பழங்கள் – இளம் விதவைகளுக்கு இலவசம்- நதன் இங்கிலான்டர்

போலந்தின் வார்சாவைச் சேர்ந்த ஷிமான் பிப்பர்ப்லாட் என முன்பு அறியப்பட்ட, ப்ரைவேட் ஷிம்மி கெஜர் வெட்டவெளியில் அமைந்திருந்த தற்காலிக உணவகத்தில் சாப்பிட அமர்ந்தான்.  ஆயுதமேந்திய கமாண்டோக்கள் நால்வரும் அவனுடன் அமர்ந்தனர்.

ஷிம்மியின் படைத்தோழன் ஒருவன் அவர்களிடம் வந்தான். ப்ரொஃபசர் டென்ட்லர் (அப்போது அவன் வெறும் ப்ரைவேட் டென்ட்லர் மட்டுமே – உயர்நிலைப்பள்ளி வரை கூட முடிக்காதவன்) தான் கொண்டு வந்த ஒரு கோப்பையை, தேநீர் சிந்திவிடாமல் ஜாக்கிரதையாக மேசையின் ஓரத்தில் வைத்தான். தனது துப்பாக்கியை எடுத்து கமாண்டோக்களை ஒவ்வொருவராக தலையில் சுட்டான்.

அவர்கள் ஒரு ஒழுங்கில் சரிந்தனர்.  டென்ட்லரைப் பார்த்து அமர்ந்திருந்த முதலிருவரும் இருக்கையின் பின்பக்கமாக மணலில் விழுந்தனர்.  அவனுக்கு முதுகைக் காண்பித்தவாறு அமர்ந்திருந்த அடுத்த ஜோடி இறந்து விழும் தன் நண்பர்களைப் பார்த்துக்கொண்டே முன்புறமாக விழுந்தது. அவர்களது மண்டை மேசையில் மோதியதும் எழுந்த ஒலி துப்பாக்கி வெடித்தபோது எழுந்த ஒலியை விட பயங்கரமாக இருந்தது.

கண்முன்னே படைத்தோழர்கள் நால்வர் கொலைசெய்யப்படுவதைப் பார்த்து அதிர்ந்த ஷிம்மி கெஜர் தன் நண்பன் மீது பாய்ந்தான். ஷிம்மியை விட உருவத்தில் பெரிய டென்ட்லருக்கு இந்தத் தாக்குதல் அச்சமூட்டுவதாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சி அளித்தது.  ஹீப்ரு மொழியில் “எகிப்தியர்கள், எகிப்தியர்கள்” என்று கத்திக்கொண்டே ஷிம்மியின் கைகளை இறுகப்பற்றினான் டென்ட்லர்.  பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அதே பாலைவனத்தில் அதே மக்களை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்!  ஒரே வேற்றுமை, பழங்கதைகளில் சொன்னபடி சண்டையில் கடவுள் தன் முஷ்டியை உயர்த்தவில்லை.

ஷிம்மியை இறுக்கி அவனை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வந்தான் ப்ரொஃபசர் டென்ட்லர்.  யித்திஷ் மொழியில், “எகிப்திய கமாண்டோக்கள் – குழப்பம்” என்றான் டென்ட்லர்.  “பகைவன் – உன்னோடு உணவருந்த வந்த பகைவன்.”

கேட்டுக்கொண்டே அமைதியானான் ஷிம்மி.

எல்லாம் சரியாகிவிட்டது என்றெண்ணி ஷிம்மியை விடுவித்தான் டென்ட்லர்.  உடனே சடுதியில் திரும்பி தாக்கத் துவங்கினான் ஷிம்மி.  அந்த நால்வர் யாராயிருந்தால் என்ன?  மனிதர்கள்தானே அவர்களும்.  தவறான மேசையில் உணவருந்த அமர்ந்தவர்கள்.  அவசியமில்லாமல் இறந்துபோனவர்கள்.

“நீ அவர்களை சிறை பிடித்திருக்கலாம்”, ஷிம்மி இரைந்தான்.  “நிறுத்து”, ஜெர்மனில் அலறினான்.  “போதும் நிறுத்து!” பின்னர் கண்ணீருடன், கைகளை உயர்த்தி, “நீ சுட்டிருக்கக் கூடாது”.

அதற்குள் டென்ட்லர் பொறுமை இழந்திருந்தான்.  ஷிம்மியை அடிக்கத் துவங்கினான் – தன்னை காத்துக்கொள்வதற்கோ, நண்பனை அடக்குவதற்கோ அல்ல.  ஷிம்மியை தூக்கிப்போட்டு மிதித்து புழுதியோடு புழுதியாக தேய்த்தான்.  நண்பன் தாங்கமுடியாமல் தவிக்கும் வரை அடித்தான்.  மேலும் அடித்தான்.  அவன் மீது அமர்ந்திருந்தவன் எழுந்து எரிக்கும் சூரியனைப் பார்த்தான்.  குழுமியிருந்த வீரர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியேறி புகை பிடிக்கச் சென்றான்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு வந்தவர்கள் மணலில் கிடக்கும் ஐந்து உடல்களில் அடிபட்டுக் கிடக்கும் ஷிம்மியின் உடலே மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டனர்.

பிற்காலத்தில் ஜெருசலேமின் மஹனே யெஹுதா கடைத்தெருவில் ஷிம்மி கெஜர் தொடங்கிய காய்கனி அங்காடியில், அவனது மகன் சிறுவன் எட்கர், ப்ரொஃபசர் டென்ட்லரின் கதையை மீண்டும் மீண்டும் கேட்பான்.  அவனுக்கு ஆறு வயதானபோதிலிருந்தே, பள்ளி இல்லாத சமயங்களிலெல்லாம் அவன் தன் தந்தைக்கு உதவியாளாக வேலை செய்தான். அந்த வயதில், ஒரு குழந்தைக்குப் புரியக்கூடிய அளவிலான கதையை மட்டுமே அவன் அறிவான்.  டென்ட்லர் ஒரு போரில் தன் தந்தை வருத்தமுறும் செயலைச் செய்தபோது அவனை தன் தந்தை தாக்கியதற்கு பதிலாக தன் தந்தையை அவன் மிக மோசமாகத் தாக்கினான் என்பதை அவன் அறிவான்.  அப்படியிருக்கும்போது எதற்காக இப்போது தன் தந்தை ப்ரொஃபசரிடம் அவ்வளவு தன்மையாக நடந்துகொள்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை.  சிறு குடும்ப வணிகத்தை கற்று வளரும் அவனுக்கு, டென்ட்லரிடமிருந்து அவன் ஒரு காசு கூட வாங்கக்கூடாது என்பது ஏன் என விளங்கவில்லை.  ப்ரொஃபசருக்குத் தேவையான காய்கறி இலவசமாகக் கிடைத்தது.

