இங்கிருந்து தொடங்குவோம்…

1

கொஞ்சநாள்முன்னர் நானும் நண்பர்களும் வட தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு விவசாயி சொன்ன வசனம் காதில் விழுந்தது ”…அப்பாலே சடங்கு சாங்கியம்லாம் செஞ்சு பொண்ணைக் கூட்டிட்டு வந்தாச்சு…” நண்பர் கேட்டார், ”சடங்கு சரி, அதென்ன சாங்கியம்?”

இந்து ஞான மரபில் பரிச்சயம் உள்ள ஒருவருக்கு சாங்கியம் என்ற சொல் மிக அறிமுகமானதாகவே இருக்கும். அது நம் சிந்தனை மரபில் உள்ள ஒரு முக்கியமான பிரபஞ்ச தரிசனத்தின் பெயர். சாங்கிய தரிசனத்தை கபில ரிஷி தொகுத்தளித்தார். அவர் எழுதிய நூல் சாங்கியகாரிகை.

சாங்கிய தரிசனம் கடந்த காலத்தில் மிக முக்கியமான சிந்தனையாக இருந்திருக்கிறது. ‘முனிகளில் நான் கபிலன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான். கபிலர் பிறந்த ஊர் கபில வாஸ்து. அந்த ஊரில்தான் புத்தர் பிறந்தார். பௌத்த சிந்தனையில் சாங்கியத்தின் செல்வாக்கு அதிகம். சாங்கியத்தின் துணைத் தரிசனமாகத்தான் யோகம் உருவாகி வந்தது. இன்று யோகம் இந்து,சமண,பௌத்த மதங்களுக்கு பொதுவான ஒரு ஞான வழிமுறையாக உள்ளது.

சாங்கியம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ஜெக்கோபி என்ற இந்தியவியல் அறிஞர் ‘சங்கிய’ என்ற சொல்லில் இருந்து வந்தது என்று ஊகிக்கிறார். கறாரான கணிதத் தன்மை கொண்ட ஒரு சிந்தனை என்ற பொருளில் வந்திருக்கலாம் என்கிறார். அது ஒரு ஊகம்தான்.

சாங்கியம் ஒரு ஜடவாத தரிசனம். ஜடவாதம் என்றால் இன்றைய அர்த்தத்தில் பொருள்முதல்வாதம். இப்பிரபஞ்சம் பொருளால் ஆனது, பொருளின் இயல்புகளினால் செயல்படுவது, இதன் அடிப்படை விதிகள் பொருண்மைவிதிகளே என்று வாதிடுவது.

ஆதியில் எல்லா பொருளும் ஒரே பொருளாக இருந்தன என்று சாங்கியம் சொல்கிறது. அந்த ஒற்றைப்பெரும் பொருளில் மூன்று குணங்கள் உருவாயின. அதை சத்வ குணம் ரஜோ குணம் சாத்வீக குணம் என்று சொல்லலாம்.  ரஜோகுணம் என்பது செயலூக்க நிலை. தமோகுணாம் என்பது செயலில்லா நிலை. சத்வ குணம் என்பது இரண்டுக்கும் நடுநிலை. இந்த மூன்று குணங்களின் சமநிலை என்றோ எப்போதோ இல்லாமலாகியது. அந்தக் கணம் முதல் ஒன்றாக இருந்த பிரபஞ்சப்பொருள் பலவாக மாறி பிரிந்து வளர்ந்து இன்றைய பிரபஞ்சம் என்ற நிலையை அடைந்தது. இது கிட்டத்தட்ட பெருவெடிப்பு என்ற கொள்கைக்கு நிகரானது

இந்த சிந்தனைக்கு ஆதாரமாக இருந்த மூதாதை தரிசனம் எது? ஒரு தத்துவ தரிசனம் என்பது மிக மிக சிக்கலானது. வளர்ச்சி அடைந்தது. ஆனால் அந்த தரிசனம் மிக எளிமையான ஓர் அனுபவ உண்மையாக மனித மனத்தில் தோன்றியிருக்க வேண்டும். அதன்பின்னர்தான் அது ஒரு பெரிய பிரபஞ்ச தரிசனமாக வளரும்.

