காந்தியை பிரிட்டிஷார் ஒழித்திருக்கலாமே?

திரு ஜெயமோஹன்,

எப்படிக் கிடைத்தது சுதந்திரம்? என்ற கட்டுரையை வாசித்தேன். இரண்டு விஷயங்கள் பிடிபடவில்லை. காந்தி பிரிட்டிஷாரின் அடிப்படை பலமான மக்களின் நம்பிக்கையை 20 ஆண்டுகளில் சிதைத்தார். என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அவர் என்ன செய்கிறார் என்று ப்ரிட்டாஷாருக்குப் புரியவில்லயா? அவ்வாறு புரிந்திருந்தால் அவரை ஏன் விட்டு வைத்தார்கள்? மரியாதையாக நடத்தினார்கள்?

அவருக்கு அந்த காலத்திலேயே பெரு முதலாளிகளின் ஆதரவு இருக்கிறது அதனாலேயே அதிக ஆபத்தானவராக. வருவார் என்று அவர்களுக்குப் புரியவில்லையா? அவர் பிரபலம் அடைவதற்கு முன்பாகவே அவரை ஒழித்திருக்கலாமே?

அடுத்ததாக, ’கடுமையான நேரடியான வன்முறை மூலம் ஒரு ராணுவச்சுரண்டல் ஆட்சியைத்தான் நடத்தியிருக்கமுடியும். இயல்பில் அதைச்செய்யக்கூடியவர்கள் அல்ல அவர்கள்’ என்ற நற்பண்பு சாட்சி பத்திரம் கொடுத்திரிக்கிறீர்கள். தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தங்கம், வைரம் மற்ரும் கனிமங்கள் சுரண்ட அவர்கள் நடந்து கொண்ட முறைகள் பழங்கால மங்கோலிய முறைக்கு சற்றும் குறைந்த்தல்ல.

இந்திய மக்களின் docile மனப்பான்மையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற போராட்ட முறையைப் புகுத்தி அதன் மூலம் சுதந்திர போரட்டத்தைப் பரவலாக்கி மக்கள் போராட்டமாக மாற்ரினார் என்று வேண்டுமானால் கூறலாம்.

அன்புடன்

ரவீந்திரன்.

அன்புள்ள ரவீந்திரன்

உங்கள் கடிதம் நான் எழுதிய கட்டுரையை திரும்பச் சொல்லும்படி கோருகிறது என்று படுகிறது. இருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்வது என் கடமை என்றே உணர்கிறேன்.

நாம் இன்றுகிடைக்கும் வரலாற்று ஆவணங்களைக் கொண்டே இவ்விஷயங்களை ஆராயவேண்டியிருக்கிறது. அவற்றைத்தாண்டி ஊகங்களை நிகழ்த்துவதில் பலனில்லை.

காந்தியின் போராட்டம் ஒட்டுமொத்தமாக என்ன செய்தது என்பதை நாம் இன்று வரலாறாக பார்க்கையில் தெளிவாகக் காண்கிறோம். அன்று அதை நடைமுறையில் நீண்டகால அளவில் பிரிட்டிஷார் அனைவரும் துல்லியமாகப் புரிந்துகொண்டிருந்தார்கள் என்று நினைக்கமுடியாது

ஆனால் ஒத்துழையாமைப் போராட்டம் ஆரம்பித்ததுமே காந்தியின் நோக்கம் என்ன என்று பிரிட்டிஷாருக்குப் புரிந்தது. அது நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் ஆவணங்கள் மூலம் இன்று தெள்ளத்தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.

ஆனால் அப்போது காந்தி இந்தியாவின் மாபெரும் மக்கள்சக்தியை தன் பின் திரட்டிவைத்திருந்தார். இந்தியாவில் அவர் அரசியலில் நுழைந்ததே ஒரு நட்சத்திரமாகத்தான். ஐந்தாறு வருடங்களில் அவர் தேசமே வழிபடும் மனிதராக ஆனார். அவர் இந்தியஅரசியலில் நுழைந்த சில வருடங்களுக்கூல் எழுதப்பட்ட பாடல் ‘வாழ்க நீ எம்மான்’ என்பதை கவனித்தால் அவரது முக்கியத்துவம் என்ன என்று தெரியும். அன்றே உலகம் கவனிக்கும் ஓர் ஆளுமையாக ஆகிவிட்டிருந்தார் காந்தி

மாபெரும் மக்கள்சக்தி பின்னாலிருக்கையில் ஒரு தலைவரை அப்படி ‘ஒழிக்க’ முடியாது. அது பிரிட்டிஷார் சற்றே இழக்க ஆரம்பித்த மக்கள்ஏற்பை ஒரேயடியாக தொலைத்துக்கட்டுவதில்தான் முடியும்.நீங்கள் சொல்லும் அந்த தென்னாப்ரிக்க நிறவெறிஅரசு கூட மண்டேலாவை ‘ஒழித்து’ கட்டவில்லை என்பதை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். இன்று சர்வாதிகார அரசான மியான்மார் ஆங் சான் சூகியை விட்டுவைத்திருப்பதும் அதனால்தான்.