எட்கர் தக்காளியும் வெள்ளரியும் நிறுத்தபின் அவனது தந்தை ஒரு பெரிய கத்தரிக்காயும் சேர்த்துப் போட்டு பையை ப்ரொஃபசர் டென்ட்லரிடம் தருவார்.

“எடுத்துக்கொள்.  உன் மனைவிக்கு என் வாழ்த்தைச் சொல்!” என்பார் தந்தை.

ஒன்பது பத்து பதினொன்று என எட்கரின் வயது கூடக்கூட அவனுக்கு கதை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.  கமாண்டோக்கள், சீருடைகள், கப்பல் பாதைகள், சூயஸ், அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள், ஃப்ரஞ்சுக்காரர்கள் என ஒவ்வொன்றாக அவனுக்குக் கூறப்பட்டது.  மனிதர்கள் தலையில் சுடப்பட்டதை அறிந்தான்.  ’73, ’67, ’56, ’48 ஆகிஅ வருடங்களில் நடைபெற்ற, அவனது தந்தை பங்குபெற்ற போர்கள் பற்றி தெரிந்துகொண்டான்.  ஆனாலும் 1939 முதல் 1945 வரை நடைபெற்ற, தான் முதன் முறையாக ஈடுபட்ட போர் பற்றி ஷிம்மி கெஜர் இன்னும் ஏதும் சொல்லவில்லை.

போர்த்தாக்குதலில் இருந்த தெளிவற்ற நீதி, இமைப்பொழுதில் எடுக்கப்படும் முடிவுகள், அச்சுறுத்தலும் அதற்கான எதிர்வினையும் மதிப்பிடப்படுதல், சதவீதங்களும் திட்டவட்டங்களும் அமையும் விதம் இவற்றையெல்லாம் விளக்கினார் எட்கரின் தந்தை.   இஸ்ரேலியர் என்பவர்கள், தெளிவற்ற எல்லைகளும் எழுதப்படாத அரசியல் சாசனமும் கொண்ட தங்கள் நாட்டில் நிஜ வாழ்வு எனும் தெளிவில்லா வெளியில் சிக்கிக் கொண்டவர்கள் என்பதை தன் மகனுக்கு புரிய வைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்.

இத்தெளிவில்லா வெளியில், திட்டவட்டங்கள் கூட ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளை எடுக்க முடியும்; ஒன்றுக்கு மேற்பட்ட உண்மையை பிரதிபலிக்க முடியும் என்பதை விளக்கினார்.  “நீ கூட டென்ட்லருக்கு ஏற்பட்ட நிலையை சந்திக்க வேண்டி வரலாம் – ஒரு போதும் நீ அதை உணராமல் போகலாம்” என்றார். சாலையின் எதிரே இருந்த, குருதி தோய்ந்த கடையில் கத்தியின் அடியில் துடிதுடிக்கும் மீனைக் காட்டி, “சரி-தவறுகளுக்கிடையே அலைபாயும் முடிவுகள் உன்னை எந்நாளும் துரத்தாமலிருக்க கடவுள் உனக்கு அருளட்டும்” என்றார்.

கத்தி இறங்குவது மட்டுமே கதையாக எட்கர் கண்ணுக்குத் தெரிந்தது; துடிக்கும் மீனின் கதையாக அதை தன் தந்தை பார்ப்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

எட்கர் தெளிவில்லாதவன் அல்ல.  தெளிவாய் சிந்திக்கும் தெற்றுப்பல் சிறுவன் அவன்.  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் டென்ட்லர் அவர்கள் கடைக்கு வரும்போது அவருக்குத் தேவையான விளைபொருட்களை பையில் போட்டுவிட்டு, கதையில் உள்ள இருள்-வெளிச்சத்தைத் தேடுவான்.

இந்த மனிதர் அவன் தந்தையை காப்பாற்றியிருக்கிறார் – உண்மையில் அப்படித்தானா? செய்ய வேண்டியதைத்தான் அவர் செய்திருக்கிறார்.  ஆனால் அதை வேறு விதமாகவும் செய்திருக்கலாம்.  பழிக்குப் பழி என்ற பள்ளிப்பாடம் பொது வாழ்விலும் செல்லுபடியாகும் என்றாலும், அவன் தந்தை – அவனது விரல்களை எடுத்து தன் தாடையில் வைத்து தடவிக்கொண்டே – விவரித்தது போல், அத்தனை கொடுமையான தாக்குதலை – இடது தாடை எலும்பை தட்டையாக்கும்படியான அடியை – நியாயப்படுத்தமுடியுமா?

அந்த வன்முறையை நியாயப்படுத்த முடிந்தாலும், “மனிதாபிமானத்திற்காக, உன் நண்பனின், உன் குடும்பத்தினரின், ஏன் உன் எதிரியின் உயிரைக்கூட காப்பதற்காக, நீ இறக்கவும் தயாராக இருக்க வேண்டும்” என்று அவன் தந்தை எப்போதும் சொல்வதில்லை என்றாலும், எட்கரால் அவன் தந்தையின் கருணையை புரிந்துகொள்ள் முடியவேயில்லை.

ப்ரொஃபசர் டென்ட்லரை வரவேற்க ஷிம்மி அவனை அக்ரிப்பாஸ் தெருவுக்கு அனுப்பி இரண்டு கோப்பை காபியும் இரண்டு கோப்பை தேநீரும், வரும் வழியில் ஐசன்பர்க்கின் வண்டியில் இருந்து பெரிய பிஸ்தா பருப்பும் வாங்கிவரச் சொல்வார்.  அவரது பழைய நண்பர்களுக்கு மட்டுமே இத்தகைய உபசரிப்பு.

போர் விதவைகளைத் தவிர வேறு ஒருவருக்கும் இலவசமாக பொருட்கள் தரப்படமாட்டாது.  எட்கரின் தந்தை, இப்பெண்கள் பொருட்கள் வாங்க வரும்போது, அவர்கள் நோகாவண்ணம் அரவமில்லாமல் காய்கனிகளை பைகளில் நிரப்பிக் கொடுத்தனுப்புவார்.  இளம் விதவைகளிடம் மிகவும் கருணையுடன் இருப்பார்.  இலவசமாய் பெற்றுக்கொள்ள அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், “உங்கள் தியாகத்தைவிடவா இது பெரியது?  ஒரு கூடை ஆப்பிள் அவ்வளவு மதிப்புள்ளதா என்ன?” என்று கேட்பார்.

