«

»


Print this Post

பயணம் இருகடிதங்கள்


அன்புள்ள ஜெ,

என்னுடைய காசிப் பயணத்தின் போது உங்களோடு உரையாடியது பின்
இப்போதுதான் உரையாடுகிறேன்.அங்கே சடங்குகளில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பவர்களை பக்தி ஏஜெண்ட்கள் அழகாகக் கையாள்கிறார்கள்.அனைத்துத் தவறுகளும் அரங்கேறுகிறது.ஆனால் கங்கையின் முன்பு நிற்கும்போது என்னையே மறந்துவிட்டேன்.அதில் மிதந்து செல்லும் படகுகளைக் காணும் பொழுது கிருஷ்ணார்ஜுனர்களும்,துறவிகளும் கடந்த நதி, நம் பெரும் வரலாறு அதன் முன்பு எழுதப்பட்டது என்று நினைக்கும் போதே ஒரு பெருமிதம்.காசியின் சின்ன வீதிகளில் அவ்வளவு நெரிசலிலும் ஏதோ ஒரு ஒழுங்கு இருந்தது.எரியும் பிணங்கள் அவ்வுடல்களை மட்டுமல்லாது இறப்பையே பொசுக்கிவிடுவதைப் போன்ற எண்ணம்.என் மனம் ஏதோ வெற்றிடத்திற்குள் சென்று மீண்டது.எனக்கு ஏதேனும் மன நோய் இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பெற்றது.யோசனையற்ற மனம் இதுவரை நான் உணர்ந்ததில்லை.அந்த நொடி என் வாழ்வில் வலிமை வாய்ந்தது.

13வது நாள் மயிலாடுதுறை வந்து இறங்கும் போது நான் என்னவாகவோ ஆகியிருந்தேன்.மிகுந்த நிதானம்,யார் மீதும் காட்ட விரும்பாத கோபம் என் மேலே இருந்தது.அடுத்தவரே தவறு செய்தாலும் என்னை நானே  கடிந்து கொண்டேன்.
ஆனால்,நம் சமூக சுழற்சி நான் காசிக்குக் கிளம்புவதற்க்கு முன்பு எப்படி
இருந்தேனோ அதே போல மாற்றியது.என் மனம் சூழலின் கட்டுப்பாட்டில்தான்
இயங்குகிறது என்பதை அறிய தினமும் அதை நினைத்துப் பார்க்கிறேன்..

இப்படிக்கு,
சுந்தர் ராஜ சோழன்.

ஜெ

அன்புள்ள சுந்தரராஜன்

காசியிருலிந்து திரும்பியதறிந்து மகிழ்ச்சி.நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

காசியில் இருக்கையில் நீங்கள் வேறு சூழலில் இருக்கிறீர்கள். ஆகவே நடத்தை தெளிவாகவே வேறாக இருக்கிறது. ஊரில் வழக்கமான சூழலில் நடத்தை வழக்கமாக இருக்கிறது

ஆனால் அகப்பழக்கம் காசிப்பயணத்தால் நுட்பமாக மாறியிருக்கும். அது அப்படியே வெளியே தெரியாது. உங்களுக்கு நேரடியாகத் தெரிய அனேகமாக வாய்ப்பில்லை. அது பிறருக்குத்தெரியும்.

அதுவே பயணத்தின் பலன்.

வாழ்த்துக்கள்

ஜெ

ஜெயமோகன் அவர்களுக்கு,

USA வில் உள்ள Nevada விர்கு எப்பொழுதாவது வந்திருக்கிரீர்களா? stretch mark of the world என்று சொல்வார்கள். வந்தது இல்லை என்றால் கண்டிப்பாக வர முயற்சி செய்யுங்கள். பாலைவன ஊர். எங்கு பார்த்தாலும் மலைகள். பல்லாயிரம் வருடங்களின் புவியியல் மாற்றங்களைக் கண் முன் நிறுத்திக் கொண்டே இருக்கிறது. நான் இங்கு 2 வருடங்களாக இருக்கிறேன். போன வாரம்தான் Reno விற்கு (இது Nevada வில் உள்ள ஒரு சின்ன city) அருகில் உள்ள ஒரு காட்டுக்குப்போயிருந்தோம். Lake Tahoe என்று ஒரு பெரிய ஏரி இருக்கிறது.