ஆனால் அரசியல்ரீதியாக அவரை ஒழித்துக்கட்ட எல்லா முயற்சிகளையும் பிரிட்டிஷார் மேற்கொண்டனர். அது பலமுனைத்தாக்குதலாக இருந்தது. ஒன்று, காந்தியின் அரசியல்அடித்தளத்தை அழிப்பது. இரண்டு அவரது சர்வதேச நன்மதிப்பை குலைப்பது.

இந்தியாவை வெல்ல பிரிட்டிஷார் மேற்கொண்ட வழிகள் இரண்டு. ஊழல், பிளவுபடுத்துதல். அதையே இங்கும் கையாண்டனர்.

1923முதல் காந்திக்கு எதிரான குழுக்களை உருவாக்கி காங்கிரஸை பிளந்து காந்தியைச் செயலிழக்கச் செய்தனர் பிரிட்டிஷார். காந்தியை நிராகரித்து பிரிந்து சென்ற சுயராஜ்யாகட்சியினருக்கும் பிற மிதவாதிகளுக்கும் ஆட்சியதிகாரங்களை அள்ளி வழங்கினர்.

காந்தியின் ஒவ்வொரு போராட்டத்தின் கடைசியிலும் இந்திய சமூகத்தை பிரிக்கும் திட்டங்களுடன் பிரிட்டிஷார் வந்ததையும் அவற்றுக்கு எதிராக காந்தி தொடர்ந்து போராடியதையும் நான் முந்தைய கட்டுரையில் விரிவாகவெ சொல்லியிருந்தேன். இன்றுவரை காந்திமீது நீடிக்கும் கடுமையான காழ்ப்புகளும் வசைகளும் இந்தப்பிரிவினையரசியலால் உருவாக்கப்பட்டவையே. விரிவாகவே அவற்றை எழுதியிருக்கிறேன்.

காந்தியின் இன்னொரு வலிமை அவருக்கு இருந்த சர்வதேச மரியாதை. குறிப்பாக அன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்த ஜனநாயகவாதிகள் காந்தியை கொண்டாடினர். காந்தியின் போராட்டங்களை பிரிட்டிஷ் அரசு அஞ்சியதே அந்த சர்வதேச கவனம் காரணமாக்த்தான்.

அந்த மரியாதையை தொடர் பிரச்சாரம் வழியாக அழிக்க முயன்றனர் பிரிட்டிஷார். இன்றுவரை சர்வதேச அளவில் நீடிக்கும் காந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தின் அடித்தளங்கள் அன்றே போடப்பட்டன. அவர் உண்மையில் வன்முறையை ஆதரிக்கத்தான் செய்கிறார் என்பதே முதன்மையான பிரச்சாரமாக இருந்தது. இந்தியச்சுதந்திரப்போரில் நடந்த சின்னஞ்சிறு வன்முறைகள் கூட பெரிதுபடுத்தப்பட்டு அவையெல்லாம் காந்தியின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டவை என பிரச்சாரம் செய்யப்பட்டது. காந்திக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதுகூட அவர் மறைமுகவன்முறையாளர் என்ற பிரிட்டிஷ் அவதூறின் அடிப்படையில்தான்.
காந்தி மதவெறியர் என்றும் சாதிமனநிலையில் ஊறிய பழமைவாதி என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரச்சாரம்செய்தது. ஆச்சரியமென்னவென்றால் சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸை எதிர்க்க விரும்பிய இடதுசாரிகள் இந்த ஏகாதிபத்திய பிரச்சாரத்தைத்தான் தாங்களும் முன்னெடுத்தனர்.

எதிரியை தீமையின் மொத்த உருவமாக உருவகித்துக்கொள்வது ஒரு தாழ்ந்த அரசியல் பிரக்ஞை. இந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய ஆட்சியை ஒற்றைப்படையாக முத்திரை குத்துவதை நான் எப்போதுமே தவிர்த்துவந்திருக்கிறேன். இந்தியாவில் மாபெரும் பொருளியல்சுரண்டல் அரசை அவர்கள் உருவாக்கினார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கே உண்மை இங்கே ஒரு நவீன ஜனநாயகச் சூழலுக்கான அடித்தளத்தையும் உருவாக்கினார்கள் என்பது.

