«

»


Print this Post

நமது தொழில்நுட்பம்,நமது ஆய்வுமனநிலை


அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் கட்டுரையின் அடிநாதம் புரிகிறது. பெரும்பான்மை பொறியியல் மாணவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் – என்பது எனது தினசரிப் புலம்பல்களில் ஒன்று.

ஆனால் நவீனக்கருவிகள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டதே இல்லை என்ற ஜெனரலைஸ்ட் வாதத்தை, இந்தியாவில் நவீனக்கருவிகளை (கனரக எந்திரங்கள்)சரிசெய்யும் வேலையில் 16 வருடங்கள் இருந்தவன் என்ற தகுதியுடன் மறுக்கிறேன். அரசாங்க எந்திரங்களுக்கு என்ன ஊழல் நிர்ப்பந்தங்களையும், சாலையோரத்தில் இருக்கும் மெக்கானிக்குகள் ட்ரையல் & எரர் வகையில் செய்யும் பழுதுநீக்கும் பணிகளையும் வைத்து மொத்தமாக பழுதுநீக்கல் என்ற ஒரு விஷயமே இல்லை என்று சொல்வது அதிகப்படி.

தொழில்நுட்பத்தின் அறிவியல் தெரியாது – என்பதுபோன்ற குறைகளுக்காகத்தான் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களுக்கென்றே பிரத்யேக பயிற்றுவகுப்புகள், அப்படிப்பட்ட வகுப்புகளை நடத்த பிரத்யேக ஆசிரியர்கள் என்று பல்வேறு நிறுவனங்களும் பயிற்றுமையங்களை வைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஆசிரியர்தான் நானும்.

சுரேஷ் பாபு

அன்புள்ள சுரேஷ்,

நலம்தானே? நேரில் பார்த்த நினைவு இன்னும் மங்கவில்லை.

இந்தக் குறிப்பை எழுதுவதற்கு முன்பு நிகழ்ந்த ஓர் உரையாடலைச் சொல்கிறேன். என் வீட்டுக்கு ஓர் ஆங்கில இதழாளர் வந்திருந்தார். அவரிடம் அவரது துறைக்குத் தகுதியான இளைஞர்கள் வருகிறார்களா என்று கேட்டேன்.

அவர் ‘ஆமாம்’ என்றார்.

நான் வியப்புடன் ‘பிற எல்லா துறைகளிலும் எதிர்மறையான பதில்கள்தானே வருகின்றன?’ என்றேன்.

’அது உண்மையாக இருக்கலாம். ஆனால் ஆங்கில இதழியலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் இதன் மீதான பெரும் விருப்பத்துடன், இதைவிட அதிகமாக ஊதியம் அளிக்கும் பணிகளை உதறிவிட்டு வரக்கூடியவர்கள்’

அதையொட்டி நான் ஒத்திசைவு ராமசாமியின் கட்டுரையை அவரிடம் காட்டினேன். அதனுடன் இணையும்படியாக எனக்கு ஒரேமாதத்தில் கிடைத்த இரு எதிர்வினைகளைப்பற்றியும் எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு மற்றும் அச்சம் பற்றியும் சொன்னேன்.

அதைப்பற்றி அவர் சில கருத்துக்கள் சொன்னார். ராமசாமி என்ன வகையான தேர்வு வைத்திருப்பார் என கொஞ்சம் வேடிக்கை கலந்து பேசிக்கொண்டோம்.

‘பொதுவான வாசகர்களுக்காக நீங்கள் என்ன வகை தேர்வு வைப்பீர்கள்?’ என்று அவர் கேட்டார்

நான் சொன்னேன் ‘வாசிப்பவரை முழுமையாகக் கூர்ந்து வாசித்து, அலகுகளாகப் பகுத்து, அடிப்படையான தர்க்கத்தைப் பிரித்து எடுத்து, ஒரு கருத்தாக சுருக்கிப் புரிந்துகொள்ளமுடிகிறதா என்று பார்ப்பேன்’.