அதைச் சுற்றி அடர்ந்த காடு இருக்கிறது. அந்த காட்டின் ஒரு பக்கம் அதிகமாக மக்கள் செல்லாத இடம். அதில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது (800+ அடி). காட்டுக்கு நடுவில் நீரோட்டத்துடன் கொஞ்சம் நடந்து போய் அங்கிருந்து நீர் கீழே விழும் இடத்தில் உட்கார்ந்து இருந்தோம் (நினைத்தாலே மயிர்க்கூச்சம் வருகிறது. வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை). நீரின் வரத்து குறைவாக இருந்தாலும் (இந்த வருடம் பனி குறைவு என்பதால்) அந்த இடம் மிக அழகாக இருந்த்தது. அங்குள்ள பாறைகள் அனைத்தும் கவனமாக செதுக்கிய படிக்கட்டுகள் போல உருவாகி இருந்தன.

அம்மாதிரி ஆக 175,000 வருடங்கள் ஆகினவாம். பனிக்கட்டிகள் உருகும்போது பாறைகளையும் பெயர்த்துக் கொண்டு செல்வதால் அப்படி உருவாயினவாம். ஓரு எளிமையான இயற்பியல் விதியில் செயல்முறையை இயற்கை காட்டிக் கொண்டு இருக்கிறது. பாறைகளின் இடுக்குகளில் நீர் தேங்கி அது பனிக்காலத்தில் உறையும் போது பருமன் அதிகமாகிப் பாறையைப் பெயர்க்கிறது (சொல்ல நினைத்ததை சரியாகத்தான் சொல்கிறேன் என்று நினைக்கிறேன் :)). கூர்மையான கத்தியில் வெட்டிய பழம் போல. அவ்வளவு நேராக. அந்தக் காட்டில் உள்ள எல்லாப் பாறைகளும் அப்படித்தான் இருந்தன. இதை விட அழகான இடங்கள் வேறு நிறைய இருக்கிறது. ஆனால் இங்கு பூமி அது (நாமும்) எப்படி உருவானதென்று sample காட்டிக்கொண்டே இருந்தது. மனதுக்கு என்னவோ செய்தது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த மனிதர்கள் எழுதிய குகைச்சித்திரங்கள் எல்லாம் இன்னொரு காட்டில் இருக்கிறது. அதை அடுத்த மாதம் போய்ப் பார்க்க இருக்கிறோம்.

அருகில் yellow stone என்று ஒரு இடம் உள்ளது. இங்கு இருக்கும் valcano வெடித்துதான் பூமியின் கடைசி ice age உருவாகி இருக்கலாம் என்று ஒரு theory உள்ளது.
Photos ஐ இதனுடன் attach பண்ணி உள்ளேன்.

மேகங்களுடைய photo இந்த subject kuக்கு  related கிடையாது. ஆனால் இங்கு மேகங்கள் மிக அழகாக இருக்கும்.

கடைசி இரண்டு மேகத்தில் இருந்து பெய்யும் மழையின் நேரடி படம். ordinary camera வில் எடுத்தது. அதனால் clarity கொஞ்சம் குறைவாக உள்ளது.

நன்றி

சிவா

அன்புள்ள சிவரஞ்சனி

நவடா வந்திருக்கிறேன். அழகான இடம். உங்கள் எழுத்து படங்கள் வழியாக மீண்டும் நினைவில் எழுப்பிப்பார்க்கையில் பெரிய கனவு போலிருக்கிறது

நன்றி

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/37329