«

»


Print this Post

நமது தொழில்நுட்பம்


இரண்டு நிகழ்ச்சிகள். ஒரு கணிப்பொறிநிரல் சம்பந்தமான சிக்கல். அதைச் சரிசெய்ய பல ஆண்டுகளாக முயன்றும் முடியவில்லை. ஏராளமான தற்காலிகத் தீர்வுகள்.உடனடி மாற்றங்கள். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருந்தது

கணித்துறையில் உய்ரநிர்வாகியாக இருக்கும் நண்பரிடம் சொன்னேன். அவர் கேட்டார் ‘உங்களுடைய ஐம்பதாண்டுக்கால வாழ்க்கையில் எந்த நவீனக் கருவியாவது முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு சரி செய்யப்பட்ட அனுபவம் உண்டா?’

நான் ஒரு நிமிடம் அயர்ந்தே போனேன். இல்லை!

இன்றுவரை மின்விசிறி,தொலைக்காட்சி,கணனி,செல்பேசி எதுவாக இருந்தாலும் ஒரு பிழை என வந்துவிட்டால் அதை கடைசிவரை சரிசெய்யவேமுடியாது என்பதுதான் என் அனுபவம். என் வீடு 2000 த்தில் கட்டப்படும்போதே குழாயில் ஒரு கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரை பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும் அது சரிசெய்யப்படவில்லை. மொத்தமாக இடித்து வேறு குழாய்போடலாமென்று கடைசியாக குழாய்ப்பணியாளர் சொல்லிவிட்டார்.

திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் செய்வார்கள். உதிரிபாகங்களை மாற்றுவார்கள். கலைத்து திரும்பப் பூட்டுவார்கள்.சிலசமயம் தற்காலிகமாகச் சரியாகும். நாலைந்துமுறை அப்படிச் செய்தபின் சரியாகவில்லை என்றால் ‘போய்டிச்சு சார்…மொத்தமா மாத்தணும்’ என்பார்கள்.

நான் அதைச் சொன்னேன். நண்பர் சொன்னார் ‘இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த எந்த விஷயங்களுக்கும் நிரந்தரமாக தீர்வு கிடையாது. அதைச் செய்யத் தெரிந்த எவரும் இந்தியாவில் இல்லை. அணைகள் ஒழுகுவது முதல் உங்கள் வீட்டு சுவரில் விரிசல் வரை எதையும் நம்மால் மூழுமையாகச் சரிசெய்ய முடியாது, செய்யபப்ட்டதும் இல்லை’

மறுவாரம் விமானத்தில் என் படத்தயாரிப்பாள நண்பருடன் சென்றுகொண்டிருக்கையில் அதைச் சொன்னேன். அவர்தான் கேரளத்தில் தொண்ணூறுசதம் கார்களையும் விற்பவர். சிரித்தபடி ‘இது இப்போதா தெரிகிறது உங்களுக்கு? நான் முப்பதாண்டுகளில் ஐம்பதாயிரம் மோட்டார்மெக்கானிக்குகளையும் எஞ்சீனியர்களையும் கண்டிருப்பேன். என்னிடம் ஆயிரத்தைநூறுபேர் பணியாற்றுகிறார்கள். ஒரு கார் எப்படி ஓடுகிறது என்று தெரிந்த ஒரு இந்திய மெக்கானிக்கையோ எஞ்சீனியரையோ நான் இதுவரை பார்த்ததில்லை’

மிகவும் அதிகப்படியான கூற்று என்றே நான் நினைத்தேன். அவர் சொன்னார் ‘உண்மை…கொஞ்சம்கூட மிகை கிடையாது. மொத்த காரையும் கழற்றிப்போட்டு திரும்ப மாட்டக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அனுபவம் மூலம் எந்த பாகம் பிழைசெய்கிறது என்று ஊகித்து அதைக் கழற்றி மாட்டக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு காரின் இயந்திரத்தைப்பற்றி தெரிந்த இந்தியர் என எவரும் இலலை’

அவரது தொழிலில் நூற்றுக்கணக்கானமுறை தொழில்நுட்பச்சிக்கல்கள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் கொரிய, ஜப்பானிய நிபுணர்களை வரவழைத்துத்தான் சரிசெய்திருக்கிறார். பற்பலமடங்கு செல்வில். அவர்களால் மட்டுமே பிரச்சினையைக் கண்டுபிடிக்கமுடியும். அவர்கள் கண்டுபிடித்த பிரச்சினையை அவர்கள் விளக்கும்போது கேட்டுப்புரிந்துகொள்பவர்கள்கூட நம் தொழில்நுட்பர்களில் ஆயிரத்தில் நாலைந்துபேர்தான்.

ஏன் என்று அவர் சொன்னார். ‘நமக்கு எங்கேயுமே சயன்ஸ் சொல்லித்தருவதில்லை .ஒரு கார் நூற்றுக்கணக்கான பிசிக்ஸ்விதிகளின்படி செயல்படக்கூடியது. அந்த விதிகளை உயர்நிலைப்பள்ளிமுதலே கற்று புரிந்துகொண்டு அவற்றை பலகோணங்களில் யோசித்தும் செய்தும் உள்வாங்கிக் கொண்டால்தான் காரின் சயன்ஸ் தெரியும். நம்மூரில் மனப்பாடம் செய்து திருப்பி தப்பிலல்லாமல் எழுதத்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள். நம்மூர் எஞ்சீனியர்கள் கடைசி பரீட்சை எழுதியதுமே அதுவரை படித்தது எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். வேலைக்குச் சேர்ந்தபின் பள்ளிக்கூடம் போகாத மூத்த மெக்கானிக்கிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எதையாவது கற்றுக்கொள்வார்கள். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரிந்தது…’

என் கணிப்பொறி நண்பரும் அதையே சொன்னார். ஒரு கணிநிரலை எவரேனும் வெளிநாட்டில் வடிவமைத்துக் கொடுத்தால் அதை முழுமூச்சாக அமர்ந்து எழுதிமுடிக்கத்தான் நம்மவர்களால் முடியும். அது என்ன என தெரியாது. அதன் அறிவியல் தெரியாது. அதை கல்விநிலையங்கள் கற்பிப்பதில்லை.கற்பதற்கான அடிப்படைத்திறனும் அதற்குள் மழுங்கிவிட்டிருக்கும். ’சமயோசிதபுத்தி, கடும் உழைப்பு இரண்டைக்கொண்டும் சமாளித்துப்போகிறவர்கள்தான் இங்கே வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள்’ என்றார் அவர்

ஒத்திசைவு ராமசாமி எழுதிய இந்தக்கட்டுரையை வாசிக்கையில் ஒருவகையான படபடப்புதான் வந்தது.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/37267

2 pings

  1. நமது தொழில்நுட்பம்-கடிதங்கள்

    […] நமது தொழில்நுட்பம் என்ற கட்டுரையை வாசித்தேன். அதுபற்றி […]

  2. நமது தொழில்நுட்பம்,நமது ஆய்வுமனநிலை

    […] கட்டுரையின் அடிநாதம் புரிகிறது. பெரும்பான்மை […]

Comments have been disabled.