என நினைத்துக்கொண்டுவிட்டீர்களோ என ஐயமாக இருக்கிறது. எழுத்தாளன் மனித இயல்பின் உன்னதங்களாலும் நேர்த்திகளாலும் மட்டும் உருவானவனாக இருக்கமுடியாது. அப்படி இருந்தால் அவன் எழுத்தும் தட்டையாகவே இருக்கும்.
இந்த வாழ்க்கை கறுப்புவெளுப்புகள் ஊடும்பாவுமாக ஓடி நெய்யப்பட்டிருக்கிறது. அவற்றை முழுமையாக அறியக்கூடியவன் மட்டுமே இலக்கியத்தை உருவாக்கமுடியும். சொல்லப்போனால் காமகுரோதமோகங்களை நன்றாக அறிந்து எழுதத்தெரிந்தவனே நல்ல எழுத்தாளன். இன்று மட்டும் அல்ல, என்றும். மாபெரும் செவ்வியல் கவிஞர்கள் உட்பட அப்படித்தான்.
ஆகவே எழுத்தாளனுக்கு வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் ஈடுபாடிருக்கும். எல்லாவிஷயங்களையும் அறியவும் உணர்வுரீதியாக பின்தொடரவும் அவன் முயல்வான். தன்னுடைய இச்சைகளாலும் அச்சங்களாலும் அடித்துச்செல்லப்படும் பேரிலக்கியவாதிகள் உலகம் முழுக்க உள்ளனர். அவற்றை விலகி நின்று கவனிக்கும் பேரிலக்கியவாதிகளும் உள்ளனர்.
எழுத்தாளர்களை ஒருபோதும் ஒழுக்க மதிப்பீடுகளைக்கொண்டு முழுமையாக புரிந்துகொள்ளமுடியாது.
ஜெ
அன்புள்ள ஜெமோ,
சில ஆண்டுகளாக வரி வரியாக தாஸ்தாயெவ்ஸ்கியின் “இடியட்” (மூடன்) படித்து வருகிறேன். சில நூறு பக்கங்களைப்படித்து ஒரு இடைவெளி விட்டு மீண்டும் முதலில் இருந்து படித்தால் ஒரு புதிய நாவலை வாசிப்பது போல் தோன்றுகிறது. முன் படித்த போது ஏற்பட்ட மன எழுச்சி இப்போது வேறு இடங்களில் ஏற்படுகிறது. மிஷ்கினின் பாத்திரம் குறித்த பரவசம் இப்போது வேறு பல பாத்திரங்களின் மீது ஏற்படுகிறது. ஹிப்போலைட்டின் குமுறல் மற்றும் அது மிஷ்கின் மற்றும் சுற்றி உள்ளவர்களின் எதிர்வினயுடன் படிக்கும்போது இது ஒரு கதையைப்படிக்கும் உணர்வை மறக்கடித்து ஒரு பெரிய சமுதாய உரையாடல் போல தோன்றியது. கம்யூனிஸத்தின் ஒற்றைபடையான முழக்கத்திற்கும் மனிதாபிமான நோக்கிற்கும் ஒரு உரையாடல் ஏற்படுத்தி என் சிந்தனையை விரிவாக்கம் செய்யும் ஒரு உள்மாற்றம் புரியும் எழுத்து வித்தையாக எனக்குத்தோன்றியது. கதையின் ஆரம்பத்தில் இருந்தே, கில்லடினில் இருந்து மனிதாபிமானத்தைக்காப்பாற்ற மிஷ்கினும் தாஸ்தாயெவ்ஸ்கியும் பெரும்பிரயத்தனம் செய்கின்றார்கள். நான் படித்துக்கொண்டிருக்கும் பக்கம் வரை, மிஷ்கின் வன்முறையை ஒரு முறை கூட ஆமோதிக்காமலே தன் பிரச்சினைகளை எதிர் கொள்கிறான்.இப்படி ஒரு நாயகன் 19ஆம் நூற்றாண்டின் கதைகளில் இருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யம் அளிக்கிறது. மிஷ்கின் மூலமாக தாஸ்தயெவ்ஸ்கி அறிவுறுத்தும் பேச்சுவார்த்தை வழிமுறை லெனினியர்களால் ஒரு கொடுமையான அக்டோபரில் நிராகரிக்கப்பட்டதன் விளைவே ஸ்டாலினின் கொடுங்கோன்மைக்கு வித்திட்டது என்று தோன்றுகிறது.
மிஷ்கின் ரோகோஜின்னை தன் சகோதரனாக மாற்றும் அந்த அத்தியாயமும் கானியா மிஷ்கினின் நண்பனாக மாறும் கருத்தாக்கமும் காந்திய வன்முறை தவிர்க்கும் நோக்கின் முன்னோடியோ என்று எண்ணும்படி அகிம்ஸையை முன்னிறுத்துகின்றது. இதைப்பற்றி நீங்கள் ஏதேனும் எழுதி இருக்கிறீர்களா? படிக்க மிகவும் ஆசையாய் உள்ளது.
அன்புடன்,
ஜெய்கணேஷ்.
அன்புள்ள ஜெய்கணேஷ்,
ஏற்கனவே பெரும்பாலான விமர்சகர்களால் சொல்லப்பட்டுவிட்டதுதான். தஸ்தயேவ்ஸ்கி நவீனச்சூழலில் ஒரு கிறிஸ்துவை கற்பனைசெய்கிறார். அவர்தான் மிஷ்கின். பாவங்கள் தொடமுடியாத அளவுக்கு எளிமையானவன் அவன். ஆகவேதான் அவனை அசடன் என்று சொல்கிறார். அவரது நோக்கில் கிறிஸ்துவும் அப்படித்தான்
மிஷ்கின் நாவலில் சொல்வதும் செய்வதும் கிறிஸ்துசொன்னவற்றின் செய்தவற்றின் நவீன வடிவங்களைத்தான்.
ஜெ