வாசகர் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
              எத்தனையோ நாட்களாக கடிதம் எழுத வேண்டுமென நினைத்து தள்ளிக்கொண்டே போய்விட்டது, அதற்கு என்னுடைய மெத்தனம்தான் காரணம். தங்களது எழுத்துக்களை கிட்டதட்ட நெருக்கி வாசித்திருக்கிறேன் என்ற தகுதியே என்னை இக்கடிதத்தை எழுத தூண்டியது. இது என்னுடைய முதல் கடிதமும் கூட.
                          தங்களுடைய எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தங்களுடைய எழுத்துக்கள் அறிமுகமான பின்பு வாழ்வை நான் சற்று நின்று கவனிக்க, அவதானிக்க ஆரம்பித்துள்ளேன். மிகநுட்பமான தருணங்கள் தானாகவே மனதில் நின்றுவிடுகின்றன. இந்த இயல்பான பழக்கம் உங்கள் எழுத்தால் செம்மைபட்டுள்ளது.
                             உங்களுடைய ஓவ்வொரு படைப்புகளும் எனக்கு ஓர் புதிய அனுபவத்தையே கொடுக்கின்றது. வாழ்வின் மிகநுண்ணிய தருணங்களை உங்களால் எளிதாக சுட்டிக்காட்டிவிட இயலுகிறது. “போனது ஒரு கிளிக்கலாம் பிறகொரு சிறகுதிர் காலம்” வாசித்த பொழுது என்னிடமிருந்து ஏதோ ஓன்று உதிர்ந்து போன பின்பும் கூட என்னை நான் கனமாகவே உணருகிறேன்.
                               தங்கள் சிறுகதை தொகுப்பானது தங்கள் கூற்றுபடியே ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைதான். அதிலும் “கண்” என்ற சிறுகதை தமிழுக்கு ஓர் புதிய நடையே. சாளரத்தின் உடைந்த கண்ணாடி விளிம்பு வழியே தெரியும் வானமும் அதில் ஏற்படும் வர்ணஜாலங்களும் அதற்கேற்ப மனதின் எண்ண ஓட்டங்களும் என வாழ்வில் இப்படியான நிகழ்வுகள் வெகு சிலதான். உன்மத்தமனவை அவை.
                            ஏக்கப்பெருமூச்சு விடும் பாறையை ஓர் ஆண் குழந்தை தொட்டஉடன் அதன் எல்லா கொந்தளிப்புகளும் அடங்கி எங்கும் அமைதி நிலவும் கன்னியாகுமரி நாவலில் வரும் அக்காட்சி உருவகம் மனதின் ஆழதில் அமிழ்ந்து கிடக்கும் வற்றாத காமக்கொந்தளிப்பின் ரகசியங்களை ஒவ்வொன்றாக விடுபடசெய்கிறது. மிகப்பிரமாண்டமான மனஎழுச்சியை இப்படி வார்த்தைப்படுத்த அப்பொழுது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கொந்தளிபின் ஒலியை கேட்க்கமுடிகிறது. விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை அப்படிப்பட்ட மனஎழுச்சின்  விளைவுகள்தானே! கொற்றவையோ பெண் மனதின் கொந்தளிப்பு. என்றும் அணையா எரிதழல்.
                                காடு நாவலில் ஸ்ரீதரன் நீலிக்கு மூக்குத்தி கொடுக்கும் இடத்தில “எத்தனை அழகான பெண்ணும் ஏதோ ஒரு கோணத்தில், மின்னலென தோன்றி மறையும் நொடியில் அழகற்றவளாகவே தோன்றுகிறாள்” என கூரிஇருப்பது வாழ்க்கையும் பெண்களையும் உற்றுநோக்குபவர்களுகே தெரியும். இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்றாக பெண்களை ரசிப்பதை வைத்துக்கொள்ளலாமா? “பொண்ணு எப்படி இருக்கா?” என கல்யாண பெண்ணின் அழகை யாராவது கேட்டால், ” பொண்ணா பிறந்தா எப்படி அழகா இல்லாம போவா?” என்ற பதில் எங்கள் ஊர் பக்கம் கிடைக்கும். “காடு கண்டவன் விட்டுட்டு போக மாட்டான். ஏன்னா காடு தலைல அடிசுடும்”. உண்மையில் காடு தலையில் தான் அடித்து விட்டது ஜெயமோகன். உலக இல்லகியங்களில் தோல்ஸ்தாய் இன் நட்டஷா, மாஷ்லோவா போல தமிழில் நம் மலையன் மகள் நீலிகும் இடம் உண்டு.