சாங்கியத்தின் அடிப்படை தரிசனம் நிலத்தை வழிபட்ட தொல்குடி மனத்தில் இருந்து வந்திருக்கலாம். மண் பொருண்மையானது. எல்லாவற்றையும் அது உருவாக்குகிறது. விதை மூலம் அதன் சமநிலை இல்லாமலாகும்போதுதான் அது முளைத்து முளைத்து காடாக ஆகிறது. நம் நாட்டில் இன்றும் கூட விவசாயிகள் மண்ணின் சமநிலையை குலைப்பதற்காக மண்ணிடம் மன்னிப்பு கோரும் சடங்குகள் உள்ளன. விவசாயம் செய்ய ஆரம்பித்த பழங்குடிகள் மண்ணை முழுமுதல் தெய்வமாக கண்டிருக்கலாம். மண்ணின் பேருருவமாக அவர்கள் பிரபஞ்சத்தை கண்டிருக்கலாம்.

நம்முடைய பெரும்பாலான சடங்குகள் மண் சார்ந்தவை, வேளாண்மை சார்ந்தவை. உழுவதற்கு முன் உள்ள சடங்குகள், உழுதபின் விதைப்புக்கான சடங்குகள், பூச்சிகளை கட்டுவதற்கும் பின்னர் நீர் பெருக்குவதற்கும் உரிய சடங்குகள். அறுவடை சடங்குகள். பின்னர் நெல்லை படையலிடும் சடங்குகள். பொங்கல், விஷு போன்ற நம் பண்டிகைகள் கூட வேளாண்மை சார்ந்தவை. ஆகவே புராதனமான வேளாண்மை சார்ந்த மதம் சாங்கியமாக இருந்திருக்கலாம். சாங்கியமே சடங்குகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கலாம். சாங்கிய மதம் பலவாறாக வளர்ந்து மறைந்த பின்னரும் சடங்குகளுக்கு சாங்கியம் என்னும் பெயர் நீடிக்கிறது என்று படுகிறது.

இன்று நாம் நம் மொழியை கூர்ந்ந்து பார்க்கும் போது எத்தனை சொற்கள் வழியாக சென்று கொன்டிருக்கிறோம். ‘அவரு சொன்னா அது வேதவாக்கு’ என்கிறோம். வேதங்களின் சொல் மாற்ற முடியாத அடிப்படை என்ற பொருளில்.’ யோகம் இருந்தா நடக்கும்’ என்கிறோம். ‘அதில ஒரு நியாயம் வேண்டாமா? ‘என்கிறோம். இந்தச் சொற்களுக்கான பொருள் நமக்கு தெரியுமா? இவற்றின் ஊற்றுமூலம் தெரியுமா?

நாம் ஒரு மொழியில் ஒரு சிந்தனைச் சூழலில் பிறந்து விழுகிறோம். ஆனால் அந்த மொழியையும் சூழலையும் நாம் முறைப்படி கற்பதில்லை. அதற்கான எந்த கல்வி அமைப்பும் இன்று நம் மண்ணில் இல்லை. ஆகவே நாம் நம் மரபின் சிந்தனைத் தொடர்ச்சி அறுபட்டவர்களாக இருக்கிறோம். இன்னொரு சிந்தனை மரபின் நுனியில் இரண்டாம் தர மக்களாக சென்று ஒட்டிக்கொள்கிறோம். நம் மரபில் நமக்கு பயிற்சி இருக்கும் என்றால் அதை நாம் உலகின் எந்த சிந்தனை மரபுடனும் இணைத்துக்கொண்டு வளர்த்தெடுக்க முடியும். அது நமக்கு தனித்தன்மையையும் நமக்கே உரிய சிந்தனைவழிகளையும் அளிக்கும். நம்மை உலகில் முன்னிலைப்படுத்தும். உலகின் புத்தம் புதிய சிந்தனைகள் எல்லாமே இப்படித்தான் உருவாகியிருக்கின்றன.

இப்போது நாம் அடிக்கடிக் கேட்கும் ஒரு வரி உண்டு, இந்திய சிந்தனை என்று ஒன்று இல்லை. இந்து ஞான மரபு என்று ஒன்று இல்லை. அதெல்லாம் வெள்ளைக்காரன் வந்து உருவாக்கியது. பல தளங்களில் இந்த கூச்சல் எழுந்து கொன்டே இருக்கிறது. இந்தக் குரல் பெரும்பாலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் தயாரிக்கப்பட்டு நமக்கு அனுப்பப்படுகிறது. அதாவது உங்கள் சிந்தனைகளையும் நாங்கள்தான் உருவாக்கினோம் என்ற குரல்.