“எல்லாம் ஒரே நாட்டுக்காகத்தான்” என்பார்.

டென்ட்லரைப் பற்றிக் கேட்டால், இவ்வளவு தெளிவான பதில் வருவதில்லை.

எட்கருக்குப் பன்னிரண்டு வயதானபோது, டென்ட்லர் கதையில் சிக்கல்கள் உள்ளன என்பதை அவனிடம் ஒப்புக்கொண்டார்.

“என்னைத் தாக்கிய ஒருவனை நான் ஏன் சீராட்டுகிறேன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாயா?  ஒவ்வொரு கதைக்கும் ஒரு ‘சூழ்நிலை’ உண்டு.  வாழ்க்கைக்கு எப்போதுமே ‘சூழ்நிலை’ ஒன்றுண்டு.”

“அவ்வளவுதானா?”

“ஆம். அவ்வளவுதான்”

தன் பதின்மூன்றாவது வயதில் அவனுக்கு வேறு கதை சொல்லப்பட்டது.  எட்கர் இப்போது சிறுவன் அல்ல, வளர்ந்துவிட்ட ஆள் அல்லவா?

“நான் போரில் கலந்துகொண்டது உனக்குத் தெரியுமில்லையா?”  ஷிம்மி தன் மகனிடம் சொன்னார். அதை அவர் சொன்ன விதமே, ’48, ’56, ’67, ’73 இவற்றில் நடந்த போரைக் குறிக்கவில்லை என்பது எட்கருக்குப் புரிந்தது.  அனைத்து யூதப் போர்களிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.  அவற்றையும் அவர் குறிக்கவில்லை.  அவர் குறிப்பிட்டது மிகப் பெரும் போரை.  ஷிம்மியைத் தவிர அவரது குடும்பத்தில் ஒருவரும் எஞ்சாமல் அழிந்த போரை.  எட்கரின் அம்மாவுக்கும் இதே கதைதான்.  அவர்கள் புதிய பெயரை வைத்துக்கொண்டதற்குக் காரணம் அதுவே என்று விளக்கினார் ஷிம்மி.  மொத்த உலகிலும் மொத்தம் மூன்றே கெஜர்கள்தான்.

“எனக்குத் தெரியும்” என்றான் எட்கர்.

“ப்ரொஃபசர் டென்ட்லரும் அந்தப் போரில் இருந்தார்”

“ம்..”

“அவருக்கு அதில் பல இன்னல்கள்” என்றார் ஷிம்மி.  “அதனால்தான் அவரிடம் எப்போதும் நல்லவிதமாய் நடந்துகொள்கிறேன்.”

எட்கர் யோசித்துவிட்டுச் சொன்னான், “ஆனால் நீங்களும்தான் போரில் ஈடுபட்டிருந்தீர்கள். அவருடையதைப் போன்றதாய்தான் உங்கள் வாழ்வும்.  அவர்களை சிறைப்பிடிக்க முடியும், சாவைத் தவிர்க்க முடியும் என்ற நிலையில் நீங்கள் ஒருபோதும் அந்த நால்வரை, அவர்கள் எதிரிகளாகவே இருந்தாலும், சுட்டிருக்க மாட்டீர்கள்.  உங்களுக்கே ஆபத்து வந்திருந்தால் கூட, நீங்கள் தைரியமாக….” எட்கரின் தந்தை புன்னகைத்து அவனைத் தடுத்தார்.

“ஒரே மாதிரியானதாக இருந்தாலும் அது ஒரே வாழ்க்கையில்லை. அதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது”  இதைச் சொல்லும்போது அவரது முகம் தீவிரமானது.  “அந்த முதல் போரில், கடும் போரில், நான் அதிர்ஷடக்காரன்.  ‘ஷோவா’வில் நான் உயிர்பிழைத்தேன்.”

“அவரும்தான் இன்னும் இருக்கிறார், உங்களைப்போலவே அவரும்தான் பிழைத்திருக்கிறார்” என்றான் எட்கர்.

“இல்லை.  அவர் முகாம்களில் இருந்தார்.  அவர் நடக்கிறார், சுவாசிக்கிறார் உண்மைதான்.  உயிருடன் தப்பி ஐரோப்பாவிலிருந்து மயிரிழையில் வெளியேறினார்.  ஆனால் அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர்.  போருக்குப் பிறகும் நாங்கள் மக்களை இழந்தோம்.  கடைசியில் அவரில் இருந்த மிச்ச ஜீவனையும் அவர்கள் அழித்தனர்.

முதல் முறையாக – ப்ரொஃபசர் டென்ட்லரோ, யித்திஷ் மொழியில் பேசும் ஷிம்மியின் நண்பர்களோ, போரின்போது உடனிருந்த தோழர்களோ, அவர் காய்கனி வாங்கும் கிப்புட்ஸ்னிக்குகளோ இல்லாதபோது – எட்கரின் தந்தை அவனை அக்ரிப்பாஸ் தெருவுக்கு இரண்டு கோப்பை தேநீர் வாங்கி வர அனுப்பினார் – ஒன்று எட்கருக்கு மற்றொன்று தனக்கு.

“சீக்கிரமாக வா” என்று சொல்லி எட்கரின் பின்னால் தட்டி அனுப்பினார் ஷிம்மி.  அவன் அடி எடுத்து வைக்குமுன் அவன் காலரைப் பிடித்து இழுத்து, இழுப்பறையிலிருந்து புத்தம் புதிய பத்து ஷெகெல் தாளை அவனிடம் கொடுத்தார்.  “ஐசன்பர்கிடமிருந்து நல்ல விதைகளாக பெரிய பையில் வாங்கி வா!  சில்லறையை அவனையே வைத்துக்கொள்ளச் சொல்.  நாம் சிறிது நேரம் அமர்ந்து பேசுவோம்” என்றார்.