                          சங்கசித்திரம், வாழ்விலே ஒருமுறை மற்றும் ஆழ் நதியை தேடி போன்றவை வாழ்வின் பல்வேறு புரியாத நிகழ்வுகளுக்கு விளக்கமளிக்கின்றன. தனிமையின் தவிப்பு, காதலின் அவதி, உளப்போரட்டங்கள் என இன்னும் இன்னும் எத்தனையோ……….. ” தன் நண்பர்களுக்கு என அம்புகளை கொண்டிராத அம்புரதூளிதான் உலகத்தில் ஏது?” என வடக்குமுகத்தில் பீஷ்மர் கேட்கும் இடம் நம்மை நாமே சோதனைஇட்டுக்கொள்ள தூண்டுகிறது. ஒவ்வொருவரிடமும் அவர்களின் நண்பர்களுக்கான அம்புகள் உள்ளனவா? உள்ளது. நண்பனின் அந்தரங்கம் தான் அந்த அம்புகள். அவைகளை உதறிதள்ளி விட முடியாது. வேண்டுமானால் பயன்படுத்தாமல் இருக்கலாம். பயன்படுத்தாத அம்புகள் உள்ளனவா?
                              நகைசுவைக்கு மட்டும்மென்ன பஞ்சமா? நூஸ், பெயர், திலகம் மற்றும் பலகட்டுரைகள் தேவையான இடத்தில தேவையான அளவு உள்ளது.
                               இணையதள எழுத்துக்கள் இன்னும் வாசகனுக்கு நெருக்கமானவை. ஓர் படைப்பாளி தன்னுடைய சொந்த சுக துக்கங்களை எந்தவித மறைப்பும் இன்றி வாசகனுடன் பகிர்ந்துகொள்ள முடயுமா என வியப்பளிக்கிறது.
                                 “தேர்வு” என்ற தலைப்பில் அஜிதனைப்பற்றி எழுதியது கண்களை பண்ணிக்கவே வைத்தன. எழுத்தாளன், தமிழின் பெரும் படைபாளி, அனேக பிரபலங்களை அறிந்தவர் என்ற தங்களின் எல்லா பிம்பங்களையும் உடைத்து விட்டு மகனை அணைத்து கொண்டு பதறி ஓடும் ஓர் தகப்பனைதான் காணமுடிந்தது.
                                   திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகள் போனபின்பும் கூட அன்று தர்மபுரியில் கடிதத்திற்காக தீரா காதலுடன் “வறுந்தலை பெருங்களிறு” போல இருந்த ஜெயமோகன் இன்னும் சற்று மெருகேறி ” இணைவைதலில்” காணமுடிகிறது.
                                  என்னை விமர்சிக்க வேண்டுமானால் உங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என கூறும் இறுமாப்பு நல்ல படைப்பாளனுக்கு உரிய செருக்குத்தான்.
                                    உங்கள் எழுத்துக்கள் வசிக்கின்ற போது ஏற்படுகின்ற மனஎழுச்சி அபரிமிதமானது. உங்களுடைய எழுத்துகளுடன் என்னை மிக நெருக்கமாக உணர்கிறேன். மற்றவர்கள் எப்படியோ தெரியாது. அனேக இடங்களில் உங்கள் மன அலைவரிசை என்னுடன் ஒத்துபோகிறது. ஒத்தஅலைவரிசை. என்னுடைய ஆழ்மன கிடைக்கைகளை தொட்டுவிடகூடியதாக உங்கள் எழுத்து உள்ளது. என்னுடைய
ஆழ்மன பிம்பத்தை காணமுடிகிறது.
                             