இந்தக் குரலை எவர் எதிரொலி செய்கிறார்களோ அவர்களுக்கே இந்தியாவில் இன்று வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். அவர்களை மேலைநாட்டு பல்கலைகள் அழைத்து கௌரவிக்கும். பட்டங்களும் நிதிக்கொடைகளும் அளிக்கும். அவர்களுக்கு அதை ஒட்டி உயர்பதவிகள் கிடைக்கும். ஆங்கில இதழ்களில் முக்கியத்துவம் கிடைக்கும். இந்தவலையை விரும்பி ஏற்றுக்கொண்டவர்களின் குரல்களையே நாம் அதிகமும் இந்திய ஊடகங்களில் கேட்கிறோம்.  அசலான குரல்கள் மிக மிக அபூர்வாமானவை.

உண்மையில் அப்படித்தானா? உதாரணமாக இந்து ஞான மரபு என்ற ஒன்று எப்போதிருந்து இருக்கிறது? அதற்கு இந்து ஞானமரபு என்ற பெயர் பத்து நூற்றாண்டுகளாக புழங்கி வருவது. அதற்கு முன்னர் அது சனாதான தர்மம் [புராதனமான வழிமுறை] என்று சொல்லப்பட்டது. நமக்கு எப்போது முதல் நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போது முதல் இதற்கு ஒரு பாடத்திட்டம் [கரிக்குலம்] தெள்ளத் தெளிவாகவே கிடைக்கிறது.  இருந்தும் இப்படி ஒரு அமைப்பே இல்லை என்று நம்மிடம் வாதிடுகிறார்கள் நம் அறிவுஜீவிகள்.

இந்த பாடத்கிட்டம் எல்லா இந்து ஞான வழிகளுக்கும் பொதுவானது. நீங்கள் திருவாவடுதுறை மடம் சென்று சைவம் கற்றாலும் சரி, அகோபிலம் சென்று வைணவம் கற்றாலும் சரி இதை கற்றாக வேண்டும்.  செவ்வியல்  இலக்கியங்களை விடுங்கள், நாட்டுப்புற இலக்கியங்களில் கூட அப்படித்தான். ஒரு கதாநாயகன்  சகல கலா வல்லவன் என்றால் உடனே அவன் இந்த பாடத்திட்டத்தை கற்றவன் என்பார்கள். நீங்களே கேட்டிருக்கலாம். சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள். ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…”  அதுதான் இந்து மெய்ஞான மரபு.

அந்த பாடத்திட்டம் இதுதான்.

1.வேதங்கள்

2. மூன்று தத்துவங்கள் . அதாவது பிரஸ்தான திரயம். கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்.

3. ஆறு தரிசனங்கள். சாங்கியம் யோகம் நியாயம் வைசேடிகம் பூர்வமீமாம்சம் உத்தர மீமாம்சம்

4 ஆறு மதங்கள். சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணபத்யம் சௌரம்

இவைவற்றை எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு நூல் வரிசையாக எண்ணிவிடக் கூடாது. இவை ஒன்று இன்னொன்றை மறுத்து விவாதித்து வளர்ந்த ஒரு பெரிய ஞானத் தொகுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு இன்னொன்றுடன் உள்ள உறவும் முரண்பாடும் முக்கியமானவை.

முதல் பெரும் பிரிவினை வைதீகம் அவைதீகம் என்ற பகுப்புதான். எந்த தரப்புகள் வேதங்களை அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொள்கின்றனவோ அவை வைதீகம். எவை அப்படி ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனவோ அவை அவைதீகம்.

ஆறு தரிசனங்களில் சாங்கியம், யோகம்,நியாயம், வைசேஷிகம் ஆகிய நான்குமே அவைதீக மரபைச் சேர்ந்ந்தவை. அவற்றில் சாங்கியத்தில் ஒரு பகுதி பின்னாளில் வேதத்தை ஏற்றுக்கொண்டது.

அதேபோல இன்னொரு பகுப்பு என்பது ஜடவாதம் – ஆன்மவாதம் என்பது. பொருள்முதல்வாதம், கருத்துமுதல் வாதம் ஏன்ற பிரிவினைதான் இது. இந்த பிரபஞ்சம் அதன் பொருள்சார்ந்த விதிகளால் செயல்படுகிறதா  அல்லது அதற்கு அடிப்படையில் ஒரு கருத்து உள்ளதா? என்ற கேள்வி.