மேசைக்குப் பின்னால் இருந்த இரண்டாவது மடக்குக் கசேரியை வெளியே எடுத்தார் ஷிம்மி.  தந்தையும் மகனுமாக ஒரே சமயத்தில் கடையில் அமர்வதே அதுதான் முதல் முறையாக இருந்திருக்கும்.  இன்னொரு முக்கியமான வணிக விதி: வாடிக்கையாளர் வரும்போது எப்போதும் நீ நின்றபடி இருக்க வேண்டும்.  பெருக்குவது, அடுக்குவது, ஆப்பிளைத் துடைத்து வைப்பது – எப்போதும் ஏதாவது செய்வதற்கு வேலை உண்டு.  பெருமை இருக்கும் இடத்திற்கே வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

இதனால்தான் ப்ரொஃபசர் டென்ட்லருக்கு தக்காளி இலவசமாகக் கிடைத்தது, இதனால்தான் தன்னைத் தாக்கிய மனிதனைப் பார்த்ததும் ஷிம்மியின் பார்வையில் கருணை குடிகொண்டது.  ஷிம்மி தன் மகன் வளர்ந்துவிட்டதாகக் கருதியபோது எட்கருக்கு சொன்ன கதை இதுதான்:

ப்ரொஃபசர் டென்ட்லர் மரண முகாமிலிருந்து விடுதலையாகி வந்தபோது, இரு அமெரிக்கப் படைவீரர்கள் மயங்கிச் சரிவதுதான் அவன் கண்ணில் முதலில் பட்டது.  போரால் இறுகிப்போன அந்த இருவரும், அதுவரை கற்பனைகூட செய்துபார்த்திருக்க முடியாத நவீனப் படுகொலைகளைப் பார்த்து, நிர்வாணமாய் அழுகிக் கிடந்த பிணங்களின் முன், உறைந்து நின்றிருந்தனர்.

அமெரிக்கப் படையெடுப்பிற்கு முன், எரிப்பதற்காகக் குவிக்கப்பட்ட இந்தப் பிணக் குவியலின் நடுவிலிருந்து எலும்பும் தோலுமான டென்ட்லர் அவர்களைப் பார்த்தான்.  அவர்களை உன்னிப்பாய் கவனித்து, அவர்கள் நாஜி வீரர்கள் அல்ல என்பதை உறுதிசெய்துகொண்ட பின்னர் மரக்கட்டைகளைப் போலிருந்த கைகால் எலும்புகளை விலக்கி, பிணக்குவியலிலிருந்து ஊர்ந்து வெளியே வந்தான் டென்ட்லர்.

பல நாட்களாய் அவனைப் பாதுகாப்பாய் வைத்திருந்தது மலையெனக் குவிந்திருந்த பிணங்களே.  உடல்களைக் கொண்டு வந்து குவித்த பரிதாபத்திற்குரிய சாண்டர்கமாண்டோவும், பிணங்களை எரிப்பதற்காக எடுத்துச் செல்ல வந்தவர்களுக்கும் சிறுவன் உள்ளே இருந்தது தெரியும்.  அவர்கள் தங்கள் உணவில் கொஞ்சம் அவனுக்கும் கொடுத்தனர்.  அவனுக்கு உதவுவது வெளியில் தெரிந்தால் தங்களுக்கும் மரணம்தான் என்று அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தாலும், தாங்கள் செய்யும் ஈவுஇரக்கமற்ற செயலுக்கு ஒரு சிறு பரிகாரமாக நினைத்து அவனைக் காப்பாற்றினார்கள்.  மனிதனை உயிர்பிழைக்கச் செய்ய இப்படிப்பட்ட கருணையின் சிறு நிழலிருந்தாலே போதும் என்பதையே ஷிம்மி தன் மகனுக்குப் புரிய வைக்க முயன்றார்.

ஒரு வழியாக டென்ட்லர் எழுந்து நின்றபோது – “அவனுக்கு அப்போது உன் வயதுதான்” – கொடுங்கனவிலிருந்து வெளிவந்தபோது, அவனைப் பார்த்துக்கொண்டே பேரோசையுடன் நிலத்தில் விழுந்த அமெரிக்க வீரர்களை அவன் பார்த்தான்.

அவன் அதுவரை தன் வாழ்நாளில் சந்தித்திருந்த கொடுமைகளோடு ஒப்பிட்டால், அவன் கண்முன் நிகழ்ந்தது ஒரு விஷயமே இல்லை.  பேசாமல் நடக்கத் துவங்கினான். நிர்வாணமாய் முகாமின் வாயிலைக் கடந்தான், சிறிது உணவும், சில உடைகளும் கிடைத்தன.  சப்பாத்துகளும் ஒரு கோட்டும் கிடைக்கும் வரை நடந்தான் – கொஞ்சம் ரொட்டியும் ஒரு உருளைக்கிழங்கும் உபரியாய அவன் பையில்.

விரைவிலேயே அவன் சட்டைப்பையில் சிகரெட்டுகளும் பணமும் புழங்கத் தொடங்கியது.  நடந்து நடந்து எல்லைகள் கடந்து, உயரமாய் தலை நிமிர்ந்து நிற்பவனாய், அவன் சிறுவனாக இருந்தபோது வாழ்ந்த ஊருக்கு வந்து சேர்ந்தான்.  கச்சிதமான உடைகள், சட்டைப்பையில் பணம், – சாலையோரங்களில் இரவு தூங்கும்போது தற்காப்புக்காக வைத்திருந்த – ஐந்து தோட்டாக்கள் போட்ட துப்பாக்கி – இவற்றோடு வந்திருந்தான்.

டென்ட்லர் எந்த ஆச்சரியத்தையும், சந்திப்புகளையும் எதிர்பார்த்திருக்கவில்லை.  அவனது தாய், தந்தை, மூன்று சகோதரிகள், தாத்தா பாட்டிகள், அனைவரும் அவன் கண்ணெதிரில் கொல்லப்பட்டிருந்தனர்.  சில மாதங்கள் கழித்து அவன் ஊரைச் சேர்ந்த இரு சிறுவர்கள் முகாமில் கொல்லப்படுவதையும் அவன் கண்டிருந்தான்.

ஆனால் அவன் தன் வீட்டைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான்.  அவன் வீடும் அவன் படுக்கையும் இன்னும் கூட பத்திரமாய் இருக்கக் கூடும்.  பசு இன்னும் பால் தரக்கூடும், ஆடு அசைபோட்டுக் கொண்டிருக்கலாம், நாய் கோழிகளைப் பார்த்து குரைத்துக் கொண்டிருக்கலாம்.  அவனுக்குப் பால் புகட்டிய தாதி, அவன் தந்தையின் வயலில் விவசாயம் செய்த அவளது கணவன், தன் சகோதரர்கள் போல் பாவித்த அவன் வயதொத்த அவர்களது மகன் ஒருவன், இரண்டு வயது இளையவனான இன்னொரு மகன் – இவர்கள் இன்னும் அங்கிருக்கக் கூடும்.  இவன் வருகைக்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கக் கூடும்.

