குப்பைச்சமூகம்

அன்புள்ள ஜெ,

திரு ராம்குமார் youtube-இல் வலையேற்றியிருந்த உங்களின் நேர்காணல் முழுதும் நேற்று கேட்டுக் கொண்டிருந்தேன். மொழி, வரலாறு, சங்க இலக்கியம், சமணம், காந்தி இப்படி பல்வேறுபட்ட உங்கள் கருத்துக்களை, அவ்வப்போது உங்கள் வலைத்தளத்தில் வாசித்தவற்றைத் தொகுத்துக் கேட்க முடிந்தது.

குப்பைகளை உருவாக்குவது மற்றும் சூழல் சமநிலை பற்றிய காந்தியின் அக்கறை பற்றி நீங்கள் கூறியதை நினைவு கூர்கிறேன். தூக்கி எறியப்படும் ஒரு காகிதம் எங்கே செல்லும் என்று காந்தி அப்போதே கொண்டிருந்த அக்கறை பேராச்சர்யப்பட வைக்கிறது. குப்பைகளைப் பற்றிய விழிப்பு எனக்கு ஏற்பட்டது இரண்டொரு வருடங்களாகத் தான். அதன் பின்னர், வீட்டில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரிக்கத் தொடங்கினேன். இவ்வாறு ஒரு பிரக்ஞை வந்த பிறகு, ஒரு பொருள் வாங்குகிறபோதே யோசிக்கிறேன் இதன் கழிவுகள் எப்படிப்பட்டது, மறுபயன்பாடு உண்டா என்றெல்லாம்…. காந்தி இது பற்றித் தன்னிச்சையாக அப்போதே யோசித்திருப்பது வியக்க வைக்கிறது. குப்பைக்காக வருங்காலத்தில் போர் மூள்வது ஒன்றும் ஆச்சர்யப்படவேண்டிய விஷயமல்ல. இன்று திருநெல்வேலி குப்பை சேகரிக்குமிடம் தீப்பற்றி எரிந்து சூழல் நாசம் விளைக்கிறது. இப்போதும் கூட அரசும், மக்களும் அதனை இடம் மாற்றுவது பற்றியே யோசிப்பார்கள். பாடம் ஏதும் படிப்பார்கள் எனத் தெரியவில்லை. சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலமும், கீழ்கொடுங்கையூரும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றி காற்று மேலும் நச்சாகலாம். இது தமிழ் நாட்டின் எல்லா நகரங்களுக்கும் பொருந்தும். மாற்று வழிகள் இருந்தும் பரிசீலிப்பதற்கு யாரும் தயாராக இல்லை. சென்னையின் ஒரு நாளைய குப்பை கிட்டத்தட்ட 5000 டன்கள். குப்பை அகற்றும் ஒப்பந்தப்படி ஒரு டன்னுக்கு கிட்டத்தட்ட 1400 ருபாய் பெறுகிறது ஒப்பந்தம் செய்திருக்கும் நிறுவனம். (இதில் அரசியல்வாதிகளுக்குப் பங்கு வேறு!) மாற்று வழிகளைப் பரிசீலித்தால், இவை அத்தனையையும் இவர்கள் இழக்க வேண்டியிருக்கும்.

நுகர்வுக் கலாச்சாரம் இங்கே பெருகி வருகிற அதே வேளையில், சென்னையில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஒரு சிறு இளைஞர் கூட்டம், உற்சாகத்தோடு சூழியலில் அக்கறையோடு இயங்கி வருகிறது. வார இறுதி நாட்களில் மரக் கன்றுகள் நடுதல், தொல் சின்னங்களைப் பாதுகாத்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வு, இயற்கை வேளாண்மை, ஏரிகளில் திட்டமிட்டு சேர்க்கப்படும் கழிவகற்றி அதன் தூய்மையும் எல்லையும் காத்தல், கடற்கரை துப்புரவு என்று வலை விரிகிறது. இதில் பெரும்பாலான பணிகளில் நானும் அர்ப்பணிப்பு உணர்வோடு பங்கெடுத்திருக்கிறேன். அதுவும் ஏரி, கடற்கரையில் பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவகற்றியது மனதிற்கு நிறைவு தந்த பணி. திருவான்மியூர் கடற்கரை நான் நேசிக்கும் கடற்கரை. இது போன்ற பணிகளில் ஈடுபடுகிற போது நீங்கள் சிவராம் காரந்த் பற்றிக் கூறியதும் நினைவுக்கு வந்து உத்வேகம் தரும். இவ்விளைஞர் கூட்டத்தைப் பார்க்கிற போது நீங்கள் கூறிய காந்திய அணியும், ஐரோப்பிய இரண்டாவது அணியுமே நினைவுக்கு வந்தனர். நீங்கள் சொன்னது போல இது எப்போதுமே சிறிய கூட்டமாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சென்னையில் பணி புரியும் லட்சக் கணக்கான இளைஞர்களில் அதிகம் போனால் முன்னூறு நானூறு இளைஞர்களே இது போன்றவற்றில் அக்கறையும் செயலார்வமும் கொண்டிருக்கிறார்கள்.