அவர் ‘என்ன செய்வீர்கள்?’ என்றார்

நான் சொன்னேன். ‘நாய்களின் புத்திசாலித்தனத்தை மதிப்பிட ஒரு விளையாட்டு உண்டு. நாய்க்குப்பிரியமான உணவை அதற்கு எரிச்சலோ அச்சமோ ஊட்டக்கூடிய ஒரு விஷயத்தால் பொதிந்து அதன் முன் வைப்பார்கள்..பெரும்பாலான நாய்கள் வெருண்டு பின்வாங்கி குரைத்துக்கொண்டு சுற்றிவரும். லாப்ரடார் போன்ற புத்திசாலி நாய்கள் முதலில் வெருண்டாலும் கூர்ந்து அவதானிக்கும். உணவின் மணம் போன்ற சாதக விஷயங்களைப் பரிசீலிக்கும். அது சம்பந்தமில்லாத ஒன்றால் மூடப்பட்டிருப்பதாக அறிந்துகொள்ளும். உலக அளவில் இந்த விளையாட்டில் லாப்ரடார் பத்து நிமிடத்துக்குள் உணவைக் கண்டுபிடித்து மூடியிருப்பதை விலக்கி உண்ண ஆரம்பித்திருக்கிறது’

நண்பர் சிரித்தார். நான் சொன்னேன் ‘….அதைச் செய்கிறேன். எரிச்சலூட்டும் ஓர் பொதுமையாக்கத்துடன் ஒரு குறிப்பு எழுதுகிறேன். எப்படி எதிர்வினைகள் வருகின்றன என்று பார்ப்போம்’

இந்தப்பொதுமையாக்கத்தை நானே பல இடங்களில் பல வகைகளில் முன்வைத்து வாதிட்டு பார்க்கிறேன். என் கவனம் என்னவகையான எதிர்வினைகள் வருகின்றன என்பதுதான்.

’என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள்? ’ என்றார் நண்பர்

நான் சொன்னேன். முதன்மையான தவறான பதில்கள் என்பவை கீழ்க்கண்ட வகையிலானவை. கோபமாகச் சொல்லப்பட்டால் இன்னும் மதிப்பெண் கீழே.

1.அப்படியெல்லாம் பொதுமைப்படுத்த முடியாது என்ற கூறுவது. விதிவிலக்குகளைச் சுட்டிக்காட்டுதல்

எனக்குத்தெரியும் இது பொதுமையாக்கம் என்று. ஆனால் பொதுமைப்படுத்தாமல் எந்த ஒரு கூட்டுநிகழ்வைப்பற்றியும் புரிதலை உருவாக்கமுடியாது. ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் இருந்து தொழில் வரை எடுக்கும் எல்லா முடிவுகளும் பொதுமைப்படுத்தல் மூலமே எடுக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் பக்கம் டிபன் நல்லா இருக்கும் என்பது முதல் அதிகம் தாக்குப்பிடிப்பது டாட்டா கார்கள்தான் என்பது வரை. பொதுமைப்படுத்தக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒருவர் அறிவியல் செயல்படும் விதத்தை நிராகரிக்கிறார்.

விதிவிலக்குகள் ஒருபோதும் பொதுவிதியை ரத்து செய்வதில்லை. நிறுவத்தான் செய்கின்றன.

2.என் வரையில் அப்படி இல்லை என்று சொல்லுதல்

எனக்குத்தெரியும், எந்த ஒரு பொறியியலாளரும் பொறியியலாளரின் மனைவியரும் தந்தையரும் காதலியரும் நண்பர்களும் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று. அவர்கள் தமிழக மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் வந்தால்கூட ஆச்சரியப்படவேண்டியதில்லை.

சரியான பதில்கள் என்பவை கீழ்க்கண்ட வகையில் நிதானமாகச் சொல்ல்ப்படக்கூடியவை

1. முதலில் அந்தக்குறிப்பை எழுதியவர் தன் கருத்தாக எதையும் சொல்லவில்லை, மிகக்கவனமாக தன்னை விலக்கிக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

2. இரண்டாவதாக அக்கருத்துக்களைச் சொல்லும் மூன்று தரப்பினரை வகுத்து அடையாளம் காட்ட வேண்டும். முதலீட்டாளர், உயர்நிர்வாகி, உயர்தொழில்நுட்ப ஆலோசகர் [ராமசாமி]. ஒரு தேசத்தின் தொழில்வளர்ச்சியின் மூன்று முக்கியமான புள்ளிகள் இவர்கள் என்று புரிந்துகொண்டிருந்தால் உபரி மதிப்பெண்.