டென்ட்லர் அந்த வீட்டில் புதியதாய் ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளலாம். பிள்ளைகள் பெற்று தன் பிரியத்துக்குரிய இறந்துபோன தன் உறவினர்கள் பெயர்களை தன் பிள்ளைகளுக்கு இட்டு மகிழலாம்.

அவனது ஊர், அவன் விட்டுப்போனபோது எப்படியிருந்ததோ அதே போல் சிறிதும் மாற்றமில்லாமல் இருந்தது.  தெருக்கள் அவனுடையவைதான்.  சதுக்கத்தில் இருந்த லின்டன் உயரமாய் வளர்ந்திருந்தது.  அவன் வீட்டிற்குச் செல்லும் புழுதிச் சாலையில் இறங்கியதும், ஓடிச் சென்று வீட்டை அடைய விரும்பினான். அழுகை முட்டிக்கொண்டு வந்தது.  ஆனால், இவ்வுலகில் பிழைக்க வேண்டுமென்றால் ஒரு ஆண்மகன் போல நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவன் அறிவானாதலால் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

கோட் பொத்தானைப் பொருத்திகொண்டு அமைதியாய் வேலியை நோக்கி நடந்தான்.  தன் சொந்த வீட்டிற்குத் திரும்பி வரும் குடும்பத்தலைவன் போல, வாயிலைக் கடக்கும்போது தலையிலிருந்து எடுப்பதற்கு தொப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.

ஆயினும், தன் தாதி ஃபனுஷ்காவை தோட்டத்தில் பார்த்ததும் கண்ணீர் பொங்கியது. அவனது கோட்டிலிருந்து ஒரு விலையுயர்ந்த பொத்தான் தெறித்துவிழ ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டான்.  அவளது அணைப்பில், பல நாட்களுக்குப் பின் முதல் முறையாக அழுதான்.

அவள் கணவன் அருகிருக்க, “நல்வரவு மகனே, உன் வருகைக்காக நாங்கள் பிரார்த்தித்தோம், மெழுகு வர்த்தி ஏற்றினோம்.  நீ திரும்புவாய் என்ற கனவில் இருந்தோம்” என்றாள் ஃபனுஷ்கா.

“உன் பெற்றோர்களும் வந்துகொண்டிருக்கிறார்களா?  உன் சகோதரிகளும், தாத்தா பாட்டியும் தொலைவில் இருக்கிறார்களா?  அண்டை வீட்டார் எங்கே?” என்று அவர்கள் கேட்டபோது, சிறிதும் உணர்ச்சி இன்றி, ஒவ்வொருவரும் தாக்கப்பட்டு, பட்டினியில் வாடி, இரண்டாக வெட்டப்பட்டு, தலை புதைந்து இறந்ததை அவர்களுக்குச் சொன்னான்.  வாயிற்கதவை தாண்டுவதற்குள் இவற்றை எல்லாம் சொல்லி முடித்திருந்தான்.

திறந்திருந்த அந்தக் கதவு வழியாகப் பார்த்துக்கொண்டே, தனக்கென ஒரு குடும்பம் அமையும் வரை இவர்களுடன் வாழ்வதெனத் தீர்மானித்தான்.  இந்த வீட்டிலேயே அவன் வளர்ந்து மூப்படைவான்.  சுதந்திரமாய் வாழ சுதந்திரம் கிடைத்தபின் தன்னை கதவுகளுக்குள் அடைத்துக் கொள்வான்.  அவனுடையதேயான கதவு, அவனுடைய பூட்டு, அவன் உலகம்.

அவன் கைமேல் வைக்கப்பட்ட ஒரு கை அவன் பகல் கனவை கலைத்தது.  சோகம் கலந்த புன்னகையுடன், “உன்னை பலசாலியாக்கிக் கொள்வதற்கான நேரம் இது, முதல் விருந்து இன்று” என்றாள் ஃபனுஷ்கா.  காலடியில் இருந்த கோழியைப் பிடித்து அங்கேயே அதன் கழுத்தைத் திருகினாள்.  அது அவள் கையில் துடித்திருக்க, “வா, எஜமான் வீடு திரும்பியிருக்கிறான்” என்றாள்.

“நீ விட்டுச்சென்றபடியே எல்லாம் இருக்கிறது.  ஏதோ சில பொருட்கள் எங்களுடையதும்” என்றாள்.

டென்ட்லர் வீட்டினுள்ளே காலடியெடுத்து வைத்தான்.

எல்லாம் அவன் நினைவிலிருந்தபடியே இருந்தன: மேசை, நாற்காலிகள் எல்லாம்.  உயிருடனிருந்தவைகள் தவிர எல்லாம்.

ஃபனுஷ்காவின் இரு மகன்களும் உள்ளே வந்தனர்.  காலம் செய்த கோலம் டென்ட்லருக்கு விளங்கியது.  உணவும் பாசமும் அளிக்கப்பட்டு வீட்டிலேயே வளர்ந்த அவர்கள், அவனைப்போல இரு மடங்கு வளர்ந்திருந்தனர்.  முகாமிலிருந்தபோது அவன் அறிந்திராத, அங்கு எந்தப் பயனும் அளித்திருக்க வாய்ப்பில்லாத, ஒரு நாகரிக உணர்ச்சிப் பெருக்கு அவனை ஆட்கொண்டது.  அவன் அவமானமாய் உணர்ந்தான்.  முகம் சிவந்து, தாடைகள் இறுக, ஈறுகளில் இரத்தம் கசிவதை உணர்ந்தான்.

தன் மகனிடம், “இந்த இரு சகோதரர்களும் இப்போது அவனை விட இரு மடங்கு பெரிய உருவம் கொண்டவர்களாய் இருந்தனர். அவனுக்கு அன்னியர்களாய்த் தெரிந்தனர்.  இதை நீ புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் எட்கரின் தந்தை.

சிறுவர்கள் இருவரும் டென்ட்லருடன் கை குலுக்கினர்.  அவனை யாரென்றே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

“இருந்தாலும் இது நல்ல கதைதான்” என்றான் எட்கர்.  “சோகமானது.  ஆனால் சந்தோஷமானதும் கூட.  நீங்கள் எப்போதும் சொல்வதைப் போல, பிழைத்திருத்தலே முக்கியமானது.  எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்குவதற்கென பிழைத்திருத்தல்.”

