உயர்தர நகைச்சுவை

நண்பர்கள் பலர் இணையத்தில் நகைச்சுவையே அருகிவருவதனால் பேயோன் எழுதுவதையெல்லாம் ஒருவேளை நகைச்சுவையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் வாசித்து சிரிக்கவேண்டுமோ என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது என்றார்கள்.

கஷ்டம்தான். சராசரி இணைய எழுத்துக்களைப் பகடி செய்து எழுதமுயன்று சரசரி இணைய எழுத்துக்களையே உருவாக்குவதில் முடிந்து விளைவாகத் தன்னையே பகடி செய்து எழுதும் கதி பேயோனுக்கு. அவர் எழுதிய எதைவாசித்தாலும் எங்கேயோ வாசித்தது போலிருக்கிறதே என்று சந்தேகப்படவேண்டாம், முன்பு அதை எழுதியதும் அவரேதான்.

நான் பேயோன் ராமன் ராஜா என்ற அசல் பேரில் அதிஉயர் அறிவியல்கட்டுரைகளை எழுதுவதைத்தான் நகைச்சுவைக்கு அதிகமாக நம்பியிருக்கிறேன். எட்டாம் வகுப்பில் எங்களுக்கு சமூகஅறிவியல் சொல்லித்தந்த தங்கப்பநாடாருக்குப்பின் உருளைக்கிழங்கையும் பின்வாயுவையும்போல அறிவியலையும் நகைச்சுவையும் வெற்றிகரமாக இணைத்த அறிஞர் ராமன் ராஜாதான் என நினைக்கிறேன்.

எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதும் கோட்பாட்டுக்குறிப்புகளும் [அவர் பெரிய கட்டுரைகளை வேறு எங்கோ மர்மமாக எழுதிவருவதாகவும் அடிக்குறிப்புகள் மட்டும்தான் பிரசுரமாவதாகவும் சொல்கிறார்கள். இருக்கலாம், யார் கண்டது!] அவர் நகைச்சுவையை உத்தேசிக்காமல் எழுதும் சிறுகதைகளும் வெடித்துச்சிரிக்கத்தக்கவை என்பதும் என் அனுபவம்.

நாகார்ச்சுனனின் கவிதை மொழியாக்கங்கள் மூலத்துடன் ஒப்பிடுகையில் உயர்ந்த நகைச்சுவைக்கு இடமளிக்கின்றன. அவர் அந்த ஆங்கிலப்புலமையுடன் வாசித்து எழுதாமல் விட்ட ஆங்கிலப்படைப்புகள் திகில்நகைச்சுவையை அளிக்கக்கூடியவை. அதைவிட றியாஸ் குரானா என்பவர் தன்னைக் கவிஞர் என நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கும்போது எனக்கெல்லாம் பஸ்ஸில் கூட சிரிப்பு பீறிடுகிறது.

ஆனால் செயின் கடிக்கும் கன்னித்தமிழ்ப்பெண்களுக்குப் பிறகு அதிகமாக நகைச்சுவையை அறிபவர்கள் வினவு தளத்தின் வாசகர்கள்தான். மயிர்க்கூச்செறியவைக்கும் நகைச்சுவை என்பதை வினவு தளத்தில் மட்டும்தான் பார்க்கமுடிகிறது. சமீபத்தில் இப்படி வாசித்தேன்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற எமது அமைப்பு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வருகின்றது. சென்னையில் பல கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் வலிமையான மாணவர் அமைப்பு எங்களுடையதுதான். எங்களுடைய அமைப்பு மாணவர்களிடம் பெற்றிருக்கும் செல்வாக்கின் காரணமாகத்தான் ஏபிவிபி முதலான இந்து மதவெறி மாணவர் அமைப்புகள் இங்கே தலையெடுக்க முடியவில்லை.

முந்தைய கட்டுரைநமது தொழில்நுட்பம்-இணைப்புகள்
அடுத்த கட்டுரைநமது தொழில்நுட்பம்-கடிதங்கள்