வேதமே கூட முழுக்க ஒரே தரப்பை சேர்ந்தது அல்ல. அதுவே இந்த இருவகை சிந்தனைகளுக்கும் இடமளிக்கிறது. ரிக் வேதத்தில் உள்ள பிரகஸ்பதி ரிஷியும் அவரது சீடர்களான கணாதன் பரமேஷ்டி போன்றவர்களும் ஜடவாதிகள்தான். ரிக்வேதத்தில் இருந்தே பொருள்முதல்வாத தரப்பு வளர்ந்து வந்தது. அதாவது எளிமையாகச் சொல்லப் போனால் நாத்திக வாதம். சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் போன்ற தரிசனங்கள் ஜடவாதம் சார்ந்தவைதான்.

இன்னும் ஒரு பிரிவினை உள்ளது. அதை கர்ம வழி  மற்றும் ஞான வழி என்று பிரிக்கலாம்.  ரிக் வேதத்தின் பெரும்பகுதி சடங்குகளைப் பற்றியது. இன்ன சடங்குக்கு இன்ன பலன் என்று சொல்வது. ஆகவே அது கர்ம காண்டம் என்று சொல்லபப்ட்டது

ஆனால் அதன் பத்தாவது பகுதி தூய மெய்ஞானத்தை மட்டுமே முன் வைக்கிறது. ஆகவே இது ஞான காண்டம் என்று சொல்லப்படுகிரது. இது சடங்குகளுக்கு எதிரானது. இதைத்தான் பாரதியார் ‘சுத்த அறிவே சிவமென பாடும் சுருதி’ என்றார்

வேதத்தின் இறுதிப் பகுதி வேதாந்தம். வேத – அந்தம். அதுவே பின்னர் உபநிடதங்களாக வளர்ந்தது. உபநிடதங்கள் வேதத்தின் சடங்குகளை அதாவது கர்மகாண்டத்தை நிராகரிக்கின்றன. அவை பேசுவது தத்துவத்தை மட்டுமே.

அந்த தத்துவ அமைப்பை மூன்று பகுதிகளாகச் சொல்கிறது மரபு. உபநிடதங்கள் ஒரு பகுதி. பல்வேறு ஞான வழிகள் விவாதிக்கப்பட்ட காலகட்டம் இது. இந்த விவாதத்தின் ஒரு உச்சம் கீதை. இன்னொரு உச்சம் பிரம்ம சூத்திரம்.

இவையெல்லாம் சேர்ந்ததே இந்து ஞான மரபின் தத்துவ கட்டுமானம்.

இந்து ஞான மரபை நாம் இன்னும் இரண்டாக பிரிக்கலாம். ஒன்று தத்துவம். இன்னொன்று புராணம். தத்துவார்த்தமாக ஒரு உயர் தளத்தில் நின்று ஒரு தரிசனத்தை அடைகிறது இந்து மதம். அந்த தரிசனத்தை கதைகளாக, நம்பிக்கைகளாக ,வழிபாட்டு முறைகளாக முன்வைத்து எளிய மக்களிடம் பேசுகிறது.

உண்மையில் இந்த இரு தரப்புக்கும் நடுவே முரண்பாடே இல்லை. பாம்பின் தலை தத்துவம் என்றால் வால் புராணம். இரண்டும் ஒன்றே. தலை போன வழியே தான் வால் போகும். மெய்ஞானம் அடைபவன் நெஞ்சில் தன் வாலை தானே விழுங்கி சுருண்டு கிடக்கும் அந்த பாம்பு.

சாதாரணமாக நாம் கடவுள் தெய்வம் இறைவன் போன்ற சொற்களை பொத்தாம் பொதுவாக பயன்படுத்துகிறோம். உண்மையில் பிற மதங்கள் இச்சொற்களை பயன்படுத்துவதற்கும் நமக்கு இடையே  வேறுபாடு உன்டு. உதாரணமாக கிறித்தவ மதத்தில்  கடவுளை பிதா என்கிறார்கள். அவர் ஒரு மாபெரும் தந்தை. பூமியை அவர் படைத்தார். மனிதனை உருவாக்கினார். அதன்பின் வானத்தில் இருந்து கொண்டு மண்ணில் உள்ள மனித வாழ்க்கையை கண்காணிக்கிறார், காக்கிறார்

ஆனால் வேதங்களில் காணும் இறை உருவகம் இதெல்லாம் அல்ல. வேதங்கள் இறை ஆற்றலை பிரம்மம் என்கின்றன. பிரம்மம் என்றால் ஒரு வியப்பு ஒலிதான். அதற்கு மேல் அதைப்பற்றி ஒன்றுமே சொல்ல முடியாது. அதற்கு உரிய குணங்களாக வேதங்கள் சொல்வது எல்லாமே எதிர்மறை குணங்களைத்தான். அதாவது  எந்த சொல்லாலும் சொல்ல முடியாதது, எந்த அடையாளமும் இல்லாதது. எந்த விவரணைக்கும் அப்பாற்பட்டது – இப்படி. அதை ‘தத்’ அது என்றே சொல்கின்றன.