இதை எண்ணிக்கொண்டே ஒரு சூரியகாந்தி விதையை கையிலெடுத்தார் எட்கரின் தந்தை.  முன் பற்களில் வைத்துக் கடித்தார்.

“அவர்கள் எல்லோருமாக ப்ரொஃபசர் டென்ட்லருக்காக ஒரு விருந்து தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.  சமையலறையில், அவன் சிறுவனாயிருந்தபோது செய்ததைப் போலவே, சப்பணமிட்டு அமர்ந்து, பார்த்துக்கொண்டிருக்கிறான்.  வெதுவெதுப்பான ஆட்டுப்பாலை அருந்திக்கொண்டு, சந்தோஷமாய் பார்த்துக்கொண்டிருக்கிறான்.  பால்கொடுத்த அந்த ஆட்டை அறுப்பதற்காக தந்தை வெளியே செல்கிறான்.  “விருந்தென்றால் கோழிக்கறி மட்டும் போதாது” என்று சொல்லிக்கொண்டே செல்கிறான்.  பல வருடங்களாக புலால் உண்ணாத டென்ட்லர் அவனைப் பார்க்கிறான்.  கத்தியை ஒரு நகத்தால் தடவிக்கொண்டே அவன் சொல்கிறான், “கோஷர் முறை எனக்கு நினைவிருக்கிறது.”

டென்ட்லருக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.  மகிழ்ச்சியும் வருத்தமும் ஒரே சமயத்தில்.  ஆட்டுப்பால் அருந்திய அவனுக்கு ஒன்றுக்கிருக்க வேண்டும் போலிருந்தது.  அம்மா இருக்கும் இடத்திலிருந்து செல்ல அவனுக்கு விருப்பமில்லை.  அவள் தோளில் சாய்ந்துகொண்டிருந்த தங்கை பாப்பா வேறு.  ஒன்றரை வயதான, சுருட்டை முடிகொண்ட, சின்ன, புஷ்டியான, சந்தோஷமான பாப்பா.

கடைசியில் அவசர அவசரமாக சமையலறையை விட்டு வெளியேறினான் டென்ட்லர்.  பின்கட்டுக்குச் செல்லாமல், சமையலறை ஜன்னலருகே நின்றுகொண்டு சமையல் வாசனைபிடித்துக்கொண்டு, அங்கேயே ஒன்றுக்கிருந்தான். அந்த ஓசையைத் தாண்டி, தாதியின் அழுகை அவன் காதில் விழுந்தது.

எதற்காக அவள் அழவேண்டும் என்று அவனுக்குத் தெரியும் – டென்ட்லரின் குடும்பம் அழிந்ததற்காக.

அவள் என்ன சொல்கிறாள் என்பதை அவன் கவனித்தான்.

“அவன் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வான்” என்றாள் அவள்.  “நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொள்வான் – நம் வீடு, நம் நிலம் எல்லாவற்றையும்.  நாம் கட்டிக் காப்பாற்றியதையெல்லாம், இத்தனை நாள் நம்முடையதாக இருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்வான்.”

ஜன்னலுக்கு வெளியே ஒன்றுக்கிருந்துகொண்டே கேட்டுக்கொண்டிருந்த டென்ட்லருக்கு தன்னைத்தானே மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது போலிருந்தது.  இத்தனை வருடங்களாக தான் எதையும் உணரவேயில்லை என்பது அவனுக்கு தெளிவாகப் புரிந்தது.  பெற்றோர் சுடப்பட்டு இறந்தபோதும், முகாமிலிருந்தபோதும், வீட்டிலிருந்து வெளியேறி திரும்பிய கணம் வரை எதையுமே தான் உணராமலிருந்தது அவனுக்கு உறைத்தது.

அந்தக் கணத்தில், எல்லா உணர்ச்சிகளையும்விட குற்ற உணர்ச்சியே மேலோங்கியது.

இந்த இடத்தில், ஷிம்மி தன் புத்திசாலி மகனிடம் சொன்னார், “ஆம்.  அது பிழைத்திருத்தல் பற்றியதுதான்.  பிழைத்திருக்க டென்ட்லரின் வழி.  அவன் அதுவரை உணராமல் எல்லாம் இல்லை.  ஆனால், தன் தாயின் சடலம் மீதே உணர்ச்சி இன்றி நடந்து சென்ற சிறுவன், விழித்துக் கொண்டான்.

அந்தக் கணத்தில்தான் தான் ஒரு தத்துவ ஞானியானதாக ப்ரொஃபசர் டென்ட்லர் பின்னால் ஷிம்மியிடம் கூறினான்.

“அவன் எல்லாவற்றையும் பறித்துச் செல்வான்” என்றாள் ஃபனுஷ்கா.  “அவன் நம் உயிரைப் பறிக்கத்தான் வந்திருக்கிறான்.”

டென்ட்லர் தன் சகோதரர்களாகக் கருதிய அவளது பிள்ளைகள் “இல்லை” என்றனர்.

“நாம் உண்போம்.  கொண்டாடுவோம். அவன் தூங்கும் சமயம்பார்த்து அவனைக் கொன்றுவிடுவோம்” என்றாள் ஃபனுஷ்கா.  ஒரு பிள்ளையைப் பார்த்து, “உன் அப்பாவிடம் போய் அரிவாளை தீட்டி வைத்துக் கொள்ளச் சொல்” என்றாள்.  மற்றொருவனிடம், “நீ சீக்கிரமாகத் தூங்கப் போ.  பொழுதோடு எழுந்து, பசுவின் முதல் காம்பைப் பற்றுவதற்கு முன் அவன் கழுத்தை நீ அறுத்திருக்க வேண்டும்.  நம்முடையது…. நம்முடையதை யாரும் எடுத்துச் செல்லக்கூடாது” என்றாள்.

டென்ட்லர் ஓடத்துவங்கினான்.  சாலையை நோக்கி அல்ல – பின்கட்டை நோக்கி ஓடினான் – சமையலறை ஜன்னல் திறக்கும் சமயம் சரியாகத் திரும்பிப் பார்த்தான்.  தந்தையைத் தேடிப்போன இளைய சகோதரனைப் பார்த்து சிரித்தான்.  சரியான நேரத்தில் பின்கட்டில் இருந்து திரும்பி வருவது போல் காட்டிக் கொண்டான்.

