அறிபவனின் அகம்-சில கடிதங்கள்

அன்பின் ஜெ ,

காடு வாசித்து முடித்த பின் சென்ற ஒரு மாதத்தில் இன்றைய இந்தியா ,காந்தியின் கடைசி 200 நாட்கள் (ஏற்கனவே தங்களின் இன்றைய காந்தி,சத்தியசோதனை இந்திய சுயராஜ்யம்,சர்வோதயம் உள்ளிட்ட நூல்களை வாசித்திருந்தேன்.)அதன் தொடர்ச்சியாகவே இந்த அபுனைவுகளை முயன்றேன் ,ஆனால் தற்போது தங்களது அல்லாத அபுனைவுகளின் நடை சற்றே என்னை சலிப்புறச் செய்கிறது .அதனால் இந்த இரு நூல்களை ஒத்தி வைத்து விட்டு புனைவுகளின் பக்கம் கவனம் செலுத்தினேன்,அதிலும் ஜே ஜே என்னை உதிரியாக சில பத்திகள் என்னைக் கவர்கிறது ,மொத்தமாகத் தொடரும்தோறும் சலிப்பே எஞ்சியது.

இவ்வாறாகக் கழிந்த பின் சென்ற ஏழு நாட்களில் புளியமரத்தின் கதையும் ,நேற்று பகல் பொழுதில் பொய்த் தேவும் ,வாசித்து முடித்தேன்.இதில் இன்றளவும் நான் வாசித்த நூல்களின் பொய்த் தேவு மட்டுமே தடையற்ற தொடர்ச்சியான வாசிப்பாக அமைந்தது .வாசிப்பின் படிநிலைகளில் நீங்கள் அறிவுறுத்தியவற்றில் இந்தத் தொடர்ச்சியான வாசிப்பும் ஒன்று.

இரண்டு நூல்களுமே மிகச் சிறந்த வாசிப்பு அனுபவமாக அமைந்தது .புளியமரத்தின் கதைக்கு என்னால் தற்போது குறியீட்டு வாசிப்பை அளிக்க முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கிறது .தங்களின் எழுத்தும் சமூக மாற்றமும் கட்டுரையை ஒட்டி மேலும் சிந்திக்கத் தூண்டியது . தங்களுடனான இந்த உரையாடலின் மூலம் ஒரு இலக்கிய வாசகனாக நான் மேம்பட்டுக் கொண்டு இருப்பதும் ,என் மொழியும் ஆளுமையும்,அதன் மாற்றமும் எனக்கு நிறைவளிப்பதாகவும் இருக்கிறது.இக் கடிதம் மூலம் என் நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

சிறு பிள்ளை போல துடுக்குத்தனமாக ஒரு நூலை வாசித்து முடித்ததும் தங்களிடம் எதையாவது சொல்லியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடிவதில்லை.

அடுத்தடுத்த நாட்களுக்கு ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி ,கடலுக்கு அப்பால் இரண்டும் ஒரேநூலாகக் கையில் உள்ளது ,வாசிக்கத் துவங்குகிறேன்.

நன்றிகளுடன்
பிரகாஷ் .

அன்புள்ள பிரகாஷ்

அறிவார்ந்த விவாதங்களை மட்டுமே நம்பியிருக்கும் ஆக்கம் கொஞ்ச காலத்திலேயே அதன் பொருத்தப்பாட்டை இழந்துவிடும். இலக்கியம் அதன் நுண்ணிய அவதானிப்புகளாலேயே நிற்கிறது. ஜேஜே சிலகுறிப்புகள் அவதானிப்புகள் குறைந்த மூளைநாவல். புளியமரத்தின் கதை அப்படி அல்ல.

தொடந்து வாசிக்கிறீர்கள் என்பது மகிழ்வளிக்கிறது. அந்தப்பயணத்தில் எந்த ஏற்பும் எந்த மறுப்பும் முக்கியமானதே. அது உங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது

ஜெ

அன்புள்ள ஜெமோ,
எனக்கு சில தினங்களுக்கு முன் கனவில் ஒரு சங்கு தோன்றியது.
மிகவும் அழகான வழவழப்பான, கருநிற மடிப்புகளுடனும் கூர்மையான முட்களை முனைகளில் கொண்ட அந்த சங்கு என் கண்ணில் இன்னும் தோன்றுகிறது. வேலை ஓய்ந்த நேரத்தில் அந்த சங்கு குறித்து ஏதாவது படிக்கலாம் என்று பிரயத்தனித்தேன். முதலில் எனக்கு ஏற்பட்ட எண்ணம், இந்த சங்கு ஏன் திருமாலின் இடது கையில் இருக்கிறது என்பது. தவிரவும் ஆரியர்கள் பயணித்து வந்த பாதையில் சங்கு இருந்திருக்குமா என்ன? அது கடல் சார்ந்த தொன்மக் கலாச்சாரங்களில் இடம் பெற்றிருந்தால் அர்த்தம் உண்டு – உதாரணமாக நமது பண்டைத்தமிழ்க்கலாச்சாரம். சிந்து கங்கை சமவெளிகளில் உருவான வைணவம் எப்படி தன் கடவுளுக்கு சங்கை அணிவித்தது என்பதை எண்ணி சற்றே என் தலையைப் பிய்த்துக்கொண்டேன். இதைப்பற்றி ஏதேனும் நூல்கள் உள்ளனவா?