நவீன இந்திய சமூகத்தை வடிவமைத்ததில் பங்களிப்பாற்றிய ஆங்கில அதிகாரிகளை , நீதிபதிகளை, வரலாற்றஞர்களை, இதழாளர்களை, கல்வியாளர்களை நாம் இன்னமும் கூட கௌரவிக்க ஆரம்பிக்கவில்லை. காந்தி என்றும் அவர்களுக்கு நெருக்கமானவராகவே இருந்தார். இந்தியாவை ஆண்ட வைஸ்ராய்களிலேயே கூட இந்தியாமீது நல்லெண்ணம் கொண்ட பலர் இருந்தனர். இதெல்லாமே ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு. ஆர்வமிருந்தால் வாசித்துப்பார்க்கலாம். இந்த ஜனநாயகவெளியில் காந்தி செயல்பட இடமிருந்தது என்பதுதான் உண்மை.

இந்தியாவில் பிரிட்டிஷார் மேற்கொண்ட சுரண்டல்கள், அநீதியான வழிமுறைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எப்போதுமே வலுவான குரல்கள் எழுந்துள்ளன. பிரிட்டிஷ் ஊடகங்களும் அறிஞர்களும் தீவிரமாக குரல்கொடுத்திருக்கின்றனர். ஒருஎப்போதும் காந்தி அந்த சாதகமான சக்தியை பயன்படுத்தித்தான் வந்திருக்கிறார்

பிரிட்டிஷ் முதலாளித்துவ ஏகாதிபத்தியமும் பிரிட்டிஷ் ஜனநாயகமும் எப்போதும் முரண்பட்டே வந்துள்ளன. ஆப்ரிக்கநாடுகளில்கூட பிரிட்டிஷாரின் பாராளுமன்ற ஜனநாயகம் ஆக்கபூர்வமான மனிதாபிமான தரப்பாகச் செயல்பட்டிருக்கிறது ஏனபதே வரலாறு. மங்கோலிய பாணி கொலைகாரர்கள் என எபபடிச் சொல்கிறீர்கள் என எனக்குப்புரியவில்லை

ஆப்ரீக்கநாடுகளில், குறிப்பாக தென்னாப்ரிக்காவில் , பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் தரப்பு பலமிழந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வணிக சக்திகள் மேலாதிக்கம்பெற்றன. அப்போதுகூட அந்தச்சுரண்டகளுக்கு எதிராக பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. அதை நெல்சன் மண்டேலாவே பதிவுசெய்திருக்கிறார்- அவர் வென்றதும் செய்த முதல் பேருரையே ஆஸ்திரேலியாவில்தான்.

நான் ஒட்டுமொத்தமான விரிவான ஒரு வரலாற்றுச்சித்திரத்தை முன்வைக்கிறேன். அதில் இந்தவகை எலிய வினாக்களுக்கெல்லாம் பதில் இருக்கிறது. நானும் பலமுறை சொல்லிவிட்டேன். அந்த விரிவான சித்திரத்தை கருத்தில்கொண்டு மேலதிக வினாக்களை கேட்பது எனக்கும் நல்லது.

ஒட்டுமொத்த போல்ஷெவிக் புரட்சியும் போர்முனையில் ரேஷன் தீர்ந்துபோனதனால் கோபமடைந்து நாடுதிரும்பிய வோட்கா வெறியர்களான ருய ராணுவத்தினரை பொய்யான வாக்குறுதிகள் அளித்து நடத்தப்பட்டதுதான் என்று ஒருவர் ஆவணங்களை முன்வைத்தே வாதிடமுடியும். அதை நான் காழ்ப்புள்ள வரலாற்றாய்வாகவே நினைப்பேன். அதைச்செய்பவர் வாலாற்றைவிட மேலானவராக தன்னை நினைத்துக்கொள்கிறார். ஆனால் இடதுசாரிகள் இடதுசாரிவரலாறல்லாத எதையும் அப்படித்தான் புரிந்துகொள்கிறார்கள்

ஜெ

காந்தியும் நோபல்பரிசும்


தலித் அர்சியலும் காந்தியும்

முந்தைய கட்டுரைராஜ தமிழாய்வு
அடுத்த கட்டுரைநமது அறிவியல்-அர்விந்த் குப்தா