“அந்த மாதிரியான ஒரு விருந்தில் பரிமாறிக்கொள்ளப்பட்டது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விருப்பமா?” என்று மகனைக் கேட்டார் ஷிம்மி. என்னென்ன ஞாபகங்கள் மீட்டப்பட்டன; உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன?  நிச்சயம் வைன் இருந்திருக்கும்.  ‘குடி, குடி’ என்றாள் தாய்.  கோழிக்கறியும் ஆட்டுக்கறியும் இருந்தன.  பெரும் பஞ்ச காலமாய் இருந்தபோதும் தேநீருக்கு சர்க்கரை இருந்தது.”  அவர்கள் கடையில் தெரிந்த செழிப்பை சுட்டிக்காட்டி, “சமையலறை தரையில் குழந்தையின் கூடையருகே ஒரு கூடையில் ஆப்பிள்களும் இருந்தன.  டென்ட்லர் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு எத்தனை வருடங்களாகியிருக்கும்!”

அந்தக்கூடையை மேசைக்கு எடுத்து வந்தான் டென்ட்லர்.  ஒரு கத்தியை வைத்து ஆப்பிள் தோலை உரித்து முதலில் தோலையும், பின்னர் பழத்தையும், விதைகளையும், நடுப்பகுதியையும் கூட அவன் ருசித்துத் தின்பதை பார்த்து குடும்பமே சிரித்தது.  அந்த இரவு கொண்டாட்டத்தில் கழிந்தது.  எல்லாம் முடியும்போது, அவன் வயிறு பெருத்து, குடியால் கண் செருகி, அவனால் தன் செவியில் விழுந்ததை நம்பக்கூட முடியாமல் போனது.

தழுவல்களும் முத்தங்களும் பரிமாறப்பட்ட பின், வீட்டின் தலைவனுக்கு, மாடியில் இருந்த பெற்றோரின் படுக்கையறை ஒதுக்கபட்டது.  கூடத்தில் இரண்டு சிறுவர்களும், கீழே – “அங்குதான் வெதுவெதுப்பாய் இருக்கும்” – சமையலறையில், தாயும் தந்தையும் குண்டு பாப்பாவும் தூங்கச் சென்றனர்.

“நன்றாகத் தூங்கு.  உன் வரவு நல்வரவாகட்டும் மகனே” இரண்டு கண்கள் மீதும் முத்தமிட்டு விடைகொடுத்தாள் ஃபனுஷ்கா.

மேலே சென்ற டென்ட்லர் சூட்டைக் கழற்றிவிட்டு படுக்கையில் சாய்ந்தான்.  அப்போது ஃபனுஷ்கா கதவில் எட்டிப்பார்த்து அறை வெதுவெதுப்பாக இருக்கிறதா, படிப்பதற்கு விளக்கு வேண்டுமா? என்று கேட்டாள்.

“வேண்டாம். நன்றி”

“நன்றியெல்லாம் தேவையில்லை, என் மீட்கப்பட்ட அனாதை மகனே.  வெறும் ‘ஆம் அம்மா’, ‘இல்லை அம்மா’ போதும்” என்றாள்.

“விளக்கு வேண்டாம் அம்மா” என்றான் டென்ட்லர்.  ஃபனுஷ்கா கதவை மூடினாள்.

படுக்கையிலிருந்து எழுந்தான் டென்ட்லர்.  சூட்டை அணிந்துகொண்டான்.  கொஞ்சமும் அவமானப்படாமல், மதிப்புள்ள பொருள் எதுவும் அறையில் இருக்கிறதா என்று தேடினான்.  சொந்த வீட்டிலேயே கொள்ளை அடிக்கத் தலைப்பட்டான்.

காத்திருந்தான்.  வீடு அடங்கும்வரை காத்திருந்தான்.  கடைசி காலடி ஓசை அடங்கும்வரை, தாய் ஃபனுஷ்கா நிச்சயமாய் தூக்கத்திலாழ்ந்திருப்பாள் என்று தோன்றிய வரை, இரவு முழுவதும் விழித்திருக்க நினைத்த, வாழ்வில் போராட்டம் எதையும் சந்தித்திராத சகோதரன் ‘எல்லாம் சரியாய் இருக்கிறது’ என்று நம்பி கண்மூடும் வரை காத்திருந்தான்.

அவனும் தூங்கியிருக்க வேண்டும் என்று பிறர் எண்ணக்கூடிய நேரம் வரை காத்திருந்த டென்ட்லர் தன் சப்பாத்துகளை கயிற்றில் இணைத்து தோளில் மாட்டிக்கொண்டான்.  ஒரு கையில் தலையணையை எடுத்துக்கொண்டு மறு கையால் துப்பாக்கியை நிமிர்த்தினான்.

வாத்தின் இறகுகள் காற்றில் பறக்க, வீட்டிற்குள் வளைய வந்தான் டென்ட்லர்.  சகோதரர்கள் ஆளுக்கு ஒரு தோட்டா, அப்பாவிற்கு ஒன்று அம்மாவிற்கு ஒன்று.  சுட்டு முடித்து சமையலறையில் நின்றபோது, சாலையோரங்களில் தூங்கும்போது தற்காத்துக்கொள்வதற்கு விட்டு வைக்கப்பட்ட ஒரு தோட்டா மிச்சமிருந்தது.

அந்தக் கடைசி தோட்டா குண்டுபாப்பாவை துளைத்தது.  அந்தக் குடும்பத்தில் யாரும் உயிர்பிழைத்து எதிர்காலத்தில் தனக்கே யமனாக வந்துவிடக்கூடாது என்பதால், அவனிடம் கருணை தோன்றவில்லை.

“கொலைகாரன்” என்றான் எட்கர்.

“இல்லை.  அந்தத் தருணத்தில் அது கொலையல்ல” என்றார் அவன் தந்தை.

“எப்படியென்றாலும் அது கொலைதான்”

“அப்படியென்றால் அது நியாயமான கொலைதான்.  அவர்கள்தான் அவனை முதலில் கொன்றனர்.  அது அவனது உரிமைதான்”

“ஆனால், எப்போதும் நீங்கள் சொல்வது…”

“சூழ்நிலை”

“ஆனால்..  அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை…”

“ஆம்.  குழந்தை… அது கொடுமைதான்.  ஆனால், இவையெல்லாம் ஒரு தத்துவஞானிக்கான கேள்விகள்.  சதையும் ரத்தமும் கலந்த கோட்பாடுகள்”

“ஆனால் இது கேள்வி இல்லை. அவர் குடும்பத்தை அழித்தவர்கள் இவர்கள் இல்லையே?”