இந்த இறை உருவகம் மிக மிக தத்துவார்த்தமானது. அது உலகை சிருஷ்டிக்கும் ஒரு சக்தி அல்ல. அது உலகை காக்கவும் இல்லை. அது ஒரு பிரபஞ்ச சக்தி. அதுவேதான் பிரபஞ்சம். அதுவேதான் முடிவற்ற வெளி. காஸ்மோஸ் அதுதான். ஆற்றல் அதுதான். ஏராளமான வரிகள் வழி வேதங்கள் அந்த முடிவிலா ஆற்றல் வெளியைப் பற்றிச் சொல்கின்றன.

அந்த ஞானத்தை உபநிடதங்கள் தர்க்க பூர்வமாக வளர்த்தெடுக்கின்றானா. ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் [இவை அனைத்திலும் இறை உறைகிறது] தத்வமசி [அது நீதான்] அகம் பிரம்மாஸ்மி[ நானே பிரம்மம்] என்றெல்லாம் அதை விளக்குகின்றன உபநிடதங்கள்.

இங்கே நாம் காண்பதெல்லாமே பிரம்மம் என்றால் காணும் எதை வணங்கினாலும் அதெல்லாமே பிரம்மத்தை வணங்கியதுதானே? இந்த ஞானத்தில் இருந்து உருவானதே இந்து மரபின் பலதெய்வ வணக்கம். அதாவது ஒற்றைப் பரம்பொருளின் பலமுகத் தோற்றமே இங்குள்ள எல்லாம். நாயில் நன்றியாக, பறவையில் வேகமாக, பாம்பில் விஷமாக , மரத்தில் உயிராற்றலாக அலைகடலில் கொந்தளிப்பாக, அதிகாலையில் சிவப்பாக,  இரவில் இருளாக தெரிவதெல்லாமே பிரம்மம் தான். எல்லாமே தெய்வம்தான். அப்படித்தான் இந்து மரபில் தெய்வங்கள் முடிவிலாது உருவாயின. உங்களால் முடிந்தால் நீங்கள் கூட ஒரு தெய்வத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இந்த இடத்தில் இன்னொரு பிரிவினை உருவானது.  இறை அல்லது பிரம்மம் என்பது இருவகையாகப் பார்க்கபட்டது. நிர்குண பிரம்மம் என்பது ஞானத்தால் அறியப்படுவது. எந்தவகையான குணங்களும் இல்லாத பிரம்மம் அது. அதைத்தான் உபநிடதங்கள் பேசுகின்றன. பிரம்மசூத்திரம் பேசுகிறது

அந்த நிர்குண பிரம்மத்தை அன்றாட வாழ்க்கையில் நம்மால் உணர முடியவில்லை என்றால் நாம் சகுண பிரம்மத்தை வழிபடலாம். இது எல்லா குணங்களும் கொண்ட பிரம்மம். ஏனென்றால் எல்லா குணங்களும் அதனுடையது அல்லவா?

இவ்வாறு சகுண பிரம்மம் ஆக வழிபடப்படும் தெய்வங்கள் தன் நம்முடைய எல்லா தெய்வங்களும்! சாலையோர மாரியம்மன் கோயிலில் ஒரு கல் கண் தீட்டப்பட்டு சாமியாக இருக்கும். ஆனால் என்ன மந்திரம் சொல்லப்படுகிறது என்று பாருங்கள். ஆயிரம் கண் கொண்டவளே. முடிவற்றவளே. ஆற்றல் வடிவானவளே. அறியப்படவே முடியாத பெரும் சக்தியே…

இதுதான் இந்து வழிபாட்டுமுறை. அறியப்படாததை  அறியப்பட்ட ஏதேனும் ஒரு வடிவில் வழிபடுவது. இவ்வாறு உருவான பல தெய்வ வழிபாடுகள் பொதுவாக ஆறு மதங்களாக தொகுக்கப்பட்டன.