3. இந்த மூன்றுதரப்பினரும் இன்றைய பொறியலாளர்களைப்பற்றி மிக எதிர்மறையான கருத்தை சுய அனுபவம் மூலம் பொதுமைப்படுத்திப் புரிந்துகொண்டிருக்கிறார்கள், அது ஆச்சரியமும் அச்சமும் அளிக்கிறது — இதுதான் அக்கட்டுரையின் சாரம். இந்த வரியைச் சொல்லிவிட்டால் முழுமதிப்பெண்

4. இந்தக்குறிப்பு பொறியியல்கல்வியைப்பற்றிப் பேசவேயில்லை என்று ஒருவர் புரிந்துகொண்டால் அவர் முழுமையாகவே இந்த விவாதத்தில் இருக்கிறார் என்று பொருள். இது ஆரம்பப் பள்ளிமுதல் அளிக்கப்படும் கல்வியைப்பற்றியே பேசுகிறது. அனைத்தையும் அறிவியல்நோக்குடன் புரிந்துகொள்ளும் மனம் பள்ளிக்கல்விச் சூழல் மூலம் உருவாக்கப்படவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட அறிவியல்துறையை மட்டும் அறிவியல்நோக்குடன் கற்றுக்கொடுக்க முடியாது என்பதே சாரம்.

அதன்பின் ஏற்றோ மறுத்தோ எது சொன்னாலும் முழுமதிப்பெண்தான்.

இக்குறிப்பில் மூன்று நிபுணர்கள் சொன்னவற்றுக்கு எதிராக என்னென்ன காரணங்கள் சொல்லப்படலாம்?

1. இந்தியாவின் பொறியியல்கல்வி தரக்கட்டுப்பாடில்லாமல் பரவுவதனால் மிக அதிகமானவர்கள் பொறியியலாளர்களாக ஆகிறார்கள். ஆகவே உண்மையான கல்விகற்ற திறமையானவர்களைவிட மற்றவர்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். ஆகவே இந்த பொதுமனப்பிம்பம் ஏற்பட்டிருக்கலாம்

2. இந்தியாவின் முதல்தரப் பொறியாளர்கள் இங்குள்ள பணிச்சூழல் காரணமாக வெளிநாடு சென்றுவிடுகிறார்கள்

3.இந்தியாவில் ஆய்வு மற்றும் மேம்பாடு சாந்த கல்வி அதிகம் இல்லை. காரணம் இங்கே அந்தத் துறை தீவிரமாக இல்லை. உற்பத்தி,சேவை துறைகளே உள்ளன. ஆகவே அவை சார்ந்த ஊழியர்கள் மட்டுமே உருவாகி வருகிறார்கள்

*

நான் குறிப்பிட்ட மூன்று தரப்பினரும் அவர்களின் சொந்த அனுபவ்த்தில் இருந்துதான் பொதுமைப்படுத்திப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் அதை ஒரு ‘கோட்பாடாக’ முன்வைக்க மாட்டார்கள். ஏனென்றால் அதற்குப் புள்ளிவிவரக்கணக்கு தேவை என அவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நடைமுறையில் தங்கள் பொதுமைப்புரிதலைத்தான் செயல்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

ஒருபோதும் அதற்குப் புள்ளிவிவரங்களை நாடமாட்டார்கள். புள்ளிவிவரங்கள் சொல்லப்பட்டாலும் தங்கள் அனுபவ மண்டலத்துக்குள் அவை வந்தாலொழிய ஏற்க மாட்டார்கள். மிகச்சிறந்த தொழில்முனைவோர் எப்போதும் சுய அனுபவம் உள்ளுணர்வு ஆகியவற்றையே நம்புவார்கள்.

ஆக, இச்சூழலில் என்ன நிகழ்கிறது என்பதே நான் சுட்டிக்காட்டுவது. லட்சக்கணக்கில் பொறியியலாளர் வெளியே வருகிறார்கள். ஆனால் இங்குள்ள தொழில்முனைவோருக்கும் தொழிநுட்ப நிர்வாகிகளுக்கும் அவர்கள்மேல் முழுமையாகவே நம்பிக்கை இல்லை. இந்த அச்சமே அதில் பதிவாகியிருக்கிறது

அது ஏன் என்றும், எப்படிக் களைவதென்றும் பேசும் ஒரு விவாதத்தையே நான் எதிர்பார்த்தேன்.