               இறுதியாக என்னை பற்றி சிலவார்த்தைகள். நான் ரவிச்சந்திரன். மதுரையில் ஓர் பொறிஇயல் கல்லுரியில் விரயுரையளராக பணி செய்கிறேன். உங்களுடைய தொடர்ந்த வாசகன். இன்னும் எழுத எத்தனையோ உண்டு. ஐந்து  ஆண்டுகளாக எழுத நினைத்தவை. எத்தனையோ முறை தொலைபேசியல் தொடர்பு கொள்ள முயன்று தொந்தரவாக இருந்துவிட கூடாதே என விட்டுவிடுவேன்…….
 
வீட்டில் அனைவரின் நலன்களையும் எதிர்பார்த்து..
 
நன்றி
 
அன்புடன்
ரவிச்சந்திரன்

 

அன்புள்ள ரவிச்சந்திரன்

நலம்தானே? நானும் நலமே. இப்போது அமெரிக்காவில் மினசோட்டா பல்கலை வளாகத்தில் இருக்கிறேன். செப்டெம்பர் முதல்வாரம் வரை இங்கே இருப்பேன்.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். தொடர்ச்சியாக வாசிக்கும் எழுத்தாளனைப் பொறுத்தவரை அவ்வப்போது ஒரு சோர்வான எண்ணம் ஏற்படும்– உருப்படியாகா ஏதேனும் எழுதியிருக்கிறோமா என்ற ஐயம்.  பேரிலக்கியங்கள் முன் நிற்கும்போது. மகத்தான விஷயங்கலை கண்ணுறும்போது. அத்தகைய சந்தர்ப்பங்களில் நல்ல வாசகர் ஒருவரின் கடிதம் என்பது மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியது. நன்றி.

இந்த மனநிலையை பற்றி புதுமைப்பித்தன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார். ‘ஒளி எப்போதும் இருக்கும். அதைப்பார்க்க நான் இருக்க வேண்டும்’ என்று முடியும் அக்கதையில் உள்ள அவன் ஏக்கம் ஆழம் மிக்கது