அன்புடன்,
ஜெய்கணேஷ்.

அன்புள்ள ஜெய்கணேஷ்

சங்கு கடலின் ஒலியைத் தன்னுள் வைத்திருக்கிறது என்பது புராதன கவித்துவ உருவகம். சங்கு கடலின் விதை.

நாம் இன்றுவழிபடும் விஷ்ணு பல புராதனமான தெய்வங்களின் கலவை. அதில் ஒருவர் கடல்களின் அதிபதியான மால்.

ஜெ

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு

இக்கடிதத்தை எழுதும் என்னை பற்றி சிறு முன் அறிமுகம் செய்யலாம் என நினைகின்றேன்
எனது பெயர் அன்ரனி , எனது வயது 17 , நான் ரோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவன் . நான் இப்போது இத்தாலியில் எனது குடும்பத்துடன் வாழ்கின்றேன், இக்கடிதத்தை எழுதுவதன் பிரதான நோக்கம் யாதெனில் , உங்களின் வலைத்தளத்தை இரவு பகலாய் இடை விடாது வாசித்து வருகிறேன் , அதன் மூலம் எனது அறிவுப்பசிக்குத் தீனி கிடைக்கிறதுஎன்று தான் சொல்ல வேண்டும்

நான் வாழும் இந்த யௌவனப் பருவமோ மிக சிக்கல் வாய்ந்ததாக இருக்கிறது , பல அற்புதமான எண்ணங்களும் , இலட்சியங்களும் தோற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது , முடிவில்லா முடிவிலி போல , அது நீட்சி பெற்றுக் கொண்டே செல்கின்றது . அதில் எதைத் தெரிவது என்று தான் எனக்கு தெரியவில்லை , எனது பெற்றோர் போதிய கல்வி அறிவு பெறாதவர்கள் , ஆனாலும் அனுபவ அறிவு நிறைந்தவர்கள் . எனக்கு இத்தாலிய மொழியில் அவ்வளவு தேர்ச்சி கிடையாது , ஆனாலும் இத்தாலிய மொழியில் ஒரு சிறந்த தேர்ச்சியாலனாகா வர ஆசைப்படுகின்றேன் . நீங்கள் எழுதிய “செயலின்மையின் இனிய மது ” என்ற தலைப்பிலான கட்டுரை என்னை மிகவும் பாதித்தது . அக்கட்டுரை எனக்கென்றே எழுதப்பட்டது போன்று உணர்ந்தேன் . ஆனாலும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் , செயல்படுத்துவதில் அக்கறை இன்மையோடு இருக்கிறேன் . சாதிக்க நினைப்பவற்றைக் கற்பனையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் . இந்த நிலைகளில் இருந்து விடுபடமுடியுமா , என்னுடைய ஆளுமைகளை சரியான முறையில் பயன்படுத்தி நினைத்தவற்றை சாதிக்க முடியுமா?

நுண்ணுணர்வும் அறிவுத்திறனும் சாத்தியங்களே ஒழிய சாதனைகள் அல்ல என்ற உங்களின் வரி சாலச்சிறந்ததே , ஆனாலும் அவற்றை உள்வாங்கிக்கொள்வதில் நான் எதிர்நோக்கும் இடர்ப்பாடு யாதாக இருக்கும்? ஒரு சமயம் ஒரு எழுத்தாளனாக வர எண்ணும்  நான் மறு சமயமோ ஒரு திரைப்பட இயக்குனராக வர எண்ணுகின்றேன் , இங்கேதான் நான் அதிகமாக முரண்படுகிறேன் என்று நினைக்கிறேன் ஐயா ! இத்தனைக்கும் நான் வாசித்தவற்றையோ , அறிந்து கொண்டவற்றையோ எழுதியோ , குறிப்பெடுத்துக்கொண்டதோ இல்லை . நான் சமூக வலைத் தளங்களில் ஆர்வமுடையவன் . நான் மிகவும் குழப்பம் அடைந்துள்ளேன் . என்னுடைய ஆளுமைகளை எந்த வகையில் கொண்டு சென்றால் நான் நினைத்தவற்றை சாதிக்க இயலும் என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , என் இலட்சியங்களுள் எதைத் தெரிவு செய்யலாம் என்று எனக்கு அறிவுறுத்துங்கள் . உங்களின் மொழி நடை இலகுவில் எனக்குப் புரிவதில்லை என்றாலும் உங்கள் மீது நான் கொண்ட அளவு கடந்த பற்றின் காரணமாக அந்தக் கடின மொழி நடைகளையும் புரிந்து கொள்ள விழைகின்றேன் . உங்களை எனது தந்தையாக எண்ணி இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன் . முடிந்தால் பதில் அனுப்புங்கள் , இந்தக் கடிதத்தை உங்கள் இணையத்தில் பிரசுரிப்பதற்கு முன்பு எனக்கு இந்த மின்னஞ்சல் முகவரிக்கு பதில் எழுதினால் மிகவும் வசதியாக இருக்கும் . நன்றி
இப்படிக்கு
அன்ரனி

முந்தைய கட்டுரைகாந்தி- எஸ்.ராமகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஉலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்