*

ஆனால் நான் என் இதழியல் நண்பரிடம் சொன்னதுபோல ஒன்றிரண்டு எதிர்வினைகள் மட்டுமே புரிந்துகொண்டு செய்யப்பட்டவை. மொத்தமே எட்டு லாப்ரடார்கள்தான்!

மிச்சமெல்லாமே ‘இந்தியப் பொறியியலாளர்கள் எல்லாருமே முட்டாள்கள் என்று பொறியியல் தெரியாத எழுத்தாளன் எப்படிச் சொல்லலாம்? அவன்தான் முட்டாள்’ என்றவகை உணர்ச்சி வெளிப்பாடுகள் மட்டுமே.

இந்தவகை எதிர்வினையை ஓர் எழுத்தாளன் செய்திருந்தால் அது தவறென்று சொல்லமாட்டேன். ஒரு பொறியியலாளர், ஒரு வழக்கறிஞர், ஒரு ஆடிட்டர் செய்தால் நான் அவர்களின் சேவையை நம்பி ஏற்கமாட்டேன். ஏனென்றால் நிதானமான பகுப்பாய்வு என்பது அறிவியல்நோக்கின் அடிப்படை மனநிலை.

ஏதேனும் ஒரு தருணத்தில் அந்த அறிவியல் மனநிலை எந்த அளவுக்கு உங்கள் மாணவர்களிடம் உள்ளது என்று நீங்களே அவதானிக்கலாம். அது அதிக நம்பிக்கையூட்டும்படி இருக்காதென்றே நான் நினைக்கிறேன்

*

நண்பரிடம் அந்தக் குறிப்பைக் கொஞ்சம் மாற்றி இதழாளர்களைப்பற்றியதாக ஆக்கி ஆங்கிலப்படுத்தி அவரது அலுவலகத்தில் சக இதழாளர்களிடம் கொடுக்கச்சொன்னேன். என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று அவதானித்தேன்.

மின்னஞ்சலில் அவர் பெற்ற எதிர்வினைகள் மொத்தம் 14. மூன்று எதிர்வினைகள் மட்டுமே தோல்வி. நான்கு எதிர்வினைகள் இந்தக் கட்டுரை ஆரம்பப்பள்ளிக் கல்வியைப் பற்றியது எனப் புரிந்துகொள்ளவில்லை. மீதி அனைவருமே மிகமிகச்சரியாக எதிர்வினையாற்றியிருந்தனர்!

ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்,

நீண்ட பதிலுக்கு நன்றி.

நீங்கள் இதைத்தான் சொல்லவருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு வாசிப்புப் பழக்கம் இல்லாதவன் நான் :-) எனவே உடனடி எதிர்வினை.

ஆனால், என் பதிவில், (இதே விஷயம் இன்னும் வீரியத்துடன் என்றாலும்), இந்த நிலை – வெளிவரும் பொறியாளர்களின் / மாணவர்களின் தரம் – அதற்கான காரணங்களைச் சற்று உள்ளாராய்ந்திருக்கிறேன். http://penathal.blogspot.ae/2013/06/blog-post.html – பின்னூட்டங்களில் சில சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்களின் விவாதமும் செல்கிறது.

/பொறியியல்கல்வி தரக்கட்டுப்பாடில்லாமல் பரவுவதனால்/ அதுமட்டும் அல்ல பிரச்சினை – யாருக்குப் பொறியியல் கற்கத் தேவை+தகுதி இருக்கிறது என்பதைவிட, பொறியியலால் – கேம்பஸ் ஐடி கம்பெனியினரால் பொருளாதாரத் தன்னிறைவு என்ற நிலைக்காக – எல்லாரும் அதையே குறிவைத்து, தகுதித் தேர்வுகளைக் கேலிசெய்யும் மதிப்பெண் போட்டி – இதெல்லாம் பற்றி நிறையவே புலம்பியிருக்கிறேன். இது ஒரு சோறு:

https://plus.google.com/u/0/102446195938623750646/posts/TmU3bUWyoLZ

மீண்டும் நன்றி,

அன்புடன்
சுரேஷ்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/37293