அன்புடன்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

பல நாட்களாக எழுத நினைத்து விடுபட்டுப்போன எண்ணங்களை நினைவுகூர்ந்து எழுதுகிறேன்.கடந்த  ஒரு வருடமாக நான் உங்கள் தளத்தை உன்னிப்பாக வாசித்து வருகிறேன்.இணையத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி வாசிப்பது கடினமான காரியம்,தமிழில் நான் வாசிக்க கிடைத்த வரமாக உங்கள் இணையத்தை கருதுகிறேன்.மேலும் இந்திய ஞானப் பாரம்பரியத்தை,பண்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் ஒரு மகத்தான எழுத்தானாகவே உங்களை உள்வாங்கிக் கொள்கிறேன்.இந்த வாசிப்பு எனது சிந்தனைப் போக்கில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.சுமார் பத்து வருடங்களுக்கு முன்பாக நான் தமிழில் இலக்கியம் வாசிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன்.என் கல்லூரி படிப்பிற்காக நான் பிறந்த ஊரான கயத்தாறை(வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம்) விட்டு நாகர்கோயிலுக்கு சென்றேன்.அது வரையிலுமே எனக்கு தற்கால இலக்கியத்தில் முக்கியமானவரகளாக கவிஞர்களை மட்டுமே தெரிந்திருந்தது.தவிர ஜெயகாந்தன் கல்கி அகிலன் சாண்டில்யன் ஜானகிராமன் என நூலகத்தில் கிடைத்த புத்தகங்களை மட்டுமே வாசித்திருந்தேன்.உங்களையோ சுந்தரராமசாமியையோ கேள்விபடாமல்தான் நான் தக்கலையிலிருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்திருக்கிறேன்.ஆனால் எச்.ஜி.ரசூலையும்,தோப்பில் முகம்மதுமீரானையும் கொஞ்சம் படித்தும் தெரிந்துமிருந்தேன்.கல்லூரி நாட்களில் தமிழில் வாசிப்பதையே நிறுத்தி விட்டேன்.சலிப்பு தட்டிவிட்டது.கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு சென்ற முதல் நாள்தான் உங்களை தெரிந்துகொண்டேன்.அதுவும் அரைகுறையாகத்தான்.கிறித்துவ  கல்லூரியில் படித்த நண்பர் விஷ்ணுபுரம் வைத்திருக்கிறேன் என பெருமிதத்தோடு என்னை பார்த்தார்.எனக்கு புரிந்தது. ஆனால் விகடனில் நீங்கள் எழுதிய தொடரை எதேச்சையாக வாசித்துவிட்டு ஆன்மி • உண
ர்வோடு எழுதுகிறவர் என நினைத்துக் கொண்டேன்.அவ்வளவுதான்  பிறகு சுந்தரராமசாமி இறந்துபோன சமயத்தில் ஒரு புளியமரத்தின் கதை படித்துவிட்டு பிரமித்து விட்டேன்.பிறகு வேலை.அலுவல் என மூச்சு விடாமல் ஓடிவிட்டு சற்று வாசிப்பை தொடங்கியிருந்த நேரத்தில் உங்கள் இணையம் பார்த்தேன்.பிறகு இன்னும் உங்கள் புத்தகங்களை தேடி அலைகிறேன் நெல்லையில்.இதுதான் தமிழ் நாடு.ஆனாலும் நான் கிடைக்கிற மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிவருகிறேன்.நீங்களே சொன்னது போல எழுத்திலிருந்து உங்களுக்கு கிடைத்ததை விட செலவழித்துதான் அதிகம் என்கிற நிலைமைதான் தமிழில் தரமாக எழுதுகிற எழுத்தாளர்களின் நிலைமையாக இருக்குமில்லையா?.ரொம்ப அவமானமாகவும் வேதனையாகவுமிருந்தது.சினிமாவில் சில வருடங்கள் கை காலை அசைத்துக் கொள்கிறவர்கலெல்லாம் கோடீஸ்வர ர்கலாகிவிடுகிறார்கள்.ஒரு சமுதாயத்தை கட்டியெ�பும் எழுத்தாளர்கள் இப்படி வேதனையுடன் வாழ்கிறார்கள்.இதில் கடிதங்களில் வேறு நீங்கள் எழுத வந்தது பணத்துக்காகத்தானா என்ற கேள்விகள்.ஆனாலும் உங்களின் முனைப்பு, தீவிரம் படைப்பின் உக்கிரம் ஓர் உன்னதமான கலைஞன் என பறைசாற்றிக்கொண்டேயிருக்கிறது.விமர்சனப்பூர்வமாக  இனிவரும் கடிதங்களை எழுதலாமென்றிருக்கிறேன்.உங்கள் கட்டுரைகலனைத்தும் ஒரு பரந்த பாரதத்தின்  உள்ளுணர்வோடு உரையாடும் ஒரு அனுபவமாக இருக்கிறது.நகைச்சுவை கட்டுரைகள் அபாரமாக எழுதுகிறீர்கள்.வரலாற்றை ஆய்ந்து எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல புதிய பார்வைகளை தந்தது.வாசகர்களோடு  நீங்கள் கொண்டிருக்கும் இந்த உறவு பல ஆரோக்கியமான ஆக்கங்ககளையும்,விவாதங்களையும்,வழிகளையும்  ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.தமிழ் சமூகம் உங்களுக்கு கடன் பட்டிருக்கிறது.