“அன்றிரவு அவனைக் கொல்வதாக இருந்தார்கள்”

“அவர் தப்பித்திருக்கலாம்.  ஒட்டுக்கேட்டபோதே வாசலை நோக்கி ஓடி தப்பித்திருக்கலாம்.  பின்கட்டிற்கு ஓடி, சகோதரனை எதிர்கொண்டிருக்க வேண்டியதில்லை”

“அவனுக்கு மேலும் ஓடத் தெம்பில்லாதிருந்திருக்கலாம்.  எது எப்படியோ, ‘பழிக்குப் பழி’ என்பது உனக்குப் புரிகிறது அல்லவா?  ‘தற்காப்பு’ என்றால் என்ன என்று உன்னால் ஊகிக்க முடிகிறதா?”

“நீங்கள் எப்போதும் அவரை மன்னிக்கவே செய்கிறீர்கள்.  அவருக்கு நிகழ்ந்ததுதான் உங்களுக்கும் நேர்ந்தது. ஆனால் நீங்கள் அப்படி இல்லையே!  அவர் செய்ததை நீங்கள் ஒருபோதும் செய்திருக்க மாட்டீர்கள்”

“ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒருவன் என்ன செய்வான் என்று எளிதில் சொல்லிவிடமுடியாது.  செல்லமாய் வளர்க்கப்பட்ட குழந்தை நீ.  கேடுகளை மட்டுமே பார்த்து வளர்ந்த சிறுவனின் நடத்தையில் நாகரிகப் பண்புகளை போட்டுப் பார்க்கிறாய்.  தங்கள் பணியை செய்யத் தவறிய டென்ட்லர் குடும்பத்தை அழிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அமைப்பில் நேர்ந்த ஒரு தவறு அந்த மரணங்களுக்குக் காரணமாயிருக்கலாம். குடும்பத்தில் லாயக்கில்லாத ஒருவனை மட்டும் உலகில் மீண்டும் உலவ விட்ட தவறு காரணமாயிருக்கலாம்”

“இதுதான் உங்கள் எண்ணமா?”

“அதைத்தான் நான் கேட்கிறேன்.  அந்த இரவில் டென்ட்லரின் இடத்தில் நீ இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய் மகனே?”

“கொலை செய்திருக்க மாட்டேன்”

“நீ இறந்திருப்பாய்”

“பெரியவர்களை மட்டும் கொன்றிருப்பேன்”

“ஆனால் டென்ட்லரின் கழுத்தை அறுக்க ஒரு சிறுவன்தானே தயார் செய்யப்பட்டான்!”

“தீங்கிழைப்பவர்களை மட்டும் கொன்றால்?”

“அதுவும் கொலைதான்.  தீங்கு செய்ய இருப்பவர்களை, அவர்கள் உறக்கத்திலிருக்கும்போது கொலை செய்வதுதான்”

“யோசித்துப் பார்த்தால், அந்த நால்வருக்கும் அது தேவைதான்.  அவரிடத்தில் நான் இருந்திருந்தால் நான் எப்படி அவர்களை கொன்றிருப்பேன்?”

ஷிம்மி சோகமாய் தலையசைத்தார்.

“நாம் யாராயிருந்தால் என்ன?  யார் இறக்க வேண்டும் முடிவு செய்ய நாம் யார் மகனே?”

அந்த நாளில்தான் எட்கர் கெஜரும் ஞானியானான்.  மலை மேலிருந்த பல்கலைக்கழகத்தில் கோட்பாடுகளைக் கற்பித்த ப்ரொஃபசர் டென்ட்லரைப் போல் அல்ல.  அவன் தந்தையைப் போல – நடைமுறை வாழ்க்கையில்.  எட்கர் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை – கல்லூரிக்கும் செல்லவில்லை.  மூன்று வருடங்கள் ராணுவத்தில் இருந்ததைத் தவிர, தன் வாழ்க்கை முழுவதும் மகிழ்வோடு கடைத்தெருவில் தங்கள் கடையில் வேலை செய்வதில் கழித்தான்.  பழங்களை பிரமிடு போல அடுக்கிக் கொண்டே பொருள் பொதிந்த கேள்விகளை எழுப்பிக் கொண்டு தீவிரமாய் யோசித்துக் கொண்டிருப்பான்.  விடைகள் கிடைக்கும்போதெல்லாம் அவற்றைப் பயன்படுத்தி தன் வாழ்வையும் மற்றவர்கள் வாழ்வையும் சிறிதேனும் மேம்படுத்திக் கொள்ள முயல்வான்.

‘ப்ரொஃபசர் டென்ட்லர் ஒரு கொலைகாரன்தான்; அதே சமயத்தில் பாவப்பட்டவனும் கூட’ என்ற முடிவுக்கு எட்கர் வந்ததும் அந்த நாளில்தான்.  அந்த விவசாயக் குடும்பதை அழிக்க ப்ரொஃபசர் டென்ட்லர் வந்தது எதற்கு, எப்படி என்பதும், எப்படி மனிதர்கள் சீருடையில் போருக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதும், அதே சீருடையில் இருந்தாலும் அவரது கருணை கிடைக்காது என்பதும் அவனுக்குப் புரிவது போலிருந்தது.  தன் பெற்றோரின் அறையில் அவர்கள் படுக்கையிலேயே, அவர் தன் துப்பாக்கியைக் கொண்டு முதல் தோட்டாவினால் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை கூட செய்துகொண்டிருக்கக் கூடும் என்று தோன்றியது.

ஆனாலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் டென்ட்லருக்கென பழங்களும் காய்கறிகளும் பொட்டலம் கட்டுவது எட்கரின் பழக்கமானது.  கிடைத்த போதெல்லாம் ஒரு அன்னாசியையோ, தேனொழுகும் பெரிய மாம்பழங்களையோ அந்தப் பையில் சேர்ப்பதும் உண்டு.  டென்ட்லரிட்ம் கொடுத்துவிட்டு “எடுத்துக் கொள்ளுங்கள் ப்ரொஃபசர்” என்பான்.  அவன் தந்தை இறந்த பிறகும் இது தொடர்ந்தது.

முந்தைய கட்டுரைசூழல் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏற்காடு இலக்கிய முகாம் – தங்கவேல்