அன்புடன்,
வள்ளியப்பன்

அன்புள்ள வள்ளியப்பன்

சிலநாட்கள் எர்ணாகுளத்தில் இருந்தேன். கேரளத்தின் சிற்றூர்களில் பயணம்செய்தேன். கேரளம் அடைந்துள்ள பொருளியல் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. எர்ணாகுளம் நகரில் பெரும்பாலும் எல்லாமே மாபெரும் இல்லங்கள். பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களை சந்துபொந்துகளில் சாதாரணமாகக் காணலாம். பட்டாம்பி என்ற சிற்றூரின் தெருவில் நின்றபோது ஓர் வளர்ந்த ஐரோப்பியக்கிராமத்தில் நிற்கும் உணர்வு. எல்லாமே பெரிய வீடுகள். எல்லா வீடுகளிலும் கார்கள்.

ஆனால் மொத்தக்கேரளத்திலும் குப்பை அள்ளும் அமைப்பென ஏதும் இல்லை. தன்னிச்சையாகக் குவியும் குப்பையை அள்ளி ஏதேனும் ஓரிடத்தில் குவிக்கிறார்கள். தெருக்களில் குப்பை தென்படுவதில்லை. ஆனால் நகரத்தின் எந்த சந்துபொந்துகளிலும் குப்பை குவியல்கள்தான். கேரளம் முழுக்கப் பரவியிருக்கும் நீர்நிலைகள் முழுகக் குப்பைகள். இந்தியாவின் வெனிஸ் என்று சொல்லப்படும் ஆலப்புழா மாபெரும் சாக்கடையாக ஆகிவிட்டிருக்கிறது. அந்த சாக்கடையில் அணிப்படகு ஓட்டித்தான் அங்கே சுற்றுலாத்தொழிலே நடக்கிறது

குப்பை எவ்வகையிலும் அழிக்கப்படுவதில்லை. குவிக்கப்படும் இடங்களில் அழுகி சூழலை நாறடிக்கிறது. அந்த ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குப்பை குவிப்பதற்கு எதிராகக் கேரளத்தின் எல்லா நகரங்களிலும் மக்கள்போராட்டங்கள் நிகழ்கின்றன

அதிக மழைபெய்யும் கேரளத்தில் சூழியல் கேடுகள் பெரும் தீங்கு விளைவிப்பவை. தமிழகம் போலக் குப்பை காய்ந்துபோவதுமில்லை. மழை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துவிடுகிறது. ஆகவே குப்பை மலை எங்கே இருந்தாலும் சரி நகரின் அதிநவீன அதிஉயர்தர பகுதியில் வசிப்பவர்களும் அதே அழுக்குக்குள்தான் வாழ்ந்தாகவேண்டும்

மழை ஆரம்பித்ததும் கேரளம் நோய்களால் சூழப்படுகிறது. டெங்கு, எலிக்காய்ச்சல், சிக்கன்குனியா இவ்வருடம் இன்னும் பெயரிடப்படாத ஏதோ காய்ச்சல். 250 மரணம் என்கின்றன செய்தி ஊடகங்கள். ஆவன செய்யப்படும் என்கிறார் உம்மன் சாண்டி. மருத்துவமனைகளுக்கு அதிக நிதி ஒதுக்குவாராம்.

ஆனால் குப்பையை அள்ளுவதற்காக, மறுசுழற்சி செய்வதற்காக எதுவுமே செய்யப்படுவதில்லை. நான் ஆப்ரிக்கா சென்றிருந்தபோது ஒன்று அறிந்தேன். விண்டூக் நகரின் குப்பைகளில் இருந்துதான் நகரின் 20 சத மின்சாரம் எடுக்கப்படுகிறது. அப்படி ஏன் செய்யக்கூடாது? அதற்கென ஒரு தனி நிதியை ஏன் உருவாக்கக்கூடாது? கேரளத்தில் பணமா இல்லை?

அந்த வினாவைக் கேரளத்தின் அமைச்சர் ஒருவரிடம் கேட்டேன். அப்படி சில முயற்சிகள் நிகழ்ந்தன என்றார். அதற்கு சற்று அதிகப்படியான வரி வசூல் செய்து மூலதனம் திரட்டவேண்டியிருக்கும். ஆனால் ஒட்டுமொத்த கேரளமும் அதற்கு எதிராகத் திரண்டு எழுந்தது என்றார். இடதுசாரிகள் ‘மக்கள் போரை’ முன்னெடுக்க மகத்தான ஆதரவு.ஆகவே வேறு வழியில்லை.

ஆக பிரச்சினை நம்முடைய பிரக்ஞைதான். எவ்வளவு படித்தாலும் பணம்சேர்த்தாலும் நாம் குப்பை நடுவே வாழ்கிறோம் என்ற எண்ணமே நமக்கு வருவதில்லை. அதைப்பற்றிய இழிவுணர்ச்சியே நமக்கில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைமொழியாக்கங்கள்
அடுத்த கட்டுரைவைதேஹி பேட்டி