சிவனை வழிபடுவது சைவம். அதற்குள் பல வழிபாடுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல விஷ்ணுவை வழிபடுவது வைணவம். சக்தியை வழிபடுவது சாக்தேயம். முருகனை வழிபடுவது கௌமாரம். கணபதியை வழிபடுவது காணபத்யம். சூரியனை வழிபடுவது சௌரம்.

இவற்றில் சைவமும் வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தன. சாக்தம் கேரளத்திலும் வங்காளத்திலும் மட்டும் நீடித்தது. மற்ற மதங்களில் காணபத்யமும் கௌமாரமும் சைவத்தில் இணைந்தன. சௌரம் வைணவத்தில் கலந்தது.

பெருமதங்கள் பக்தியை முதல் தளத்தில் முன்வைக்கும். சைவ மதம் சிவ வழிபாட்டையே முதல் தளத்தில் சொல்லும். ஆனால் உச்சிக்குச் சென்றால் அது பேசுவது சைவ சித்தாந்தமாக இருக்கும். அந்த சிந்தனைகள் நம் பல்லாயிரம் வருட மரபில் இருந்து உருவானவையாக இருக்கும்

ஒரு சாதாரணமான பாடலிலேயே கூட நாம் உயர்தத்துவமும் பக்தியும் கலந்திருப்பதைக் காணலாம். சகுண பிரம்ம வழிபாட்டில் நிர்குண பிரம்ம வழிபாடு கலந்திருக்கக் காணலாம்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

முதல்வரியில் நிர்குண பிரம்மம். ஞானத்தால் உணரப்படும் தத்துவார்த்தமான கடவுள். உலகையே உணர்ந்தாலும் உணர முடியாதவன். அடுத்த வரி சகுண பிரம்மம். புராண சித்திரம். நிலவு உலாவி நீர் மலிந்த கூந்தல் கொண்டவன். அதற்கடுத்தவரி மீண்டும் தத்துவ உருவகம். அலகில்லா- எல்லையற்ற- சோதியானவான். அடுத்த வரி மீண்டும் புராணம். அம்பலத்தில் ஆடுபவன்.

இவ்வாறு இரு வழிகளும் நம் மரபில் மிக இணைந்து ஒரு அழகிய முரணியக்கத்தை நிகழ்த்தியுள்ளன. இந்த மரபுதான் இந்து ஞான மரபு என்று சொல்லப்படுகிறது. இது வெறும் மத வழிபாடு மட்டும் அல்ல. இதில் தத்துவம் உள்ளது. அழகியல் உள்ளது. இலக்கியம் உள்ளது. உங்களுக்கு மத நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட இதுவே உங்கள் பல்லாயிரம் ஆண்டுக்கால சிந்தனை மரபு. பல்லாயிரம் ஆண்டுக்கால அழகியல் மரபு.  நீங்கள் நாத்திகரானாலும் இதில் உங்களுக்கு வேர் உண்டு.

அந்தவேரில் இருந்தே நீங்கள் அசலாக முளைக்கமுடியும். அப்போதே நீங்கள் புதிகாக சிந்திக்கவும் முடியும். மரபில்லாமல் சிந்தனை இல்லை. சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைபவை ஊகங்கள். Hypothesis-   அவற்றை உருவாக்குவது வாழ்க்கைத்தரிசனம். பிரபஞ்ச தரிசனம். அவை பண்பாட்டால் உருவாக்கப்பட்டு நெடுங்காலமாக மெல்ல மெல்ல வளர்ந்து வந்தவையாகவே இருக்கும்.

நாம் காணும் மொத்த மேலைச் சிந்தனையும் கிரேக்க மரபு அல்லது செமிட்டிக் மரபு என்ற இரு பெரும் மரபின் வளர்ச்சி நிலையே. நம் மரபு அவற்றுக்கு இணையானதோ மேலானதோ ஆன ஒரு பெரும் செல்வம். அந்தச்செல்வத்தை நம் மொழியில் நம் வாழ்க்கையில் வைத்திருக்கிறோம். ஆனால் கற்காமல் உதாசீனம் செய்கிறோம்.

எதிர்காலத்திலாவது இந்நிலை மாற வேண்டும்.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 6, 2009 .

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53
அடுத்த கட்டுரைசங்கரர் பற்றி மீண்டும்