அன்புடன்
கண்ணன்.பெ

P.S:
நலமாயிருக்கிறீர்களா? எழுதுகிற அவசரத்தில் நலம் விசாரிக்க மறந்து விட்டேன். அமெரிக்க பயணக்கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்! கன்னி நிலத்தை மிக இயல்பான எழுத்துக்களால் உருவாக்கியிருக்கிறீர்கள் நடை உட்பட.அனல் காற்றை போலில்லாமல் நிலம் இங்கு ஒரு பாத்திரமேற்றிருக்கிறது.எனக்கு  ஒரு சந்தேகம் என்னவென்றால் கதை மாந்தர்களின் எண்ணப் போக்கிலேயே உங்களது எழுத்தும் அமைகிறதா என்றுதான்.மத்தகம்,ஊமைச்செந்நாய்,கிளி சொன்ன ராமாயணம் எனப் பார்க்கிறபோது இது மிகவும் எளிய சிந்தனை வெளிப்பாடு.ஒருவேளை ராணுவத்தில்
இருக்கிறவர்கள் இப்படி யோசிக்கிறவர்களாக இருக்கலாம்.தீவிரவாதிகளின் சித்தாந்தங்கள் நிச்சயம் மூர்க்கமானதென நம்புகிறேன்.சற்றே நெகிழ்வுடன் எழுதியிருப்பதாக தோன்றுகிறது.

 

 

அன்புள்ள கண்ணன்

ஒரு ஆச்சரியமான விஷயம், ஒருமுறை என் இணைய தளத்துக்கு என் தெருவிலேயே இருக்கும் வாசகர் கடிதம் எழுதியிருந்தார், என்னை அனேகமாக தினமும் சாலையில் எதிர்கொள்பவர். இந்த தயக்கம் பலசமயம் நமக்கு இருக்கிறது. நான் அனேகாமாகா தினமும் வேணுகோபால் காசர்கோடு என்ற கன்னட கவிஞரை தாண்டிச் செல்வேன், காசர்கோட்டில். அவரை வாசித்திருக்கிறேன். ஆனால் பேச தயக்கம். பின்னர் அவரை சுந்தர ராமசமி வீட்டில் சந்தித்து பேசினேன்.

நான் எனக்கு அங்கீகாரம் அல்லது புகழ் அல்லது பணம் இல்லை என்ற ஏக்கத்தில் இல்லை. உற்சாகமாகவே இருக்கிறேன். ஒரு கோணத்தில் தமிழில் இலக்கியம் எழுதியவர்களில் என் அளவுக்கு புகழும் அங்கீகாரமும் பெற்றவர்கள் ஜெயகாந்தன் போல சிலரே.

இதற்கான காரணம் நான் எழுதவந்தாபோது சட்டென்று வணிக இலக்கியத்தின் அலாஇ முடிந்து இலக்கியம் மட்டுமே வாசிக்கக் கிடைக்கும் நிலை உருவானது– தொலைக்காட்சியின் ஆதிக்கத்தால். ஐராவதம் மகாதேஎவன் மாலன் கோமல் சுவாமிநாதன் வாசந்தி பாவை சந்திரன் போன்றவர்களின் முயற்சியால் இலக்கியம் பெருவாரியான வாசகர்களிடம் செல்ல ஆரம்பித்தது. இணையம் வந்தது.

ஆனால் தமிழின் மக்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது வாசிப்பு மிகமிகக் குறைவு. அது தமிழ் சமூகத்தின் சிந்தனையை மிக மோசமாக பாதிக்கிறது. இதையே நான் குறிப்பிடுகிறேன்

அன்புடன்

ஜெ

முந்தைய கட்டுரைசுரா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்